![]() |
Mahatma Gandhi by Annie Stoll / Behance |
சொல்பவர்:-கூட்டம், கூட்டம், இலண்டனில் கிழக்குப் பகுதியில் மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது. இதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் 1931-ஆம் ஆண்டு குளிர் காலத்தில் 'பௌ'என்ற பகுதிக்கு அருகில் இவ்வளவு பெரும் கூட்டம் இருந்தது. கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாகப் போலீஸ்காரர்கள் அதிகமாகக் கூடியிருந்தனர். ஆம், மிக அதிகம் இருந்தனர்.
ஆல்பர்ட் டாக்கர்:-அப்பகுதியிலுள்ள பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஆகியவர்கள் ஒருங்கிணைந்து கூடி நின்றுகொண்டிருந்தனர். போலிஸ்காரர்கள் அவர்களுக்கு வெளியே வட்டம் கட்டி அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். தெரு முழுவதும் போலீஸ்காரர்கள் மயம். பெரிய தெருக்களில் மூலை முடுக்குகளில் போலீஸ்காரர்கள் அணி அணியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்அறையை விட்டு வெளியில் வந்து பால்கனியை அடைந்த பொழுது சுமார் 200 கஜ தூரத்தில் போலீஸ்காரர்கள் வரிசைவரிசையாக நின்றுகொண்டிருந்தனர். பெண்கள் தங்கள் ஆடைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டே “இந்தச் சிறு பிசாசு என்ன துன்பம் செய்யப்போகிறதோ?” என்று பேசிக் கொண்டிருந்ததாகப் பல மக்கள் என்னிடம் கூறினார்கள்.
சொல்பவர்:-என்ன துன்பமோ? என்ன நன்மையோ ? அது ஒரு பெரும் தோல்விக் கதை ஆகும். 1930க்கும் 1935க்கும் இடையில் இந்தியாவுக்கான சமஷ்டி அரசியலமைப்பு பொறுமையுடனும் உண்மையுடனும் தயாரிக்கப்பட்டது. பட்ட சிரமத்திற்கு அதைச் செயலாக்கிக் காட்டும் முழு வாய்ப்பு அளிக்கப்படவில்லை சரித்திரம் அதை மிஞ்சிவிட்டது. 1931இல் இலண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் காந்திஜி பங்குகொண்டும் பிரச்சனை தீர குறிப்பிடத்தக்க வகையில் அரசியல் முறை எதையும் கொண்டுவர முடியவில்லை. ஒருவேளை இவ்வளவு அதிகமாக எதிர்பார்த்திருக்கக்கூடாதோ என்னவோ? இன்று லார்ட் டெம்பிள்வுட்டாகவிருக்கும் ஸர் சாமுவேல் ஹோர் அன்று இந்தியாவின் அலுவல்களைக் கவனிக்கும் காரியதரிசியாக இருந்தார். அவர் காந்திஜியுடன் நெருங்கிப் பழகி நல்லிணக்கம் கொண்டிருந்தார். என்றாலும் அந்தச் சிறிய மனிதரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள எவ்வளவோ இருந்தது.
லார்டு டெம்பிள்வுட்:-பெரும்பான்மையான பிரிட்டிஷ் மக்கள் அவரைச் சிறிய மனிதர் என்று அழைப்பதுதான் வழக்கம்.
சொல்பவர்:-அந்தச் சிறு மனிதர் அரசியலமைப்பை இயற்றுகின்ற மக்களோடு பேசிய தோரணையே வேறு.
லார்டு டெம்பிள்வுட்:-அவர் எங்களது இந்திய அரசியல் அமைப்பில் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. நாங்கள் இயற்றிக்கொண்டிருந்த பலவகைப்பட்ட அரசியலமைப்புக்களைப் பற்றிச் சிறிதும் ஈடுபாடு காட்டவில்லை. ஹாலிபாக்ஸ் அவருடன் நடத்திய பேச்சுவார்தைகளுக்கெல்லாம் சாட்சியாக இருந்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். பெரிதாகப் பீடிகை போட்டுத் தொடங்கிய இந்த விஷயங்கள் எல்லாம் அவரைச் சிறிதும் கவரவே இல்லை.
சொல்பவர்:-லார்டு இர்வின் என்ற பெயரில் வைசிராயாக இருந்த ஹாலிபாக்ஸ் பிரபு பெரிய ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறகு தேக்கம் கண்ட நிலையைத் தகர்த்து காந்திஜியை இலண்டன் மகாநாட்டிற்கு வரும்படியாகச் செய்தார். இப்பொழுது அவரது வைசிராய் பதவி முடிந்துவிட்டது என்றாலும் அவர்காந்திஜியை இலண்டனில் எவ்வித அரசியல் கலப்பும் இன்றிஒரு முறைக்குமேல் சந்தித்திருக்கிறார்.
லார்டு ஹாலிபாக்ஸ்:-ஆமாம் அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து உரையாடிக்கொண்டிருப்பது வழக்கம். அவருக்கு அரசியல் அமைப்புப்பற்றித் தெரியவும் தெரியாது. அவர் மனிதாபிமானத்தோடு மக்களிடம் நெருங்கிப் பழகுவதிலும் அவர்களுடைய சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும் அக்கறை கொண்டிருந்தார். எனவே காந்திஜியை எதிர்த்தரப்பில் பிரதிநிதியாகக் கொண்டு கூட்டம் நடத்தி முடிவு எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஒருவரைப்பற்றி ஒருவர் நன்கு புரிந்துகொண்டதுடன் இந்தியாவைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டதைத் தவிர அவர் மகாநாட்டில் கலந்துகொண்டதால் அவருக்கோ அல்லது வட்ட மேஜை மகாநாட்டிற்கோ அனுகூலம் எதுவும் ஏற்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.
எச். என். ப்ரேயில்ஸ்ஃபோர்டு:-இந்தியாவிலுள்ள காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே அவரை இலண்டனுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டியது.
சொல்பவர்:-அப்பொழுது காந்திஜியை நன்கு அறிந்திருந்த ப்ரேயில்ஸ்ஃபோர்டு இந்தியாவிலிருந்து காந்திஜி வரும் பொழுது அதிக நம்பிக்கையோடு வரவில்லை என்று கருதுகிறார்.
எச். என். பிரேயில்ஸ்ஃபோர்டு:- அவர் தாமாகவே முன்வந்தார் என்றாலும் வழக்கத்திற்கு மாறாக அவரிடம் உற்சாகமின்மையும் கவலையுமே தலைகாட்டின. அவர் புறப்படுவதற்கு முன்பே தாம் எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் செல்வதாகவும் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிவருமோ என்று அஞ்சுவதாகவும் சொன்னது நினைவிருக்கிறது.
சொல்பவர்:-இங்கிலாந்தில் காணப்பட்ட சூசகங்கள் அவ்வளவு சிறந்தவையாகத் தோன்றவில்லை. காந்திஜி காங்கிரஸ் பிரதிநிதியாகப் போகிற விஷயம் உறுதியாவதற்கு முன்பே வேறு சில இந்தியப் பிரதிநிதிகள் இலண்டனுக்குக் கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். 1931ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. அவர்கள் இலண்டனை அடைவதற்கு முன்பே முதல் தொழிற்கட்சி அரசாங்கம் குலைந்து, நெருக்கடி நிலையில் ராம்ஸே மாக்டனால்டை பிரதம மந்திரியாகவும், (பழமை) மிதவாதியான சர் சாமுவேல் ஹோரை இந்தியாவின் அலுவல்களைக் கவனிக்கும் காரியதரிசியாகவும் கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இலண்டன் மகாநாடு கூடியபொழுது பிரிட்டனில் தங்கத்தின் மதிப்புக் குறைந்துவிட்டது. பொதுத்தேர்தல் தேசிய அரசாங்கத்தை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தியது. இங்கிலாந்து இத்தகைய பல சொந்தப் பிரச்சனைகளில் உழலவேண்டியிருந்தபடியால் இந்த மகாநாடு காந்திஜியின் விஜயத்தைச் பயன்படுத்த முடியவில்லை. நாற்பது ஆண்டுகளுக்குமுன்சட்டம் பயிலும் மாணவராக இங்கு வந்திருந்த காந்திஜி. நடனமும்பேச்சுக்கலையும் பயின்றிருக்கிறார். பத்தொன்பது ஷில்லிங் விலையுள்ள தலைத்தொப்பி அணிந்திருக்கிறார். மரக்கறி ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார். சர் எட்வின் ஆர்னால்டு தந்த கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதன் முறையாகப்பயின்றிருக்கிறார். அத்தகையவரின் மறு விஜயத்தை அவ்வளவாகப் பெரிதுபடுத்தவில்லை. சொல்லப்போனால் இது காந்திஜியின் நீண்ட வரலாற்றின் ஓர் அத்தியாயம். அவரது சொந்த வாழ்க்கை பிரிட்டனோடும், பிரிட்டிஷ் மக்களோடு அவர் கொண்ட தொடர்பும் இங்குதானே தொடங்குகிறது.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-அரசியல் ரீதியாக அதைப் பெருந்தோல்வியென்றே நான் சொல்லுவேன். உடனடிப் பயன் எதுவும் கிட்டவில்லையென்றாலும் அவர் தம் இணையற்ற ஆளுமையை விட்டுச்சென்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
சொல்வபர்:-பிரிட்டிஷ் மக்களில் அவருடைய வழியை அறிந்த ஒவ்வோர் ஆணும், பெண்ணும் ஏற்கனவே இக்கருத்தைத்தான் கொண்டுள்ளனர். இந்தியாவில் காந்திஜியின் ஆசிரமத்திற்கு விஜயம் செய்யும் மேலை நாட்டவர்கள், குறிப்பாக ஹோரேஸ் அலெக்சாந்தர், இதுபற்றி மிகவும் வியந்திருக்கிறார்.
ஹோரேஸ் அலெக்சாந்தர்:-வெளிநாடுகளிலிருந்து வரும் விருந்தினர்களை, அவர்கள் சொந்த வீட்டில் இருக்கிறாற்போல் சகஜமாக உணரும்படி அவர் தனிக் கவனம் செலுத்திக் கவனிப்பார் என்று கருதுகிறேன். ஒவ்வொரு நாட்டின் நலனிலும் அவருக்கு அக்கறை உண்டு. அந்த அக்கறை அவை இந்தியாவோடு தொடர்பு கொண்டுள்ளதால் மட்டும் அல்ல என்பது உறுதி.
“இந்தியாவிற்கு ஒன்றும் சாதிக்காமல் உங்கள் நாட்டுக்கு என்னால் வரமுடியாது” என்று கூறுவதில் அவருக்கு என்னவோ மோகம் இருந்தது.
சொல்பவர்:-1926-ஆம் ஆண்டு இலண்டன் போயிருந்த பொழுது காந்திஜி மிஸ். மூரியல் லெஸ்டர் என்பவரின், கீழ்க்கோடிக் குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் காந்திஜியை இந்தியாவில் சந்தித்துத் தம் கருத்தை நேரடியாக வெளியிட்டார்.
மிஸ் மூரியல் லெஸ்டர்:-நான் புறப்படுவதற்குச் சற்றுமுன்பாக “நீங்கள் இங்கிலாந்திற்கு வருவீர்களா” என்று நேரடியாகவே கேட்டேன். அவர் அப்பொழுது நூல் நூற்றுக்கொண்டிருந்தார். வழக்கமான மரியாதை, பண்பு, பெருமிதம் ஆகியவற்றோடு தலையைக் குனிந்துகொண்டே சிரித்தவாறு, “உங்கள் அழைப்புக்கு நன்றி. ஆனால் என்னால் வரமுடியும் என்று தோன்றவில்லை. அங்குள்ள தலைவர்களுக்குக் கற்பிக்கும் அளவிற்கு என்னிடம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”என்றார். “மிஸ்டர் காந்தி, நீங்கள் வந்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நினைத்து நான் கூப்பிடவில்லை. நீங்கள் அங்கு வந்து அவர்களிடமிருந்து சிலவற்றைக் கற்றுகொள்வது நல்லது என்று நான் நினைத்தேன்”என்றேன். அவர் உரக்கச் சிரித்தார்.
சொல்பவர்:-பிறகு உண்மையாகவோ என்னவோ அவர் மூன்று நிபந்தனைகளின் பேரில் தாம் இங்கிலாந்து வருவதாக மிஸ். லெஸ்டரிடம் கூறினார். அந்த நிபந்தனைகள் சிரமமாகத்தான் இருந்தன. கற்பனைக் கதைகளில் வருவது போல அவை மிகவும் கடினமான நிபந்தனைகள். பிரிட்டிஷ் கொள்கைகளை மாற்றும்படியாக அவள் கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகும் சிக்கலான சில அரசியல் பிரச்சனைகள் காரணமாக இலண்டனில் நடந்த வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொள்ள காந்திஜி புறப்படுவது நிச்சயமில்லாமலே இருந்தது. இது அந்த மகாநாட்டிற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கும் அவரோடு வட்ட மேஜை மகாநாட்டிற்குச் செல்ல இருந்தவர்களுக்கும் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அவர்களில் பியாரேலாலும் ஒருவர்.
பியாரேலால் நைய்யார்:-கடைசி நிமிடம் வரை நாங்கள் கலந்துகொள்ளப் போகிறோமா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. ஒருநாள் அவர் போவதாக முடிவு ஆகியிருக்கிறதென்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தோம். ஆனால் நாங்கள் பயணத்துக்கான அனுமதிச் சீட்டுப் பெறக்கூட ஏற்பாடு செய்துகொள்ளவில்லை. இலண்டனில் தங்கினால் தேவைப்படக்கூடிய பொருள்களைக்கூட சேகரித்து வைத்துக்கொள்ளவில்லை.
சொல்பவர்:-காந்திஜி சிம்லாவில் வைசிராய் வெல்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இருந்தவர்கள் அவசரமாகச் சில பொருள்களை வாங்கிக் கட்டி வைத்தனர்.
பியாரேலால் நைய்யார்:-இதற்கிடையில் அவர் சிம்லாவைவிட்டுப் புறப்பட்டுவிட்டார் என்பது உறுதியாகிவிடவேநாங்களாகவே சில பொருள்களைச் சேகரிக்கலானோம். ஏனெனில்அவருடன் இருக்கும் சகாக்களுக்குப் பயணத்திற்குத் தேவையானபொருள்களைச் சேகரிக்க நேரம் இருக்குமோ இராதோ, வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்பது எங்களுக்கு விளங்கவில்லை கப்பலில் கூடியபோது நாங்கள் ஒவ்வொருவருமே மற்றஎல்லோருக்கும் தேவையான பொருள்களைச் சேகரம் செய்திருந்ததை அறிந்தோம். அதிகமாகத் தோன்றிய பொருள்களை ஏடனிலேயே விட்டுவிட்டு மிகத் தேவையான பொருள்களுடன் மட்டும் இலண்டனுக்குப் பயணமானோம்.
சொல்பவர்:-காந்திஜியின் சொந்தப் பொருள்கள் எப்பொழுதும் போலச் சாதாரணமாக இருந்தன. காந்திஜியின் நண்பர்களில் சிலருக்கு படுக்கை வசதியுடன் இடம் கிடைத்திருக்கையில் அவர் மட்டும் 'டெக்'பயணியாக மேல் தளத்திலேயே உணவு, உறக்கம், வழிபாடு, அலுவல்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டார்.
பியாரேலால் நைய்யார்:-கப்பலிலிருந்த குழந்தைகளுடன் நட்பு கொண்டு உறவாடக் காந்திஜிக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. அவர்கள் அவரைச் சூழ்ந்து அவருடைய உணவைப் பகிர்ந்துகொள்வார்கள். சில சமயங்களில் அவருடன் விளையாடுவார்கள். ஒரு சமயம் சக பயணிகளில் சிலர் அவரிடம் வந்து அவர் வழக்கமாகத் தூங்குகின்ற மேல் தளத்தில் நடனம் ஆடலாமா? “உங்கள் பக்கத்தில் ஆடினால் பரவாயில்லையா?” என்று கேட்டார்கள். “தாராளமாக ஆடலாம். அருகிலும் ஆடலாம், சுற்றிச் சுற்றியும் ஆடலாம். என் மேல் ஆடாமல் இருந்தால் சரி!” என்றார்.
சொல்பவர்:-பத்திரிகை நிருபர்கள் செய்திக்காக ஆவலோடு கப்பலில் இருந்தனர். பிரேம்பக்ஷிஎன்ற பயணி, காந்தி எளிய முறையில் அளித்த விடைகளை நினைவுகூர்கிறார்.
பிரேம் பக்ஷி:-“வட்ட மேஜை மகாநாட்டில் உங்களுக்கு வெற்றி கிட்டாவிட்டால் உங்களது அடுத்த திட்டம் என்னவாயிருக்கும்?” என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு “நான் ஒரு போர் வீரன். எனது குறிக்கோள் சுதந்திரம். நான் அதை இம்முறை அடையத் தவறிவிட்டாலும் என் இலட்சியத்தை அடையும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிசெய்வேன்” என்று மகாத்மாஜி கூறினார்.
சொல்பவர்:-அவர் தொழில் அதிபர்களிடமும் ஒளிவு முறைவு இன்றி நேர்மையாக இருந்தார். அதே கப்பலில் பிரயாணம் செய்த ஜி. டி. பிர்லா இந்தியாவின் பொருளாதார அரசியல் பிரச்சனைகளை நன்கு அறிந்துவைத்திருந்தார். காந்திஜி தமக்கென்று பெரும் செயலாளர் படையும் கட்டுக்கட்டான ஆதாரக் குறிப்புக்களும் வைத்துக்கொள்ளாததைக் கண்டு வியந்தார்.
ஜி. டி. பிர்லா:-“நீங்கள் இப்பொழுது சிங்கத்தின் குகைக்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் தேவையான சிப்பந்திகளும் பலமும் இல்லை. உங்கள் கட்சியை எடுத்துரைக்க ஆதாரக் குறிப்புக்களும் இல்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? சூழ்ச்சியை எப்படிச் சமாளிப்பீர்கள்?” என்று நான் காந்திஜியைக் கேட்டேன். அவர் அளித்த எளிய சமாதானம் என்னைத் திருப்திப்படுத்தியது. “இதோ பாருங்கள்,நான் ஒரு பட்டிக்காட்டான். சூதுவாது தெரியாத கிராமத்தான். நான் திரு. சாமுவேல் ஹோரிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்பதேயாகும். வேறு தர்க்கமே நான் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் கொடுத்தார்களானால் பெற்றுக்கொள்வேன். கொடுக்கவில்லையெனில் திரும்பிவிடுவேன்” என்று கூறினார். அவர் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான கருத்துக்களையே நம்புவார்.
சொல்பவர்:-இலண்டனுக்குச் சென்றதும் சாமுவேல் ஹோரே அவருடன் வெளிப்படையாகப் பேச்சு வார்த்தை நடத்து வதற்குத் தயாராக இருப்பதைக் காணக் காந்திஜிக்கு வியப் பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
லார்டு டெம்பிள்வுட்:-அவரை உடனே சந்தித்துத் திட்டவட்டமாக என்னால் எவ்வளவு தூரம் போகமுடியும், எவ்வளவு தூரம் போகமுடியாது என்பதைச் சொல்லிவிடுவதுதான் ஒரே வழி என்று எண்ணினேன். சொல்லப்போனால் நான் அவரை என்னை வந்து பார்க்கும்படி அழைக்குமாறு கூட நேரவில்லை. ஏனெனில் இலண்டனுக்கு வந்து சேர்ந்தவுடன் முதற் காரியமாக அவர் தாமாகவே நான் அவரைப் பார்க்க விரும்புகிறேனா என்று கேட்டு அனுப்பினார். அவர் அவ்வளவு தூரம் இந்த விஷயம் பற்றித் தாமாகவே முன்னுக்கு வந்தது குறித்து “நான் மகிழ்ச்சி அடைந்தேன். இலண்டனில் அப்பொழுது சரியாக இலையுதிர் காலமாக இருந்தது. கடும்பனி, மழை, குளிர், காற்றுஎல்லாம் இருந்தன. நான் இந்தியா அலுவலகத்தில் அவருக்காகக்காத்திருந்தேன். என் காரியதரிசி அரசாங்கக் கப்பற்படையிலிருந்து ஓய்வு பெற்ற ஸார்ஜென்ட் மேஜர்.மிடுக்கான தோற்றம் கொண்டவர். மெடல்கள் போர்த்திய சீருடை பளபளக்க பேரரசரை அறிமுகம் செய்துவைப்பவர் போல் பவ்யமாக கதவைத் திறந்தார். காந்திஜி உள்ளே வந்தார். கூன் விழுந்தமுதுகு.பார்த்த மாத்திரத்தில் பல் இல்லை என்று தெரிந்துகொள்ளக் கூடிய பொக்கை வாய். இலண்டனிலோ இலையுதிர் காலத்தில் பயங்கரக் குளிர். படு பயங்கரமான குளிர். அவர் இருந்த நிலையிலிருந்தே அவருக்கு எவ்வளவு தூரம் குளிரும் என்பதை உணர்ந்து “நாம் கணப்புக்கு அருகில் போய் உட்காருவோமா?” என்றேன். அவர் தமது முழங்காலைச் சுற்றிச் சூடேற்றிக்கொண்டார். எங்கள் பேச்சு கணப்பில் தொடங்கிப் பல்வேறு விஷயங்களைச் சுற்றிப் படர்ந்தது. அவருக்கு இந்தியக் கிராம வாழ்க்கையில் அதிக ஆர்வம் என்பதை அறிந்திருந்த நான் இங்குள்ள கிராமங்களைப் பற்றியும் சாகுபடியைப் பற்றியும் பேசினேன். எங்கள் பேச்சு தங்குதடையின்றித் தொடரவே எங்கே நாம் வெகுதூரம் சென்றுவிடுவோமோ, நம்மால் செய்யமுடியாத காரியங்களை அவர் நம்மிடம் எதிர்பார்த்துவிடுவாரோ என்றுகூட எனக்கு அச்சமாகப் போய்விட்டது. எனவே “நல்லது உங்களைப் போலவே நானும் இந்தியாவுக்கு முழு சுய ஆட்சி வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கிறேன்” என்றார். “ஒரே மூச்சில் எளிதாக அதைச் செய்துவிட முடியாது என்று எண்ணுகிறேன். மக்கள் சபையில் இதற்கு எதிராகப் பெரும்பான்மை மிதவாதிகள் இருக்கின்றனர். பால்டிவினும் நானும் அவர்களை ஓரளவுக்குச் சரிகட்ட முடியும். முழுவதுமாக முடியாது. ஆகையினால் இங்கேயே இப்பொழுதே எதையும் நான் உறுதியாகச் சொல்ல முடியாது. குடியேற்ற அந்தஸ்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆனாலும் என்னால் முடிந்த வரை விரைவில் இது விஷயத்தைத் துரிதப்படுத்துவேன். நீங்கள் எங்களை நம்பலாம்” என்றேன். அதுபற்றி இன்னும் அப்பட்டமாக நான் அவரிடம் பேசியிருப்பேனோஎன்றுகூட நினைக்கிறேன். ஏனெனில் காந்திஜி என்நோக்கில் காரிய சாத்தியமற்ற பேச்சு வகைகளை உடனடியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்பதை என்னால் அப்பொழுதே அறியமுடிந்தது. அவர் என் பேச்சில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
சொல்பவர்:-அவர் எவ்வளவு நேரம் தங்குவது என்று திட்டம் போட்டிருந்தாரோ அதைக் காட்டிலும் அதிகமாகத் தங்கியதிலிருந்து அவர் மகிழ்ச்சி புலனாகியது. எச். என். பிரெயில்ஸ்போர்டு அவர்களைப் பார்ப்பதற்குக் குறிப்பிட்டிருந்த நேரம் கடந்துவிடவே சற்றுப் பதற்றமும் இருந்தது.
எச். என். பிரெயில்ஸ்போர்டு:-அவர் வெகு அவசரமாக வந்தார். “சாமுவேல் ஹோருடன் பேச்சுவார்த்தை சற்று நீண்டுவிட்டது” என்று விளக்கம் கூறினார். “ஏன் என்று தெரியுமா? என்று அவர் கேட்டார். “இந்தியாவுக்கு நீங்கள் விரும்பும் நன்மைகளைப் பற்றிப் பேசும்போது ஆங்கிலேயர்கள் நேர்மையானவர்கள் என்பதை முதன் முதலாக அவர் எனக்கு விளங்க வைத்தார்” என்று கூறினார். இங்கிலாந்து விஜயம் காந்திஜியின் மனத்தில் இருந்த ஒரு கருத்தை நன்கு நிலைபெறச் செய்தது.
சொல்பவர்:-இலண்டன் மாநகரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் கீழ்க்கோடியிலிருந்த 'பௌ'என்னும் இடத்தில் கிங்ஸ்லி ஹாலில் காந்திஜிக்கும் பிரெயில்ஸ்போர்டுக்கும் சந்திப்பு நிகழ்ந்தது. அங்குதான் காந்திஜிக்கு அவர் வற்புறுத்தியதன் பேரில், ஜாகை ஏற்பாடு செய்துதரப்பட்டிருந்தது.
பியாரேலால் நைய்யார்:-அவர் வேண்டுமென்றே தாம் தங்குவதற்குக் கிழக்குப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஏனெனில் வாயில்லாப் பூச்சிகளாக வாழும் கோடிக்கணக்கான ஏழை இந்தியனின் பிரதிநிதியாக அவர் வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொண்டதால் ஏழைகளோடு ஏழையாகத் தம்மையும் காட்டிக்கொள்ளவே அவர் எப்பொழுதும் விரும்பினார்.
சொல்பவர்:-மற்றப் பிரதிநிதிகளோ இப்பகுதியைத் தேர்ந்தெடுத்ததைக் கிறுக்குத்தனமென்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்றுமே எண்ணினர். ஆனால் மூரிஸ் லெஸ்டருக்கோ இது ஒரு வகையில் வெற்றி முயற்சியாகவே பட்டது.
மூரில் லெஸ்டர்:-அவர் வட்ட மேஜை மகாநாட்டிற்காக இலண்டனுக்கு வருவதை நான் நேரிடையாகக் கேள்விப்பட்டேன். நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்ததை அவர் மறந்திருக்கமாட்டார். அவருக்கு அசாதாரணமான ஞாபக சக்தி உண்டு என்பதை அறிந்திருந்த நான், அவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதினேன். “நீங்கள் வருவது குறித்து மகிழ்ச்சி. கிங்ஸ்லிஹாலில் நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை மறவாதீர்கள். நாங்கள் எப்படி எளிய வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை நீங்கள் அங்கு காண்பீர்கள். எங்கள் சின்னஞ்சிறு படுக்கை அறைகள் மேற்கூரையின் மீது இருக்கும் அழகை நீங்கள் காண்பீர்கள். நீங்களும் அவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் உங்களுடன் யாரை அழைத்து வந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள். குறிப்பிட்ட காலத்தில் உங்களைப் போலவே நாங்களும் பிரார்த்தனை நடத்துகிறோம்.”அவர் எழுதிய பதில் கடிதத்தில், “நான் இலண்டனில் கிங்ஸ்லி ஹாலைத் தவிர வேறு எங்கும் தங்க விரும்பவில்லை. ஏனெனில் நான் எத்தகைய மக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேனோ அத்தகைய மக்களுடனயே அங்கேயும் தங்க விரும்புகிறேன்”என்று எழுதியிருந்தார்.
சொல்பவர்:-அதனால் அவர் அங்கே தங்கினார். அகன்ற தோள்களைக் கொண்ட அவரது காரியதரிசியும் நெருங்கிய நண்பருமான மகாதேவ தேசாய்,கைத்தறி ஆடையணிந்த அவரது ஆங்கில சிஷ்யை மீரா பென், அவரது குமாரர் தேவதாஸ் காந்தி,பியாரேலால் நைய்யார் ஆகியவர்கள் அவரோடு தங்கினார்கள்.
பியாரேலால் நைய்யார்:-அவர் அந்தக் கிழக்குப் பகுதியில் தங்கியிருந்தது அப்பகுதி வாழ் மக்களின் கற்பனையைத் தூண்டி விடுவதாக அமைந்தது. விடியற்காலையில் அவர் உலாவச் செல்லும் நேரங்களில் அங்கு வாழும் ஏழை மக்களின் வீட்டு ஜன்னல்களும் பால்கனிகளும் சாலையின் இரு புறங்களிலும் திறந் திருக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே நின்று அவருக்குக் காலை வணக்கம் செலுத்தவும் அவரைத் தரிசிக்கவும் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.
சொல்பவர்:-அவர்கள் அவரை மறக்கவில்லை. கிங்ஸ்லி ஹாலுக்கு அவர் வந்த அதே நாள் அங்குள்ளவர்கள் அனைவரும் வழக்கமாகக் கூடும் ஒரு கூட்டத்தில் அவரும் கலந்துகொண்டார். அதை அவர் “மகிழ்ச்சிகரமான இரவு”என்று சொல்வது வழக்கம்.
மூரியல் லெஸ்டர்:-“அந்தக் கூட்டத்தைப் பற்றிக் கூறுங்கள். உங்களுக்கு அதைப் பற்றி என்னவெல்லாம் நினைவு இருக்கிறது?”
மார்த்தா ரோலஸான்:-வெளியே சென்றிருந்த அவர் உள்ளே வந்தார். மாடிக்குச் சென்றார். பிறகு கீழே வந்து இந்த மகிழ்ச்சிகரமான இரவில் கலந்துகொண்டார். நாங்கள் அப்பொழுது நடனமாடிக்கொண்டிருந்தோம். நான் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று அவரது தோளில் தட்டிக்கொடுத்து “வாருங்கள் காந்தி, நாம் நடனம் ஆடுவோம்”என்றேன். எனக்கு “ஆடத் தெரியாதே”என்றார் அவர்.
மூரியல் லெஸ்டர்:-இப்படிக் கேட்டதில் அவர் மகிழ்ந்துபோனார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
மார்த்தா ரோலஸான்:-ஆம்.நான் அவரிடம் கேட்ட பொழுது அவர் மிக மிக மகிழ்ச்சி அடைந்தார். அவர் மூரியல் பக்கமாகத் திரும்பி “நீங்கள் எனக்கு நடனமாடக் கற்றுத்தரவேண்டும்” என்றார்.
மூரியல் லெஸ்டர்:-ஆம்.அவர் நடனமாடினார். (சிரிப்பு)
பியாரேலால் நைய்யார்:-“நான் கட்டாயம் நடனமாடுவேன்”என்று கூறியவர் தம் கைப்பிரம்பைச் சுட்டிக்காட்டி “இதுதான் எனக்கு ஜோடி” என்றார்.
மூரியல் லெஸ்டர்:-ஆனால் அவர் உங்கள் சொந்த வீட்டிற்கு வந்த பொழுது என்ன நடந்தது?
மார்த்தா ரோலஸான்:-ஓ, அதுவா? சனிக்கிழமை காலையில் நான் சாமான் வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்குப் போயிருந்தேன். திரும்பி வந்து பார்த்தால் வாசலில் ஒரே கூட்டம். என் குழந்தைகளை நான் வீட்டில் விட்டுப்போயிருந்தேன். எங்கே நெருப்புக் கிருப்புப் பிடித்திருக்குமோ என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டேன். மேல் மாடிக்குச் செல்லத் திரும்பிய பொழுது மிஸ்.லெஸ்டரும் காந்திஜியும் அங்கே எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். வெளியில் குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர். “கீழே வாருங்கள்.நீங்கள் கீழே வரவேண்டும்” என்று அவர்கள் கூறவே நான் சாமான்களோடு கீழே வந்தேன். அவற்றை மேஜை மேல் வைத்தேன். காந்திஜி ஒரு ரொட்டித் துண்டை எடுத்து “இது என்ன விலை?” என்று கேட்டார். “நான்கு பென்சும் அரை பென்னியும்”என்று நான் சொன்னேன். “ரொட்டிக்கு நான்கு பென்சும் அரை பென்னியுமா?” என்று கேட்டார். அப்புறம் அவர் “சர்க்கரையின் விலை என்ன?” என்று கேட்டார். அப்புறம் அவர் கீழே போன பொழுது வாசலைச் சுற்றிலும் பெருங்கூட்டம் கூடிவிட்டது. சொக்கப்பனை கொளுத்தி மகிழ்கிறார்களோ என்று எண்ணும் அளவுக்கு மகிழ்ச்சி ஆரவாரம். “இவர் அழகாக இல்லையா”என்று அவர்கள் கேட்டார்கள். (சிரிப்பு)
ஆல்பர்ட் டோக்கர்:-நான் அறிந்த வரையில் அவர் மிகவும் நுட்ப அறிவு படைத்தவர், விஷயங்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர். இதுவே என் கருத்தாகும். ஆனால் அவரை அப்பம் அறிவுள்ளவர் என்றோ விஷயங்களைப் புரிந்துகொள்பவர் என்றோஅவரைப் பார்த்தோ கேட்டோ அறியாத யாரும் ஒரு பொழுதும் எண்ணியதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் அவரது நிறம் ஆகும். அவரிடத்தில் சில அசாதாரணமான சிறப்பியல்புகள் இருந்தன. அவற்றில் பல எனக்குப் பிடித்திருந்தன. அவர் பேசிக்கொண்டேயிருப்பார். அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தபடியால் என்னைச் சூழ்ந்துள்ள சிறுவர்களுக்காக நான் அவரது கையெழுத்தைக் கேட்கும் பொழுதெல்லாம் கையெழுத்துப் போட்டுக்கொடுப்பார். அதே நேரத்தில் கையோடு எடுத்துச்செல்லக்கூடிய சிறு ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டுமிருப்பார்.
மூரியல் வெஸ்டர்:-அவருக்கு இங்குள்ள குழந்தைகளின் நாகரிகப் பள்ளியைப் பிடித்திருந்தது. குழந்தைகள் எல்லோரும் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அவரை “காந்தி மாமா”என்று கூப்பிடுவார்கள், அவர் காலுறை அணியாதிருப்பதைக் கண்டு அவர்கள் மிகவும் வருந்துவார்கள். வெதுவெதுப்பான உடையை அவருக்கு அணிவிக்க அவர்கள் முயன்றனர். அவர் பிறந்தநாளுக்கு அவர்கள் ஏகப்பட்ட சிறு பொம்மைகளைப் பரிசாகக் கொடுத்தார்கள். கம்பிளியினால் நெய்த சிறு ஆட்டுக்குட்டி, சிறு பொம்மை, தொட்டில் போன்ற பல பொருட்களை அவர்கள் கொடுத்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.
ஐடா பார்ட்டன்:-காந்திஜி பெளவுக்கு வந்த மறுநாள் காலையிலேயே துணிகளைத் துவைக்கவேண்டியிருந்தது. அவற்றை உலர்த்துவதற்குத்தான் எங்கும் இடம் கிடைக்கவில்லை. அந்த நாளில் நான் காந்திஜியுடன் நெருங்கிப் பழகும் அண்டை வீட்டுக்காரியாக இருந்தபடியால் அவர்கள் என்னிடம் வந்தார்கள். துணிகளைக் கீழே எடுத்துப் போட்டுவிட்டு காந்திஜியின் துணிகளைத் துவைக்கும் குமாரி ஸ்லேட்டுக்கு அந்த இடத்தைக் கொடுத்தேன். கடைசியில் என்னவாயிற்று தெரியுமா? நான் துணிகளைத் துவைக்கும்படி ஆயிற்று. காந்திஜி தங்கியிருக்கும் கட்டிடத்தைச் சுற்றிலும் போலீஸ் காவல் இருந்தது. “காந்திஜிக்கு மட்டும் காவல் இருந்தால் போதாது. துவைத்து உலர்த்தியிருக்கும் துணிகளுக்கும் காவல் வேண்டும்.” என்று நான் சொன்னேன். அதன் பிறகு மூன்று மாதங்களும் காந்திஜி, குமாரி ஸ்லேட், தேவதாஸ் ஆகியவர்களின் துணிகளைத் துவைக்கும் பணிப்பெண்ணாக நான் இருக்கும்படி நேர்ந்தது.
மூரியல் லெஸ்டர்:-உங்கள் பணியில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்களா?
ஐடா பார்ட்டன்:-ஆமாம்.பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். மிகவும் நேர்த்தியான சலவை என்றார்கள். சொல்லப்போனால் அவை மிகவும் வெண்மையாகவும் அழகாகவும் இருந்தன. எங்களுக்கு அதிக வேலை வைக்கவில்லை.
மூயரில் லெஸ்டர்:-அவரது ஆட்டுப்பாலைப் பற்றி அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ஐடா பார்ட்டன்:-ஓ! நன்றாக நினைவிருக்கிறது. ஆட்டுப்பாலில்தான் அவர் வாழ்ந்தார். மக்கள் அதைப் பற்றிக் கேலி செய்து சிரிப்பது வழக்கம். திங்கட்கிழமை இரவு என்று எண்ணுகிறேன். அந்தச் சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது இலையுதிர் காலத்து இனிமையான ஒரு மாலைப் பொழுது.வெளியில் கூடியிருந்த பெருங்கூட்டம் என் வீட்டு வாசலையும் அடைத்துக்கொண்டு நின்றது. நான் வெளியே போகவேண்டியிருந்தது. அதற்காக வாசலில் வந்து நின்றதைப் பார்த்துப் போலீஸ்காரர் “நீங்கள் இங்கே நிற்கக்கூடாது அம்மா” என்றார். “இது என் வீடு. நான் இந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கிறேன். இங்கேதான் நிற்பேன்” என்றேன் நான். ஆனால் காந்திஜியின் நட்புக்குப் பாத்திரமான எனக்கு அந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் சிறந்த செயலாகப் பட்டது.
மூரியல் லெஸ்டர்:-பக்கவாதத்தினால் பீடிக்கப்பெற்ற ஒரு மனிதர் அதே தெருக்கோடியில் வசித்துவந்தார் என்றும்அவர் தம்மை வந்து பார்த்துப் பேச முடியாத நிலையில் இருந்தார் என்றும் ஒருநாள் காந்திஜி கேள்விப்பட்டார். ஏனெனில் பல மக்கள் காந்திஜியைப் போய்ப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரோ கீல் வாயுவினால் தாக்கப்பட்டு எப்பொழுதும் கணப்பின் அடியிலேயே உட்கார்ந்து குளிர் காய்ந்துகொண்டேயிருக்க வேண்டிய நிலையிலிருந்தார். காந்திஜி அவரைச்சந்திக்கச் சென்றிருப்பார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. அந்த ஊரிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பார்த்தார்.அங்கே ஒரு குருடர் அவரைக் காண விரும்பினாராமே உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ஐடா பார்ட்டன்:-அவர் ஒரு நேர்த்தியான தோற்றம் உள்ளவர். நீங்கள் ஒரு திருப்பத்தில் நடந்து செல்ல நேர்ந்தால் பளிச்சிடும் வெளிச்சத்துடன் கார் திரும்புவதைக் காண்பீர்கள்.கண்ட மாத்திரத்தில் காந்திஜியின் கார் வருகிறது என்றும் சொல்லிவிடுவீர்கள். அது பறந்து வருவது போலிருக்கும். அன்றைய அலுவல்களுக்குப் பின் களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார் காந்திஜி.
சொல்பவர்:-அவர் எப்பொழுதும் இப்படியிருப்பதுண்டு. அது களைப்பு மிகுதியினால் என்பதில் ஐயமில்லை. ஆனால் நிச்சயம் அது தூக்கமல்ல. அவரைக் கண்காணிக்கும் சார்ஜென்ட் ரோகரூம் சார்ஜென்ட் ஈவானும் காந்திஜியுடன் விந்தையானதொரு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். காந்திஜி விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கமுடையவராகையால் அவர்களது வேலை சுலபமானதல்ல என்பதை உணர்ந்திருந்தார் போலும். அவர் இந்தியாவில் எழுந்திருப்பதைப் போலவே விடியற்காலை நான்கு மணிக்கே தம் சொந்தப் பிரார்த்தனைக்காக எழுந்திருப்பார். பிறகு மீண்டும் ஒரு மணிநேரம் தூங்கச் சென்றுவிடுவார். அதன் பின்னர் ஐந்தரை மணிக்கு கிங்ஸிலி ஹாலில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொள்வார். பிரார்த்தனை முடிந்ததும் கிழக்குக் கோடித் தெருக்களில் உலாவச் சென்றுவிடுவார்.
மூரியல் லெஸ்டர்:- சில சமயங்களில் சின்னஞ்சிறு குழந்தைகள் குழாம் வாரந்தோறும் தங்கள் தாய்மார்களிடம் சென்று அந்தக் குளிர்ந்த காலை நேரத்தில் உலாவச் செல்லத் தங்களையும் அனுமதிக்குமாறு கோரி நச்சரிப்பார்கள். ஆப்பிள் போல் சிவந்த அவர்களது முகங்களையும் கழுத்தைச் சுற்றிப் பெரிய சிவப்புக் கம்பளிகளை அணிந்திருக்கும் தோற்றத்தையும் என்னால் ஒரு பொழுதும் மறக்கமுடியாது. அவர் மகிழ்ச்சியோடு அவர்களுடன் உலாவச் செல்வார். ஆறரை மணிக்குத் திரும்பி வருவார். ஒருநாள் நாங்கள் உலாவச் சென்றுவிட்டு வீட்டுக்குஅருகில் வந்ததும் “நாம் விரைவில் குளித்துவிட்டுக் குஷியாக காலைச் சிற்றுண்டி அருந்துவோமா?” என்று கேட்டேன். அன்று குளிர் அதிகமாக இருந்தது. அவர் தமக்கே உரிய அமைதியான முறையில் என்னைத் திருத்தி “நாம் முதலில் குளிக்கப் பார்ப்போம்” என்றார்.
சொல்பவர்:-விடியற்காலை உலாவச் செல்லும் பொழுது கண்காணிப்பாளராக ரோகரும் ஈவானும் கூடச் செல்வார்கள்.
ஆல்பர்ட் டாக்கர்:-அவர்கள் காந்திஜியுடன் நடக்கும் முயற்சியில் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டு திரும்புவார்கள். அவர் அடி எடுத்து நடக்கும் முறையே விந்தையானது. அவரோடு நடந்துவரும் முனைப்பு அவர்களை ஓடச்செய்தது.
சொல்பவர்:-காலைப் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காகவும் உலாவுவதில் பங்கு கொள்வதற்காகவும் யாராவது சில சமயம் இரவு நேரங்களில் கிங்ஸிலி ஹாலில் வந்து தங்குவார்கள். பெண் சிற்பியான கிளேர் ஷெரிடான் ஒரு சமயம் அப்படித் தங்கினார்.
கிளேர் ஷெரிடான்:-குளிரும் பனியும் மிகுந்த அந்த விடியற்காலை நேரத்தை என்னால் மறக்க முடியாது. மூன்று மணிக்கு மீராபென் வந்து என்னை எழுப்பி காந்திஜியின் அறைக்கு அழைத்துச் சென்றாள். அவள், நான், மகாத்மாஜி அவரது ஹிந்து சிஷ்யர் ஆகிய நால்வர் மட்டுமே அங்கு இருந்தோம். அவர்கள் விளக்குகளை அணைத்துவிட்டுக் கதவுகளைத் திறந்துவிட்டார்கள். நீல வானம் கண்களுக்குத் தெரிந்தது. அவர்கள் ஹிந்து முறைப்படி பிரார்த்தனை செய்தார்கள். அந்தக் காட்சி இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. பிரார்த்தனையின் கருத்து என்னவென்று எனக்குத் தெரியாது என்றாலும் அது மிக மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது.
சொல்பவர்:-உலாவச் சென்றபோதும் புலனாய்வுத் துறையாளர்களைப் பற்றிக்கூட திருமதி ஷெரிடான் நன்கு நினைவு வைத்திருக்கின்றார்.
கிளேர் ஷெரிடான்:-காந்திஜியுடன் நட்பு முறையில் பழகிய கண்காணிப்பாளர்கள் எங்களைப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் வேகமாக எடுத்து வைக்கும் காலடி ஓசையும் அவர்கள் விட்ட நீண்ட பெருமூச்சும் கூட என் காதில் விழுந்தது. ஏனெனில் காந்திஜி மிக வேகமாக நடந்தார். இரவு நேரம். நல்ல மூடுபனி. அவருடைய நிறம் வேறு இரவை ஒத்திருந்தது. ஆளை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அது வெட்ட வெளியில் வெகு வேமாக முன்னேறி நடந்தது என்றாலும் நான் அவரைக் தொடர்ந்தேன். மூச்சுக்கூட விட நேரமின்றி சுவாரசியமாக அவரோடு பேசிக்கொண்டே நடந்தேன். அவை பெரும்பாலும் மதம் பற்றிய விஷயங்கள்.
சொல்பவர்:-காந்திஜி கீழ்க்கோடியில் முத்திரையிட்டு நின்றார். ஜேம்ஸ் அரண்மனையில் நூற்றுப் பதினோரு பிரதிநிதிகள் இந்தியாவின் எதிர்காலம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள். யாரவது அவரது உண்மைத்தன்மையை எடுத்துக்காட்ட முடியுமா என்று பார்ப்போமனால் மிகவும் சொற்பமானவர்களால்தான் முடியும் என்று பிரெயில்ஸ்ஃபோர்டு கூறுகிறார்.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-பகட்டான உடைகளும், ஜொலிக்கும் வைரங்களுமாகக் கற்பனை உலகில் மிதந்த அரசர்களுடனும் திறமை வாய்ந்த பேச்சளர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் அவர் எதிர்த்து வாதிடவேண்டியிருந்தது. உண்மையில் அதீத கற்பனையில் மிதக்க வைத்தவர்கள் அவர்கள். என்றாலும் அவர்களில் ஒருவரால்கூட ஒரு தொகுதியில் பொதுத் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்றிருக்க முடியாது. அரசர்களைப் பொறுத்தமட்டில் அதில் பின்னால் ஒரு திருப்பம் கண்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அவர்களிடமிருந்து வந்த எதிர்ப்பைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிறிய மனிதர் போர்வைக்குளிருந்து இந்த அரை நிர்வாணத் துறவி அந்தப் பகட்டான அரசர்களைக் காட்டிலும் திறமை மிக்க நிபுணர்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கவராகக் கருதப்பட்டார். இதை நம்மில் பெரும்பாலோர் புரிந்துகொண்டுள்ளோமா என்பதே சந்தேகம்தான். சராசரி அரசியல்வாதிகளோ நிச்சயமாகப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்.
சொல்பவர்:-இந்த மகாநாட்டின் வெற்றிக்கு வழி காட்டிய சிறப்பு மிக்க இந்தியச் சட்ட நிபுணர்களில் திரு. தேஜ்பகதூர் சாப்ரு ஒருவர். மற்றவர் டாக்டர் எம். ஆர். ஜெயகர். டாக்டர் ஜெயகர் காந்தியுடன் தனிப்பட்ட முறையில் நட்புரிமை கொண்டவர். ஆனால் அரசியலில் அவர் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுபவர் என்றும் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துடையவர் என்றும் கண்டார். இலண்டனில் நடந்த முதல் மகாநாட்டுக்குக் காந்திஜியை அழைத்துவர வேண்டும் என்று விரும்பினார்.
எம். ஆர். ஜெயகர்:-அவர் ஆரம்ப நாட்களில் சேரவில்லை. அவர் வர மறுத்தார். அப்பொழுது இங்கிலாந்து முழுவதும், என் கருத்தைக் கேட்டால், எங்கள் காலடியில் இருந்தது என்றே கூறுவேன். காந்திஜியின் பெயர் எங்களுக்குப் பின்னால்தான் இருந்தது. சாப்ரூவும் நானும் அவரைக் கூட்டிக்கொண்டு வர எங்களால் இயன்ற அளவு முயன்றோம். அவர் வரவில்லை. வற்புறுத்தியதன் பிறகே வந்தார். ஆனால் அவரது தீவிரக் கொள்கை பிரிட்டிஷ் பிரதிநிதிகளைக் கவரவில்லை. நாங்கள் எல்லோரும் குடியேற்ற நாட்டின் அந்தஸ்தை விரும்பினோம். நாங்கள் அதே சமயத்தில் குடியேற்ற நாட்டின் அந்தஸ்தை அடைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினோம். காந்திஜியும் குடியேற்ற நாட்டின் அந்தஸ்தைத்தான் கேட்டார். ஆனால் அதை அடைய அவர் கையாள நினைத்த முறை இங்கிலாந்தின் அனுபவ முறையினின்றும் மாறியிருந்தது. பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தார். பிரிட்டிஷ் மக்களை அவர் கவர்ந்திருக்கக்கூடும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரது கொள்கைள் மிகவும் முரட்டுத்தனமானவை என்று கருதப்பட்டன.
சொல்பவர்:-பிரிட்டிஷ் மக்களால் மட்டும் அல்ல. திரு. சாமுவேல் ஹோர் மிகவும் சிரமப்பட்டுக் காந்திஜியை இலண்டனை விட்டுப் புறப்படாமல் தடுக்க முயன்றார். திடீரென ஒரு வகை உள்ளுணர்வுக்கு ஆளாகி இந்தியப் பிரதிநிதிகளுக்கெல்லாம் எரிச்சலை மூட்டுபவராக காந்திஜி நடந்துவருகிறார் என்று அவருக்குத் தோன்றியது.
டெம்பிள்வுட் பிரபு:-காந்திஜி தாம் மேற்கொண்டிருந்த மூன்று குறிக்கோள்களிலேயே கண்ணாயிருந்தார். வேறு எவர் மீதும் அவர் கவனம் செலுத்தவில்லை. இடையிடையே சொன்ன கருத்துக்களையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார். அது மற்றவர்களுக்கு எரிச்சலைத் தந்தது. ஒருநாள் பல்வேறு விஷயங்களில் புகுந்து புறப்பட்டு மிகவும் சிரமத்துக்குள்ளானோம். அன்று இரவு 11 மணி இருக்கும். அவர் ஏற்கனவே பேசின பேச்சை மேலும் மேலும் பேசிக்கொண்டே போனார். அது சோர்வுற்றிருந்த இந்தியர்களுக்கும், முகமதியர்களுக்கும் எரிச்சலைக் கொடுத்தது. ஆனாலும் அவர் தமது பேச்சு பிறரை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதை உணராமலேயே தம் பேச்சில் உறுதியாயிருந்தார். வட்ட மேஜை மகாநாட்டைப் பொறுத்தவரை அவருடைய பங்கு உருப்படியான கருத்து உருவாவதற்குப் பதிலாக எரிச்சலைத் தூண்டுவதாகவே அமைந்தது. ஆனாலும்அவர் ஒரு பெரிய மனிதர் என்ற என் எண்ணம் வலுப்பெற்றது இவருடைய பல வேறு குணநலன்களாலும் நான் பெரிதும் கவரப்பட்டிருந்தமையால் மகாநாடு தடைபடாமல் நடப்பதற்குஎன்னால் ஆன முயற்சியைச் செய்துகொண்டிருந்தேன்.
சொல்பவர்:- கருத்து வேற்றுமைகள் ஏராளமாக இருந்தன. முகமதியர்கள் தனித்தொகுதி கேட்பதில் காட்டிய தீவிரம் ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஊன்றி ஆராய்ந்த பொழுது ஒவ்வொரு சிறுபான்மைக் கோஷ்டியுமே ஒன்றன் பின் ஒன்றாகத் தனி உரிமைக்கு அடிகோலின.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-“முகமதியர்களும், சீக்கியர்களும், தீண்டாதாரும் மகாநாட்டிற்குச் சென்றிருந்தார்கள். முகமதியர்களாகவும், சீக்கியர்களாகவும், தீண்டாதார்களாகவுமே அவர்கள் மகாநாட்டிலிருந்து வெளியே வந்தார்கள். ஒரு வினாடி கூட அங்கே யாரும் இந்தியராக இல்லை”என்று அவர் சொன்னார். தாம் ஒருவரே தனிப்பட்ட முறையில் இந்தியப் பிரதிநிதியாக இருந்ததாக அவர் உணர்ந்தார்.
டெம்பிள்வுட் பிரபு:-காங்கிரஸ் மட்டுமே இந்தியாவின் அரசியல் பிரதிநிதியாகச் செயற்படுகிறது. மற்றப் பிரிவு மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்விதப் பயனும் இல்லை என்று காந்திஜி அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-எண்பத்தைந்து சதவிகித இந்திய மக்களின் சார்பில் பிரதிநிதியாகத் தாம் வந்திருப்பதாக அவர் ஒரு தடவை சொன்னார். இது சிறிது மிகைப்படக் கூறியதாகும். ஏனெனில் முகமதியர்களில் மிகச் சிறுபான்மையினரைத் தவிர ஏனையோருக்கு அவர் பிரதிநிதியாக இருந்ததில்லை. ஆனால் ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் தீண்டாதார்கள் ஆகியவர்களைக் கொண்டு பார்க்கும் பொழுது அவர் பெருமைப்பட்டது சரியாகும்.
சொல்பவர்:-எப்படி நோக்கினும் இது உண்மையே. மற்றோரைக் காட்டிலும் தீண்டாதார்களின் நலனைப் பாதுகாப்பதை அவர் தம் கடமையாக உணர்ந்திருந்தார். இது விஷயமாக பிரெயில்ஸ்ஃபோர்டு அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-அவர் இவ்விஷயத்தில் மிகவும்உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் என்றே நான் நினைக்கிறேன்.அவர்ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டாற் போன்றதோர்உணர்ச்சியால்வேதனைப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார். ஹிந்து சமயம்இந்தத் தீண்டாதவர்களை எவ்வளவு கேவலமாக நடத்தியிருக்கிறது என்பதை அவர் அறிவார். எனவேதாம் தவற்றைத் தமது ஹிந்து சமுதாயமே திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் முடிவு செய்தார்.
சொல்பவர்:-இப்பிழையைத் திருத்துவதற்காகக் காந்திஜியே அப்பொழுது ஒரு புதிய இயக்கத்தையும் புத்துணர்வையும் தோற்றுவிக்க முயன்றார். டாக்டர் வெரியர் எல்வின் இந்த இயக்கம் தொடங்கிய நேரத்தில் ஒருசில மாதங்கள் அவருடன் கூடவே இருந்திருக்கிறார்.
வெரியர் எல்வின்:-ஆம் 1931ஆம் ஆண்டு அகமதாபாத்திலுள்ள பிரபல ஆலை முதலாளிகளுக்குச் சொந்தமான ஒரு கோவிலுக்கு நான் அவருடன் போயிருந்தேன். காந்திஜி தீண்டாதாரின் குழந்தைகள் பலரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது சாதி ஹிந்துக்களான பூசாரிகளின் முகம் போன போக்கு எனக்கு இன்றும் நன்கு நினைவிருக்கிறது. அவர்களுக்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. அப்புறம் நிகழ்ந்த கூட்டத்தில் பேசும் பொழுது தீண்டாதார்களை இனி நாம் ‘ஹரிஜன்’ -அதாவது கடவுளின் குழந்தைகள் -என்று அழைக்க வேண்டும் என்று புத்திமதி கூறினார். அதுமுதல் அவர்கள் அந்தப் பெயராலேயே அறிமுகமாயினர்.
சொல்பவர்:-ஆனால் வட்டமேஜை மகாநாட்டில் அழுத்தமான ஒரு புதுமுகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. தீண்டாதார் குலத்தில் பிறந்த டாக்டர் அம்பேத்கார் தமது சொந்த முயற்சியாலும்குணநலன்களாலும் முன்னுக்கு வந்தவர். அவர் ஜாதி ஹிந்துக்கள் காட்டும் இந்தப் பரிவை விரும்பவில்லை.
அம்பேத்கார்:-எங்களுக்குத் தனித் தொகுதி கொடுத்துவிடுங்கள்.
சொல்பவர்:-அம்பேத்கார் நேரிடையாகப் பேசுபவர். இலேசில் பிறருக்கு மசியமாட்டார். இதற்குப் பின்னரும் கூட அவர் காந்திஜியின் பக்கம் மாறவில்லை.
பி. ஆர். அம்பேத்கார்:-தீண்டாதாரைப் பற்றிப் பேசுவதன் நோக்கமெல்லாம் அவர்களைக் காங்கிரஸில் இழுத்துக்கொள்வதற்காக என்பது ஒன்று. இரண்டாவது தீண்டாதார் அவரது சுயராஜ்ய இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கவேண்டும் என்பது. இதற்குமேல் அவருக்கு உண்மையாகத் தீண்டாதவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
சொல்பவர்:-ஆனால் காந்திஜியின் நோக்கம் போதுமான அளவு திட்பமுள்ளதாக இருந்தது. இந்தியாவிற்குத் திரும்பிச்சென்ற பிறகு பூனாவில் அவர் தம்மைச் சோதனைக்கு உள்ளாக்கி உண்ணாவிரதம் இருந்தார். இலண்டன் மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பங்களைக் களைவதற்கு அவர் தயாராக இருந்ததைப் பியாரேலால் நினைவுகூர்கிறார்.
பியாரேலால் நைய்யார்:-இந்தியாவின் விடுதலைக்காக நான் தீண்டாதாரின் நலன்களைப் பணயம் வைக்கமாட்டேன் என்று அவர் சொன்னார். ஆனால் பெரும் பிரிவினரான தீண்டாதவருக்குத் தனித் தொகுதி உகந்ததல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார்.ஆகவே உயிருள்ள வரை ஒருவராகவே போராட வேண்டியிருப்பினும் நான் எதிர்த்துப் போராடுவேன் என்று அவர் சொன்னார். அப்பொழுது யாருமே இதன் முடிவு எதில் கொண்டுபோய் விடும் என்று சிந்தித்துப் பார்க்கவில்லை.
சொல்பவர்:-இந்திய ராஜ்யங்களின் பிரச்சினைகள் காந்திஜி கண்டது போல் முற்றிலும் மாறுபட்டிருந்தன. அவ்வளவு சிக்கலாக இல்லை. மைசூர் திவானாக மகாநாட்டில் கலந்துகொண்ட சர். சாமிர்ஜா இஸ்மாயில் காந்திஜி அரசர்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்றே கூறுகிறார்.
சர். சாமிர்ஜா இஸ்மாயில்:-அரசர்கள், தங்கள் குடிகளை அவர்களே ஆண்டுகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அரசர்கள் அந்தந்த ராஜ்ய மாகாணங்களுக்குத் தலைவர்களாக இருந்து பணிபுரிய வேண்டும் என்றுமே அவர் விரும்பினார். என்னைப் போன்ற பலரும் இதையேதான் விரும்பினோம். அவர் உயிரோடு இருந்தால் அவர் இந்திய அரசர்களைப் பாதுகாத்திருப்பார். இதுவே என் சொந்தக் கருத்து.
சொல்பவர்:-அவுன்டு என்ற ஒரு சிறு சமஸ்தான அரசர் பின்பு ஒருசமயம் காந்திஜியிடம், ஒரு எளிதான அரசியல் அமைப்பு ஏற்படுத்துவது பற்றி ஆலோசனை கேட்டார். ஆபாபந்த் என்ற அரசரின் மகன் காந்திஜி எப்படி இதை முடிவான தியாகமாக இருக்கவேண்டுமென்று கேட்டார் என்பதை நினைவுகூர்கிறார்.
ஆபாபந்த்:-எங்கள் மனத்திலிருந்ததெல்லாம் மக்களுக்கு நல்ல பள்ளிகள், நல்ல உணவு, போன்ற ஏனைய வசதிகள் கிடைக்க என்ன வழி? அதற்கு நல்ல நேர்த்தியான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதுதான். ஒரு வகையில் நல்லாட்சி. அந்தந்த ராஜ்யத்து அரசர்கள் குடும்பத் தலைவர்களைப்போல் திகழ வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் காந்திஜி அதைத் தலைகீழாக மாற்றினார். ராஜாக்கள் குடும்பத் தலைவர்களாக அல்ல; குடிபடைகளின் தொண்டர்களாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
சொல்பவர்:-அரசர்களது விஷயத்தில் காந்திஜியின் போக்கை ஒரு விசித்திரக் கலவை என்றார் பிரெயில்ஸ்ஃபோர்டு.
எச். என். பிரெயில்ஸ் போர்டு:-நான் சந்தித்துப் பேசிய திறமை வாய்ந்த பெரும்பான்மை இந்தியர்களும் தேசியவாதிகளும் அரசர்களே சுதந்திரம் பெற முக்கியத் தடையாக இருப்பதாக எண்ணினார்கள். காந்திஜி இதை எப்பொழுதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்விஷயத்தில் அவருடைய போக்கு விசித்திரமாயிருந்தது. ஒருபுறம் இந்திய அரசர்கள் மீது அவரது உள்ளம் அன்பு கொண்டிருந்தாற்போல் தோன்றினாலும் அலட்சிய பாவமும் கலந்திருக்கிறாற்போல் இருந்தது. அவர்களைப் பற்றிப் பேசும்போது அவர் சொல்லுகின்ற ஒரு சொற்றொடர் நினைவு வருகிறது. “அவர்களை இந்திய உடையில் இருக்கும் பிரிட்டீஷ் அதிகாரிகள்”என்பார் அவர்.
சொல்பவர்:-அரசர்களது அந்தஸ்த்தைப்பற்றி மகாநாட்டில் கலந்துகொண்ட மாணவர் குழு ஒன்று காந்திஜியுடன் விவாதித்தது. அந்தக் குழுவில் ஹத்தீ சிங்கும் டாக்டர் அஷ்ரஃபும் இருந்தனர்.
ராஜா ஹத்தீ சிங்:-இலண்டனிலிருந்தும் ஆக்ஸ்போர்டிலிருந்தும் கேம்பிர்ட்ஜிலிருந்தும் வந்த ஒரு டஜன் இளைஞர்கள் இருந்தோம். நாங்கள் அனைவரும் சோஷலிஸ்டுகள். அப்பொழுது கம்யூனிசத்தின்பால் நாட்டம் கொண்டவர்களாக இருந்தோம். இந்தியாவில் உள்ள ஏழைகள் நன்மை அடைய என்ன வாய்ப்பு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று நாங்கள் காந்திஜியைக் கேட்டோம்.
கே. எம். அஷ்ரஃப்:–“மக்களுக்கு எதிராக அரசர்களை ஆதரிக்கப்போகிறீர்களா? அல்லது அரசர்களுக்கு எதிராக மக்களை ஆதரிக்கப்போகிறீர்களா?”என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு “மக்கள் எல்லோரும் அஹிம்சை வழியில் நடந்தால் நான் நிச்சயம் ஆதரவளிப்பேன். ஆனால் அவர்கள் ஹிம்சை வழியில் நடந்தால் நிச்சயமாக அவர்களை எதிர்ப்பேன்”என்றார்.உடனே என் நண்பர் “காந்திஜி! இது சரியான விடை இல்லை” என்று சொன்னார்.
ராஜா ஹத்தீ சிங்:-இளம் மாணவர்கள் சித்தாந்த ரீதியில் பேச விரும்புவார்களாகையால் நாங்கள் அந்த ரீதியில் பேசி காந்திஜியை ஒரு மூலையில் தள்ள முயன்றோம். அதன் மூலம் அவர் பணக்காரர்களையும் முதலாளிகளையும் ஆதரிக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வார் என்று எண்ணினோம். அவரை ஒரு மூலையில் தள்ளிவிட்டதாக எண்ணியதற்குக் காரணம் அவர் பேசியது பொருளாதாரம் அல்ல; வெறும் குப்பை என்று எண்ணியதேயாகும். ஆம் அந்த நிலையிலே நான் எண்ணியது அதுதான்.
சொல்பவர்:-இவ்வளவு சிக்கல்களுக்கும் இடையில் காந்திஜியின் தனிப்பெருமை தானாகவே வெளிப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் வந்தன. கிளேர் ஷெரிடான், கார்ல்டன் ஹோட்டலில் நடந்த பெரிய வரவேற்புக்குப் போனார். அரசர்கள், மகாநாட்டு பிரதிநிதிகள், மந்திரிகள், பார்லிமென்ட் அங்கத்தினர்கள் மற்றும் தூதுவர்கள் அதில் கலந்துகொண்டனர். உண்மையில் யார் யாரோ வந்திருந்தனர். ஆனால் காந்திஜியை மட்டும் காணோம்.
கிளேர் ஷெரிடான்:-கசமுசவென்று நடந்துகொண்டிருந்த பேச்சு சட்டென்று நின்றது. நான் திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் அந்தத் திசையை நோக்கினார்கள். நிலைப்படியில் மகாத்மாவின் சிறு உருவம் நிழல் ஆடியது. அவர் பால்ரூமுக்கு வரவில்லை.வாசற்படியிலேயே நின்றார். ஒவ்வொருவரும் அவரிடம் பேசினார்கள். மகாராஜாக்களும் முற்றிலும் மாறுபட்ட முறையில் பாராட்டுகளைத் தெரிவிக்க அவரிடம் சென்றார்கள். அவர் அறைக்குள் வரவேயில்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் மாயமாய் மறைந்துவிட்டார். உலகாய முறையில் நடக்கும் பெரிய விருந்துகளில் அவர் கலந்துகொள்ளச் சம்மதிப்பதில்லை.