Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all articles
Browse latest Browse all 219

நித்ய சைதன்ய யதியும் காந்தியும்

$
0
0
(தமிழினி வெளியீடாக ஆர்.சிவகுமார் மொழியாக்கம் செய்துள்ள அனுபவங்களும் அறிதல்களும் எனும் நூலில் காந்தியை சந்தித்தது பற்றி நித்ய சைதன்ய யதி எழுதி இருக்கிறார். இதை கண்டுபிடித்து தட்டச்சு செய்து கொடுத்த நண்பர் பிரபுவுக்கு நன்றிகள்) 

Image result for guru nithya
குருநித்ய சைதன்ய யதி 



காலை நான்கு மணிக்கு மணிபவனதிற்கு போனேன் . காலை பிரார்த்தனைக்கு  அவர் 5 மணிக்கு வருவார் என்று எனக்கு தெரியும். அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வழக்கமான 'ஸ்ரீ ராம் ஜெய்ராம், ஜெய்ராம் 'க்கு  பிறகு கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின்  ஐம்பதைந்தாவது செய்யுளில் இருந்து பாராயணம் செய்யத் தொடங்கினார் . அறுபத்தி இரண்டாவது செய்யுளுக்கு வந்தபோது அவருடைய குரலில் ஒரு கனிவு உண்டானது. அவருடைய பாராயணத்தில் முழுமையான உண்மை  உணர்ச்சி ஒலித்தது. முதன் முறையாக நான் அந்த செய்யுள்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் .

    அவற்றின் அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்றாலும் மகாத்மாவின் வாயிலிருந்து நேரிடையாக கேட்டதால் அவற்றை பாராயணம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது . இப்படியாகதான் அதன்பிறகு என் வாழ்க்கை பாதையாக இருந்த கீதையை நோக்கி நான் திருப்பப்பட்டேன்.

    பிரார்த்தனை முடிந்தவுடன்  மகாத்மாவைச் சுற்றி ஒரு தடுப்பு வளையம் அமைக்கப்பட்டதைப் பார்த்தேன் . சுற்றி இருந்தவர்கள் தங்களுடைய கையெழுத்து புத்தகக்தில் காந்திஜியிடம் கையெழுத்து வாங்கினார்கள் .அவரிடம் கையெழுத்து வாங்குவதுற்காக அவர்கள் முன்கூட்டியே ஒரு பெரிய கூடையில் ஐந்து ரூபாய்  நோட்டுகளை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய ஞானி மக்களிடம் இந்த முறையில் தொடர்பு கொண்டிருந்தது எனக்கு முதலில் ஒரு குறையாகப்பட்டது. ஒரு கையெழுத்து ஐந்து ரூபாய்  என்பது மிகப் பெரிய வலியாக எனக்கு தோன்றியது. காந்தியின் புனித பிம்பமும் ஒரு வணிக வகுப்பை சார்ந்தவருக்கு இருக்கும் இயல்பான உணர்வான பணம் சார்ந்த நடவடிக்கையும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டன .  

     பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பிறகு 6.30 மணி வாக்கில் காந்திஜி அவருடைய அறைக்கு சென்று விட்டார். மீண்டும் 11 மணிக்கு ஒரு அறையின் பளபளப்பான தரையில் பத்து பதினைந்து பேர் சுற்றி இருக்க. அவர் உட்காந்திருப்பதை   பார்த்தேன் . அழைக்கபடாமல் நுழைவது என் சுபாவம் அல்ல . தயக்கமும் வெட்கமும் மேலிட நான் மெதுவாக அறைக்குள் நடந்து போய்  காந்திஜிக்கு சாத்தியமான நெருக்கத்தில் உட்கார்ந்தேன். அவர் என்னைப் பார்த்தார். அந்த குழுவிலேயே  நான் தான் வயதில் மிக இளையவன் .

    அவர் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். விமானப்படையிலும் பிறகு ராணுவத்திலும் சிறிது காலம் இருந்ததால் என்னால் இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் பால் வேறுபாடு காட்டும் வார்த்தைகளோடு வினைச்சொற்களை இணைப்பதில் எனக்கு சிரமம் இருந்தது . எனவே பேசுவதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து நான் வருகிறேன் என்று காந்திஜி என்னைக் கேட்டார்.  "நான் கேரளாவிலிருந்து வருகிறேன்"என்று ஆங்கிலத்தில்  பதில் சொன்னேன். "கேரள மக்களுக்கு ஆங்கிலம் தான் தாய்மொழியா?"என்று அவர் மீண்டும் இந்தியில் கேட்டார் . மலையாளி  அல்லாதவர்களோடு  பேசும் பொழுது கேரள மக்கள் ஆங்கிலத்தில் பேசுவதாக நான் ஆங்கிலத்திலேயே சொன்னேன் .

   நான் என்னுடயை தாய்மொழியில்தான் பேசவேண்டும் என்று காந்திஜி வலியுறுத்தினார். நான் சொன்னேன் . "பாபுஜி, நீங்கள்  இங்கிலாந்தில் படித்தவரென்பதும் , ஆங்கிலத்தில் பேசுபவர் என்பதும் எனக்குத்  தெரியும். எந்த மொழியிலும் என்னுடயை சரளத்தை காட்டுவதற்காக நான் இங்கு வரவில்லை. நான் இங்கு எண்ணப் பரிமாற்றத்திற்காக வந்திருக்கிறேன். ஆங்கிலம்தான் இந்தியாவில் இணைப்பு மொழி. நாம் பேசுவதால் தீங்கில்லை". பிறகு அவர் கேட்டார் . "இந்தியாவின் தேசிய மொழியில் நீ ஏன்  பேசவில்லை?"இளமையும் தன்  முனைப்பும் ஏற்படுத்திய கோபத்தில், "இந்தி என்னுடைய தாய்மொழியுமல்ல , தந்தைமொழியுமல்ல "என்று ஆவேசத்துடன் சொன்னேன் .

 பிறகு மென்மையான குரலில் காந்திஜி பதில் சொன்னார். "பிரிட்டிஷாருக்கு நீ அடிமைப்பட்டிருக்கிறாய் . எஜமானனின் மொழியில் பேசுவதில் ஒரு அடிமை கர்வம் கொள்வான். நீ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும் வரை உன்னால் உன் தாய்மொழியில் பாண்டித்தியம் பெறமுடியாது. உன்னுடைய  தேசிய மொழியிலும் பேச முடியாது".

 நான் வருத்தமும் அவமானமும் அடைந்தாலும் அமைதியாக அங்கிருந்து போக தீர்மானித்தேன். துயரம் நிரம்பிய இதயத்தோடும் காயம்பட்ட  சுயத்தோடும் நான் என்னுடைய அறைக்குத் திரும்பினேன். பிற்பகல் 3 மணிக்கு மார்க்சியம் குறித்து மகாத்மாவிடம் ஒரு முழுப்போரை நிகழ்த்தும் திட்டத்துடன் அதே அறைக்கு திரும்பிப் போனேன். மார்க்சியம் மட்டுமே இந்தியாவைக்  காப்பாற்ற முடியும் என்று அந்தநாளில்   நான் முழுக்க நம்பியிருந்தேன். காந்திஜியின் ராம்ராஜ்யக் கோட்பாடு அரசியல் விடுதலையைப் பிற்போக்குத்தனமாகப் பார்க்கிறது என்றும் நான் நினைத்திருந்தேன் .

   ஒவ்வொருமுறை நான் காந்திஜியைப் பார்தபோதெல்லாம் என் மனதில் இருப்பதைப் பேசுவதைத்  தடுப்பது போல அவர் இரண்டு விரல்களை உயர்த்தியது என்னை எச்சரிப்பதுபோல இருந்தது. ஒரு சந்தர்பத்தில்  அவருடையை கண்களை நான் நேராகப்  பார்த்தபோது அவர் நான் சொல்ல வந்ததைக் கேட்க  விரும்புவதுபோலத் தோன்றியது. என்னுடைய  வார்த்தைகள் ஒரே வீச்சில் பீரிட்டன. "பாபுஜி, உங்களுடைய ராம்ராஜ்யம் இந்தியாவை ஒருபோதும் காப்பாற்றாது. வர்க்கப்போர் மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான விடுதலையைத் தரும். இரண்டு வர்க்கங்கள் இருகின்றன . பணக்காரர்கள், ஏழைகள் . இருப்பவர்கள் சுரண்டுகிறவர்கள். இல்லாதவர்கள்  சுரண்டப்படுகிறவர்கள். இந்த இரண்டு வர்க்கங்களின் அக்கரைகளும் நேர் எதிரானவை. அவர்களிடையே  ஒரு வர்க்கப்போர் தவிர்க்க இயலாதது. சுரண்டப்ப்படுகிறவர்களின் உரிமையை நீங்கள் ஆதரிக்க வேண்டும் ".

   இதைக் கேட்ட காந்திஜி கருணையுடன் என்னைப்  பார்த்துச்  சொன்னார். "கார்ல் மார்க்சைப் படித்து விடுதலை குறித்து அவருடைய கோட்பாட்டைப் பரிசீலிக்க  என் வாழ்வில் சந்தர்பமே நேரவில்லை என்று நீ நினைக்கிறாயா ?" அவர் ஆங்கிலத்தில் பேசுவதைக்  கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். குரலைத் தாழ்த்திக்கொண்டு, "நீங்கள் அதைப் படித்திருக்கலாம். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலித்திருக்கிறீர்களா?"என்று கேட்டேன். பிறகு அவர் சொன்னார் "உன்னுடைய நம்பிக்கையில் நீ உறுதியாக இருப்பது போல தெரிகிறது. மார்க்ஸ்  சொல்வது சரி என்றால் நான் சொல்வது தவறா?". உடனடியாக நான், "ஆமாம் , அப்படித்தான்"என்று பதில் சொன்னேன் .

 ஒரு கணத்துக்குப்பின், குணப்படுத்தவே முடியாத ஒரு நோயாளியை  ஒரு மருத்துவர் பார்ப்பதுபோல என்னுடைய  முகத்தைப்  பார்த்து விட்டு, "நீ உன்னுடைய சுய சிந்தனையைப்  புறக்கணித்துவிட்டு  மார்க்சின் சிந்தனைக் கோணத்திலிருந்து உண்மையைப் பார்க்கிறாய். என்னிடமும் தாராள மனதுடன் நீ நடந்து கொள்ளக்  கூடாத ? என்னுடயை கருத்தை புரிந்து கொள்ள சிரமம் எடுத்துக்  கொள்வாயா? உண்மைக்கு எத்தனைப்  பரிணாமங்கள்  உள்ளன?"என்றார் . "ஒன்று"என்று நான் துடுக்காகச் சொன்னேன். அவர் "இல்லை, உண்மை வைரத்தைப்  போன்றது. அது பல பட்டைகளைக்  கொண்டது"   

 முதல்முறையாக அப்படி ஒரு சாத்தியத்தைப்  பற்றி தெரிந்து கொண்டேன். மனத்தால் பேச்சற்றுப்  போனேன்."உண்மை பல தோற்றங்களைக்  கொண்டது. பின் எது உண்மையைப் பார்ப்பதில் சரியான பார்வை?", என்று எனக்கு நானே முனுமுனுத்துக்கொண்டேன். என்னுடைய குழப்பதைக் கண்ட மகாத்மா, பகுத்தறிவுப் பார்வை என்பது எப்போதும் அரைகுறைப்  பரிசீலினைக்கு சார்பானது என்று விளக்கிச் சொன்னார். அவர் அதிகம் பேசப்பேச அவருடைய பேச்சு நயமும் அதிகரித்தது என்னுடைய முந்தைய  நம்பிக்கைகள் எல்லாம் நொறுங்கிப் போயின. கடைசியில் என்னால் வாயைத் திறக்ககூட முடியவில்லை. என்னை அவருக்கு ஒப்புக் கொடுத்துவிட வேண்டும் என்று திடீரென்று உணர்ந்தேன் . கழுவாயும், அடக்கமும் நிறைந்த வார்த்தைகளில் அவரிடம், "பாபுஜி, ஹரிஜன சேவாதளத்தில் சேர்வதன் மூலம் உங்களுக்கு சேவை செய்ய என்னை அனுமதிப்பீர்களா?"என்று   மன்றாடிக்   கேட்டுக்கொண்டேன்.

  சிரித்துவிட்டு அவர் சொன்னார் , "சரி, இந்த நிமிடம் முதலே ". என் இருந்த கொந்தளிப்பு திடீரென்று சாந்தமான அமைதியாக மாறிப்போனது. மறுகரையை அடைந்தது போல இருந்தது . அலுவலகத்திற்கு சென்று சேவா தளத்தில் என்னை ஒரு தொண்டனாகப்  பதிவு செய்துகொண்டேன் .

  மாலையில் மகாத்மாவின் பிரார்தனைக்  கூடத்திற்குப்  போனபோது கீதையின் ஒரு பிரதியை வாங்கி அவர் பாராயணம்  செய்யும் வரிகளைப்  பின்தொடர்ந்தேன். அடுத்த முன்று நாட்களும் எல்லா விவாதங்களையும் கைவிட்டு ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தேன். முதல்முறையாக எதிர் சிந்தனைகளையும் எதிர் விவாதங்களையும் மனதில் உருவாக்கிக் கொள்ளலாம் என்று அறிந்தேன் . பிறர் சொல்வதை கவனிக்க தொடங்கினேன். விவேகம் நிரம்பிய வார்த்தையை யார் சொன்னாலும் அதைக் கவனிக்கும் தகுதி வாய்ந்த மாணவனாக நான் என்னை இப்படியாகத்தான்  உருவாகிக் கொண்டேன்.

Viewing all articles
Browse latest Browse all 219

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>