Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all articles
Browse latest Browse all 219

கலாம் - அஞ்சலி

$
0
0

கலாம் குறித்தான விவாதங்கள், அஞ்சலிகள், ஆக்கலாம் பேர்க்கலாம் என்று முடியும் அடுக்குமொழி கவிதைகள், இட்டுகட்டப்பட்ட மேற்கோள்கள் எல்லாம் ஓய்ந்த பின்னர் இதை எழுதுகிறேன். அவரை ஆஞ்சநேயர், பீஷ்மரோடு ஒப்பிடும் வாட்சப் ஃபார்வர்டுகள், செர்னில் கடவுள் துகள் ஆய்வு தடைபட்டு திகைத்து நின்றபோது நடராஜர் சிலையை ஈசான்ய மூலையில் கலாமின் ஆலோசனையின் பேரில் நிறுவியதால் தடையின்றி ஆய்வு முடிந்தது என்றொரு செய்தி, நாசாவின் செயற்கைக்கோள் திருநள்ளாருக்கு மேல் ஸ்தம்பித்து நின்ற தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்தி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தினார் எனும் அதிர்ச்சி தகவல், விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் கலாம் ஆவிகள் உலகில் எப்படி இருக்கிறார் என்று கேட்டு எழுதியிருக்கிறார். அனுதினமும் அவருடைய மரணத்தில் புதிய புதிய மர்மங்களை துப்பு துலக்கி வரும் குறுஞ்செய்திகள். நம் புனைவு திறன் வளமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்டு பெருமிதம் கொள்கிறேன். போகிற போக்கில் எங்கே கலாம் ஜோக்ஸ் என்று எதையாவது உருவாக்கிவிடுவார்களோ எனும் கிலி தொற்றிகொண்டது. 

Image result for abul kalam


மறுபக்கம் அவர் ஒரு காபிர், முனாபிக், உண்மையான முசல்மான் அல்ல, அவருக்கு து ஆ செய்யகூடாது என முழங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத குரல்கள். அவர் ஷிவ் கேரா, நார்மன் பீல்மேன் போல குப்பி குப்பியாக தன்னம்பிக்கை டானிக் விற்றவர் மட்டுமே. கனவு காணுங்கள் எனும் வெற்று கோஷத்தை எழுப்பியவர் போன்ற குற்றசாட்டுக்கள். அவர் ஒரு விஞ்ஞானி அல்ல. தொழில்நுட்பவியலாளர் என்றும். அவர் அதுவும் அல்ல வெறும் மேலாளர் என்றும் அவருக்கும் அறிவியலுக்கும் இடையில் விண்ணுக்கும் மண்ணுக்குமான தொலைவு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொலைநோக்கு பார்வையற்றவர், பசியால் வாடும் தேசத்தில் ஆயுதங்களை உருவாக்கும் அநீதியை செய்தவர். ஈழ பிரச்சனைக்கு குரல் கொடுக்காதவர், குறைந்தது விஸ்வரூபம் ரிலீசுக்காவது உதவியிருக்கலாம், செங்கொடி, முத்துகுமார் போன்றவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தாதவர். அனேக இந்து சாமியார்களை வணங்கிய ஆரிய அடிவருடி. காந்திக்கு நிகழ்ந்தது போல் அழகிய ஆங்கிலேய பெண்களுடன் நடனமாடும் புகைப்படங்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலாம் குறித்து பேசுவதற்காக பங்குபெற சென்றேன். அதற்காக குறுகிய காலத்தில் அவருடைய அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள் ஆகிய நூல்களையும் அவருடைய வலைதளத்தையும், அவருக்காக எழுதப்பட்ட அஞ்சலி கட்டுரைகளையும், நினைவேந்தல்களையும் தொடர்ச்சியாக வாசித்து கொண்டிருந்தேன். விவாதத்திற்கு வந்த நண்பர் ஒருவர் கூறினார். “கலாமின் மரணம் இத்தனை தன்னிச்சையாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது அவரை நாம் குறைத்து மதிப்பிட்டு இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது” என்றார்.  

சுதந்திர இந்தியாவில் தமிழகம் கண்ட மிகப்பெரிய மரணங்களில் இதுவும் ஒன்று. என் காலத்தில் மக்களை ஒருசேர ஆட்கொண்ட மிகப்பெரிய துக்கம் இதுவாகவே இருக்க முடியும். துப்புரவு தொழிலாளர்கள், பூக்கடைகாரர்கள், பழைய பேப்பர் கடைகாரர், ரசிகர் மன்றங்கள், ஆட்டோ சங்கங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கு தெரிந்த வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். தண்ணீர்பந்தல்களில் கலாமின் படம் வைத்து வாழைபழமும் தேங்காயும் படைதிருந்தார்கள். ராமேஸ்வர கோவிலில் மோட்சதீபம் ஏற்றியதாக செய்தி வாசித்தேன். குறைந்தது நான்கு லட்சம் பேர் அதிகபட்சம் எட்டு லட்சம் பேர் வரை ராமேஸ்வரத்தில் அவருடைய இறுதி சடங்கில் பங்குகொள்ள வந்தார்கள் என சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழகம் மட்டுமின்றி தேசம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு ஏவுகணை தொழில்நுட்பமோ, அதன் முழு முக்கியத்துவமோ, செயற்கைக்கோள் பற்றியோ, அணு அறிவியல் பற்றியோ, பெரிதாக ஆர்வம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தமிழர் ஒருவர் ஜனாதிபதியானதில் பெருமை கொண்டவர்கள். அவருடைய எழுத்துக்களை பெரும்பாலானோர் அணுகி வாசித்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய உரையை எங்கேனும் கேட்டிருக்கலாம் அல்லது எப்போதாவது செய்திதாளில் வாசித்திருக்கலாம். தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக பட்டமளிப்பு விழாவின் போது நானும் அவரை தொலைவிலிருந்து கண்டிருக்கிறேன். மொத்தமாக எழுந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம். என்ன பேசினார் என்பது கூட இப்போது நினைவிலில்லை. ஜனாதிபதி பதவிக்கு பின்பான காலகட்டங்களில் மக்கள் அவரை எவ்வளவு தூரம் நினைவுகூர்ந்திருப்பார்கள் என்று கூட தெரியவில்லை. ஆனால் இந்த துயரம், இந்த இழப்பு தனிப்பட்ட உணர்ச்சியாக, நன்றியாக எல்லோரிடமும் வெளிபட்டிருக்கிறது. மெல்ல அவரவர் பழைய வாழ்க்கைக்கு திரும்பி அதே சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தாலும் கலாம் சாதாரணர்களை எப்படி தீண்ட முடிந்தது? வெறும் கும்பல் மனப்பான்மையாக ஒதுக்கிவிடமுடியவில்லை. 

அவருடைய உதவியாளர் பொன்ராஜ் ஒரு தகவலை சொன்னார். தன் வாழ்நாளில் அவர் இரண்டுகோடியே பத்து லட்சம் மாணவர்களை நேருக்கு நேராக சந்தித்தவர். மாதத்தில் இருபது நாட்கள் பயணத்திலேயே கழித்தவர். காந்திக்கு பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மீண்டும் மீண்டும் பயணித்து மக்களுடன் உரையாடிகொண்டிருந்தவர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. கலாம் எப்படி மக்களை சென்றடைந்தார் என்பதற்கான விடை இதில் அடங்கி இருக்கிறது. அவர் எளிமையை பாவனையாக பழகியவர் அல்ல. அதிகாரமும் எளிமையும் முயங்கும் ஆளுமைகளின் மீது எப்போதும் மக்களுக்கு ஈர்ப்புண்டு. காந்தி துவங்கி அண்மைய காலம் வரை பல உதாரணங்களை சொல்ல முடியும். கலாம் மிக இக்கட்டான சூழலிலும் கூட தனது நேர்மையின் மீது எவ்வித கேள்வியையும் எழுப்ப அனுமதிக்கவில்லை. அவருடைய இந்த தனிமனித குணங்களே அவரை காந்தி, காமராஜர் வரிசையில் வைத்து பார்க்க தோன்றுகிறது. மேலும் இந்த பயணங்கள் வழியாக அவர் இந்தியாவை இணைக்கும் ஒரு சக்தியாக இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. 

நிகழ்விற்கு வந்திருந்த இயக்குனர் தனபால் அவர் ஆவணப்படம் எடுக்க ராமேஸ்வரம் சென்ற அனுபவத்தை கூறினார். அப்போது கலாமின் உறவினர் ஒருவர் கலாம் எப்படி அவர் குடும்பத்தாருக்கு உதவவில்லை, ஒரு அரசு பணிக்கு கூட ஏற்பாடு செய்யவில்லை என தனது ஆதங்கத்தை பதிவு செய்தார். வெளியில் வந்ததும் ஒட்டுமொத்த குழுவுமே கலாம் எப்பேர்பட்ட ஆளுமை என வியந்ததாக சொல்கிறார். பொன்ராஜ் வேறு ஒரு நிகழ்வை பற்றி சுட்டிக்காட்டினார். நேனோ அறிவியல் துறையில் செயல்திட்டங்கள் உருவாக்க கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளை ராஷ்டிரபதி பவனின் வழமைக்கு மாறாக விருந்துக்கு அழைக்கிறார். கலாம் தன்னுடைய எழுச்சி தீபங்கள் நூலில் அவர் ஏவுகணை துறைக்கு பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு ஏவுகணைக்கும் உரிய திட்ட இயக்குனரை நியமிக்க முயலும்போது பலரும் அவருடன் நட்பு பாராட்ட முயன்றதை பதிவு செய்கிறார். மேலும் ராக்கெட் தொழில்நுட்பத்தை காட்டிலும் அன்பு கொடுக்கும் நிர்பந்தங்களில் இருந்து தன்னை விடுவித்துகொள்வது மிக சிக்கலானது என கருதியதால் அனைவரிடமிருந்தும் சம தொலைவில் இருந்தேன் என்கிறார். கலாம் தன்னை எவரும் பயன்படுத்திக்கொண்டுவிட கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தார் என்பது புலப்படுகிறது. எல்லா மட்டங்களிலும் ஊழலுக்கு துனைபோகாதவர் எனும் பெயரை பெற்றவராக இருந்தார் என அவருடைய வகுப்பு தோழர் சுஜாதா அவரை பற்றிய கட்டுரையில் பதிவு செய்கிறார். அவர் எப்போதும் அதிகாரத்தின் மறுதரப்பில் தன்னை நிறுத்தி சிந்தித்தவராகவே இருக்கிறார். மாணவர்களோடு இருக்கும்போது அவரும் மாணவராகிவிடுகிறார். எல்லோரிடமும் கற்றுக்கொள்ள அவருக்கு ஏதோ ஒன்று இருந்தது. செயற்கையான இறுக்கமான ஜனாதிபதிக்குரிய முறைமைகளை மீறி மக்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தார். சரியாக சொல்வதானால் தனது ஜனாதிபதி பதவியை பயன்படுத்தி மேலும் அதிக மக்களை சென்றடைந்தார். 

Image result for abul kalam and kids

அதிகாரத்தில் இருந்தபோதும் அவர் கடைபிடித்த எளிமை, மக்களுடன் அவருக்கிருந்த அறுபடாத உரையாடல், மதங்களுக்கு அப்பால் உள்ள மனிதராகவே அவர் தன்னை எப்போதும் முன்வைத்தது, நேர்மை, பொது வாழ்வில் தூய்மை போன்ற அவரது தனிப்பட்ட பண்புகள் அவருடைய அறிவியல் சாதனைகளை காட்டிலும் வெகுமக்களை ஈர்த்திருக்கிறது. அவருடைய வாழ்க்கையில் ஒரு தேவதை கதை அம்சமும் உண்டு. எங்கோ இந்தியாவின் கடைகோடியில் படகுகள் செய்யும் நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் ஒவ்வொரு படியாக ஏறிச்சென்று நாட்டின் ஜனாதிபதியாகலாம் என்பது தான் எத்தனை மகத்தான கனவு. இத்தகைய மகத்தான வாழ்வும் மகத்தான பண்புகளும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பிறிதொரு ஆதர்ச பிம்பம் நம் இன்றைய இளம் இந்தியாவிற்கு கிட்டுமா? கலாம் அவருடைய அறிவியல் பங்களிப்புகளை காட்டிலும் இவ்வித தனிமனித இயல்புகளுக்காகவே இன்று விரும்பப்படுகிறார். நுகர்வு வெறி மிகுந்த உலகில் ஒரு துறவியை போல் வாழ்ந்து மறைந்த அவரின் இயல்பே நம்மை ஈர்க்கும் பெரும் விசை. 

இதைத்தாண்டி இந்த துக்கத்திற்கு காரணங்கள் பல இருக்கலாம். கலாமின் முறைமை மீறல்கள் அவரை நமக்கு நெருக்கமாக்கியது. முறைமைகளை பின்பற்றிய அடுத்தடுத்த ஜனாதிபதிகளை மக்கள் அவருடன் ஒப்பிட்டபடி தான் இருக்கிறார்கள். இதுவே கலாம் நம் நாட்டு தலைமைக்கு விடும் சவால். மக்கள் ஒரு தலைமையின் வெற்றிடத்தை ஆழத்தில் உணர்கிறார்கள். ஒவ்வொரு தலைமையிடமும் இவை எதிர்நோக்கப்படும். 

தனிமனிதராக அப்பழுக்கற்ற ஆளுமையாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவ்வண்ணமே நினைவுகூறப்படுவார். 

கலாம் தன்னை விஞ்ஞானி, தொழில்நுட்பவியலாளர் என்பதை காட்டிலும் ஆசிரியராகவே உணர்ந்தவர். அவருடைய சுயசரிதை என அறிமுகபடுத்தபட்ட அக்னி சிறகுகள் நூலில் அவருடைய ஆசிரியர்களை பற்றி தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். ஐந்தாம் வகுப்பு சிவ சுப்பிரமணிய ஐயர் துவங்கி, ஷ்வார்ட்ஸ் பள்ளி ஆசிரியர் செயின்ட் ஜோசெப் கல்லூரியின் கால்குலஸ் ஸ்ரீனிவாசன், தோத்தாத்திரி ஐயங்கார், எம்.ஐ.டியின் பேராசிரியர்கள் வரை அனைவரையும் விதந்தோதி எழுதுகிறார். கலாமின் வார்த்தைகளில் துலங்கும் விக்கிரம் சாராபாய் டாக்டர்.பிரம்ம பிரகாஷ், சதீஷ் தவான் ஆகியவர்கள் பெரும் மதிப்புமிக்க ஆளுமைகளாக தோன்றுகிறார்கள். குறிப்பாக எனக்கு சாராபாய் குறித்து வாசிக்க வேண்டும் என்றொரு ஆசை. அவர் கடைசியாக எழுதிய நூல் கூட சுவாமி நாராயன் பிரிவை சேர்ந்த தலைமை குரு பிரமுக் சுவாமிஜியுடன் தனது உரையாடல்களை பற்றியதே. ஒரு தேர்ந்த ஆசிரியராக அவர் தேர்ந்த ஆசான்களை கண்டடைந்து அடையாளம் காட்டியபடி இருக்கிறார். 

கலாம் எனும் தனிமனிதர், அவருடைய அறிவியல் பங்களிப்பு அரசியல் பங்களிப்பு என மூன்றாக வகுத்துகொள்ளலாம். செயற்கைகோளை ஏவும் ராக்கெட்டை உருவாக்கியதில் அவருடைய பங்களிப்பு நாமறிந்ததே. தொழில்நுட்பங்கள் மறுக்கப்பட்ட சூழலில், கல்வியும் ஏழ்மையும் சூழ்ந்த தேசத்தில் இத்தகைய உயரறிவியல் ஆராய்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுவிட முடியும்? அந்த குறைந்த தொகையில் தோல்விக்கும் தவறுகளுக்கும் வாய்ப்பில்லை. இந்த பின்புலத்தில் தான் இங்கு ஆய்வுகள் நடந்தன. ஏற்கனவே கண்டடைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் பொருட்களை நாமே கண்டடைய வேண்டும். அவைகளை நமது சொந்த கண்டுபிடிப்புகளாக உலகிற்கு அறிவிக்க முடியாது. அவைகளுக்கு உரிமை கோர முடியாது. காப்புரிமையோ ராயல்டியோ கிடையாது. கலாம் நியுடன், ஐன்ஸ்டீன், ஹெசென்பேர்க் வரிசையில் வரக்கூடிய விஞ்ஞானி அல்ல. இதை அவரே பதிவும் செய்திருக்கிறார். ஆனால் அவர் ஒன்றும் விஞ்ஞானம் அறியாத அம்மாஞ்சி அல்ல வெறும் மேற்பார்வை ஆளும் அல்ல. காலமும் சூழலும் அவரை அத்திசையில் நகர்த்தி இருந்தால் ஒருவேளை புதிய கண்டுபிடிப்பை அவர் செய்திருக்க கூடும். அதற்கான அறிவுத்திறன் அவருக்கு உண்டு. விஞ்ஞானிக்கு இருக்கும் கால சுதந்திரம் தொழில்நுட்பவியலாளருக்கு கிடையாது. கலாம் தனது எல்லையை தெளிவாகவே தீர்மானிக்கிறார். தேச நலனை தனக்கு மேலாக கருதுகிறார். அவருக்கு காலவரையற்ற விஞ்ஞான தேடல்களை காட்டிலும் வரையறுக்கப்பட்ட நிதி – கால எல்லையில் இலக்குகளுடன் செய்யப்படும் ஆய்வுகள் உவப்பாய் இருப்பதாக பதிவு செய்திருக்கிறார். 

செயற்கைக்கோள் ஏவுகணைக்கு தேவையாய் இருந்த பெரிலியம் தகடை பற்றி பொன்ராஜ் கூறினார். அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று அதை தயாரிப்பதை அறிந்து தொடர்புகொண்டு தருவிக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்க அரசு அது ஒரு உயர் ரகசிய தொழில்நுட்பம் என காரணம் காட்டி இந்தியாவிற்கு அனுப்ப மறுக்கிறது. இவையாவும் தகவல் தொழில்நுட்பம் சிற்றடி வைத்து கொண்டிருந்த காலகட்டத்தில் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு சிறிய படியும் கூட நேரமெடுக்கும். ஜப்பானிலிருந்து பெரிலியம் ராடுகளை ஒரு நிறுவனம் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு அளிப்பதாக அறிகிறார். அந்த ராட் தயாரிப்பதற்கான மூலப்பொருள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகிறது என கடைசியில் கண்டடைகிறார். மிக குறுகிய காலத்தில் அதை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வளர்த்து எடுக்கிறார்கள். அக்னி சிறகுகள் நூலில் ராட்டோ தயாரிப்பை பற்றி சொல்லும்போது இந்தியாவில் தயாரிக்க 17000 ரூபாய் மட்டுமே ஆனது. அதை மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் 33000 ஆகும் என்கிறார். நம் சந்திராயன் திட்டம் மேலை நாடுகளை காட்டிலும் பத்தில் ஒருபங்கு செலவில் நிறைவேறியுள்ளது. இந்த அறிவியல் தன்னிறைவை அடைய கலாமின் பங்கு முக்கியமானது. 

தேசத்தின் வலிமையே உலக அரங்கில் அதற்கான மரியாதையை அளிக்கும் என கலாம் ஆழமாக நம்பினார். அந்த வலிமையை வெறும் ஆயுத குவிப்பாக அவர் கருதவில்லை. மேலும் பிற தேசங்களின் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வல்லரசாக அவர் இந்தியாவை கனவு காணவில்லை. இன்னும் சொல்வதானால் நான் வாசித்தவரை அவர் வல்லரசு எனும் சொல்லையே அவ்வளவாக பயன்படுத்தவே இல்லை. அபத்தமான வல்லரசு கனவு கண்டவர் என சொல்வதற்கு முன் நாம் இதை பரிசீலிக்க வேண்டும். பேட்டிகளிலும் அவருடைய நூல்களிலும் இந்தியாவை தான் ஒரு ‘வளர்ந்த நாடாக’ காண விரும்பியதை சொல்கிறார். இரண்டிற்கும் வேறுபாடுண்டு. சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இந்தியா இன்னும் வளரும் தேசமாகவே குறிக்கப்படுகிறது. வளர்ந்த தேசமாக ஆவதற்கான எல்லா தகுதிகளும் அதற்குண்டு என்பதே அவருடைய எண்ணம். அணு ஆயுத சோதனை செய்தவர், ராக்கெட் செய்தவர் என்பதை தாண்டி அவருடைய புறா திட்டத்தை பற்றியும் பேச வேண்டும். கிராமங்கள் நகரத்தின் எல்லா வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும் என விரும்பினார். அடிப்படையில் கலாம் தொழில்நுட்பத்தை, அறிவியலை நம்பினார். வழிபட்டார். அது எல்லா சிக்கல்களையும் தீர்க்கும் என எண்ணினார். தொழில்நுப்டத்தை வளர்த்தெடுப்பதன் வழியாக சமூக தீமைகளை எதிர்கொள்ள முடியும், குறிப்பாக வறுமையை எதிர்கொள்ள முடியும் என நம்பினார். ஒருவகையில் இது ஒரு நேருவிய கருத்தாக்கம்.நேருவிய காலகட்டத்து அமைப்புகளில் நுழைந்த கலாம் சாராபாய் போன்ற நேருவியர்களால் வளர்த்தெடுக்கபட்டவர் ஆகவே இயல்பாக அந்த லட்சியங்களை தனதாக்கிகொண்டவர். இலட்சியங்கள் ஒன்றானாலும் காந்தியும் நேருவும் சமூக மேம்பாடுக்கான முற்றிலும் நேர்மாறான கோணங்களை கொண்டிருந்தார்கள். இன்றுவரையில் நேரு காந்திய சமூக கனவை சரிவர புரிந்துகொள்ளாமல் அதற்கு சுதந்திர இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்காமல் சென்றுவிட்டார் எனும் வருத்தம் எனக்குண்டு. ஆனால் அதைப்பற்றி மீள மீள பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இன்றும் காந்தி அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பற்றிகொண்டிருந்த பார்வையை மேலானதாக எண்ணுகிறேன் ஆனால் காலம் மாறிவிட்டது. குறிப்பாக 1962 சீனப்போர் நமக்கான அறைகூவலை விடுத்தது. காந்திய முறை அரசின் திணிப்பின்றி சிறிய சிறிய அலகுகளாக தன்முனைப்பின் விளைவாக தற்சார்பு சமூகத்தை உருவாக்க வேண்டும். ராலேகான் சித்தியை போல். அதிக எண்ணிக்கையிலான தற்சார்பு கிராமங்கள் உருவாக வேண்டும் என்பதே எனது கனவும். மெல்ல அதன் மகத்துவம் புரிந்து நல்ல தலைமை அதை வளர்த்தெடுக்கட்டும். நவீன சூழலில் தொழில்நுட்ப மறுப்பு என்பது கற்பனைக்கு எட்டாதது. தொழில்நுட்பம் புதிய புதிய சவால்களை மனித குலத்திற்கு அளிக்கிறது அவைகளை மேலதிக தொழில்நுட்பத்தை கொண்டே சீர் செய்ய முடியும். அதை தவிர்த்து திரும்ப செல்வது இன்றைய சூழலில் வாய்ப்பில்லை. தண்ணீர் மாசுபடுகிறது என்று சுத்தமான நீர் வழங்கும் இயந்திரங்களை உருவாக்கினோம். பின்னர் அது ஒரேயடியாக சுத்திகரித்துவிடுவதால் நீரில் இயல்பாக கிடைக்கும் தாது பொருட்கள் கிடைப்பதில்லை என்றார்கள். இன்று சுத்திகரித்த நீரில் உரிய அளவில் தாதுக்களை சேர்க்கும் தொழில்நுட்பம் உருவாக்கிக்கொண்டோம். சரிபாதி நீர் வீணாகிறது என்பது மற்றொரு சிக்கல். அதை தவிர்க்க உரிய தொழில்நுட்பம் கண்டடையப்பட வேண்டும். கலாம் தொழில்நுட்பம் வழியாக கிராம வாழ்வை புத்துயிர்க்க செய்ய முடியும் என கருதினார். தொழில்நுட்ப வரைபடத்தில் கிராமங்களையும் சேர்த்தால் புதிய சந்தை வாய்ப்புகள் பிறக்கும் என்பதே அவருடைய கணக்கு. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து எனக்கு அவருடன் முரண்பட்ட பார்வையுண்டு. வலிமையை பெருக்கிக்கொண்டு உட்கட்டமைப்பை பெருக்க வேண்டும் என்பது அவருடைய பார்வை. உட்கட்டமைப்பை வலுபடுத்தினால் இயல்பாகவே வலிமை பெருகும் என கருதுவது ஒரு மாற்றுபார்வை. இரண்டிலும் உண்மையுண்டு. ஆனால் இந்தியாவை துண்டாட சர்வதேச கரங்கள் துடித்து கொண்டிருக்கையில் கலாமின் பார்வையை புரிந்துகொள்கிறேன். உயர் தொழில்நுட்பங்களை காட்டிலும் இந்தியாவில் ‘தேவைக்கேற்ப’ தொழில்நுட்பங்களை அதிகம் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனினும் இவை எதுவும் அவருடைய ஆளுமை மீதோ அவருடைய நம்பகத்தன்மை மீதோ அவருடைய பங்களிப்பின் மீதோ சிறு கேள்வியை கூட எழுப்பவில்லை என்பதே உண்மை. பில்லியன் மக்கள் பில்லியன் மரங்கள் எனும் அவருடைய திட்டமும் நம் கவனத்துக்குரியதே. புறா திட்டமும் இத்திட்டமும் அவர் ஜனாதிபதியாக, அவருடைய அறிவியல் வாழ்வை முடிந்துக்கொண்ட பின்னர் துவங்கியது. வலிமையை பெருக்கிவிட்டு உட்கட்டமைப்பை வலுபடுத்தும் திசையில் அவர் நகர்ந்திருக்கிறார் என்பதையே இது குறிக்கிறது. 

கலாம் நம் தேசத்தின் முக்கியமான சிக்கலாக கண்டது நாம் கொண்டிருக்கும் தாழ்வுணர்ச்சியை. செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை சாதனைகளை அவர் சொல்லும்போது நாம் எவருக்கும் சளைத்தவர் இல்லை எனும் உணர்வை ஊட்ட முயல்கிறார். நம்மால் எல்லா துறைகளிலும் தற்சார்பு அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். காலனியாதிக்கம் அதன் தூலமான வடிவிலிருந்து மறைந்து நுட்பமாக நம் மனங்களில் இன்றும் ஆதிக்கம் செய்துகொண்டே தானிருக்கிறது. காந்தி இதை துல்லியமாக உணர்ந்திருந்தார். ‘நமக்கு புலி வேண்டாம் புலியின் இயல்புகள் கொண்ட நாம் அரசாள வேண்டும்’ என இந்து சுயராஜ்ஜியத்தில் இந்த மனநிலையை கச்சிதமாக விமர்சிக்கிறார். காலனியாதிக்கம் கொடுத்த காயம் இன்னும் ஆறவே இல்லை. அந்த தாழ்வுணர்ச்சி இன்னமும் கூட ஆட்டிப்படைத்து கொண்டுதானிருக்கிறது. கலாம் ஆரியபட்டர், பாஸ்கரர் துவங்கி திப்பு சுல்தான் சாராபாய் வரை நமக்கிருந்த அறிவியல் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டுகிறார். ஒரு தேசமாக பெருமைகொள்ள வேண்டும் என்கிறார். ஒரு தேசமாக நம்மை நாம் எப்படி உணர்கிறோம்? எப்படி காண்கிறோம் எனும் சுய பிம்பம் முக்கியமானது. அதை சீரமைக்கவே கலாம் முயன்றார். கனவு காணுங்கள் எனும் அவருடைய அறைகூவல் வெறும் பகல் கனவுகள் அல்ல. அல்லது தனிமனித சுய முன்னேற்றம் பற்றியதை அல்ல. கலாமின் துவக்ககால ஐ.எஸ்.ஆர்.ஒ சகாக்களில் ஒருவரான ஆராவமுதன் அண்மையில் ஒரு நினைவுகூறலில் கலாம் அயன் ராண்டை விரும்பி வாசித்ததாக சொல்கிறார். அட்லஸ் ஷ்ராக்ட் நாயகனை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவார் என்கிறார். அயன் ராண்டின் தத்துவம் தனிமனிதரை விதந்தோதுகிறது, அவனது வளர்ச்சியை பற்றி பேசுகிறது. இந்தியாவில் பசித்திருக்கும் மத்தியவர்க்கம் தொண்ணூறுகளுக்கு பிறகு கிடைத்ததை பற்றி மேலேறி செல்ல துடிக்கிறது. கலாமின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது இதையே. அவன் அயன் ராண்டின் தனிமனித வளர்ச்சி எனும் பார்வையை ஒரு தேசத்திற்கு பொருத்திபார்க்க முயன்றார். வளர்ந்துவரும் மத்தியவர்க்கத்துடன் அவர் அப்போது தான் உரையாட துவங்கினார். தனிமனித வளர்ச்சியை வெறும் சுயநல வளர்ச்சியாக நிறுத்திவிடாமல் அதை தேசத்தின் எழுச்சிக்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டின் ஒருபகுதியாக மாற்ற முயன்றார். அவரை வாசிக்கும்போது இதை உணர முடியும். கனவுகளுடன் சேர்த்து சமூக பொறுப்பையும் பிணைந்தார். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதற்கான மார்க்கமாக கண்டார். ஆகவே அதில் ஆர்வம் ஏற்படுத்த முயன்றார். ஒரு தன்னிறைவடைந்த வளர்ந்த தேசமாக எழுந்து நிற்க முடியும் என்பதே அவருடைய கனவு. அந்த கனவு நம் தனிமனிதர்களின் கனவுகளின் ஒட்டுமொத்த வடிவம். காந்தி எப்படி இந்தியர்களின் இயல்பான பலவீனத்தை வலிமையான அகிம்சை போராட்டமாக வளர்த்து எடுத்தாரோ அதற்கு இணையான ஒன்றை கலாம் சாதிக்க முயன்றார். பசியெடுத்த மக்களுக்கு ஒரு லட்சியத்தை அளித்தார். ஆனால் அதில் அவர் நிறைவடைந்தாரா என்பதை இப்போது நம்மால் சொல்லிவிட முடியாது. இனிவரும் தலைமுறைகள் அறிவியலில் என்ன சாதிக்கிறது என்பதை பொருத்தே அது அமையும். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நேனோ தொழில்நுட்பத்தில் உயர் ஆய்வுகளுக்காக நிதி பெற்று தந்து இந்தியாவை வலுவடைய செய்ததை பற்றி பொன்ராஜ் கூறினார். அவர் சில ஆண்டுகாலம் அறிவியல் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார், ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் இதுபோன்று எத்தனை அறிவியல் ரீதியான முன்னெடுப்புகளை அவர் செய்திருப்பார் என்பதை நாம் இனி தான் அறிந்துகொள்ள முடியும். ஒருவேளை அது பாதுகாப்பு ரகசியமாக வெளிப்படமாலேயே கூட போகலாம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதி[பதிக்கென்று பெரிய அதிகாரங்கள் ஏதுமில்லை. இருப்பினும் அப்பதவியிலும் கூட அவர் தன்னால் முயன்றதை செய்தார். வேறு சிலவிஷயங்களை செய்திருக்கலாம் என்றொரு ஆர்வ பட்டியலை சிலர் வைக்கின்றனர். அது இயல்பானதே. ஆனால் முற்றிலும் செயல்படாத எத்தனையோ ஜனாதிபதிகளுக்கு அவர் மேல் என்பதே உண்மை. 

எனது நெருங்கிய நண்பன் அவனுடைய உயிரி தொழில்நுட்ப பொறியியல் இறுதி ஆண்டில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி கலாமிற்கு ஒரு அறிவியல் யோசனையை மின்அஞ்சலில் அனுப்பினான். குறிப்பிட்ட வகையிலான நுண்ணுயிர்களை பயன்படுத்தி கரியமில வாயுவை கட்டுபடுத்தும் ஒரு யோசனை. சிலநாட்களுக்கு பின்னர் டெல்லியின் உயிரி தொழில்நுட்ப துறையிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. போகவர தங்குமிடம் என எல்லாம் ஏற்பாடு செய்து அவனுடைய யோசனையை பரிசீலித்தார்கள். ஒரு மாணவன் கூறிய சாதாரண யோசனைக்கு இத்தனை மதிப்பளிக்கப்பட்டது எங்களுக்கு பெரும் வியப்பை அளித்தது. இன்போசிஸ் நிறுவனத்தில் அவனுக்கு வேலைகிட்டியும் கூட அதை தவிர்த்து இன்று அவன் முனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். இத்தகைய எத்தனையோ கதைகள் உண்டு. அறிவியல் ஆராய்ச்சியில் தான் ஈடுபட கலாம் தான் முக்கிய காரணம் என சொல்லும் ஒரு தலைமுறை வரும்போது அவருடைய உண்மையான பங்களிப்பு என்னவென்று தெரியவரும். 

கலாம் ஒரு மக்கள் தலைவராக, நாட்டிற்காக உழைத்த விஞ்ஞானியாக, மதங்களுக்கு அப்பாற்பட்ட நேசமிகு மனிதராக என்றென்றும் நினைவுக்கூரபடுவார்.            



Viewing all articles
Browse latest Browse all 219

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>