Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all articles
Browse latest Browse all 219

கொல்கத்தாவில் ஒரு அதிசயம்

$
0
0


August 2007, Prospectபத்திரிக்கையில் ஹோரேஸ் அலெக்சாண்டர் எழுதிய கட்டுரை


இந்திய சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி எங்கு இருந்தார்? அன்று நான் அவருடன் இருந்தேன்- எனவே என்னால் அந்தக் கதையைச் சொல்ல முடியும். அது சொல்லத்தக்கக் கதையும்கூட. ஏனெனில், அன்றுதான் காந்தி கொல்கத்தாவுக்கு அமைதியைக் கொணர்ந்தார். ஏறத்தாழ ஓராண்டாக இந்துக்களும் முஸ்லிம்களும் தினந்தோறும் ஒருவரையொருவர் கொன்று கொண்டிருந்த வங்காளம் முழுமைக்கும் அன்று அமைதி திரும்பியது.

ஹோரேஸ் அலெக்சாண்டர் 


1920களின் மத்திய காலகட்டத்தில் நான் இங்கிலாந்தில் க்வேக்கர் காலேஜில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு ஒரு வருட கால விடுப்புப் பருவத்தை இந்தியாவில் கழித்தேன். இங்கு நான் சி எப் ஆண்ட்ரூஸ் என்ற அசாதாரணமான ஆங்கிலேயரிடம பல அறிமுகக் கடிதங்கள் பெற்றுக் கொண்டேன். இந்திய உரிமைகளை வென்றெடுக்கப் போராடிக் கொண்டிருந்த காந்திக்கு உதவ அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தார். காந்தியின் ஆசிரமத்தில் ஒரு வார காலம் இருந்ததோடு என் பயணம் நிறைவு பெற்றது. இரு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியாவின் எதிர்கால அரசமைப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்க காந்தி லண்டன் வந்தார். அப்போது அவருக்கும் அவரது சகாக்களுக்கும் உதவியாக இருப்பதற்காக ஒவ்வொரு வாரமும் இரு நாட்கள் அவருடன் இருந்தேன். 


1942ல் நான் Friend’s Ambulance Unit என்ற அமைப்பின் ஒரு பிரிவுடன் இந்தியா சென்றேன். ஜப்பானிய விமானப்படைத் தாக்குதல் நிகழுமெனில் கொல்கத்தா மற்றும்பிற நகரங்கள் அதை எதிர்கொள்ள உதவும் நோக்கத்தில் நான் அங்கு சென்றேன். மிகச் சில தாக்குதல்களே நிகழ்ந்தன என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மிகக் கடுமையான பஞ்சம் வங்கத்தைத் தாக்கியது. நாங்கள் அதிக அளவில் பணியாற்ற வேண்டியிருந்தது. போர் முடிவுற்றதும், இந்தியாவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட பிரடரிக் பெதிக்- லாரன்ஸ் நான் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வழி செய்து கொடுத்தார். ஆலோசனையின் முடிவில் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டதும் இந்தியாவை விட்டு வெளியேறுவதில் பிரிட்டிஷ் அரசு உறுதியாக இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்திய தலைவர்களிடம் உருவாக்க உதவும் பணி எனக்கு அளிக்கப்பட்டது. காந்தியும் பிற இந்திய தலைவர்களும் எங்களை வரவேற்று, இப்பணியை எளிதாக்கினர்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதியே இந்திய சுதந்திர தினம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். சில வாரங்களுக்கு முன்னர், நான் எப்போது இந்தியா வரவிருக்கிறேன் என்று கேட்டு எனக்கு காந்தி ஒரு கடிதம் எழுதியிருந்தார். சுதந்திர தினத்தன்று அவர் எங்கிருந்தாலும் அன்று நான் அங்கு அவருடன் இருக்க விரும்புகிறேன் என்று நான் பதிலளித்திருந்தேன். பதினைந்தாம் தேதிக்கு சில தினங்கள் முன் வரை பீகாரில் இருக்கப்போவதாக தான் எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் கிழக்கு வங்கம் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தான் பீகாரில் இருக்கும்போது வந்து சேர்ந்து, அதன் பின்னர் நான் அவருடன் பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை\யும் அவர் தெரிவித்தார்.    

அண்மைய சில மாதங்களாக தீவிரமான மதக்கலவரங்கள் இந்தப் பகுதிகளில் நிலவுவதால் சுதந்திர தினத்தன்று இந்த இடங்களில் தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார் காந்தி. பின்னர் பங்களாதேஷாக மாறிய கிழக்கு வங்கம் இந்துக்களைவிட அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் நிறைந்திருந்த மாகாணமாக இருந்தது. இந்தியாவிலிருந்து அது பிரிக்கப்பட்டு பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாக மாறவிருந்தது. 

நான் பீகார் சென்று காந்தியுடன் இணைந்து கொண்டேன். இருவரும் கொல்கத்தா பயணித்தோம். அங்கு அவர் தன் சக ஊழியர்களில் ஒருவரின் ஆசிரமத்தில் இரு நாட்கள் தங்கியிருப்பதாக ஏற்பாடு. நான் என் இந்திய இல்லம் சென்றேன். காந்தியையும் அவரது 'குடும்பத்தாரையும்'அவர் கிழக்கு வங்கம் செல்வதாக இருந்த பதினான்காம் தேதியன்று சந்திப்பதாக உறுதி கூறியிருந்தேன். ஆனால் எங்கள் திட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி சில மணி நேரம் சென்றபின் கிடைத்தது. அமைதி நிறுவ கொல்கத்தாவில் தங்கியிருக்க வேண்டும் என்று காந்தியிடம் கொல்கத்தாவின் முன்னணி முஸ்லிம்கள் இறைஞ்சியிருந்தனர். கொல்கத்தாவில் அமைதி நிலவினால் இந்தியாவுக்கு உரியதாக இருக்கக்கூடிய மேற்கு மற்றும் பாகிஸ்தானின் பகுதியாக மாறப்போகும் கிழக்கு என்று வங்கமெங்கும் அமைதி நிலவும் என்று அவர்கள் வாதிட்டனர். 

காந்தியை சமாதானப்படுத்துவது அவ்வளவு சுலபமாக இல்லை. பிரிவினையன்று கிழக்கு வங்கத்தில் இருக்கும் இந்துக்களுக்குத் துணை நிற்கப்போவதாக அவர் உறுதி கூறியிருந்தார். கிழக்கு வங்கத்தில் இருக்கும் இந்துக்களைக் காப்பாற்றுவதாக அங்கிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் முழுமையான உறுதி வழங்கினாலன்றி தான் வாக்கு தவறப் போவதில்லை என்றார் அவர். இத்தகைய உறுதிமொழி அளிக்க வேண்டியவர்கள் பெயர்களை அவர் அறிந்திருந்தார், மிகக் குறுகிய கால அவகாசமே இருந்த நிலையில் அவர்கள் உருதிமொழ்லி அளித்தனர். கொல்கத்தாவில் காந்தியால் இருக்க முடியும் என்றாயிற்று.

கொல்கத்தாவின் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியாக, அங்கு முஸ்லிம் தலைவராக இருந்த ஷாஹீத் சுஹ்ரவாடியைத் தன்னோடு இணைந்து கொள்ளும்படி காந்தி அழைத்தார். சுஹ்ரவாடி வங்க முதலமைச்ச்சராக இருந்தவர், காந்தியை கூர்மையாக விமரிசிப்பவர்- "that old Fraud", என்று காந்தியை விவரித்திருந்தவர். 

கொல்கத்தாவில் பேலிகாட் என்ற பகுதியில் இருவருக்கும் பூட்டிக்கிடந்த ஒரு முஸ்லிம் இல்லம் அளிக்கப்பட்டது. ஆகஸ்டு பதின்மூன்றாம் தேதி மதியம் ஒரு இந்திய நண்பர் என்னை அங்குவாகனத்தில் அழைத்துச் சென்றார். ஆனால் நாங்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, இளம் இந்து இளைஞர்களைக் கொண்ட கும்பல் ஒன்றை எதிர்கொண்டோம். நான் காந்தியின் நண்பர் என்று விளக்கி அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தபோது அவர்கள், "காந்தியே, திரும்பிப் போ"என்று கோஷமிட்டனர். இறுதியில் அவர்களில் சில இளைஞர்கள் வீட்டுக்குள் வந்து காந்தியுடன் உரையாடத் துவங்கினர். அப்படிப்பட்ட ஒரு உரையாடல் எப்படி இருந்திருக்கும் என்ற விவரங்களை உங்களாலே ஊகிக்க முடியும். அந்த இளம் இந்துக்கள் இந்த தினத்துக்காகவே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டவர்கள். இன்று இந்துக்களுக்கான தூய இந்தியா கிடைக்கும், முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்வர். சுதந்திரம் கிடைத்தவுடன் மிக அதிக அளவில் இந்துக்களும் முஸ்லிம்களும் படுகொலை செய்யப்படுவர் என்று ஒரு இளம் இந்து காங்கிரஸ்காரர் என்னிடம் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால் காந்தி அதைக் காட்டிலும் நன்மை நிகழும் என்று விரும்பினார். சுதந்திர இந்தியா தன் வாழ்வைத் துவக்க இது சரியான வழியல்ல என்று இளைஞர்களிடம் காந்தி கூறினார். இந்தியா சகிப்புத்தன்மையும் அகவிரிவும் கொண்ட மண்ணாக இருப்பது அவர்கள் கையில் இருக்கிறது. இது பற்றி யோசித்துப் பாருங்கள் என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பினார் காந்தி. 

காந்தி கொல்கத்தாவில் இருக்கும்வரை அவரது அமைதி முயற்சிகளுக்குத் துணை நிற்பதாக அவர்கள் இறுதியில் உறுதி கூறினார். அடுத்த நாள் மாலை, காந்தியின் வழக்கமான பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர்களும் பங்கேற்றனர். பிரார்த்தனை முடிவுக்கு வரும் தருணத்தில், சுஹ்ரவாடி அங்கில்லை என்பதைச் சில இந்து இளைஞர்கள் கண்டுகொண்டனர்- அவர் வீட்டுக்குள் இருப்பதாகச் சரியாகவே அவதானித்தனர். எனவே, அவரை பலி கொள்ள கோஷமிடத் துவங்கினர். பிரார்த்தனை முடிந்ததும் காந்தி ஜன்னலருகே சென்றார். அதன் கதவுகளைத் திறந்து, அவர்களுடன் தாழ்ந்த குரலில் பேசத் துவங்கினார். சுஹ்ரவாடியிடம் பகைமை பாராட்டுவது குறித்து அவர் கடிந்து கொண்டார். அவரது கடந்த காலம் எவ்வாறு இருபினும், இப்போது அவர் அமைதி நிறுவும் முயற்சிகளில் இணைவதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின் அவர் சுஹ்ரவாடியை முன்னிறுத்தி, அவரது தோளில் தன் ஒரு கரத்தை வைத்தபடி நின்றார். ஒரு இளைஞர் சுஹ்ரவாடியை நோக்கிக் கத்தியபோது ஆபத்தான கட்டத்தை இந்நிகழ்வு எட்டியது: 

"சென்ற ஆண்டு நிகழ்ந்த பயங்கரமான கொல்கத்தா படுகொலைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?" (ஆகஸ்டு 1946ல், கல்கத்தாவில் மதக்கலவரம் வெடித்தது. அதில் நான்காயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர், பெருமளவில் இந்துக்கள்).

"ஆம்,"என்றார் சுஹ்ரவாடி, "நான் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதை எண்ணி வெட்கப்படுகிறேன்".

"அதுதான் ஆபத்தான கட்டம்,"என்று காந்தி சில நிமிடங்களுக்குப் பின் என்னிடம் கூறினார். "அனைவரும் அறிய ஒப்புக் கொள்வதைக் காட்டிலும் குழப்பச் சூழலை மாற்றும் வல்லமை வேறு எதற்கும் கிடையாது. அவர் அக்கணமே அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்"

சுஹ்ரவாடி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு செய்தியுடன் போலீஸ்காரர் ஒருவர் வந்தார். நகரின் வேறொரு பகுதியில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருந்த கண்ணுக்குத் தெரியாத ஆனால் ஆற்றல் மிகுந்த தடைகளைக் கடந்து இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றினர் என்ற செய்திதான் அது. காந்தியின் வீட்டின் முன் குழுமியிருந்த கூட்டம் இதை கரகோஷமிட்டு வரவேற்றது.

அன்றுதான் முன்னர் தான் சுதந்திர தினத்தன்று என்ன செய்ய இருப்பதாக காந்தி என்னிடம் கூறியிருந்தார். அவர் தேசம் இந்தியாவாகவும் பாகிச்தானாகவும் பிளவுபடுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. இந்த சுதந்திரம் மெய்யானதல்ல என்றும் அவர் கூறவில்லை. அந்த நாளை கேளிக்கை தினமாக இந்திய மக்கள் மாற்றிவிடக் கூடாது என்றுதான் அவர் கவலைப்பட்டார். அன்று அவரோடு இருந்தவர்கள் அக்கணம் உண்ணா நோன்பிருந்து  பிரார்த்தனை செய்ய வேண்டும். தேசிய வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனை தருணத்திலும் முதலில் கடவுளை நோக்கித் திரும்புவதுதான் பொருத்தமான செயலாக இருக்கும். நீதியும் நன்னடத்தையும் வழுவாத பாதையில் தொடரும் தீரமும் ஞானமும் வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். உண்ணாமையும் பொருத்தமானதே- இந்திய கிராமங்களில் அரைப்பட்டினியாக இருந்த லட்சக்கணக்கான ஏழைகள் அந்த நாளை இன்னும் அதிகம் உணவு உண்டு கொண்டாட முடியாது. சுதந்திரத்தின் முதன்மை நோக்கம், இந்தியாவின் மாபெரும் வறுமையை நீக்குவதே என்பதற்கான நினைவூட்டலாகவும் உண்ணாமை இருக்கும்.

அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கு சரியான நேரத்தில் பிரார்த்தனை துவங்கிற்று. வங்கத்தின் மகத்தான கவிஞர், ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய சுதந்திர பாடல்களைப் பாடி காந்தியை வாழ்ந்த அப்பகுதியிலிருந்த பள்ளி செல்லும் சிறுமிகள் வந்திருந்தனர். நாங்கள் பிரார்த்தனை பாராயணம் ஜெபிப்பதைப் பார்த்ததும் அவர்களும் எங்களோடு இணைந்து கொண்டனர். அதன்பின் மகாத்மாவின் ஆசி பெற்று வீடு திரும்பினர். பின்னர் நாங்கள் அனைவரும் சுதந்திரத்தின் விடியலைப் பாடினோம். அதன்பின் நகரில் என்ன நடக்கிறது என்ற கவலையுடன், அவரவர் பணிக்குத் திரும்பினோம், இதுவும் மற்றுமொரு நாளே என்பதுபோல். இளம் இந்துக்கள் முஸ்லிம்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கின்றனரா? அல்லது அனைவரும் தோழமையுடன் நட்புறவாடுகின்றனரா?

சேவைப் பிரிவைச் சேர்ந்த என் நண்பர்களில் சிலர் என்னை அழைத்துப் பேசியபோது மதியம் மூன்று மணியிருக்கும் என்று நினைக்கிறேன். "நாளெல்லாம் நீ இங்கு உட்கார்ந்திருக்கக் கூடாது. வந்து பார்", என்று அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். அதிசயம் நிகழ்ந்துவிட்டதைக் கண்டேன்.ஓராண்டு இருளுக்குப்பின், திடீரென்று சூரியன் மீண்டும் பிரகாசித்துக் கொண்டிருந்தான். நகரமே களிகொண்டிருந்தது. ஆனந்தமாயிருந்தது, ஆகஸ்டு 15 1947 அன்று கொல்கத்தா 

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நாளை நான் நினைத்துப் பார்க்கும்போது, ஆனந்தமும் அதிசயமும் கலந்த உணர்வால் கண்ணீர் மல்கி நிற்கிறது. அனைவரும் "கொல்கத்தாவின் அதிசயம்"என்று பேசினர், கிழக்கு வங்க தலைவர்களும் தம் வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டனர். வங்கம் முழுமையும் அமைதியைக் கொண்டாடியது. நல்லிணக்கம் வெற்றி பெற்றது.

எந்த அதிசயமும் நிகழவில்லை என்று வலியுறுத்தினார் காந்தி. வங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த அத்துணை அரசியல் குழுக்களும் இதில் பங்கேற்கவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். இல்லாதவர்களின் குரல் பின்னாளில் ஒலிக்கக்கூடும். ஒரு வாரம் போல், அமைதி நிலவிற்று. அதன்பின் தாக்குதல்கள் துவங்கின. இந்து தேசிய குழுவான மகாசபையைச் சேர்ந்த, அதிருப்தியிலிருந்த இளம் உறுப்பினர்கள் சம்பவமொன்றை உருவாக்கினர், அவர்களில் சிலர் காந்தி இருந்த இடத்தைத் தாக்கினர். காந்தி தன் உண்ணாவிரதத்தைத் துவங்கினார்; மகாசபையின் தலைவர்கள் அதன் இளம் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடெடுத்தனர்; இந்து பொதுமக்களும் வன்முறைக்கு ஆதரவு அளிக்க மறுத்தனர். இம்முறை, அனைத்து கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் ஒன்றுகூடிச் சந்தித்து, வங்கத்தில் காந்தியின் இருப்பால் தோன்றிய நல்லுணர்வு இனியும் தொடர்வதைக் காக்க இணைந்து செயல்படுவதாக உறுதி பூண்டனர்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்றைய தின அதிகாலையில் கொல்கத்தாவில் ஏற்பட்ட மாற்றத்தை ஒரு அதிசயம் என்று சொல்வது சரியா என்பது விவாதத்துக்குரிய கேள்வி. அனுபவித்தவர்களுக்கு அது மறக்கமுடியாத ஒரு நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. இதற்கு காந்தி எந்த அளவுக்கு காரணமாக இருந்தார் என்பது குறித்து கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கொல்கத்தாவின் இரு மாபெரும் சமய சமூகங்களுக்கும் இடையே பரஸ்பரம் வெறுப்பும் அவநம்பிக்கையும் நிலவிய ஆண்டு இப்படி திடீரென்று நல்லெண்ணமும் நம்பிக்கையுமானதாக மாறுவது என்பது மகாத்மா காந்திக்கும், கசப்புடன் அவரை விமரிச்த்து வந்த ஷாஹீத் சுஹ்ரவாடிக்குமிடையே ஏற்பட்ட அசாதாரண நட்பு உடன்படிக்கை ஒரு முன்னுதாரணமாக இல்லாமல் சாத்தியப்பட்டிருக்கும் என்பதை நம்புவது கடினம். ​

சுட்டி  உதவி -இராட்டை


Viewing all articles
Browse latest Browse all 219

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>