சென்ற மாதம் மதுரை காந்தி அருங்காட்சியத்தில் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தார்கள். காந்தி 150 குறித்து விவாதிக்க பலரும் வந்திருந்தார்கள். காந்தி நினைவு நிதி, காந்தி அருங்காட்சியகம், காந்தி பீஸ் ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் தேசிய தலைவர்கள் செயல்திட்டம் வகுக்கவும், அது குறித்து விவாதிக்கவும் வந்திருந்தார்கள்.
மேடையில் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன. நூற்றாண்டுக்கு அமைந்தது போல் தற்போது காந்தியை கொண்டாடும் அரசு வாய்க்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும் நூற்றாண்டின் போது காந்தியின் நினைவு உயிர்ப்புடன் இருந்தது, அவருடன் வாழ்ந்தவர்கள், அவரது சீடர்கள், அவரை கண்டவர்கள் என பலரும் சமூகத்தின் மீது தாக்கத்தை செலுத்தி கொண்டிருந்தனர். இன்று அந்த தலைமுறை அருகிவிட்டது. விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்கு காந்திய காலத்து மனிதர்களின் எண்ணிக்கை சுருங்கிவிட்டது எனும் காரணம் விவாதிக்கப்பட்டது. உலகமயமாக்கள் பின்பான தலைமுறைக்கு காந்தி எவ்வண்ணம் பொருள் படுவார் எனும் ஐயம் முன்வைக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக விவாதிக்கப்பட்ட கேள்வி ஒன்றே. காந்தியை இன்று அனைவரிடமும் எப்படி கொண்டு சேர்க்கலாம்?
எனது புரிதலின் படி காந்தி உலகமயமாக்களின் பின்பு இன்று மீள் கண்டடைய பட்டுள்ளார். ஆதரித்தும் விமர்சித்தும் நூல்கள் எழுதபடுகின்றன. பரவலாகவும் ஆழமாகவும் வாசிக்கபடுகிறார். அவருக்கெதிரான சமூக ஊடக பிராசாரங்கள் வலுவடைந்தபடி தான் இருக்கின்றன. மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் உண்மையானதா என அறிய கூட தகவல் தொடர்பு யுகத்தில் எவருக்கும் பொறுமையில்லை. அவை தயக்கமின்றி பகிரப்படுகின்றன. இந்த முன்முடிவு என்னை ஆச்சரியபடுத்துகின்றது.
காந்தி 150 நோக்கிய பயணத்தில் காந்தி - இன்று தளமும் இணைந்து கொள்கிறது. காந்தியின் மீது பொதுவாக வைக்கப்படும் அவதூறுகளுக்கும் குற்றசாட்டுக்களுக்கும் தகுந்த எதிர்வினைகளை உருவாக்கி தொகுக்க வேண்டும். அதைவிட காந்தியின் தற்கால தேவைகள் குறித்து பிரக்ஞையை வளர்க்க வேண்டும் போன்ற செயல்திட்டங்கள் உள்ளன. பிரசாரம் அலுப்பையே அளிக்கும். அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. காந்தி - இன்று தொய்வடைய கூட இது ஒரு காரணம். யாருக்கு, எதற்காக நாம் காந்தியை 'விளக்கி'கொண்டே இருக்க வேண்டும்? எனினும் தேவையான தரவுகளை உருவாக்கி தொகுக்க வேண்டிய பணி இருக்கிறது. நண்பர் ராட்டை வ.வு.சி யை காந்தி ஏமாற்றியதாக முன்வைக்கும் குற்றசாட்டிற்கு எதிராக வலுவாக ஆவணங்களை திரட்டி பதில் தயாரித்து கொண்டுள்ளார். இத்தகைய அவதூறுகள் மறுக்கபடாது தோறும் அது பெருகுகிறது. ஆயிரத்தில் ஒருவர் உண்மையை தேடினால் கூட அவர் அதற்காக அலைந்து திரிய வேண்டும்.
இந்த விஜயதசமி நன்னாளில் காந்தி - இன்று சோம்பல் முறித்து மீண்டும் தன்னை புதுபித்துகொள்கிறது. நண்பர்கள், வாசகர்கள் தங்களது ஆலோசனைகளை எழுத வேண்டும். தமிழில் கொண்டுவரப்பட வேண்டிய நூற் பட்டியல், எந்தெந்த அவதூறுகளுக்கு பதிலளிக்க வேண்டும்? என பல்வேறு பார்வைகளை முன்வைக்கலாம்.