அன்பு சுனில்,
நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து பேசப்பட்ட பலவற்றில் காந்தியமும் ஒன்று. இங்கே காந்தியம் குறித்த அடிப்படைகள் மீதான கல்வி எந்த அளவு இன்னும் பரவ வேண்டியது உள்ளது என்பதன் குறிப்புகள் அவை. இவர்கள் எந்த காந்தியை வாசித்துவிட்டு பேசுகிறார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறது.
முதல் அலகு . நடந்த இந்தப் போராட்டம் காந்தியப் போராட்டமோ, அறவழிப் போராட்டமோ இல்லை.எங்கள் மிருகம் நாங்கள் வதைப்போம் . எங்கள் மிருகம் எங்களை வதைக்கும். அது எங்கள் உரிமை. இதில் என்ன அறம் இருக்கிறது. இதற்க்கு எதிரான தடையை நீக்க கோரிப் போராடுவது எந்த எல்லையியலும் அறப்போராட்டம் ஆகாது. இது எதிர்மறை.
எங்களிடம் மாறவேண்டிய அம்சம் உண்டு. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . நீங்கள் வந்து பண்படுத்தவேண்டிய அளவு அறியாமையில் நாங்கள் இல்லை. இந்தப் போராட்டத்தின் மெல்லிய குரல் செய்திகளில் அதுவும் ஒன்று.இது நேர்மறை.
இது ஏன் காந்தியப் போராட்டம் இல்லை?
விகடன் வெளியீடாக, முருகானந்தம் அவர்கள் எழுதி , தண்டி யாத்திரை எனும் நூலை மட்டுமே வாசித்தால் கூட போதும். அடிப்படை வேறுபாடு என்ன என்பது விளங்கும்.
தென்னாபிரிக்காவில் தனது போராட்ட முறையால் , முன் நின்று முதலில் அதிலிருந்து கற்பவராக தன்னை தகுதிப் படுத்திக்கொண்ட காந்தி, அதை இங்கே பாரத நிலத்தில் நிகழ்த்துகிறார். அறவழிபோராட்டம் வன்முறையாகத் திரும்பிவிட காந்தி அதை பின்னிழுத்துக் கொள்ளுகிறார்.
அறவழிப் போராட்டம் என்றால் என்ன? அதில் நின்று நிலைப்பது எப்படி ? என தன்னை அடிப்படையாகக் கொண்ட குழு ஒன்றுக்கு,[தனது மகன்கள் உட்பட] பல் மாத பயிர்ச்சி கொடுத்து உருவாக்கி, அக் குழுவை அடிப்படையாகக் கொண்டு, பாரத நிலத்தின் வாழ்வாதாரத்துடன் பிணைந்த ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு, அதன் வழியே பாரத பொது மனத்தை இணைத்து, எதிர் தரப்பின் மனசாட்சியுடன் உரையாடும் முகமாக தண்டி யாத்திரையை உருவாக்குகிறார்.
அந்த யாத்திரை நடைபெறும் முன்பே, பல மாதமாக காகா காலேல்கர் அதற்கான பின்னணிக் களத்தை செம்மை செய்யும் பணியில் ஈடுபடுகிறார். அந்த யாத்திரை முடிந்த பின்னும், அதை அடிப்படை துவக்கமாகக் கொண்டு , தனது களப்பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறார். இதில் நிகழும் எந்தப் பிழைக்கும் காந்தியும் காலேல்கருமே பொறுப்பு..
இங்கே நிகழ்ந்தவற்றின் அடிப்படைகளை சொல்லவே தேவை இல்லை. நிகழ்ந்தவற்றின் எதிர்மறை அம்சங்கள் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான அம்சங்கள் மூன்று.ஒன்று வெகு விரைவில் ஏதேனும் பன்னாட்டு நிறுவனம், செயற்கை புரதத்தை உண்டாக்கிவிட்டு, மாபெரும் ஜீவகாரண்யத்துடன் நமது தேசத்தில் ,உணவுகள் மீது தடை வாங்கப் போகும் நிகழ்வுக்கு எதிரான முதல் குரல் இது. [எனது ஆசான், அகிம்சாயா மீன் வருவலா ,என்றொரு நிலை அவர்முன் எழுந்தால் கணமும் யோசிக்காமல் மீன் வறுவல் பக்கமே நிற்பார்] இரண்டு ஜல்லிக்கட்டு ஆனாலும் சரி வேறு எந்தக் களம் ஆனாலும் சரி, அடங்காத ஆற்றல் ஒன்றினை அடக்கிப்பார்க்கும் அந்தத் துடிப்பு, மனிதன் என்று எவனை சொல்கிறோமோ அவனது ஆதார ஆற்றல். அதை அழிக்கும் எதுவும், இங்குள்ளவற்றை ஆற்றலற்ற சமூகமாகவே மாற்றும். அந்த அழிவுக்கு எதிரான குரல் இது. மூன்றாவது மிக முக்கிய அம்சம். நாம் ஒன்றுபட்டோம் என்பது. மனசாட்சி கொண்ட எவரும் அறிவர், நாம் சாதி மறந்து, மதம் மறந்து, மேல் கீழ் அடுக்கு மறந்து, பகிர்ந்து உணவுண்டு இணைந்திருந்தோம்.
குடியரசு திடலில் காற்று உலவியது என்பது, பொது மனத்தின் புறக்கணிப்பு அல்ல. ரங்கராட்டினத்தில் மேலே உச்சியில் இருந்த இருக்கை இப்போது கீழே இறங்கி விட்டது அவ்வளவுதான். இதை ஆதரித்துப் பேசிய குரல்களுக்கு தேசியம் என்பது கர்ப்பித்தம். ஆனால் பன்மைக்கு அவற்றின் ஆதரவு எப்போதும் உண்டு. ஆதரித்துப் பேசிய தேச பக்தர்களுக்கு தேசியம் தவிர்த்த பிற எதுவும் தேச விரோதம். நாம் ஒன்றுகூடினோம் எனும் உயர் நிலையை குற்ற உணர்வாக சுமக்கச் செய்யும் பணியையே இன்றைய புத்தி ஜீவிகள் முன்னெடுக்கிறார்கள்.
இங்கேதான் காந்தியைப் பயின்ற நவீன காந்தியர்கள் தேவைப் படுகிறார்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் ஒரு சட்டமீறல், குடி, பாலியல் அத்து மீறல் இன்றி கூடி இருந்தோம். கோரிக்கையை ஏந்தி போராட இதற்க்கு மேல் என்ன யார் வேண்டும். இதை இனம் கண்டு பயிற்றுவித்து எடுக்கவே இன்று ஆளுமைகள் தேவை. அதனை எதிர்மறை அம்சத்திற்கும் இடையியலும் நிகழ்ந்த இந்த ஒற்றுமையை பேணிக்காத்து, அதை சரியான களத்துக்கு , சரியான கோரிக்கைகளுடன், கொண்டு வந்து நிறுத்தும் ஆளுமைகளே இன்றைய தேவை.
அமைதிவழியில் ஒன்று கூடி, கோரிக்கைக்காக போராடும் சிவில் சமூகத்தின் அடிப்படை விசை அங்கேயே,அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு நிகழ்ந்து முடிந்தவை வரலாறு.