Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all articles
Browse latest Browse all 219

குமரப்பாவின் தனிமனிதன்

$
0
0

(காண்டீபம் குமரப்பா சிறப்பிதழுக்காக எழுதிய சிறிய கட்டுரை)

“எமது அமைதிக்கான தத்துவமும் அணுகுமுறையும் மாறுபட்டன. நாங்கள் தனிமனிதனைச் சீர்திருத்துவதன் மூலம் சமுதாயத்தை சீர்படுத்துதல் என்ற கருத்தை நம்புகிறோம். தனி மனிதன் மனதில் எழும் வன்முறை வெறியை அடக்கிவிட்டால் போருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். தனிநபர் வெறுப்பு, பகையின் முதிர்ச்சியே போர், ஆயுதக் குறைப்பு மூலமாகப் போரை நிறுத்திவிட முடியாது. மனிதர்களின் தேவையை செயற்கையாக வளர்த்து, அதை மையபடுத்தபட்ட பெரிய உற்பத்தி முறைகளால் ஈடு செய்யப் பார்க்கிறோம். இதனால் பேராசையும், பொறாமையும் பகையும் தான் வளர்கின்றன. இதுவே தேசங்கள் இடையேயான பகையாக, போராக வளர்கிறது. நிலையான சமாதானமே காந்திய முயற்சி. இது நமது பொருளாதார சிந்தனையில் மாற்றத்தை வலியுறுத்துகிறது.”
- ஜே.சி. குமரப்பா, ‘சீனாவில் ஜே.சி. குமரப்பா’ (பனுவல் சோலை வெளியீட்டகம், தமிழாக்கம் – ஜீவா)

Image result for kumarappa


ஆஷிஷ் நந்தி காந்தி காலனியத்தின் சாதனங்களை கொண்டே அதன் முதுகெலும்பை முறித்தார் என்கிறார். நவீன காலகட்டத்து ‘தனிமனிதவாதம்’ சுதந்திரத்தின் மீதும் நீதியுணர்வு மீதும் எழுப்பப்பட்டது என்றாலும் முதலாளித்துவம் மிக வசதியாக ‘பொறுப்பேற்றலை’ மழுங்கடித்து தனக்கு ஏதுவான சந்தையாக  மட்டும் மாற்றியிருக்கிறது. நவீன ஐரோப்பாவில் தனி மனித வாதம் பெரும் லட்சியவாதத்தோடு உருவாகி அய்ன் ராண்டின் ‘சுய மைய’ கோட்பாடுகளில் நிலை பெறுகிறது. ராண்டின் தனி மனிதன் தனக்கானவற்றை தேடி அடைபவன். கொண்டாட்டமாகவும் களியாட்டமாகவும் வாழ்வை கருதுபவன். அந்த கருத்தில் அல்ல, ஆனால் அந்த கொண்டாட்டத்திற்கு அவன் புறப் பொருட்களை சார்ந்திருக்க வேண்டும் என நம்ப துவங்கியதே நவீன மனிதனின் மிகப்பெரிய சிக்கல்.

காலனியம், முதலாளித்துவம், அடிப்படைவாதம், போர் என நவீன காலத்து மிகைகளுக்கு முறி மருந்தாக காந்தியம் உருவானது என கொள்வோம் எனில், குமரப்பாவும் – காந்தியும் முதலாளித்துவ தனிமனித வாதத்திற்கான முறி மருந்து என கொள்ளலாம். காந்தி சமூக அமைப்பை மேல் கீழான பிரமிடாக உருவாக படுத்தாமல் பேராழி வட்டமாக (நன்றி- அரவிந்தன் நீலகண்டன்) உருவக படுத்துகிறார்.  அதன் முதல் அலகாக தனி மனிதனை உருவகப்படுத்துகிறார். தனி மனிதன் குடும்பம் எனும் வட்டத்திலும், குடும்பம், சமூகத்திலும், சமூகம், கிராமத்திலும், கிராமம், கிராமம் தேசத்திலும், தேசம் புவியிலும் மேம்பட்ட நன்மைக்காக கரையும் வட்டங்கள். காந்தியும் தனிமனித வாதத்தையே முன்வைக்கிறார், ஆனால் சந்தை பொருளியலின் சுயநலத்திற்கு மாற்றாக தியாகம் எனும் விழுமியத்தை பொறுப்புடன் தாங்கி செல்கிறான் காந்தியின் தனிமனிதன்.  குமரப்பாவின் மேற்கோளையும் இந்தப் பின்புலத்திலேயே விளக்கிக்கொள்ள முடியும். காந்தியும், குமரப்பாவும் உலக சமூகத்திற்கு அளித்த மகத்தான சிந்தனை பங்களிப்பாகவே இதை காண வேண்டும்.

தேசங்களை தனி நபராக உருவகிப்பது குமரப்பாவின் மிக முக்கியமான அணுகுமுறை. ‘நிலைத்த பொருளாதார’ பற்றிய தனது பார்வைகளை எழுதும்போதும் இதே முறையைத்தான் கையாள்கிறார். பொருளாதார கோட்பாடுகளை உருவகங்கள் வழியாக விளக்குவதும் அவருடைய முறைகளில் ஒன்று.

“பொருளாதாரம், சமூகம், நன்னெறி ஆகியன கொண்டவர்களே தலைமைப் பண்பு கொண்ட தலைவர்களாக முடியும். எந்த ஒரு தனித்தன்மை மட்டும் போதாது, தன்னை மிஞ்சி, சமூகத்தைப் பார்க்கும், அதற்கு உழைக்கும் மனவளமே மனித வளர்ச்சியின் அறிகுறி- தனி நபரின் இத்தகைய உன்னத அர்ப்பணிப்பும், பிறர் நலன் பேணும் வாழ்வும் சமூக வாழ்வாக வேண்டும். “ குமரப்பா தனி நபரின் தலைமை பண்பை பற்றி சொல்வதாக வரும் இப்பகுதிக்கு அடுத்து அதை தேசங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் பொருத்தி பார்க்கிறார். ரோம் ஏன் வீழ்ந்தது? முதலாளித்துவத்தின் சவால்கள், கம்யுனிசத்தின் தவறுகள் என அடுக்கி இந்தியா உலக தலைமை ஏற்க எல்லா வாய்ப்புகளும் உண்டென முடிக்கிறார். ஆளுமையின் தலைமைப் பண்பில் ஆன்மீக பங்களிப்பை பற்றி சொல்கிறார். வெறும் பொருளியல் நோக்குகள் மட்டுமே கொண்ட தத்துவங்கள் காலபோக்கில் வீழ்ந்து விடும். குமரப்பா முன்வைக்கும் ஆன்மிக தளம் என்பது ஒழுக்கம் மற்றும் உயர்ந்த நெறிகள், தியாகம், விடுதலை ஆகியவைகளை உள்ளடக்கியது. லட்சிய கம்யுனிசம் என ஒன்றை உருவகிக்கிறார். அதை காந்தியின் ‘ராம ராஜ்ஜிய’ கனவுடன் கொண்டு இணைக்கிறார். ‘கொள்வாரும், கொடுப்பாரும் இல்லாத ராம ராஜ்ஜியத்தை நாம் அடைய இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?’ என அங்கலாய்க்கிறார். ‘லட்சிய கம்யுனிசம் குறித்த புனித பயணத்தில் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்பது ஒரு கட்டம்.’’வன்முறையைத் தவிர்த்து விட்டால் கம்யுனிசம் உன்னதமான லட்சியமே. சர்வோதயம் போல அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கான கொள்கையே கம்யுனிசம்.’ ‘லட்சிய கம்யுனிசத்தின் போது அரசும் இல்லாமல் போய்விடும். நாடே ஒரு குடும்பமாகிவிடும்.’

லட்சிய கம்யுனிசம் என குமரப்பா வரையறை செய்வது ஒருவகையில் கம்யுனிசத்தின் வன்முறைகளை சித்தாந்தத்தின் மீதின்றி அதை பயன்படுத்திய மனிதர்களின் பலவீனமாக முன்வைப்பதாக படுகிறது. சோவியத் வழிமுறைக்கும் சீன வழிமுறைக்கும் உண்டான வேறுபாடுகளை பற்றி அவருடைய பயண கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார். ருஷ்யா தொழிலாளர்களை மையமாகவும், சீனா விவசாயிகளை மையமாகவும் கொண்டு புரட்சியில் இணைந்தது. “ருஷ்யா பொருள்களை ஏராளமாக செய்து குவித்தது. அதன் மூலமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திவிட முடியும் என நம்பியது.பொருள்கள் மக்களின் துயரை எல்லாம் தீர்த்துவிடும் என நம்பினர். பொருட்களின் பெருக்கம் ஒரு தீர்வு என நம்பியதால், தொழிற்சாலைகளை அரசே எடுத்து நடத்தியது, ஏராளமாக செய்து குவித்தது. ..சீன அரசோ மாறாக ஒரூ குடும்பம் போல இயங்குகிறது. குடும்பத்தின் முதல் தேவை உணவு , உடு உறைவிடம். இவற்றைத் தந்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி உறுதி செய்யப்பட்டுவிடும். எனவே நில சீர்திருத்தத்துக்கு சீனா முதலிடம் அளித்தது.ஊதியத்தை பொருட்களாக வழங்கும் சீன பழக்கத்தை பதிவு செய்கிறார். உணவு தன்னிறைவு வழியாக பண வீக்கத்தை கட்டுபடுத்தி இருக்கிறார்கள்.

சர்வோதயத்தை லட்சியமாக ஏற்றுக்கொண்ட சீனா அதை அடைவதற்கு உண்டான வழிமுறையாக அகிம்சையை தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி தேர்ந்திருந்தல் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கும், ஆனால் காலபோக்கில் அதை அவர்கள் உணரகூடும் என எண்ணுகிறார் அவர். காந்தியின் மிக முக்கியமான நம்பிக்கை என்பது ‘இலட்சியங்கள் வழிமுறைகளை நியாயபடுத்த முடியாது’ என்பதே. அடிப்படைவாதிகள் தங்களது அதிகார வேட்கையை நிறுவிக்கொள்ள கம்யுநிசத்தையும் இன்னபிற கோட்பாடுகளையும் பயன்படுத்திகொண்டது போல் காந்தியத்தை ஒரு போதும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அதற்கு முக்கிய காரணம் இலட்சியங்களுக்கும் வழிமுறைகளுக்குமான இடைவெளி இன்மை. வெகுமக்களின் நியாய உணர்வுடனான தொடர் உரையாடலும், மனமாற்றமும் தான் காந்தியத்தின் வழியாக இருக்கிறது. ஆகவே தான் காந்தியம் என்பது சுய தேர்வாக இன்றி அரச திணிப்பாக நிகழ முடியாது.

இன்று குமரப்பா பரவலாக மீள் வாசிக்கபடுகிறார். அவருடைய கோட்பாடுகள் விவாதிக்கபடுகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் நாம் காந்தியிடமிருந்தும் குமரப்பாவிடமிருந்தும் வெகு தூரம் விலகி திரும்ப முடியாத எல்லைகளுக்கு வந்துவிட்டோம். இந்த நுகர்வு வெறி வளர்ந்துகொண்டே தான் போகிறது, நாமும் அதற்கேற்றார் போல் தகவமைத்துகொண்டு வாழ பழகி விட்டிருக்கிறோம். ஆனால் எங்கோ நம் தலை தட்டும், அன்று நமது மிகைகளின் விழைவுகளின் சிக்கல்களுக்கு முறி மருந்தாக காந்தியும் குமரப்பாவும் எப்போதும் எஞ்சி இருப்பார்கள். அப்படி வளர்ந்து வீங்கி தலை தட்டியவர்கள் புதிதாக காந்தியையும் குமரப்பாவையும் இன்று கண்டடைந்து உருமாறி புதிய தலைமுறையை உருவாக்கி கொண்டுள்ளார்கள்.





Viewing all articles
Browse latest Browse all 219

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>