Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all articles
Browse latest Browse all 219

நிகழ்கண காந்தி

$
0
0
எதிலோ நம்மை முழுமையாக ஆழ்த்தி கொண்டிருக்கும்வரை அதைப் பற்றிய பெரிய கேள்விகளோ கவலைகளோ அதன் நோக்கம் பற்றிய குழப்பங்களோ வருவதில்லை. காந்தி தளத்தை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கும்போது எல்லாம் இயல்பாக அதன் பாதையில் சென்றுகொண்டிருக்கும். ஆனால் சட்டென்று கவனம் குலைந்து தலைதூக்கும் ஒருகணத்தில் செயலூக்கம் குன்றுவதும் கேள்விகள் எழுவதும் பின்னர் மீள்வதும் இயல்பான நடத்தையாகி விட்டது. இத்தகைய இடைவெளிகள் கேள்விகளால் நிறம்பியவை. காந்தி – இன்று தளத்தின் வாசக நண்பர் ஒருவர் உண்டு. அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். நல்ல வாசிப்பு உடையவர். காந்தி இன்றில் எதையுமே எழுதாத ஒரு காலகட்டத்தில் அழைத்து “சார் ..தப்பா எடுத்துக்காதீங்க..காந்தி ரொம்ப எளிமையான மனிதர்..நல்லவர்தான் அவர பத்தி திரும்ப திரும்ப எழுதி என்ன ஆகப் போகுது?” என கேட்டார். என்னால் சட்டென அவருக்கு தெளிவான பதிலை அளிக்க இயலவில்லை. ஆனால் அவர் அப்படி கேட்டபின்னர்தான் உறக்கம் களைந்து மீண்டும் எழுத துவங்கினேன்.

அண்மையில் காந்தி ஜயந்திக்காக காந்தியின் முக்கியத்துவத்தை பற்றி விவாதிக்கும் சிறப்பு நீயா நானா படப்பிடிப்புக்கு சென்று வந்தேன். காந்தியின் இன்றைய முக்கியத்துவத்தை பற்றிய செறிவான விவாதம் நடந்தது. அதை தொடர்ந்து எழுந்த சிந்தனைகளை விரிவாக எழுதும் முயற்சி இது.


காந்தியின் தாக்கத்தை இரண்டு அளவுகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று தனிமனித வாழ்வில் காந்தியின் முக்கியத்துவம். இரண்டு சமூக – அரசியல் – பொருளாதார தளங்களில் காந்தியின் முக்கியத்துவம். காந்தியை பகுத்து கூறு போடுவது நமது நோக்கம் இல்லை என்றாலும், காந்தி எனும் மனிதர், காந்தி எனும் குறியீடு என இரு எல்லைகளில்தான் காந்தி இன்று புரிந்துகொள்ள படுகிறார். காந்தி எனும் படிமத்தை நிலைநிறுத்துவது காந்தி எனும் தனிமனிதரின் ஆன்ம பலம்தான். இன்று காந்தி எதனுடன் எல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்? எங்கெல்லாம் அவருடைய பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன? காந்தி எனும் படிமம் காந்தியால் எட்ட முடியாத கனவுகளாகக்கூட இருக்கலாம்.  

காந்தி தனது இந்திய சுயாட்சி நூலில் விரிவாக நவீன மேலை நாகரீகத்தை பற்றி விவாதிக்கிறார். மேற்கத்திய பெருவணிக தொழில்மய இயந்திரங்களால் ஆளப்படும் நவீன நாகரீகத்தை கடுமையாக விமர்சிக்கிறார். அவை உருவாக்கும் வாழ்க்கை சிக்கல்களை பற்றிய தெளிவு அவருக்கு இருந்தது. இன்று வடகிழக்கிலிருந்து கட்டிட கூலிகளாக பிழைப்பு தேடி இங்கு இடம்பெயர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அடிப்படை வாழ்வாதாரமும் சுகாதாரமும்கூட இல்லாத மிக மோசமான நிலையில் வாழ்கிறார்கள். சென்னையின் பளபளப்பான கட்டிடங்கள் பின்புலத்தில் மிகப்பெரிய உழைப்பு சுரண்டல் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் ரிப்பன் பில்டிங்கையும் கட்டி எழுப்ப தலித் மக்களை எப்படி சுரண்டினார்களோ, ஒப்பந்த கூலிகளாக சென்ற நூற்றாண்டில் தென்னாப்ரிக்காவில் எப்படி அடிமைபட்டு கிடந்தார்களோ அதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. ‘புலி வேண்டாம் ஆனால் புலியின் இயல்பு நமக்கு வேண்டியதாய் இருக்கிறது’ இத்தகைய சுயாட்சியால் எவ்வித பலனும் இல்லை என்கிறார். நாம் புலிக்கு பதிலாக மற்றொரு புலியைதான் கொண்டு வைத்திருக்கிறோம். காந்தியின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது நவீன வாழ்வின்மீது அவர் முன்வைக்கும் தீர்க்கமான விமர்சனங்களில் தொடங்குகிறது. நுகர்வு வெறி மிகுந்து கிடக்கும் இன்றைய சமூகத்தில் காந்தியின் குரல் நம் அகச்சான்றின் குரலாக சன்னமாகவேணும் ஒலிக்க வேண்டும்.

சமத்துவ சமூகம் என்பதே காந்தியின் லட்சிய கனவு. நவீன மேற்கத்திய வாழ்க்கைமுறையுடன் இணைந்த கல்வி பண்டைய பிறப்பு ரீதியான வருண பேதங்களை பொருளிழக்க செய்கிறது, மீட்புக்கான பாதையை திறக்கிறது. ஆனால் அது புதிய வகையிலான படிநிலைகளை ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. அம்பேத்கரும் காந்தியும் முரண்படும் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்று இது. காந்தி வட்டமேஜை மாநாட்டிற்கு பிரித்தானியாவிற்கு பயணம் ஆனபோது ஆங்கிலேய அரசு தனது மக்களின் ஒரு தரப்பின் மீதே காலனிய மனோநிலையில் நடந்துகொள்வதை கவனித்தார். ஆங்கிலேய அரசியல் பிரமுகர்கள் செல்ல தயங்கும் பிரித்தானியாவின் மிக ஏழ்மையான பகுதிகளுக்கு சென்றார். அவர்களுடன் உறவாடினார். மேற்கத்திய நாகரீகம் தம்மக்களையே அடிமையாகத்தான் நடத்துகிறது என புரிந்துகொண்டார். காந்தி நவீன நாகரீகத்தின் நோய்மையை அவர் காலத்தில் பிற எவரையும் விட துல்லியமாக கணித்தார். அதை சரிசெய்ய தீவிரமாக ஆராய்ந்தார். அவருடைய தீர்வுகள் முழுமையானவையா, சாத்தியமானவையா என்பவை எல்லாம் விவாதத்திற்குரியவை. இன்றைய சூழலில் சிறிய அளவிலான தன்னார்வ முயற்சிகள் நல்ல பலனை அளித்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

காந்திய வாழ்க்கைமுறை என்பது எந்நிலையிலும் நிர்பந்தத்தில் விளைவதாக இருக்கக்கூடாது. காந்தி இதில் மிக கவனமாக இருந்தார். ஒரு மையபடுத்தப்பட்ட அரசு காந்தியத்தை தனது கொள்கையாக ஏற்று மக்களின் மீது சுமத்தமுடியாது, அது காந்திய நோக்கிற்கே எதிரானதும் கூட. காந்தியம் தன சுயவிருப்பில் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு வாழ்க்கைமுறையாக மட்டுமே இருக்க முடியும் என்பது அதன் மிகப்பெரிய பலமும் பலவீனமும். காந்தியையும் லெனின் மாவோ போன்ற பிற உலக தலைவர்களையும் பிரித்து காட்டுவது அவருடைய இந்த இயல்பே. அவரும் மக்கள் பிரச்சனைகளை பற்றி சிந்தித்தார், அதை தீர்க்க அயராது முயன்றார் ஆனால் தன் கனவுகளை அவர் பிறர் மீது சுமத்தியதே இல்லை. காந்தியம் வன்முறையற்ற சித்தாந்தமாக என்றைக்கும் நிலைத்திருக்க அதுவே காரணம். தான் சரி என நம்பியதற்காக வாதாடி எவரையும் தனது பாதைக்கு கொண்டுவர முடியும் என நம்பினார். அந்த மனமாற்றம் நிகழும் வரை காத்திருக்கவேண்டும் என்பதே அவருடைய தரப்பு. தார்மீக அழுத்தம்தான் மாற்றங்களை கொண்டுவரும் மிகபெரிய உந்துவிசை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.    

காந்தி பெருவணிக இயந்திரமயமான நகர்மயமான நுகர்வு வேட்கை கொண்ட நவீன சமூகத்திற்கு மாற்றாக சிறுதொழில் தற்சார்பு கொண்ட எளிய கிராமத்து சமூகத்தை கனவுகண்டார். காந்தியின் கிராமம் இந்தியாவில் காலம்காலமாக சாதி அமைப்பை பேணிவரும் அறியாமையும் இருளும் நிறைந்த கிராமம் அல்ல. அவருடைய கிராமம் கடந்தகாலத்தில் இல்லை. மாறாக நவீன வாழ்வின் அதிகார விழைவில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்ட தற்சார்பு மிக்க சமத்துவ கிராமம். அது அவர் கனவில் எழுந்தது. நகரம் கிராமங்களின்மீது புதிய வகையிலான தீண்டாமையை உருவாக்குகிறது என்றார். . 

உடலுழைப்பின் மீதான அருவருப்பு நீடிக்கும் வரை புதிய படிநிலைகள் உருவாகிவரும் என்றே கருதினார். உழைப்பின் மகத்துவத்தை அதன் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தினால் அதைப் பற்றிய இழிந்த பார்வை மாறும் என நம்பினார். அவருடைய ஆசிரமத்தில் சுழற்சி முறையில் அனைவரையும் தோட்டி வேலை செய்ய பணித்தார். கழிப்பிடம் குறித்தும் குப்பை மேலாண்மை குறித்தும் மிக விரிவாக சிந்தித்தவர் காந்தி. அதற்காக பல சோதனை முயற்சிகளை முயன்றிருக்கிறார். தீண்டாமையை ஒழிக்க மிக முக்கியமான துவக்கப்புள்ளி அது என கருதினார்.

அண்மையில் மதுரையில் கொண்டவலை எனும் நண்பரை சந்தித்தேன். துப்புறவு தொழிலாளர்களின் நலனுக்காக அவர்களை ஒருங்கிணைத்து போராடுபவர். கையால் மலம் அள்ளச் சென்று விஷவாயு தாக்கி கடந்த இருபது ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மரணமடைந்த எண்ணூற்றி சொச்சம் பெயர்களை பற்றிய தகவல்களை திரட்டி வைத்திருக்கிறார். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருக்கிறது. ஆனால் அதுகுறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. “சார் என்ன பொருத்தவரை இந்தியா ஒரு நாத்தம் பிடிச்ச ..சனியன் பிடிச்ச நாடு” என்று அவர் சொன்னபோது அதன் நியாயமும் குரூரமும் நிதர்சனமும் என்னை நிலைகுலைய செய்தது. அந்த பட்டியலில் அருந்ததியர் மட்டுமின்றி பிராமணர், வேளாளர், நாயக்கர், தலித் என சகல பிரிவினரும் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த நிலைக்கு யார் பொறுப்பு? நவீன நாகரீகத்தின் ஒளிமிகுந்த பகுதிகளுக்கு அப்பால் ஒளிபுக முடியாத இருண்ட ஆழம் நம் கண்முன்னேயே விரிந்து கிடக்கிறது. மிகுந்த மனச் சோர்வை, விரக்தியை அளித்தது.

உண்மையில் மனிதர்களுக்குள் சமத்துவம் என்பது சாத்தியமா? சமத்துவத்திற்காக போராடி அதிகாரத்தை கைப்பற்றிய ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கோட்பாடும், ஒவ்வொரு லட்சியமும் வேறு ஒரு புதிய சமமின்மையை உருவாக்கி இருக்கிறது. அதன் வழியாகவே அது தன் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த சிக்கல்களை காந்தி உணர்ந்திருந்தார். அது அவரை வெகுவாக அலைக்கழித்தது.

ஆனால் காந்தி ஒரு நடைமுறை லட்சியவாதி. சமத்துவ சமதர்ம சமூகம் சாத்தியமா இல்லையா என்பதல்ல, தத்துவ சிக்கல்கள் நடைமுறை வாழ்வில் குறுக்கிட அவர் அனுமதித்ததில்லை. கண்முன் ஒரு சமத்துவமின்மை இருக்கிறது, அதை களைவது சாத்தியமோ இல்லையோ ஆனால் அதை எதிர்த்தாக வேண்டும், சமநிலையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் இருந்தாக வேண்டும். அதை இயன்றவரை அறத்தை முன்னிறுத்தி செயல்படுத்த வேண்டும். எதையும் இருமுனைகளாக துருவப்படுத்தாமல் புரிந்துகொள்ள வேண்டும். தலைகீழாக புரட்டிபோடும் புரட்சி அறைகூவல்கள் மாற்றுத்தரப்பை தங்கள் புதிய சமூக கனவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது மிக முக்கியமான சிக்கல். அவர்களுடனான ஆக்கபூர்வமான உரையாடல் வழியாக அவர்களின் அநீதி அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். காந்தி அவர்களையும் மாற்றத்தின் கருவிகளாக, அதன் பயனாளிகளாக கருதினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த அளவிற்கு விடுதலை முக்கியமோ அதேயளவு ஒடுக்குபவர்களுக்கும் அது விடுதலையை அளிக்கும் என்றார்.

நவீன தொழில்நுட்பம் மலம் அள்ளும் கருவியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. காந்தி நிச்சயம் அதை மனப்பூர்வமாக ஏற்றுகொண்டிருப்பார். காந்தியின் பெயரைத் தாங்கி சென்றாக வேண்டும் என இல்லை, அவரை ஏற்றுகொள்ள வேண்டும் என்பதும் இல்லை, சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அறவழியில் செயல்படும் அத்தனை நபர்களையும் நான் காந்தியர்களாகவே காண்கிறேன் (அவர்களே அத்தகைய அடையாளங்களை ஏற்காமல் இருந்தாலும் கூட).

ஃபுக்குவோக்கா ஒருவகையில் சூழலியலில் முன்னோடி என்றால் அரசியல் தளத்தில் காந்தி என சொல்லலாம். குமரப்பா, ஷூமாக்கர் என காந்தியில் துவங்கும் மாற்று பொருளியல் சிந்தனை தரப்பு ஒன்று உயிர்ப்புடன் இருக்கிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான ஆயுதமற்ற அறபோராட்டம் அகிம்சையை ஆயுதமற்ற போர் முறையாக, அறிவியல் ரீதியாக பலனளிக்ககூடிய யுத்தியாக வளர்த்தெடுக்கிறது. காந்தி அகிம்சையை வாழ்க்கைமுறையாக கருதினாரா அல்லது யுத்தியாக கருதினாரா என்பது முக்கியமான விஷயம். அதை அவருடைய சமண பின்புலத்தில் நோக்கும்போது அது முழுமையான வாழ்க்கைமுறையாகவே கருதினார் என கூற வேண்டும். எனினும் அதை ஒரு யுத்தியாக வளர்த்தெடுப்பதில் எவ்வித தவறும் இல்லை.

நான் எரிக்கா செனோவேத்தின் அகிம்சை பற்றிய ஆய்வு தகவல்களை முன்வைக்கும்போது நீயா நானா நிகழ்வில் பங்குகொண்ட நண்பர் சில விமர்சனங்களை வைத்தார். இன்று மேற்கில் காந்தி அதிகம் வாசிக்கப்படுகிறார் அதிகம் முன்னிருத்தபடுகிறார். ஜோசெப் லேபீல்ட் எழுதிய புத்தகத்திற்கு பிரித்தானிய அறிவுஜீவிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்கள். காந்தி வாழ்நாள் முழுவதும் மேற்கை விமர்சித்தவர் அவரை கைகொள்வதன் வழியாக முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக நியாயமாக கிளர்ந்தெழும் உணர்வுகளை வன்முறையாக சித்தரிக்க முயலும் மாபெரும் அரசியல் இருக்கிறது. காந்தி அவர்களின் ஆயுதமாக எளிதாக சென்றுவிடுகிறார் என்றார்கள்.   

காந்தி மேற்கில் மீள் கண்டெடுப்பு செய்யப்பட்டது அங்கிருந்து எழுபதுகளில் உருவான எதிர்கலாசார மரபினால். பின்னர் அட்டன்பரோவின் காந்திக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததன் வழியாக பொதுமக்களை ஓரளவிற்கு சென்றடைந்தார். எரிக்கா தனது ஆய்வில் காந்தியை பற்றி பெரிதாக எதுவுமே எழுதவில்லை என்பதே உண்மை. ஷார்ப் எழுபதுகளிலேயே அகிம்சையை வளர்த்தெடுக்கும் முறையை பற்றி எழுதுகிறார். ஷார்ப் காந்தியின் அற பார்வைகளை பகிர்ந்துகொண்டவர் அல்ல. ஜெயமோகனும் தரம்பாலும் எனக்கு காந்தியை எப்படி நெருக்கமாக காட்டினார்களோ அப்படித்தான் லூயி ஃபிஷரும் லாய்ட் ஐ ருடால்பும் காட்டினார்கள். எரிக்கா தனது ஆய்வில் அகிம்சை செயல்பட சாத்தியமற்ற சூழல்கள் என எதுவுமே இல்லை என்கிறார். இதையே நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

தனிமனித அகங்காரத்திற்கு நாம் பலிகொடுத்த உயிர்கள்தான் இவ்வுலகில் எத்தனை? மீண்டும் மீண்டும் தனது பாதை தேர்வை நியாயப்படுத்த வன்முறையாளர்கள் முயலும்போது மாபெரும் வன்முறையே விடையாக கிடைத்துள்ளன. அகிம்சை கோழையின் புகலிடமாகவும் ஆயுதம் வீரனின் அடையாளமாகவும் கருதபடுகிறது. தான் அழிந்துவிடுவோமோ எனும் அச்சத்தில் பிறரை அழிக்க ஆயுதமேந்துவது வீரமா அல்லது தானழிவதை பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் களத்தில் நிற்பது வீரமா? போர்த்தளபதிகள் வீரர்களை அனுப்பிவிட்டு காத்திருப்பான் சத்தியாக்ரகத்தில் தலைவர் முதல் ஆளாக போராட்டத்தில் ஈடுபடுவார். பாட்ஷா கானுடன் இனைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்தானியர்கள் வரலாறு வாசிக்கும்போதுதான் இதன் விரிவு விளங்கும். அகிம்சை மரணத்திற்கு அஞ்சாத பூரண வீரனின் ஆயுதமாக மட்டுமே இருக்க முடியும்.

எளிமையா,க மேற்கு ஒருவரை ஏற்றுகொள்கிறது என்பதாலோ நிராகரிக்கிறது என்பதாலோ அப்படியே ஏற்பதும் நிராகரிப்பதும் உரிய அறிவு செயல்பாடு அல்ல. அகிம்சையை விதந்தோதும் குரல்களுக்கு பின்னால் ஒரு சர்வதேச அரசியல் இருக்கிறது என கவலை கொள்பவர்கள் அதற்கு மாற்றாக வன்முறையை/ போரை விதந்தோதும் குரல்களுக்கு துணைபோகிறார்கள். அந்த அரசியலை நான் நிச்சயம் ஐயத்துடன்தான் நோக்குவேன். எவருடைய நன்மைக்காக எவர் உதிரம் வடிப்பது? கோடிக்கணக்கான உயிர்களை கொன்று குவிக்கும் ஆயுதங்களை பையில் வைத்துகொண்டு சமரசமும் சமாதானமும் பேச செல்வதன் இயல்பு எனக்கு பிடிபடவே இல்லை. அவசியமென்றால் என்னால் இவர்களை கொன்று குவிக்க முடியும் எனும் நம்பிக்கைதான் எத்தனை குரூரமானது. இந்த குரூர நம்பிக்கையை உருவாக்கதான் எத்தனை திட்டமிடல், எத்தனை ஒருங்கிணைப்பு, எத்தனை அறிவு செயல்பாடு, எத்தனை உழைப்பு! மலைப்பாக இருக்கிறது. ஆயுத குவிப்பு சார்புத்தன்மை உடையது. அக்கம்பக்கத்தினரை பொருத்தது. உலகம் பூரண அகிம்சையை கைகொள்ளட்டும் நானும் கைகொள்வேன். அதுவரை என் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டாக வேண்டும். ஆகவே எனக்கு ஆயுதங்கள் அவசியமாகிறது என்பதே அவர்களுடைய வாதம். ஆயுதகுவிப்பை போன்று அகிம்சையும் சார்புத்தன்மை உடையதா என்பதே கேள்வி. அகிம்சை சார்புடையதல்ல தன்னியல்பாக வெளிப்பட முடியும் என்பது தான் காந்தியின் மிகமுக்கியமான வாதம்.

மேற்கு கிழக்கு என்றில்லை, அதிகார விழைவு கொண்ட எல்லா தரப்புகளுமே காந்தியை கைகொள்ள முயல்வார்கள். ஆனால் காந்தி அந்த அதிகார வெளிக்கு அப்பால், நசுக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின், விடுதலை வேட்கை கொண்டவர்களின் குரலாக மட்டுமே மீண்டும் மீண்டும் உரக்க ஒலிப்பார்.

அந்த நண்பர் மற்றொன்றையும் சொன்னார். நான் காந்தி பற்றி சிறப்பாக கதா காலக்ஷேபம் செய்வதாக. மற்றொரு நண்பரும் இடைவேளையின்போது ஆமோதித்து நன்றாக பஜனை பாடுகிறீர்கள் என்றார். இத்தகைய கதைகளாக காந்தியை நினைவுகொள்வது மிகுந்த ஆபத்தானது என்றார். நான் அங்கு சில நிகழ்வுகளை என் வாதங்களுக்கு துணைக்கழைத்து கொண்டேன் என்பது உண்மைதான். காந்தியின் தென்னாப்பிரிக்க ரயில்பயணம், அவருடைய நடைமுறை லட்சியவாதம், கள செயல்பாட்டுக்கு உதாரணமாக நவகாளி யாத்திரையில் நடந்த நிகழ்வுகளை பற்றி சில நிகழ்வுகளை சொன்னேன். நவகாளி யாத்திரையில் நடந்த இரு நிகழ்வுகளை பற்றி சொன்னதற்கு (அதிலும் குறிப்பாக ஒரேயொரு நிகழ்வுக்கு. அது நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. அப்படி இடம்பெறாதது நன்மைக்கே) எழுந்த கருத்துதான் அது. நான் என் கற்பனையில் இருந்து எந்த நிகழ்வுகளையும் உருவாக்கவில்லை. மது தண்டவதே அவருடைய உரையில் கூறியவற்றைதான் நான் அங்கு மீண்டும் முன்வைத்தேன். மற்ற தரவுகளும்கூட ராமச்சந்திர குகா, தரம்பால் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் பதிந்த நிகழ்வுகள்தாம்.

இந்திய மனம் இருவகையில் செயல்படுகிறது ஒருபக்கம் பெருந்திறள் மக்களின் நினைவில் காலாதீதமாக சில விழுமியங்களை சேமிக்க தொன்மங்களை உருவாக்குகிறது. தொன்மங்கள் வழியாகவே அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சிறுபான்மை அறிவுத்தளத்தில் அவை கட்டுடைக்கப்படுகின்றன, உரைகள் வழியாக விதவிதமாக பொருள்கொள்ளப்படுகின்றன. அறிவுத்தள விவாதம் நீடிக்கிறது. இவை இரண்டுமே மிக முக்கியமான செயல்பாடு. வரலாறும் தொன்மமும் கலந்து உருவாக்கிய புராணங்கள் இவைகளுக்கு சான்று. இவ்வடிவில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இவை தகவல்களை அல்ல விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. தொன்மத்தை இழிந்து நோக்குவது என்பதொரு காலனிய பார்வை. உண்மையில் நண்பர் அப்படி சொன்னது குறித்து எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. ஆனால் அதில் அப்படியென்ன ஆபத்து இருக்கிறது என்பதுதான் விளங்கவில்லை.

மகாதேவ் தேசாயின் மகன் நாராயண் தேசாய் அவர்கள் இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து நூற்றி எட்டு இடங்களில் காந்தி கதா நிகழ்வை நடத்தி இருக்கிறார். மரபான ஹரிகதா பாணியில் பாடல்களுடன் சேர்ந்து காந்தியின் கதையை ஐந்து நாட்களுக்கு சொல்வார். அது ஓர்அற்புதமான அனுபவம். அப்படியொரு திறனும் வாய்ப்பும் அமையப் பெற்றால் உண்மையில் மகிழவே செய்வேன். எனக்கு காந்தியின்மீது அளவுகடந்த பிரேமையும் பக்தியும் உண்டு. மறுப்பதற்கும் மறைப்பதற்கும் இதில் எதுவும் இல்லை. ஆனால் ஒருபோதும் அதேயளவு பக்தி பிறருக்கு இருக்க வேண்டும் என நான் கருதியதில்லை. அதை அறிவுத்தளத்தில் முன்னிறுத்தி விவாதங்களில் இருந்தும் விமர்சனங்களில் இருந்து காபந்து செய்தது இல்லை.  அவரைப்பற்றி எவ்வித வெறுப்பும் இன்றி என்னால் விமர்சிக்கவும் உரையாடவும் முடியும்.   

காந்திக்கும் எனக்குமான தொலைவை பற்றிய பிரக்ஞை எனக்கு எப்போதும் உண்டு. நான் காந்தியவாதியாக என்னை ஒருநாளும் முன்னிருத்திக் கொண்டதில்லை. அத்தகைய வாழ்விற்கு தேவையான அகவிரிவு, அர்ப்பணிப்பு, துணிவு பொதுநல நோக்கு ஆகியவைகள் என்னிடம் இதுவரையில் இல்லை. நான் காந்திய ஆர்வலன் மட்டுமே. எனக்குள்ளிருக்கும் இந்த முரண்பாட்டை வேறு எவரும் அடையாளபடுத்த வேண்டியதில்லை. நானே பலமுறை அதைப்பற்றி பதிவு செய்திருக்கிறேன். ஆனால் முரண்பாடு இருக்கிறது என ஒப்புகொள்வதால் பொறுப்புகளில் இருந்து தப்புகின்றேன் என பொருளில்லை. இந்த இடைவெளியை அங்குலம் அங்குலமாகவேனும் குறைக்க முயன்றுகொண்டு தானிருக்கிறேன்.

நான் அவரை மகாத்மாவாக அறிந்ததே இல்லை. கனவுகளுக்கும் நிதர்சினத்திற்கும் இடையிலான இடைவெளியை உணர்ந்து அவைகளுக்கு இடையில் தொடர்ந்து சமரசம் செய்ய முடிந்து தத்தளித்து கொண்டிருந்த தாத்தாவாகத்தான் உணர்கிறேன். அவ்வகையில் அவரை எனக்கு மிக நெருக்கமாக, எனக்குள் ஒலிக்கும் அகசான்றின் குரலாக உணர்கிறேன். அவர் மீது முன்வைக்கப்படும் பெரும்பாலான விமர்சனங்கள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல என்பதை என் வாசிப்பை வைத்து சொல்ல முடியும். ஆனால் அவர் மீது எனக்கு சில வருத்தங்கள் உண்டு. வேறு மாதிரி நடந்து கொண்டிருக்கலாம் என தோன்றிய தருணங்கள் உண்டு. என்ன செய்ய எல்லோரும் நம் விருப்பத்திற்கு இணங்க இயங்கி விட முடியாதே.

காந்தி இன்று தளத்தை நடத்துவதால் நான் எதுவும் பெரிதாக சாதித்துவிட்டேன் என்றெல்லாம் நினைக்க இடமில்லை. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், ஈரோடு டாக்டர்.ஜீவா, கூத்தபாக்கம் இளங்கோ, சேலம் பியுஷ், வானவன் மாதேவி -  வல்லபி, சசி பெருமாள், குக்கூ சிவராஜ், நம்மாழ்வார் போன்ற மகத்தான மனிதர்களின் வாழ்வின் சாதனைகளை ஒப்பிடும்போது நானெல்லாம் ஒரு கிணற்றுத் தவளை. ஆனால் இதைச் செய்வதற்கு ஆட்கள் வேண்டும். எழுதுவது நிறைவளிக்கிறது. ஆகவே எழுதுகிறேன். எழுதுவேன். 

-சுகி  

Viewing all articles
Browse latest Browse all 219

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>