
இவற்றுக்கப்பால் அரசியலில் வேறு வழிமுறைகள் உண்டு என்பதை இறைவனின் சித்தம் இவரைக் கொண்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. காந்தியின் அரசியல் வழிமுறை மிகவும் எளிமையாகவும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது: கூவி அழைப்பவனும் அதற்கு செவிசாய்க்கும் இறைவனுமன்றி வேறெதுவும் இவருக்குத் தேவையாயில்லை. ஆயுதங்களுக்கும் போர்த்தளவாடங்களுக்கும் ராணுவத்துக்கும் எதிராக காந்தி உண்ணாமையை முன்னிறுத்துகிறார்; திறனுக்கும் சாமர்த்தியத்துக்கும் வன்முறைக்கும் எதிராக, பிரார்த்தனை; அரசியல் சச்சரவுகளுக்கு எதிராக, மௌனம். நவீன மனிதனின் பார்வையில் இவை எவ்வளவு பலவீனமாகவும் பரிதாபகரமானதாகவும் இருக்கின்றன, இல்லையா? நவீன அரசியல் பாடநூல்களில், இந்த மூன்று வழிமுறைகளும் அடிக்குறிப்புகளில்கூட பெறுவதில்லை
உண்மையில் மனிதர்களுக்குள் சமத்துவம் என்பது சாத்தியமா? சமத்துவத்திற்காக போராடி அதிகாரத்தை கைப்பற்றிய ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கோட்பாடும், ஒவ்வொரு லட்சியமும் வேறு ஒரு புதிய சமமின்மையை உருவாக்கி இருக்கிறது. அதன் வழியாகவே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த சிக்கல்களை காந்தி உணர்ந்திருந்தார். அது அவரை வெகுவாக அலைகழித்தது. ஆனால் காந்தி ஒரு நடைமுறை லட்சியவாதி. சமத்துவ சமதர்ம சமூகம் சாத்தியமா இல்லையா என்பதல்ல, தத்துவ சிக்கல்கள் நடைமுறை வாழ்வில் குறுக்கிட அவர் அனுமதித்ததில்லை. கண்முன் ஒரு சமத்துவமின்மை இருக்கிறது, அதை களைவது சாத்தியமோ இல்லையோ ஆனால் அதை எதிர்த்தாக வேண்டும், சமநிலையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் இருந்தாக வேண்டும்
ஆலய நுழைவு போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தார். குற்றாலத்தில் தீண்டாமையை பின்பற்றுவதால் குளிக்க மாட்டேன் என்று கிளம்பினார். கேரளாவின் கொடிய ஜாதிய செயல்பாடுகளை பார்த்து பைத்தியக்காரர்கள் விடுதி என்றார். கோவிலுக்குள் அரிசனங்களை அனுமதித்தால் மட்டுமே தானும் கோவிலுக்குள் காலடி எடுத்துவைப்பேன் என்று சொல்லி மதுரை கோவிலுக்குச் செல்வதை புறக்கணித்தார். அரிசனங்களை அனுமதிக்காத பூரி ஜகநாதர் ஆலயத்துக்கு போய் வந்த மனைவியிடம் சண்டை பிடித்தார். பீகாரில் நிலநடுக்கத்தில் எண்ணற்ற மக்கள் இறந்த பொழுது தீண்டாமையை பின்பற்றியதால் கடவுள் கொடுத்த தண்டனை என்று அறிவித்தார்.