Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all 219 articles
Browse latest View live

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 5

$
0
0
முந்தைய பகுதிகள்:

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1 

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4 




ரோயல்: இதனுடன் இணைத்து நாம் காந்தியின் மதம் பற்றி அடுத்து பேசலாமா? பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார், ஜே.டி.எஃப் ஜோர்டன்ஸ் எழுதிய, 'Gandhi’s Religion: A Homespun Shawl,'புத்தகம் இது. அவரது மதத்தைப் பிரித்து காந்தியைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் அவர்.

குஹா: முதலில் ஒரு சிறு தகவல் பிழையை திருத்துகிறேன்- ஜே.டி.எப். ஜோர்டன்ஸ் கத்தோலிக்க பாதிரியாய் இருந்தவர் என்று சொல்வது சரியாக இருக்கும். அவர் முதலில் பாதிரியாராய்த்தான் இந்தியா வந்தார், சர்ச்சில் சேர்ந்தார், பிறகு அதைவிட்டு வெளியேறினார். அவருக்கு காந்தியில் ஆர்வம் ஏற்பட்டது, ஆய்வாளரானார், கடைசியில் ஆஸ்திரேலியாவில் ஒரு பேராசிரியர் வேலையில் சேர்ந்தார்.

இது ஓரளவு தன்னிச்சையானது. ஆனால் என் பட்டியலில் உள்ள அந்நிய தேசத்தவர்களின் மூன்று புத்தகங்களையும் நீங்கள் பார்த்தால்- ஒருவர், ரஷ்யாவில் வாழ்ந்த அமெரிக்கர், ஃபிஷரைச் சொல்கிறேன், இரண்டாமவர் இங்கிலாந்தில் படித்த அமெரிக்கர், டால்டன். மூன்றாவது புத்தகம் ஆஸ்திரேலியாவில் கல்வியாளரான பெல்ஜிய தேசத்துக்காரர். தன் மண்ணை மட்டும் அறிந்தவராய் இல்லாத,  அந்நிய வெறுப்பு இல்லாமல் உலகு குறித்த புரிதல் கொண்டவர்களைச் சேர்க்க நினைத்தேன். இவர்கள் எல்லாருமே வித்தியாசமானவர்கள். காந்தி குறித்து மிகவும் சுவாரசியமான பார்வைகளை அளித்தவர்கள். இவர்கள் மூவருமே மூன்று முதல்தர புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஜோர்டன்ஸ்சுக்கும் காந்தியின் மதத்துக்கும் வருகிறேன்: காந்தி இறை நம்பிக்கை கொண்டவர், ஆனால் அவர் மத நம்பிக்கை விஷயத்தில் மிகவும் வித்தியாசமான, தனித்தன்மை கொண்ட, சராசரியாய் அல்லாத நிலைப்பாடு கொண்டவர். அவர் தன்னை சனாதன இந்து என்று அழைத்துக் கொண்டார்- அதன் பொருள், பக்தி கொண்ட, மரபில் பற்றுதல் கொண்ட இந்து-, ஆனால் அவர் கோயிலுக்குப் போனதில்லை. ஒரே ஒரு முறை அவர் தென்னிந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோயிலொன்றுக்குச் சென்றார், தீண்டத்தகாதாரை முதல் முறையாக கோயிலுக்குள் அனுமதித்தபோது. அது ஒன்று தவிர, அவர் கோயிலுக்கே போகாத இந்து. அவர் இந்துதான், ஆனால் இந்து மரபில் உள்ள தவறான நம்பிக்கைகளை,  குறிப்பாக, தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை, புரட்சிகரமாக எதிர்த்தவர். சி.எஃப். ஆண்ட்ரூஸ் என்ற இங்கிலிஷ் கிறித்தவ பாதிரியாரை மிக நெருக்கமான நண்பராய்க் கொண்ட இந்து அவர். இந்துக்கள் முஸ்லிம்களை ஒடுக்கக்கூடாது, சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் செயல்திட்டம் கொண்ட இந்து அவர்.

காந்தியின் சமயவுணர்வு மிகத் தெளிவானது. நாம் 19ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் வளர்ந்த ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில்தான் டார்வினின் 'The Origin of Species'வெளிவந்ததையடுத்து பகுத்தறிவு நாத்திகம் பீரிட்டெழுந்தது. அறிவுஜீவிகளும் அறிவியலாளர்களும் கடவுளை நிராகரித்து விட்டனர் என்ற காரணத்தைக் கொண்டு ஹார்டி, 'இறைவனின் நல்லடக்கம்'என்ற கவிதை எழுதுகிறார்.

ஆனால் அது மிகத் தீவிரமாக மதமாற்றப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலமும்கூட- கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள், முஸ்லிம் மிஷனரிகள் ஆப்பிரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது நாம் மத நம்பிக்கையை அறிவுஜீவிகள் அற்பப்படுத்தும் காலத்தில் வாழ்கிறோம்- ஒரு பக்கம் ஆணவ நாத்திகமும் மறு புறம் மத அடிப்படைவாதமும் இருக்கின்றன. இந்தப் பொய்த் தேர்விலிருந்து வெளியேற காந்தி ஒரு வழிகாட்டுகிறார். நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராய் இருக்கலாம், என்கிறார் காந்தி. உணர்ச்சியற்ற பகுத்தறிவும் அறிவியலும் முழுமையாய் விளக்கிவிட முடியாத வகையில் வாழ்க்கை  ஆச்சரியமும் மர்மமும் கொண்டதாய் இருக்கிறது.

ஆனால், அதே வேளை, இறைவனை அடையும் ஒரே உண்மைப் பாதை என்று எதுவும் கிடையாது. உன் விதியை ஏற்றுக் கொள், என்கிறார் காந்தி. நீ இந்துவாய் பிறந்திருக்கிறாய், நல்லது. உன் பெற்றோர், உன் பெற்றோரின் பெற்றோர், பல தலைமுறைகளாய் இந்துக்களாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் பிற மதங்களிலிருந்து நீ எதைக் கற்றுக் கொள்ள முடியும் என்று யோசித்துப் பார். கிறித்தவர்களுடனும் முஸ்லிம்களுடனும் யூதர்களுடனும் பார்ஸிக்களுடனும் நட்பு வளர்த்துக் கொள். உன் மதத்தை பிறரின் கண்ணாடியில் காணும்போது, அதன் களங்கங்களை நீ அறியக்கூடும். இது ஒரு சுவையான, வழக்கத்தில் இல்லாத மத அணுகுமுறை.

ஆனால் மதம் காந்தியின் வாழ்வின் மையத்தில் இருந்தது. இதை நான் என் சரிதையில் சொல்வதில்லை, என் மிக இளம் வயதில், இருபதுகளின் துவக்கங்களில், காந்தியை மதசார்பற்றவராக மாற்ற விரும்பும் காலகட்டத்தைக் கடந்தேன். நான் நாத்திகனாக வளர்ந்தவன். என் அப்பாவும் தாத்தாவும் அறிவியலாளர்கள், நான் கோயிலுக்கு சென்றதேயில்லை. காந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது, இந்த மத விவகாரம் எல்லாம் தேவையற்ற கவனக் குலைவுகள் என்று நினைத்தேன். காந்தியைப் பொறுத்தவரை எது உண்மையாகவே இந்தக் காலத்துக்குப் பொருந்துவது என்றால், தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு சம உரிமை கோருவது, பெண் சமத்துவம், அகிம்சை, மக்களாட்சி, பொருளாதார தன்னிறைவு. மதம் இல்லாத காந்தியைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

ஆனால் கடைசியில் இந்த முயற்சியின் வியர்த்தத்தை உணர்ந்தேன். காந்தியைப் புரிந்து கொள்வதற்கான கதவு இது கிடையாது, ஏனென்றால் காந்தி மத நம்பிக்கை உள்ளவர். அவருக்கு மதம் மிக முக்கியமானது. அவர் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டாலும், அதன் ஆசாரங்களுக்கு எதிரான கலகக்காரர். அவரது கிறித்தவ சீடர் ஒருவர் சர்ச்சை விட்டு வெளியேற்றப்பட்ட இடம் ஒன்று மிக அழகாக இருக்கும். வெர்ரியர் எல்வினைச் சொல்கிறேன், அவரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். தனது பிஷப் கிறித்தவ மதத்தை விட்டு தன்னை விலக்கி விட்டதாக காந்திக்கு எழுதுகிறார் அவர். காந்தி பதில் எழுதும்போது, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார், இறைவனை இருத்தி வழிபட அவருக்கு வானம் இருக்கிறது, வழிபாட்டுத் தளமாய் காலடியில் உள்ள மண் இருக்கிறது, என்கிறார். சர்ச்சில் இல்லாதபோதும்கூட நீ கிறித்துவுடன் உரையாட முடியும். இதில் காந்திக்கு டால்ஸ்டாய் மற்றும் அவரது எழுத்துக்களின் தாக்கம் இருந்தது என்பது உண்மைதான், இறைவனின் அரசு உனக்குள் இருக்கிறது என்ற டால்ஸ்டாயின் உணர்வு காந்தியை பாதித்திருந்தது.

ஜோர்டன்ஸ் எழுதிய புத்தகம் கவனமாக எழுதப்பட்டது, நியாய உணர்வு கொண்டது, காந்திக்கு ஏன் மதநம்பிக்கை அவ்வளவு முக்கியமாக இருந்தது, எது காந்தியின் நம்பிக்கைக்கு அவ்வளவு தனித்தன்மை அளித்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர் எழுதுகிறார். அதனால்தான் இது என் பட்டியலில் இருக்கிறது.

ரோயல்: ஆனால் முஸ்லிம்களுக்கு ரொம்ப நல்லவராக இருந்தார் என்று காந்தி ஒரு இந்துவால் கொலை செய்யப்பட்டார் என்பதையும் இறுதியில் நாம் சொல்ல வேண்டும்.

குஹா: நிச்சயமாக.

ரோயல்: பிரமச்சரியத்தின் மீது காந்திக்குள்ள பற்றுதல், அது மதத்திலிருந்து வருகிறதா?

குஹா: பிரமச்சரியம், அல்லது உங்கள் காம விழைவுகளை வெற்றி கொள்ளுதல், பல சமய மரபுகளில் மேலோங்கி நிற்கிறது: கத்தோலிக்கம், பௌத்தம், ஜைனம், இந்துமதம். வேறு சில சமய மரபுகளில் அது சஅறவே இல்லை: இஸ்லாம், பிராடஸ்டன்ட் கிறித்தவம், யூத மதம். நீங்கள் காம இன்பங்களை நிராகரிக்க வேண்டும், அது உங்களை கடவுளுக்கு அருகில் கொண்டு செல்லும், என்பது பௌத்தம், கத்தோலிக்கம், இந்து சமயங்களின் ஒரு பகுதி. ஆனால் அது இஸ்லாம், யூத மதம், மற்றும் நவீன உலகுக்கு அந்நியமானது, முழுக்கவே எதிரானது.

ஒரு கதை சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ஜோசப் லெலிவெல்ட் என்ற அமெரிக்க ஆய்வாளர் காந்தி ஒரு தற்பாலின விழைவு கொண்டவர் என்று புத்தகம் எழுதினார். ஹெர்மன் கல்லென்பாக் என்ற யூதர் ஒருவர் காந்தியின் நெருங்கிய நண்பர். இருவரும் தென்னாப்பிரிக்காவில் சேர்ந்து வசித்திருந்தார்கள். இருவரும் டால்ஸ்டாயை பின்பற்றுபவர்கள், இருவரும் பிரமசாரிகளாக இருக்க விரும்பினார்கள். சேர்ந்து இருக்கும் இரண்டு பேர் பிரமசர்யத்தைக் கடைபிடிக்க விரும்புவதை லெலிவெல்ட்டால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இருவரும் தற்பாலின விழைவு கொண்டவர்கள் என்று அவர் முடிவு செய்து விட்டார். அவருக்கு கிடைத்த வலுவான ஆதாரம், கல்லென்பாக்குக்கு காந்தி லண்டனிலிருந்து எழுதிய ஒரு கடிதம். அப்போது காந்தி தற்காலிகமாக தன் நண்பரையும் அறைச் சகாவான கல்லென்பாக்கை பிரிந்திருந்தார். அவர் கல்லென்பாக்குக்கு எழுதிய கடிதத்தில், "இப்போது என் மேஜையின் மேல் வாசலின் பாட்டில் ஒன்று இருக்கிறது, அது எனக்கு உன்னை நினைவுபடுத்துகிறது,"என்று எழுதியிருந்தார். அந்த அமெரிக்க ஆய்வாளர் அவசரப்பட்டு உடனே முடிவுக்கு வந்து விட்டார். ஆனால் வாசலின் பாட்டில் உண்மையில் அங்கே இருக்கக் காரணம், காந்தியும் கல்லென்பாக்கும் ஷூ போடக்கூடாது என்ற டால்ஸ்டாயிய பிரதிக்ஞை எடுத்திருந்தார்கள். காலணிகள் இல்லாமல் அல்லது ஸ்லிப்பர்கள் போட்டுக் கொண்டுதான் நடந்தார்கள். லண்டனிலும் இப்படி நடந்து சென்ற காரணத்தால் காந்தியின் பாதத்தில் ஆணிகள் வந்து விட்டன.

நியூ யார்க்கில் வாழும் 21ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட் போன்ற ஒரு நவீன மனிதர், ஒவ்வொரு ஆண்டும் 'கே ப்ரைட் பரேட்'களில் பங்கேற்பவர், பிறர் கட்டாயத்தாலல்லாமல் சுயவிருப்பத்தால் பிரம்மச்சரியம் காக்க விரும்பும் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.  ஆனால் உலகெங்கும் பல தேசங்களில் உள்ளது போல் எட்டு வயது சிறுவன் ஒருவன் மத நிறுவனமொன்றுக்கு அனுப்பப்பட்டு பூசகர் ஆகச் சொல்லப்படுவது போன்ற விஷயமல்ல இது. கல்லென்பாக் கட்டிடக்கலை நிபுணராய் வெற்றி பெற்றவர், காந்தி வக்கீல் பணியில் வெற்றி பெற்றவர். அனைத்தையும் துறந்து எளிய வாழ்வு வாழச் சொன்ன  புகழ்பெற்ற நாவலாசிரியர் டால்ஸ்டாயின் தாக்கத்தில் இருவரும் இருந்தனர். என் முதல் நூலான 'Gandhi Before India'வில் இது விஷயமாக என்னால் நல்ல கேலி செய்ய முடிந்தது- ஜோசப் லெலிவெல்ட்டின் பிழை புரிதல் பற்றி இரண்டு பக்க அடிக்குறிப்பு ஒன்று எழுதினேன்.

ஆனால் விஷயம் இதுதான்- பிரமச்சரியம் இந்து மதத்திலும் இருக்கிறது, ஜைன மதத்திலும் இருக்கிறது. இந்து சமயத்துடன் தொடர்புடைய ஜைன சமயத்துக்கு நெருக்கமானவராய் இருந்தார் காந்தி- குஜராத்தியான காந்திக்கு பல ஜைன நண்பர்கள் இருந்தனர். ஜைன முனிகள் இப்படிப்பட்ட பிரமச்சரியத்தை பூரணமாய் கடைபிடிப்பவர்கள். எனவே, இது காந்தியின் சமய நம்பிக்கைகளின் முக்கிய அடித்தளமாய் இருந்தது. இது அவரது மன நம்பிக்கையில் எழுவது, நவீன ஆணோ பெண்ணோ இதைப் புரிந்து கொள்ள முடியாது.

ரோயல்: ஆனால் மத விஷயங்களில் திறந்த மனம் கொண்டவராய் இருந்தாலும் காந்தி தன் மகன் ஒரு முஸ்லிமை மணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க மறுத்தார்.

குஹா: ஆம், ஆனால் அதற்கு நடைமுறை அரசியல் காரணங்கள் இருந்தன. அவர் மிகவும் ஆச்சாரமான சமூகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார். முதல் முறையாக அவரால் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைக்க முடிந்தது. கலப்பு மணம் நிகழ்ந்திருந்தால் அது அவரது அரசியல் போராட்டத்தை தடம் புரளச் செய்திருக்கும். ஏனென்றால், இஸ்லாமிய மதபிரசாரகர்கள் அவரது மகன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கைப்பற்றி விட்டான் என்கிற மாதிரி போயிருக்கலாம். இது நடந்தது 1920களில், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன். இன்று அதற்கு எந்த ஆட்சேபமும் இருக்காது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

முந்தைய பகுதிகள்:

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1 

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4 


 (ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் புத்தகங்கள் தொடரும்)

The Best Books on Gandhi, recommended by Ramachandra Guha: Interview by Sophie Roell, Five Books 

Image Credit:  The Hindu

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 6

$
0
0
முந்தைய பகுதிகள்:

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 5

ரோயல்: உங்கள் அடுத்த புத்தகத்தைப் பார்க்கலாம். தன் அந்தரங்க வாழ்க்கையைவிட அரசியல் மற்றும் பொது வாழ்க்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளித்தவர் காந்தி. அதே போல், நீங்கள் முதலில் சொன்ன வகையில், அதனால் அவர் தன் குடும்பத்தை மிக மோசமாக நடத்தினார். உங்கள் பட்டியலில் உள்ள கடைசி புத்தகம் அவரது மகன் ஹரிலாலின் வாழ்வைப் பற்றியது. 'Harilal Gandhi: A Life'என்ற தலைப்பு கொண்டது. இந்தப் புத்தகத்தில் அவரது மகனின் மேற்கோள்கள் சில இடம் பெறுகின்றன: "எங்களை கவனிக்கவில்லை,"என்பதும், "எங்களுடன் நீங்கள் அன்பாய் பேசியதேயில்லை, எப்போதும் கோபமாகதான் பேசியிருக்கிறீர்கள்."இது மிகவும் சோகமான விஷயம், இல்லையா? அவரது மகனைப் பற்றியும் இந்தப் புத்தகம் பற்றியும் சொல்லுங்கள்.

குஹா: சந்துலால் பாகுபாய் தலால் என்ற ஆய்வாளர் குஜராத்தி மொழியில் எழுதிய புத்தகம் இது. இன்றுள்ள காந்தி ஆய்வாளர்களில் மிக முக்கியமான ஒருவரான த்ரிதிப் சுஹ்ருத் இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அகமதாபாத்தில் உள்ள காந்தியின் தனிப்பட்ட ஆவணங்கள் கொண்ட காப்பகத்தில் பல ஆண்டுகள் காப்பாளராக இருந்தவர் சுஹ்ருத். அவர் மிக விரிவான அறிமுகமும் குறிப்புகளும் அளித்திருக்கிறார். ஆக, இந்த சரிதையின் மிகச் சிறந்த பதிப்பு இது.

இந்த விஷயங்களை அவற்றின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். காந்திக்கு திருமணம் ஆகும்போது அவருக்கு மிக இளம் வயது. அவர் தன் பதின்பருவத்தில் திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் குழந்தை ஹரிலால் 1888ஆம் ஆண்டு பிறந்தார், அப்போது காந்திக்கு 20 வயது கூட ஆகியிருக்கவில்லை. ஹரிலால் பிறந்து சிறிது காலத்தில் காந்தி சட்டக்கல்வி பட்டம் பெற லண்டன் போய் விடுகிறார். எனவே தன் மகனின் முதல் இரண்டு ஆண்டுகள் காந்தி அவருடன் இருப்பதில்லை. அதன் பின் அவர் திரும்புகிறார், ஒரு வருடத்துக்கு மேல் சிறிது காலம் இந்தியாவில் இருக்கிறார், அதன்பின் பணம் சேர்க்க மீண்டும் தன் மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து தென்னாப்பிரிக்கா போய் விடுகிறார். பின்னர், சில காலம் சென்றபின், அவரது மனைவியும் மக்களும் தென்னாப்பிரிக்கா சென்று அவருடன் சேர்ந்து இருக்கின்றனர். ஆனால் அவரது முதல் மகன் ஹரிலால் மெட்ரிகுலேஷன் படிக்க இந்தியா அனுப்பி வைக்கப்படுகிறார். இப்படி, ஹரிலால் வளர்ந்து அவரது ஆளுமை உருவாகும் ஆண்டுகளில் தந்தை உடன்  இல்லை.

மேலும், காந்திக்கு சீக்கிரம் மகன் பிறந்து விடுகிறான், ஹரிலால் வயதுக்கு வந்து தன் தொழில் மற்றும் எதிர்காலம் குறித்து யோசிக்கும் காலத்தில் காந்தியே அவரது முப்பதுகளில்தான் இருக்கிறார். காந்திக்கு மத்திய வயதினருக்குரிய உளச்சிக்கல் வந்து விடுகிறது. நிறைய பணம் சம்பாதிக்கும் வழக்குரைஞர் தொழிலை கைவிட்டு அவர் முழு நேர சமூக சேவையில் இறங்குகிறார். அந்த நேரம், ஹரிலால் விடலைப் பருவத்தினருக்குரிய சிக்கலில் இருந்தார்.

இதில் சரிதை எழுதுபவரை உள்ளே கொண்டு வர விரும்பவில்லை. ஆனால் நான் என்னையே பார்த்துக் கொள்வதானால், பலரைப் போலவே எனக்கும் மத்திம வயது சிக்கல் இருந்தது. எனக்கு 36, 37 வயது இருந்தபோது நான் பல்கலைக்கழக வேலையை விட்டு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஆனேன். அமைப்புகள் ஆசிரியப்பணி எதுவும் தேவையில்லை, என்று சொல்லிக் கொண்டேன், சுதந்திரமாய் இருந்தால் போதும். இது நடந்தபோது என் மகனுக்கு நான்கு வயது, என் முப்பதுகளின் துவக்கத்தில்தான் அவன் பிறந்திருந்தான். காந்தி விஷயத்தில், துரதிருஷ்டவசமாக, அவருக்கு மத்திமவயது சிக்கல் வந்து அவர் தன் பணியை மாற்றிக் கொள்வதற்கும் அவரது மகனுக்கு விடலைப்பருவ பிரச்சினைகள் வருவதற்கும் சரியாய் இருந்தது.  காந்திக்கும் அவரது மகனுக்கும் மோதல் வர இதுவும் ஓரளவு காரணம். காந்தி தனது மகனைச் சிறை செல்லச் சொல்கிறார். என்னைப் பின்பற்று, சமூக சேவை செய், நான் செய்தது போல் சமுதாய நலனுக்காக எல்லாவற்றையும் விட்டு விடு. இங்கே மகன் சொல்வது, உனக்கு என் வயது இருந்தபோது நீ வக்கீல் ஆவதற்காக லண்டன் போனாய். நானும் ஏன் லண்டன் போய் வக்கீல் ஆகக்கூடாது?

தன் மகனின் எதிர்பார்ப்புகள், விருப்பங்களில் காந்தி ஒரு சிறிதுகூட பரிவு காட்டுவதாயில்லை. மகன் தன் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹரிலால் தன் மனைவியை மிகவும் நேசித்தான், ஆனால் அவனது மனைவி இறந்து விடுகிறாள், அவனது உணர்வுகளின் அடியாதாரம் தகர்ந்து விடுகிறது.

நாட்பட நாட்பட காந்தியின் கோபம் கூடுகிறது, தான் விரும்புவதை தன் மகன் செய்ய மறுப்பதால் அவர் அவனிடம் குற்றம் காணத் துவங்குகிறார், தன் தோல்வி அவரை எரிச்சலடையச் செய்கிறது. ஹரிலால் இதனாலெல்லாம் உடைந்து போகிறான். ஒரு தளத்தில், தந்தை தன் மீது அதிகாரம் செலுத்துவதை, அவர் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நடந்து கொள்வதை, ஹரிலால் வெறுக்கிறான். ஆனால் மற்றொரு தளத்தில், தன் தந்தை தன்னை கவனிக்க வேண்டும் என்று ஏங்குகிறான். எனவே, தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஹரிலால் பல முறை சிறை செல்கிறான். காரணம், வேறு எவர் அளவுக்கும் தானும் ஒரு தேசபக்தன்தான் என்பதை தன் தந்தை அறிய வேண்டும் என்று விரும்புகிறான்.

அவரது மகன் பல முறை மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுகிறான், ஆனால் தோல்வியடைகிறான். அவனது மனைவி இறந்து போகிறாள். அவன் பல முறை சொந்த தொழில் செய்ய முயற்சி செய்கிறான், ஆனால் அவன் செய்யும் ஒவ்வொரு தொழிலும் முடங்கிப் போகிறது. அதன் பின் அவன் குடிகாரனாகிறான், பின் அவன் குடியை விடுகிறான், மீண்டும் பாட்டிலை எடுக்கிறான். இது போக., அவனுக்கு தன் தந்தை மீது அவ்வளவு கோபம் இருப்பதால், காந்தியை பழி வாங்குவதற்கென்றே இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறான். இதையடுத்து அவனது தாய், கஸ்தூர்பா காந்தி மிகுந்த மன வேதனையுடன் ஒரு கடிதம் எழுதுகிறார். அவர் மிக அபூர்வமாகவே பொது வெளிச்சத்துக்கு வருபவர், ஆனால் தன் மகனின் பழி கொள்ளும் செயல் அவரை மிகவும் கோபப்படுத்துவதால் அவர் பத்திரிக்கையில் கடிதம் எழுதுகிறார்- உன் அப்பாவை வெட்கப்பட வேண்டுமென்றே ஏன் இப்படிச் செய்கிறாய், என்று கேட்கிறார்.

இது மிகவும் துயர் மேவிய, சிக்கலான உறவு. ஆனால் அசாதாரணமானதல்ல. வெற்றிகரமான, லட்சியத்தைத் துரத்தும் மனிதர்கள் பலர் நல்ல கணவர்களாகவும் அப்பாக்களாகவும் இருப்பதில்லை. இப்படிப்பட்ட உதாரணங்கள் நவீன வரலாறெங்கும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் காந்தி விஷயத்தில், தலால் எழுதிய இந்தப் புத்தகம் இருப்பதால், நாம் அவர்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தையும் படிக்க முடிகிறது. அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொள்வதை நாம் பார்க்க முடிகிறது, ஒரு சிறிது கூட புரிதல் இல்லாத நிலை எங்கும் விரவியிருப்பதை, காந்தியின் பக்கத்தில்  நாளுக்கு நாள் கூடும் கோபத்தையும் எரிச்சலையும், மகன் பக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோபத்தையும் வெறுப்பையும் நாம் காண முடிகிறது. இந்தச் சித்தரிப்பில் இது எல்லாமே மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.

இதில் இன்னொரு விஷயம், இது தரவுகள் அளிக்கும் சித்திரம். இதை எழுதியவர் ஓர் ஆய்வாளர், எந்த அலங்காரமும் இல்லாமல், தகவல்கள் அடிப்படையில்,  உணர்ச்சிவசப்படாத வகையில் உண்மையைச் சொல்ல விரும்புகிறார் அவர். மிகையாக இல்லாமல், எதையும் அதிகம் விவரிக்காமல், பெரிதுபடுத்தாமல், நல்லது கெட்டது என்று முடிவு சொல்லாமல் எழுதப்பட்ட காரணத்தால் இது நல்ல வெற்றி பெறுகிறது என்று நினைக்கிறேன்.

ரோயல்: காந்தியின் தகனத்துக்குக்கூட ஹரிலால் போவதில்லை, இல்லையா? அங்கு போக விருப்பமில்லாத அளவு அவர் தன் தந்தையை விட்டு விலகி விட்டாரா?

குஹா: உண்மையில் அவர் ஈமச்சடங்குக்கு செல்ல விரும்பினார். காந்தி இறந்த செய்தி மிகவும் தாமதமாகக் கிடைத்தது, அவர் தில்லிக்குப் போனார், என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது மிகவும் சோகமான கதை. நாம் அட்டன்பரோ படம் பற்றி முதலில் பேசினோம். 'Gandhi, My Father,'என்ற புத்தகத்தின் அடிப்படையில் வந்த நல்ல திரைப்படம் ஒன்று இருக்கிறது. அது ஃபெரோஸ் அப்பாஸ் கான் என்ற இந்திய இயக்குனர் ஒருவரால் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட முழுநீளப் படம். முதலில் நாடகமாக வந்தது. தேசப்பிதாவுக்கும்  அவரது மகனுக்கும் இடையிலேயே இருந்த மிகச் சிக்கலான, வாதை மிகுந்த உறவு பற்றி முதலில் நாடகம், அப்புறம் திரைப்படம் என்று வந்த கதை இது. இந்தப் படத்தை வாசகர்கள் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், ஏனென்றால் இது அவ்வளவு அருமையான படம்.

ரோயல்: கடைசியாய் ஒரு கேள்வி. இந்தப் பட்டியலில் காந்தியின் சுயசரிதையை நீங்கள் சேர்க்கவில்லை. அவர் எழுதிய புத்தகமாய் இல்லாமல் அவரைப் பற்றிய புத்தகங்களைப் பேச வேண்டும் என்பதாலா அல்லது வேறு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?

குஹா: காந்தியின் சுயசரிதையை தவிர்க்க முடியாது, ஆனால் அது எல்லாரும் அறிந்தது. பல டஜன் மொழிகளில் பல நூறு பதிப்புகளில் கிடைக்கிறது. பெரிய பதிப்பகங்கள் எல்லாமே அதை அச்சிட்டு விட்டன, எல்லா இடத்திலும் கிடைக்கிறது. 'ஃபைவ் புக்ஸ்'தள வாசகர்கள் புதிய, உயிர்ப்பு கொண்ட, காந்தி குறித்து அவ்வளவாக அறியப்படாத பார்வைகளை அளிக்கும் புத்தகங்களை அறிய வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் நிச்சயம் காந்தியின் சுயசரிதை வாசிக்க வேண்டும். நான் சொன்ன ஆய்வாளர், த்ரிதிப் சுஹ்ருத் எழுதிய குறிப்புகள் கொண்ட புதிய பதிப்பு இப்போது வந்திருக்கிறது. யேல் பல்கலைக்கழக அச்சுக்கூடம் பதிப்பித்துள்ள முதல் தர புத்தகம் அது.

ரோயல்: சுயசரிதை படிக்கவும் நன்றாக இருக்கும், இல்லையா?

குஹா: ஆம். ஆங்கிலம் மற்றும் குஜராத்தி உரைநடைகளில் தேர்ச்சி கொண்டவர் காந்தி. அவர் குஜராத்தி மொழி எழுத்துக்கே புத்துருவம் அளித்தவர். காந்தி எந்த போலித்தனமும் இல்லாத, பெரிய மனித தோரணை சிறிதும் இல்லாத, அழகிய, சிக்கனமான, தெளிவான உரைநடையில் எழுதினார். அவர் அற்புதமான எழுத்தாளர்.

காந்தி பற்றிய என் முதல் புத்தகத்துக்கு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த கண்டுபிடிப்புகளில் ஒன்று 1960ல் பதிப்பிக்கப்பட்ட, அதிகம் அறியப்படாத புத்தகம். அது காந்தியின் பள்ளி மதிப்பெண் பட்டியல்களின் தொகுப்பு. காந்தி மெட்ரிகுலேஷன் முடித்தபோது, ஆங்கிலத்தில் 44%  வாங்கினார், குஜராத்தி மொழியிலும் கிட்டத்தட்ட அவ்வளவுதான். எனவே இங்கே இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பேசும்போது நான் எப்போதும் இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்: இதோ குஜராத்தியிலும் ஆங்கிலத்திலும் மேதைமை பெற்ற எழுத்தாளர் ஒருவர், பரிட்சைகளில் வெறும் 44 மதிப்பெண்தான் வாங்கியிருக்கிறார்!

காந்தி சுயசரிதை குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு, காந்தியின் காரியதரிசி மகாதேவ் தேசாயால் மொழியாக்கம் செய்யப்பட்டது. தேசாயும்கூட ஒரு குறிப்பிடத்தக்க மனிதர்தான். ஆனால் சுயசரிதை எல்லாருக்கும் தெரிந்த புத்தகம், சுலபமாய், எங்கும் கிடைக்கிறது என்பதால் வேறு சில புத்தகங்களைப் பரிந்துரைக்க விரும்பினேன்.

முந்தைய பகுதிகள்:

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4

ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 5

The Best Books on Gandhi, recommended by Ramachandra Guha: Interview by Sophie Roell, Five Books

Image Credit:  Amazon


அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் 1 - ராபர்ட் பரோஸ்

$
0
0


2 அக்டோபர் 2019 அன்று, மோகன்தாஸ் கே காந்தி இந்தியாவில் உள்ள குஜராத்தில் பிறந்து 150ஆவது ஆண்டு நிறைவடைகிறது. இன்றைய உலக தலைவர்கள் சிலருடன் ஒப்பிட்டு, காந்தி இவ்வுலகுக்கு அளித்த தரிசன தலைமை குறித்து சிந்திக்கவும் காந்தியின் தலைமையைப் பின்பற்ற வேண்டுமென்று அழைக்கவும் விரும்புகிறேன்.

முக்கியமாக, காலனிய இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிக்க பல பத்தாண்டுகள் நீண்ட அகிம்சை போராட்டத்துக்கு திட்டம் வகுத்த தலைவர் என்று காந்தி நினைவு கூரப்படுகிறார். அவரது அசாதாரண அரசியல், பொருளாதார, சமூக, சூழியல், சமய, அற தலைமைப் பண்புகள் அறியப்படாமல் இருக்கின்றன. இத்தனைக்கும் அவர் தனக்குப் பின் வரும் தலைமுறைகள் தன் போதனைகளிலிருந்து கற்றுக் கொள்ள விரும்பினால் பெறுவதற்குரிய பிரமாண்ட கொடையொன்றை விட்டுச் சென்றிருக்கிறார். இந்தக் கோடை 98 புத்தகங்கள் கொண்ட மகாத்மா காந்தியின் நூல் தொகை வடிவில் இணையத்தில் கிடைக்கிறது.

இந்த ஒவ்வொரு துறையிலும் காந்தி விட்டுச் சென்றதைச் சுட்டும் அதே வேளை, அரசியல், பொருளாதாரம், சமூகம், மற்றும் சுற்றுச் சூழல் ஆகிய நான்கு துறைகளில் காந்தியின் அணுகுமுறை மலைக்கச் செய்யும் நற்சிந்தனைகளை விட்டுச் சென்றிருக்கிறது என்பதை குறிப்பிட்டு அடிக்கோடிட வேண்டும். அவரது அணுகுமுறையை சமகால அரசியல் தலைவர்கள், ஜயிர் போல்சோனாரு (பிரேசில்), சி ஜிபிங் (சீனா), இம்மானுவேல் மாகோம் (பிரான்சு) , விக்தோர் ஓர்பான் (ஹங்கேரி), நரேந்திர மோதி (இந்தியா), பின்யமின் நெடன்யாஹூ (இஸ்ரேல்), சின்சோ ஆபே (ஜப்பான்), விளாதிமிர் புதின் (ரஷ்யா), முகமது பின் சல்மான் (சவூதி அரேபியா), போரிஸ் ஜான்சன் (யூகே), மற்றும் டொனால்ட் ட்ரம்ப் (யூஎஸ்ஏ), ஆகியவர்களுடன் சிறிது விரிவாக ஒப்பிடவும் விரும்புகிறேன்.

அதற்கு முன், காந்தி பற்றிய ஒரு சிறு அடிப்படை பின்புலத்தை அளிக்கிறேன். அவரது எண்ணங்களையும் செயல்களையும் வழி நடத்திய அடித்தளச் சட்டகம் தெளிவாகும்.

காந்தி - ஒரு சுருக்கச் சித்திரம்

தனி மனிதன், மானுட சமூகம் ஆகியவற்றையும், மோதல்கள் குறித்த அணுகுமுறையையும் குறித்த புரிதலை வளர்த்துக் கொள்ள காந்தி தன் வாழ்வு நெடுக தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டார். அவர் தீவிரமாகவும் பரவலாகவும் வாசித்தார். இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று வெவ்வேறு தேசங்களில் பல்வகைப்பட்ட சமூக பின்புலங்களில் வைத்து தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தையை கூர்ந்து கவனித்தார். தன் அன்னை மற்றும் இந்து சமயத்தின் தாக்கத்தில் உருவானவர் காந்தி. இது தனி மனிதன் மற்றும் உலகு குறித்த அணுகுமுறையை காந்தி தனித்தன்மை கொண்ட வகையில் உணரச் செய்தது.

கீழே உள்ள விஷயங்களின் விரிவான விவாதத்துக்கும் துல்லியமான தரவுகளுக்கும், 'The Strategy of Nonviolent Defense: A Gandhian Approach,'என்ற புத்தகத்தில்  காந்தி குறித்து அளிக்கப்பட்டுள்ள அத்தியாயங்கள் மற்றும் பத்திகளைக் காணலாம்.

தனி மனிதனும் மானுட இயல்பும்- காந்தியின் புரிதல்

பொதுவாய் காந்தியைப் புரிந்து கொள்ள, அவர் தனி மனிதனைப் பற்றியும் மானுட இயல்பு பற்றியும் என்ன நினைத்தார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். ஏனெனில், அவரது தத்துவம் முழுவதும் அதன் அடிப்படையில் அமைந்துள்ளது.

காந்தி தனி மனிதனின் பொறுப்புணர்வுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் அளித்தார். மானுட இயல்பு பற்றி அவர் உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தார். 'ஆன்மாவின் அழைப்புக்கு'மனிதர்கள் செவி சாய்ப்பார்கள் என்று நம்பினார் காந்தி, அதன்பின் அவர்கள் தன்னலம் மற்றும் வன்முறையை விட்டு மேலெழுந்து வருவார்கள் என்றார் அவர். மேலும், ஆன்ம விழிப்பு அடைய அவர்கள் மேற்கொள்ளும் தேடலில் இது முக்கியமானதும்கூட. காந்திய ஆய்வாளர் ஆர்னே நேஸ் விளக்குவது போல், ஆன்ம விழிப்பு என்பது, "ஒருவர் தன்னை சுதந்திரமான, முழு பொறுப்பும் கொண்டவராய் உணர்வது".

காந்தியின் பார்வையில் இந்தத் தேடல் ஒவ்வொருவரும் தனித்தனியாய் மேற்கொள்வது. அகிம்சை, தன்னிறைவு, மற்றும் மெய்த்தேடல் ஆகியவற்றைச் சார்ந்திருப்பது. "உண்மையை உணர்வது என்பது ஒருவன் முழுமையாய் தன்னையும் தன் விதியையும் கண்டடைவது."ஆனால் இந்தத் தேடலை எது வழிநடத்த வேண்டும்? காந்தியைப் பொறுத்தவரை, அது தனி மனிதனின் மனசாட்சியாய்த்தான் இருக்க முடியும். "கடமை எது என்ற போராட்டம் நேரும்போது இறுதி தீர்ப்பளிப்பது"எப்போதும் "அந்தராத்மா"ஒன்றே. அவரது பார்வையில் "தெய்வத்தின் குரல், மனசாட்சியின் குரல், உண்மையின் குரல், அல்லது அந்தராத்மாவின் குரல் அல்லது "அமைதியான மென்மையான குரல்"என்பது எல்லாம் எப்போதும் ஒன்றுதான், வேறுபட்டவையல்ல."

இது மிக முக்கியமான அடிப்படை விஷயம். ஏனெனில், காந்தியின் அகிம்சையைப் பற்றிய வழக்கமான விவரணைகள் அதன் ஒழுக்கம், தன்னடக்கம், தியாகம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. "பின்விளைவுகள் எவையாயினும் நீ உன் உன் அகக்குரலுக்குச் செவி சாய்க்க வேண்டும்,""தவறாய்ப் புரிந்து கொள்ளப்படும் ஆபத்து இருந்தாலும்கூட", என்ற அடிப்படை எதிர்பார்ப்பை மேற்கண்ட புரிதல் நினைவில் கொள்வதில்லை.

விஷயம் இதுதான்- காந்தி நினைத்த அகிம்சைச் சமூகம் உருவாக வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் தன் தனிப்பட்ட, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வை மீண்டும் நிர்மாணித்துக் கொள்ள வேண்டும். "கேட்பதால் எதுவும் கிடைத்து விடாது; நமக்கு வேண்டியதை நாம்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், அந்த முயற்சிக்கான ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்."தன்னடையாளம், தன்னிறைவு, அச்சமின்மை ஆகிவற்றை வளர்த்துக் கொண்டு தேவைப்பட்ட ஆற்றலை தனக்குள்ளிருந்தே தனி மனிதன் அடைய வேண்டும்.

அச்சமின்மை என்பது என்ன? பொருளிழப்பு, ஏளனம், நோய், உடல் காயம், மரணம் குறித்த அச்சங்கள் உட்பட புற அச்சங்கள் அனைத்திலிருந்து விடுபடுவது என்பதுதான் அதன் பொருள் என்று கொண்டார் காந்தி. "உறுதியான, நிலையான முயற்சி,"மட்டுமே அச்சமின்மை என்ற இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார் அவர். ஆனால் அச்சமின்மை ஏன் இவ்வளவு முக்கியமாகிறது? ஏனெனில், அச்சமற்ற மனிதன் பிறரின் தண்டிக்கும் சக்திக்கு அஞ்ச மாட்டான். அதனால் அவன் மாற்றத்தின் ஆற்றல் வாய்ந்த கருவியாகிறான்.

(தொடரும்)

நன்றி - https://www.pressenza.com/2019/09/comparative-political-leadership-gandhi-vs-contemporary-leaders/

Image Credit: The Asian Age

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் 2 - ராபர்ட் பரோஸ்

$
0
0


முந்தைய பகுதி :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1 

காந்தியின் சமூக மற்றும் அரசியல் அணுகுமுறை

முதலியம், சோஷலிசம் ஆகிய இரண்டையும் நிராகரிப்பதன் அடிப்படையில் காந்தி சமூகத்தை விளங்கிக் கொண்டார்.

முதலியத்தைப் பொறுத்தவரை, காந்தி போட்டி  அடிப்படையிலான சந்தையையும் தனிநபர் உடமையையும் நிராகரித்தார். அவை தனி மனிதர்களிடையே போட்டியையும் மேலும் மேலும் செல்வம் சேர்க்கும் போக்கையும் வலியுறுத்துகின்றன. இதன் விளைவாய், பேராசையும் எளியவர்களைச் சுரண்டுதலும் அதிகரிக்கின்றன. அதே போல், அவர் முதலியத்தின் முக்கிய அமைப்புகளையும் நிராகரித்தார். இதில், அதன் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு (மக்களுக்கு முழு அதிகாரத்தை அளிக்க மறுத்தது), அதன் நீதி அமைப்பு (அது மோதல்களை மோசமாக்கியது, எலைட்டுகளின் அதிகாரத்தைப் பாதுகாத்தது , அதன் கல்வி அமைப்பு (அது கல்வியை வாழ்க்கை மற்றும் பணியிலிருந்து பிரித்தது), ஆகியவையும் அடங்கும்.

சோஷலிசத்தைப் பொறுத்தவரை, வர்க்கப் போர் என்ற வகையில் மோதலை விளங்கிக் கொள்வதை நிராகரித்தார். அரசுடைமையும் மைய அதிகாரமும் பொதுநலனைப் பாதுகாக்கும் என்ற அதன் நம்பிக்கையையும், செல்வம் சேர்ப்பதை வளர்ச்சி என்று அது முக்கியப்படுத்துவதையும் வன்முறைக் கருவிகளை அது சார்ந்திருப்பதையும் காந்தி நிராகரித்தார்.

உடமைகளை கூட்டுறவு அமைப்புக்குச் சொந்தமாய்க் கொண்டு தன்னிறைவு பெற்ற தன்னாட்சி சமூகங்கள் பரவலாக்கப்பட்ட அதிகாரம் செலுத்தும்  கூட்டமைப்பாய் இயங்கும், உதிரி பணிகளைச் செய்வதற்கான வலிமையற்ற அமைப்பு அதன் மையத்தில் இருக்கும், என்ற வகையில் காந்தி எதிர்கால சமூகத்தை விளங்கிக் கொண்டார்.  பிறருடன் இணைந்தும் இயற்கையுடன் இணங்கியும் தனி மனிதர்கள் தம் சுய முயற்சிகளால் உணவுத் தேவை உட்பட தமது தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொள்ளக் கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்பது அவரது பார்வையில் முக்கியமாய் இருக்கிறது.

சுரண்டுபவரையும் சுரண்டப்படுபவரையும் சுரண்டல் அமைப்புகளிலிருந்து விடுவிக்க இந்தச் சட்டகம் தேவைப்படுகிறது என்று கருதினார் காந்தி. "வன்முறையின் சாரம் சுரண்டல்,"என்று கருதியதால் காந்திக்கு இது முக்கியமாகிறது. தன்னிறைவும் பரஸ்பர சார்பும் அமைப்பினுள் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே, சுய புத்துயிர்ப்பையும் தற்பாதுகாப்பையும் மேம்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அளிக்கும். சார்தல் கொண்ட எந்த ஒரு உறவிலும் பொதிந்துள்ள அமைப்பு வன்முறையின் சாத்தியத்தை நீக்கும்.

காந்தியின் "ஆக்கப்பணி திட்டங்களில்"இந்த் சமூக பார்வை தெளிவாய் புலப்படுகிறது. இதில் பங்கேற்பவர்களின் ஒழுக்கம், அரசியல், சமூகம், மற்றும் பொருளாதாரம் சார்ந்த வாழ்வை திருத்தியமைக்க முற்படுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில், அதிலும் குறிப்பாக, சுயகௌரவம், பாதுகாப்பு, நீதி ஆகிய தேவைகளை நிறைவு செய்வதில் மைய அக்கறை கொண்ட திட்டம் இது. இதில் பல கூறுகள் இருந்தன. அவற்றில் சில புரிதல் பொருட்டு இங்கு அளிக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் மிக முக்கியமான ஒரு கூறு சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரச்சாரம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், யூதர்கள், மற்றும் பல சமயத்தவர்களின் அடையாளத்தை பரஸ்பரம் அங்கீகரிக்கச் செய்வதை நோக்கமாய்க் கொண்டது. அனைவரும், தம் சமயம் மீதுள்ள அதே மதிப்பை பிற சமயங்கள் மீதும் கொள்ள வேண்டும் என்று கருதினார் காந்தி.

பெண் விடுதலை பிரச்சாரம் இந்தியாவின் ஆண் மைய சமூகத்தில் அமைப்பு ஒடுக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய கௌரவம், பாதுகாப்பு மற்றும் நீதி அளிப்பதை நோக்கமாய்க் கொண்டது. "சம்பிரதாயமும் சட்டமும் பெண்ணை அடக்கி வைத்திருக்கிறது, இதற்கு ஆண்தான் பொறுப்பேற்க வேண்டும்... அகிம்சை அடிப்படையில் அமைந்த வாழ்க்கைத் திட்டத்தில் ஆணளவுக்கே பெண்ணுக்கும் தன் விதியை அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு".

தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம் ஹரிஜன்களுக்கு (வர்ண அமைப்புக்கு வெளியே இருந்தவர்களைக் குறிக்க காந்தி பயன்படுத்திய பதம்) இந்து மதத்தில் சுய கௌரவம், பாதுகாப்பு மற்றும் நீதி அளிப்பதை நோக்கமாய்க் கொண்டது. அதே போல், காந்தியின் புனருத்தாரண திட்டம் இந்தியாவெங்கும் பூர்வகுடிகள் மற்றும் தொழுநோயாளிகளின் தேவைகளை அங்கீகரிக்க முயன்றது. "நம் தேசம் மிகப் பெரியது... அதன் ஒவ்வொரு அங்கமும் பிற அங்கங்கள் ஒவ்வொன்றுடனும் ஒன்றியிருப்பதான உயிருணர்வு கொள்ளாவிடில் நாம் ஒரே தேசம் என்று சொல்லிக் கொள்வதை மெய்ப்பிப்பது மிகக் கடினம் என்பதை உணர்கிறோம்"

காதி மற்றும் கிராமிய தொழில்களுக்கான செயல்திட்டங்கள் கிராமங்களை தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கம் கொண்டவை. பிரிட்டிஷ் இம்பீரியல் ஆட்சியின் கீழ் பல நூற்றாண்டுகள் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆட்பட்ட இந்தியர்கள் தம் அடையாளம் குறித்து பெருமையடையவதை நோக்கமாய்க் கொண்டது. காதி, "இந்திய மானுடத்தின் குறியீடு, அதன் பொருளாதார சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அது குறிக்கிறது,"என்றார் காந்தி. பொருளாதார சமத்துவம் அடையவதற்கான போராட்டம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நீதியை நிலைநாட்டும் நோக்கம் கொண்டது. தேசச் செல்வத்தின் பெரும்பகுதிக்கு உரியவர்களாய் இருந்த பணக்காரர்களை மட்டுப்படுத்தி முழு வேளை உணவும் பெற இல்லாத பல கோடி விவசாயக்கூலிகளின் வாழ்வாதாரங்களை உயர்த்துவது அதன் லட்சியம்.

இவ்வகையில், காந்தி தனி மனிதனை மையப்படுத்தினார், தனி மனிதனின் மானுட தேவைகளை நிறைவு செய்யும் சமுதாயத்தை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். "நாம் எல்லாவற்றையும் விட முக்கியமாய்க் கருத வேண்டியது தனி மனிதனே"; அமைப்பை விட தனி மனிதர்கள் உயர்ந்தவர்கள். "தனிமனிதன் இல்லையெனில், சமூகத்தில் எது மிச்சமிருக்கும்?... தனி மனித சுதந்திரத்தை மறுப்பதன் அடிப்படையில் எந்த சமுதாயமும் உருவாக முடியாது."

எனவே, காந்தியைப் பொறுத்தவரை, தனிமனிதன் அகிம்சையை பின்பற்றினால் மட்டுமே அகிம்சைச் சமூகத்தின் அடித்தளம் அமையும். அகிம்சை வழி வாழ்வு அமைத்துக் கொள்ள பிற எவருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. நாம் நினைத்தது அனைத்தும் நடக்காமல் போய் விடும் என்பதற்காகவோ அதை எல்லாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகவோ செயல்படத் தயங்க வேண்டியதில்லை. அப்படிப்பட்ட மனப்போக்கு முன்னேற்றத்தை தடை செய்வதாக மட்டுமே இருக்கும்.

இந்த அகிம்சைச் சமுதாயம் எப்படி உருவாகும்? பிறிதொரு காலத்தில் புதிய சமுதாயமொன்றை உருவாக்கும் நம்பிக்கையில் பழையதை அழிப்பது அல்ல காந்தியின் நோக்கம். அவரது பார்வையில், இப்போதுள்ள சமூக அமைப்பை அகிம்சை முறையில் தொடர்ந்து முயற்சி செய்து முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். இது அடைய முடியாமல் போனாலும், "இந்த லட்சியத்தை மனதில் கொண்டு அதை நெருங்க அயராது உழைக்க வேண்டும்."

இந்த சமூக விளைவை அடைவதற்கான அரசியல் வழிமுறை மூன்று முக்கிய கூறுகள் கோருகிறது: தனிப்பட்ட வகையில் அகிம்சை வாழ்க்கை முறை, அரசியல், சமூக, பொருளாதார, சூழியல் உறவுகளை புது வகையில் உருவாக்க்கிக் கொள்ளும் ஆக்கப்பூர்வ பணிகள், நேரடி அமைப்பு வன்முறைக்கு எதிரான அகிம்சை போராட்டம்.

(தொடரும்)

நன்றி - https://www.pressenza.com/2019/09/comparative-political-leadership-gandhi-vs-contemporary-leaders/

முந்தைய பகுதி :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1 

Image Credit: e pustakalay


அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 3

$
0
0
 முந்தைய பகுதி :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 2



காந்தியின் அகிம்சை போராட்ட உத்தி

காந்திய அகிம்சையின் பொருள் என்ன?

காந்தி சொல்கிறார்: "நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறிதொரு உயிருக்கு தீங்கிழையாமையே அகிம்சை."தனி மனிதன், மானுடம், பிற உயிர்கள், யாவும் ஒன்றே: "மானுடத்தின் அடிப்படை ஒருமையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன், அதே போல், உயிரனைத்தும் ஒன்றே என்றும்."

பிரச்சினைகள் உள்ளார்ந்த கட்டமைப்பு சார்ந்தவை, மனிதர்களின் சாரத்தில் வெளிப்படுபவையல்ல என்று நம்பினார் காந்தி; சம்பந்தப்பட்டவர்களையும் பிரச்சினைக்குரிய விஷயங்களையும் அழிக்கலாம் என்றாலும் பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வு காண முடியாது என்று அவர் நம்பினார்; உயிரனைத்தும் புனிதமானவை என்பதில் அவர் சமய, அற நம்பிக்கை கொண்டிருந்தார்- இக்காரணங்களால் அவர் வன்முறையின்றி சிக்கல்களைத் தீர்க்க வழி தேடும் கட்டாயத்துக்கு உள்ளானார். மேலும், இங்கிலாந்தில் வக்கீல் படிப்பு முடித்து தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராய் பணியாற்றியிருந்தாலும் பிரச்சினைகளை சட்டபூர்வமாய் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் அவர் நிராகரித்து விட்டார் . பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மத்தியஸ்தம் செய்வதையே அவர் விரும்பினார்.

பிரிட்டிஷ் இம்பீரியலிசத்தையும் இந்திய சாதி அமைப்பையும் நெறிகளுக்கு உட்பட்டு தனி மனிதர்கள் தத்தம் பங்களிப்பை முறையே நிறைவு செய்வதால் நிலைத்து நிற்கும் அமைப்புகளின் உதாரணங்களாக கண்டார் காந்தி. தீய அமைப்பை அதன் அடுத்தடுத்த கண்ணிகளை அழித்துத் தகர்க்கும் அதே வேளை தனி மனிதர்களைப் பாதுகாக்கும் வகையில் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது காந்திய அணுகுமுறையின் சாரம். பிரச்சினைகளுக்கு முடிவே கிடையாது என்று அவர் கருதியதால், வருங்காலச் சமுதாயம் குறித்து அவர் மேற்கொண்ட விவாதங்கள் மோதல்களை எப்படி எதிர்கொள்வது, அமைப்பு வன்முறை இல்லாத புதிய சமுதாய உறவுகளை எப்படி உருவாகுவது என்பனவற்றையே முக்கியமெனக் கொண்டன.

அதை விட முக்கியமாக, பிரச்சினை நேர்மறைத்தன்மை கொண்டது, விரும்பத்தக்கது என்றும் கருதினார் காந்தி. மானுட ஒற்றுமை மேம்பட அது ஒரு முக்கியமான உபாயம். பேராசிரியர் ஜொஹான் கால்டுங்க் இதை விளக்குகிறார்: "பிரச்சினை இரு தரப்புகளையும் விலக்குவதற்கு மாறாய் அவர்களை ஒருங்கிணைக்கக்கூடும். ஏனெனில், அவர்களிடையே பொருந்தாமை எனும் பொதுக்கூறு உள்ளது."இதைவிட அடிப்படையான நம்பிக்கை ஒன்று காந்திக்கு இருந்தது- சமூக உறவின் கண்ணிகளைக் காட்டிலும் ஆழமான, அர்த்தம் பொதிந்த வேறொரு கண்ணி மனிதர்களை இணைக்கிறது என்று கருதிய காரணத்தால் அவர் மோதிக் கொள்ளும் இருவேறு தரப்பினரிடையே ஆழமான, கடப்புத்தன்மை கொண்ட மானுட ஒருமை நிலவும் உண்மையை நினைவுறுத்த பிரச்சினைகள் உதவும் என்று கருதினார் அவர்.

எனவே சிக்கல்களுக்கு தீர்வு என்ன? "சிக்கல்களின் முக்கோணம்"என்று கால்டுங் கருதுவதன் மூன்று மூலைகளுக்கும் தீர்வு அளிப்பதன் முக்கியத்துவத்தை காந்திய அணுகுமுறை ஏற்றுக் கொள்கிறது: மனப்பாங்கு, நடத்தை, நோக்கத்தின் பொருந்தாமை. பிரச்சினைகளுக்கான காந்திய தீர்வு முறை சத்யாகிரகம் என்று அழைக்கப்படுகிறது. அது, "ஓயாத மெய்த்தேடல், சத்தியத்தை அடைய வேண்டுமென்ற தீர்மானம்,"என்று பொருள்படுகிறது. இது எளிமையான வகையில், ஆனால் பரவலாக அறியப்பட்ட நடைமுறையில், 'அகிம்சைச் செயல்பாடு'அல்லது அது போன்ற வேறு பதங்களில் புரிந்து கொள்ளப்படுகிறது. வன்முறையைக் கையாள்பவன் தனக்கு உண்மை தெரியும் என்று நினைத்துக் கொள்கிறான், அதன் அடிப்படையில் வாழ்வா சாவா என்று தீர்மானிக்கிறான். ஆனால், முழு உண்மையை எவராலும் அறிந்து கொள்ள முடியாது என்ற ஒரே காரணத்தால் சத்தியாகிரகம் வன்முறையை நிராகரிக்க வேண்டும், என்பது காந்தியின் கருத்து. அறம் குறித்து தான் தகவமைத்துக் கொண்ட சிந்தனைக்கேற்ப அரசியல் மற்றும் தீர்வு  முறைமை கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள காந்தி மேற்கொள்ளும் முயற்சியே சத்தியாகிரகம்.

இக்காரணத்தால்தான் 'சத்தியாகிரகம் உத்தி முறைகள் அல்ல,'என்று சொல்லப்படுகிறது. மனப்பாங்கு மற்றும் நடத்தையை நெறிப்படுத்தும் அகிம்சை ஒழுக்கங்களிலிருந்து செயல்களைப் பிரிக்க முடியாது. எனவே, சத்தியாகிரகத்துக்கு உரிய மனப்பாங்கு மற்றும் நடத்தை எதிர்பார்ப்புகளைப புறக்கணித்து பருண்ம வன்முறையை மட்டும் தவிர்க்கும் செயலோ போராட்டமோ காந்திய அகிம்சை என்று அழைக்கப்பட முடியாது. எப்பெயரிட்டு அழைத்தாலும், 'அகிம்சைப் போராட்டம்'இந்த அடிப்படை ஒழுக்கங்களை நடைமுறையில் பயன்படுத்தத் தவறுவது பல போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் தோல்விகளுக்கு நேரடி காரணம் என்றும் சொல்லலாம்.

ஆனால் காந்தி அகிம்சை மட்டுமல்ல, உத்தியின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் தீர்க்கமான அரசியல் சிந்தனையாளர். உண்மை, நம்பிக்கை, வீரம் போன்ற இயல்புகளோ, கூட்டம் திரட்டும் ஆற்றலோ, பிரச்சினைகளைத் தீர்க்கப் போதுமானவை என்று நம்புமளவு வெகுளியல்ல அவர். உத்தியின் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தார்.

இதன் விளைவாய், உதாரணத்துக்கு, போராட்ட முறைமைகளினுள் விரும்பத்தக்க விளைவுகளை நிறுவும் வகையில் அகிம்சையைப் பயன்படுத்துவதற்கான சட்டகத்தை அவர் மேம்படுத்த முற்பட்டார். ""என்ன இருந்தாலும் வழிமுறைகள் வழிமுறைகள்தானே,"என்று சொல்கிறார்கள். "வழிமுறைகள்தான் எல்லாம்,"என்று நான் சொல்வேன். வழிமுறைகளுக்கு ஏற்பவே முடிவு அமையும்."

காந்தியின் சூழியல்

நாகரீகத்தின் பிரச்சினை முதலியத்தில் நிலவும் உற்பத்தி உறவுமுறைகளால் உருவானது என்கிறார் கார்ல் மார்க்ஸ். இது, தொழில்மயப்படுதலில் தோன்றும் பிரச்சினை  என்கிறார் காந்தி. தனிமனித தேவைகள் கட்டுக்கடங்காமல் வளர்வதால் ஊக்கமடைந்து ஆற்றல் மிகும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு தனி மனிதர்கள் தம்மைத் தாமே புதிதாய் படைத்துக் கொள்வது, அதைக் கொண்டு நியாயமான சமூக அமைப்பை உருவாக்குவது.

சமூக மறுமலர்ச்சி எவ்வளவு பொருள் செறிந்ததாய் இருப்பினும், தனி மனிதர்களின் மறுமலர்ச்சி இல்லாமல் அது போதுமானதாகவும் இருக்காது, நீண்டு நிலவுவதாகவும் இருக்காது என்று கூறுகிறார் காந்தி. "தீர்மானமாய், தன் விருப்பத் தேர்வால் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுதல்,"இந்த உத்திகளில் ஒன்றாகும். ஓரளவு சௌகரியமாய் வாழ்வதை காந்தி ஏற்றுக் கொள்கிறார், ஆனால் ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அவர் தெளிவாக வரையறுத்துக் கொள்கிறார். "பூமி ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவு செய்யுமளவு அளிக்கிறது, ஆனால் ஒவ்வொருவரின் பேராசைக்கும் அல்ல".

ஆனால் காந்தியின் உலகுநோக்கில் உள்ள எல்லாவற்றையும் போலவே, அவர் இந்த எளிய வாழ்வை வலியுறுத்துவதோடு நிற்கவில்லை- அவரே அப்படி வாழ்ந்தார், தன் கைத்தறி அணிந்தார், நாட்பட நாட்பட தன் சொந்த உடைமைகளைக் குறைத்துக் கொண்டார்.

(தொடரும்)

நன்றி - https://www.pressenza.com/2019/09/comparative-political-leadership-gandhi-vs-contemporary-leaders/

முந்தைய பகுதி :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 2

Image Credit: Mahatma Gandhi Forum

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 4

$
0
0
முந்தைய பகுதி :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1 

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 2

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 3 



சமகால அரசியல் தலைவர்கள்

சமகால தேசீய தலைவர்கள் பல்வகைப்பட்ட பாணிகளில் செயல்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு ஜயிர் போல்சோனாரு (பிரேசில்), சி ஜிபிங் (சீனா), இம்மானுவேல் மாகோம் (பிரான்சு) , விக்தோர் ஓர்பான் (ஹங்கேரி), நரேந்திர மோதி (இந்தியா), பின்யமின் நெடன்யாஹூ (இஸ்ரேல்), சின்சோ ஆபே (ஜப்பான்), விளாதிமிர் புதின் (ரஷ்யா), முகமது பின் சல்மான் (சவூதி அரேபியா), போரிஸ் ஜான்சன் (யுகே), மற்றும் டொனால்ட் ட்ரம்ப் (யுஎஸ்ஏ), போன்றவர்கள் கிட்டத்தட்ட அனைவரையும் பிரதிநிதிப்படுத்துகிறார்கள் என்று உடனே சொல்லிவிடலாம்.

இந்த தலைவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் என்ன சொன்னாலும் இவர்கள் சொல்வதையும் செய்வதையும் பார்க்கும்போது தனி மனிதனையோ மனசாட்சியையோ அடிப்படையாய்க் கொண்டு  தம் தேசீயச் சமூகங்களோ உலகளாவிய சமூகமோ எழுப்பப்பட வேண்டும் என்று யாரும் கருதுவதில்லை என்பது தெளிவு. மாறாய், தனித்தன்மையின் சாயல் அல்லது தனிமனித மனசாட்சியால் மிகக் குறைந்த அளவுக்கு மேல் சமூகத்தில் இடையூறு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஏதோ ஒரு வகையில் தனி மனிதர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

மேலும், சில தேசங்களில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது குறித்து வெளிப்படையான கோட்பாடுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றில், இதைச் செய்ய முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஏற்றத்தாழ்வுகள் நீங்கும் வகையில் தம் தேச அமைப்புகளையோ பொருளாதாரங்களையோ திருத்தியமைக்க யாரும் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்வதில்லை. மாறாய், வெகுச் சிலர் ஈட்டிய செல்வம் பெருமைப்படுத்தப்படுகிறது, சட்டப்படி பாதுகாக்கப்படுகிறது. தம்மைவிட வசதியில் குறைந்தவர்களுடன் ஒற்றுமை பாராட்டும் வகையில் யாரும் காதிக்கு நிகரான ஆடை எதுவும் தரிப்பதில்லை, அனைவரும் வாழத்தக்க, இயற்கைக்கு கேடு செய்யாத வாழ்வுமுறையின் முன்னுதாரணங்களாகவும் இருப்பதில்லை.

இந்த் ஒவ்வொரு சமூகத்திலும் பெண்கள், பூர்வகுடியினர், இன மற்றும் சமய சிறுபான்மையினர், குறிப்பிட்ட சாதியினர் அல்லது வர்க்கத்தினர், குறிப்பிட்ட பாலுணர்வு அல்லது அடையாளம் நோக்கிய ஈர்ப்பு கொண்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இத்தகைய மக்கள் மீது பரவலான ஒடுக்குமுறை தொடர்கிறது. இவர்களுக்கு எதிராய் நிகழ்த்தப்படும் பாகுபாட்டைப் போக்க செய்ய மிகக் குறைந்த முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது.

இவர்கள் யாருக்கும் சூழியல் சார்ந்த உலகுநோக்கு கிடையாது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிர நாட்டம் வெளிப்படும் வகையில் தேசீய கொள்கைகளும் கிடையாது, தானும் வாழ்ந்து காட்டிய , பிறரையும் அவ்வாறு வாழத் தூண்டிய காந்தியின் எளிய வாழ்வை இவர்கள் யாரும் வாழ்வதுமில்லை.

இவர்களில் ஒருவர்கூட சக மனிதர்களைக் கொலை செய்வது தமக்கு விருப்பமில்லாதது என்று காட்டிக்கொள்ள முடியாது- இவர்களின் தேசங்கள் ஒவ்வொன்றும், அதன் தலைவர்கள் ஒவ்வொருவரும், மிகப் பெரிய அளவில் தம் தேசீய வளங்களை ராணுவ வன்முறைக்கு செலவு செய்வதில் நிறைவடைகிறார்கள் - காந்தி வலியுறுத்திய அகிம்சைத் தற்காப்பு முறை சரியாக புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தப்படும்போது மிக உயர்ந்த உத்தியாய் இயங்கக்கூடியது, ஆனால் அதை தேர்ந்தெடுக்கும் சாத்தியத்தைகூட இவர்கள் யாரும் நினைத்துப் பார்ப்பதாயில்லை. "நான் எப்போதும் அகிம்சைத் தற்காப்பு முறையை அறிவுறுத்தி வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால் அதை வன்முறை தற்காப்பு போல் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் வேண்டும் என்பது புரிகிறது. அதற்கு வேறொரு பயிற்சி தேவைப்படுகிறது " (The Strategy of Nonviolent Defense: A Gandhian Approach).

இன்றைய அரசியல் தலைவர்கள் எவ்வளவு பாரபட்சத்துடன், அழிவாற்றல் கொண்ட, வன்முறை கொள்கைகளை பயன்படுத்து கிறார்கள் என்பதற்குச் சான்றாக, பல செய்திக் கட்டுரைகள் இருக்கின்றன. இது போக, இன்றைய அரசியல் தலைவர்கள் வன்முறையையும் சுரண்டலையும் எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்கள் என்பதற்கான மேலதிகச் சான்றுகளை எந்த ஒரு முற்போக்கு செய்தி ஊடகத்திலும் அறிந்து கொள்ளலாம்.

காந்தியின் உயர் தகுதிகளில் ஒரு சிலவற்றையேனும் கொண்ட சில தேசீய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்  என்பதையும் ஏற்பதும் முக்கியம். இச் சில தகுதிகள் கொண்ட சமூக தலைவர்களும் இருக்கிறார்கள். எனவேதான், இத்தனை சமூக இயக்கங்கள் வன்முறை, ஏற்றத்தாழ்வு, சுரண்டல், சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றை அவற்றின் பல்வகைப்பட்ட வடிவங்களில் அழிக்க உழைக்கின்றன.

காந்திய பார்வை நடைமுறையில் சாத்தியமா? அவர் கூறியது சரியா?

காந்தி ஒரு தரிசனவாதி என்பதை ஏற்றுக் கொண்டாலும், "அவரது பார்வை நடைமுறை சாத்தியம் கொண்டதா?"என்று கேட்கலாம். என்ன இருந்தாலும் நவீன அரசியல் தலைவர்கள் யாரையும் எளியவர்களாய் வாழ வேண்டும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும், பிரச்சினைகளை வன்முறையற்ற வழியில் கையாள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக, பெருநிறுவனங்கள் மிகவும்  சக்திவாய்ந்தவைகளாய் விளங்குகின்றன, இன்று அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.

ஆனால், "காந்திய பார்வை நடைமுறையில் சாத்தியமா?"என்ற கேள்வியே அபத்தம். மனிதர்கள் தம் அழிவின் விளிம்பில் நிற்கையில், "காந்தி சொல்வது சரியா?"என்ற கேள்விதான் இன்னும்பொருத்தமாக இருக்கும்.

அவர் கூறியது சரியென்றால், நாம் அவர் வழி நடக்க முயற்சி செய்ய வேண்டும். நம் முயற்சிகள் எவ்வளவு குறைபட்டவையாய் இருப்பினும் பிழையில்லை. அது போக, நம் முயற்சிகளை மேம்படுத்தவும் பாடுபட வேண்டும். ஏனெனில், காந்தி நமக்கு விட்டுச் சென்றவை இந்தியா, அல்லது உலகில், அவற்றுக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று யாரும் சொல்ல முடியாது.

(தொடரும்)

நன்றி - https://www.pressenza.com/2019/09/comparative-political-leadership-gandhi-vs-contemporary-leaders/

முந்தைய பகுதி :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1 

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 2

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 3

Image Credit: https://www.nationalheraldindia.com/india/mahatma-gandhi-wrote-to-convey-not-to-impress



அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 5

$
0
0
முந்தைய பகுதிகள் :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 2
.
அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 3

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும்  - ராபர்ட் பரோஸ் 4



காந்தியைவிட உயர்ந்து செல்ல முடியுமா?

நிச்சயம் முடியும். காந்தியே நாம் அதைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார்: "நாம் முன்னேற வேண்டுமென்றால், வரலாற்றை மீண்டும் வாழக் கூடாது, மாறாய் புதிய வரலாறு படைக்க வேண்டும். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற விழுதுகளில் நாம் வளம் சேர்க்க வேண்டும்."

காந்தியைவிட உயர வேண்டிய ஒரு முக்கியமான துறை வன்முறை சார்ந்தது. மானுட சமூகத்தில் வன்முறை நிலவ அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள பல பத்தாண்டு கால ஆய்வு இதற்கு உதவும்: குழந்தை வளர்ப்பு சரியாக இல்லை, கல்வி கற்பிக்கும் வகைமுறைகள் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முழுக்க மறைவாகவும் குழந்தைகள் மீதும் பதின்பருவத்தினர் மீதும் முடிவற்ற வன்முறையை பிரயோகிக்கிறது.

இக்காரணியை நாம் எதிர்கொண்டாக வேண்டும். அப்போதுதான் நம் குடும்பங்களிலும், குழுக்களிலும், சமூகங்களிலும் திகைக்க வைக்கும் வகையில் நிலவும் முடிவற்ற வன்முறை அத்தனை வடிவங்களிலும் அழிக்கப்படும், பிரச்சினைகளை அகிம்சை முறையில் அச்சமின்றி கையாளும் ஆற்றலை தனி மனிதர்கள் ஒவ்வொருவரும்  பெறுவார்கள்.

எனவே குழந்தைகள் அனைவருக்கும் கற்றுக்கொள்ளும் கலை பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுடன் இவ்வகையில் உரையாடும் முன் தம் உணர்வுகளை குணப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மானுட வன்முறைக்கு முடிவு காண குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி புகட்டும் வகைமுறைகளை முழுமையாய் சீர்திருத்த பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. இது ஒரு காரணம்- குழந்தை  உணர்வுகளைக் காயப்படுத்தும்போது அவர்கள் யதார்த்த உண்மையை எதிர்கொள்ளும் ஆற்றல் இழப்பதோடு அது குறித்து தம்மையறியாமல் அச்சத்தில் வாழ்கிறார்கள். அதாவது, அரசியல், ராணுவ, பொருளாதார, சமூக, சூழியல் சிக்கல்களை விட்டு திரிபுணர்வு கொண்டு பின்வாங்காதவர்களாய் அவர்கள் சக்திகரமான எதிர்வினையாற்ற முடியவில்லை. தொழில்மயமாகிவிட்ட தேசங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போது நிலவும் வளர்ப்பு மற்றும் பயிற்று முறைகளுக்கு சுய புத்தியில்லாமல் கீழ்ப்படியும் நுகர்வோராய் மாறி விட்டதை மேம்போக்கான பார்வையில்கூட காணலாம். அச்சமற்ற மனிதர்களை உருவாக்க வேண்டும் என்ற காந்தியின் விழைவுக்கு மிகத் தொலைவில் உள்ளது இது.

மேலும், தற்போதுள்ள வளர்ப்பு மற்றும் பயிற்று வகைகள் நிஜமாகவே சித்தம் பேதலித்த மனிதர்களை ஏராளமான அளவில் உருவாக்குகின்றன:  முன் சொன்ன அரசியல் தலைவர்களில் பலரை இது துல்லியமாக விவரிக்கிறது, ஆனால் அதைவிட, இந்த தலைவர்களை ஆட்டுவிப்பவர்கள் இத்தகையவர்களே.

இன்றைய வளர்ப்பு மற்றும் பயிற்று வகையில் தலைகீழ் மாற்றத்தைக் கோருவதற்கான மற்றொரு காரணம், மனசாட்சியுள்ள மனிதர்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் உருவாக வேண்டியது அவசியம். நம் அனைவருக்கும் பொதுவான  இருப்பு சார்ந்த பிரச்சினைகளை அவர்கள்தான் சுயமாய்ச் சிந்தித்து, திட்டமிட்டு, உத்தி வகுத்து எதிர்கொள்ள முடியும். மிகச் சிலருக்கே இந்த ஆற்றல் உள்ளது. இதனால் பெரும்பாலான களப்பணிகள், அதிலும் மானுட இருப்புக்கு முக்கியமான விஷயங்கள் தொடர்புடைய களப்பணிகள், அவற்றுக்குரிய அணுகுமுறை இல்லாமல் தோற்கின்றன.

வளர்ப்பு மற்றும் பயிற்றுவிப்பு அணுகுமுறைகளின் வடிவை மாற்ற வேண்டும் என்பதற்கு நான்காம் காரணம் இது - காந்தியும் கால்டுங்கும் விவாதித்திராத 'சமர்ச் சதுக்கத்தின்'ஒரு மூலைக்கு திறப்பு கிடைக்கும். உணர்வுகள், குறிப்பாய் அச்சம், அத்தனை பிரச்சினைகளையும் வடிவமைக்கிறது, நிலைக்கச் செய்கிறது ('சமர்ச்சதுக்கத்தின்'மற்ற மூன்று மூலைகள் இவை - மனப்பாங்கு, நடத்தை, பொருந்தா இலட்சியங்கள்). எந்த ஒரு பிரச்சினையிலும் அச்சமும் அடக்கப்பட்ட பிற உணர்ச்சிகளும் முக்கியமானவை. அதற்கு தீர்வு காண இவற்றுக்குச் செவி சாய்க்க வேண்டியது அவசியம். ஆனால்,அதைவிட அடிப்படை உண்மை, அச்சமும் அத்தகைய பிற உணர்வுகளும் துவக்கத்திலேயே இல்லையெனில் பிரச்சினைகள் தோன்றவும் உறைநிலை அடையவும் சாத்தியம் மிகக் குறையும். பிரச்சினை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதற்கு தீர்வு காணும் முறை அல்லது அதன் தீர்வு குறித்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அச்சமற்றவர்களாய் இருந்தால் எப்படிப்பட்ட சிக்கலையும் எவ்வளவு சுலபமாக கையாள முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நாம் அளவுக்கு மீறி புவியின் வளங்களைச் சுரண்டுவது அதன் உயிரிவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இது நீண்ட காலம் நீடிக்க முடியாது, புவியின் வளங்களுக்கும் ஓர் எல்லையுண்டு என்ற காந்தியின் புரிதல் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், அவரை முன்னோடியாய்க் கொண்டு துவக்கப்பட்ட திட்டத்தில் இணையலாம். அல்லது, அகிம்சை உலகம் உருவாக்க மனிதர்களாகிய நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம். இது எதுவும் ஏற்புடையதாக இல்லை, இவை சிக்கலாக இருக்கின்றன என்று நினைத்தால், கீழுள்ள உறுதிமொழிகளை நீங்களும் எடுத்துக் கொள்ளலாம்-

புவி காக்கும் உறுதிமொழி

புவி மீதும் அதன் உயிர்கள் அனைத்தின் மீதும் உள்ள அன்பினாலும் அவற்றின் தேவைகளின் மீதுள்ள மதிப்பாலும் இன்று முதல் நான் இதைச் செய்வதாக பிரதிக்ஞை எடுத்துக் கொள்கிறேன்-

குழந்தைகள் சொல்வதை ஆழ்ந்து கவனிக்கிறேன்.
விமான பயணம் செய்ய மாட்டேன்.
கார் பயணம் செய்ய மாட்டேன்.
புலாலும் மீனும் உண்ண மாட்டேன்.
இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட உணவே உட்கொள்ளுவேன்.
நான் பயன்படுத்தும் குடிநீரை குறைத்துக் கொள்வேன்.
மின்னணுச் சாதனங்கள் பயன்படுத்துவதையும் அவற்றை வாங்கி வைத்துக் கொள்வதையும் குறைத்துக் கொள்வேன்.
மழைக்காடுகளின் மரச்சாமான்கள் வாங்க மாட்டேன்.
பைகள், பாட்டில்கள், கொள்கலன்கள், கப்கள், ஸ்ட்ராக்கள் போன்றவற்றில் ஒரு முறை பயன்படுத்திக் கழியும் நெகிழிகளைப் பயன்படுத்த மாட்டேன்.
நிலத்தடி எரிபொருட்கள், அணு ஆற்றல், ஆயுதங்கள் இவற்றில் முதலீடு செய்யும் அல்லது இவற்றுக்கு ஆலோசனை வழங்கும்  வங்கிகள், ஓய்வூதிய நிதியங்கள், உயிர்காப்புத்திட்ட நிறுவனங்களை பயன்படுத்த மாட்டேன்.
சக மனிதர்களைச் சுரண்டுவதிலோ உயிரிவட்டத்தை அழித்து அடையும் லாபத்திலோ பங்கேற்றால், அல்லது ஆதரித்தால், அந்த அமைப்புகளில் முதலீடு செய்ய மாட்டேன், பணியாற்ற மாட்டேன்.
பெருநிறுவன ஊடகங்கள் அளிக்கும் செய்திகளைப் பெற மாட்டேன் (மையநீரோட்ட செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர்...).
உணவுத் தோட்டம் இடுவது, தையல் போன்ற தன்னிறைவு அளிக்கும் கலையொன்று கற்றுக் கொள்வேன்.
இந்த பிரதிக்ஞையை ஏற்றுக் கொள்ளும்படி என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மென்மையாய் வலியுறுத்துவேன்.

மனித இனம் உயிர்வாழும் சாத்தியங்கள் இன்று மிகவும் குறைந்து வருகின்றன. மானுடம் மீண்டும் சரியான பாதையைக் கண்டடையுமா? காந்தி நன்னம்பிக்கை கொண்டவராகவே இருப்பார்: "தம் நோக்கத்தில் வற்றாத நம்பிக்கை கொண்டு உத்வேகத்துடன் இயங்கும் உறுதி கொண்டவர்கள் ஒரு சிலர் இருப்பினும் சரித்திரத்தின் போக்கை அவர்கள் மாற்றக்கூடும்"

அத்தகைய உறுதி கொண்ட மனிதர்களில் நீங்களும் ஒருவரா?

நன்றி - https://www.pressenza.com/2019/09/comparative-political-leadership-gandhi-vs-contemporary-leaders/

முந்தைய பகுதிகள் :

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 1

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 2
.
அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும் - ராபர்ட் பரோஸ் 3

அரசியல் தலைமை ஒப்பீடு - காந்தியும் சமகால தலைவர்களும்  - ராபர்ட் பரோஸ் 4



Image Credit: The Hindu



சமகாலத்துகுரிய நீதிக்கதையொன்று - ரஜ்னி பக்ஷி

$
0
0


இந்திய பன்னாட்டு பெருநிறுவனங்களில் ஒன்று மஹிந்த்ரா குழுமம். அதன் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா ஒரு முறை கோவா அருகில் எங்கோ ஒரு கிராமத்தில் தான் கேள்விப்பட்ட கதையொன்று சொன்னார். மிகச்சுவையான தர்ப்பூசணிப் பழங்களுக்கு பேர் போன அந்த கிராமத்தில் ஒரு வழக்கமுண்டு. அங்குள்ள குழந்தைகள் எத்தனை தர்ப்பூசணிகள் வேண்டுமானால் சாப்பிடலாம், காசு கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், மிகவும் சுவையான தர்ப்பூசணிகளின் விதைகளை தனியாய் எடுத்து, அந்த தர்ப்பூசணி பயிர் செய்த விவசாயியிடம் கொடுத்து விட வேண்டும். பின், குழந்தைகள் மிகவும் தித்திப்பானவை, சாறுள்ளவை, என்று கண்ட  விதைகளை மட்டும் விவசாயி தன் நிலத்தில் விதைப்பார்.

அந்த கிராமத்தில் உள்ள ஒரு சிலர் தம் தர்ப்பூசணிகள் மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விலைக்குப் போகும் என்பதால் குழந்தைகளுக்கு அத்தனை பழங்களை இலவசமாய்க் கொடுத்து "வீணடிக்க"வேண்டாம் என்று முடிவெடுத்தனர். காலப்போக்கில் விலை வைக்காமல் குழந்தைகளுக்கு தர்ப்பூசணி கொடுக்கும் வழக்கம் குறையவும், தர்ப்பூசணிகளின் தரமும் குறைந்தது. சிறிது காலத்தில் அந்தப் பகுதியிலேயே சிறந்த தர்ப்பூசணிகள் பயிர் செய்யும் கிராமம் என்ற பெருமையையும் அது இழந்தது.

எது விலைமதிப்பில்லாதது என்பதன் மீது கவனம் குவிப்பதுதான் காந்தியின் தரிசனங்களில் மிகவும் அவசியமானது. இங்கே விலைமதிப்பில்லாதது என்று சொல்லும்போது, எடை போட முடியாத வகையில் மிக அபூர்வமானதும் அதிக விலை கொண்டதுமான 'பொருளை'சொல்லவில்லை. எல்லா சந்தைகளுக்கும் வெளியே எது வைக்கப்பட்டிருக்கிறதோ, எதைப் பண்டமாக்க முடியாதோ, எதை தேவை மற்றும் இருப்பின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுத்த முடியாதோ அதுவே விலைமதிப்பில்லாதது என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில பத்தாண்டுகளாக சூழமைவுகள் (ecosystems) மீது விலை விதிக்க மிகப் பெரிய பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  சூழமைவுகளின் சேவைகளை பொருளாதார அமைப்பு அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய எண் அளவைகளில் விவரிப்பது அவற்றைக் காக்க உதவலாம் என்று நம்புகிறார்கள். அதே சமயம், பொருளாதார துறையினர் புரிந்து கொள்ளக்கூடிய சட்டகத்தினுள் இயற்கையின் கதையாடலைப் பொருத்துவதால் மட்டும் அடுத்தடுத்து வீழும் சுற்றுச்சூழல் அழிவுகளை எதிர்கொள்ள முடியாது என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது.

எனவே, பதில்களுக்கான தேடலில் காந்தி மிகவும் முக்கியமானவராகிறார்.

இதில் முரண்நகை, இந்த 2019ஆம் ஆண்டில், காந்தி சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும் என்று பலர் கேட்கிறார்கள். என்ன இருந்தாலும், சுதந்திரத்துக்குப் பின் இந்தியா காந்திய பாதையில் பயணிக்கவில்லை என்பதற்கு நன்றி கூற வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் இவர்கள். காந்திய பாதையில் சென்றிருந்தால் நாமெல்லாரும் சர்க்கா சுற்றிக் கொண்டிருக்க வேண்டும், இரண்டு அல்லது மூன்று ஜோடி உடுப்புகள் மட்டும் வைத்திருக்க வேண்டும், லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் இரவைக் கழிக்க வேண்டும், என்று இதுபோல் பலதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காந்திய எளிமை என்றால் கஷ்டப்பட வேண்டும் என்று தவறாய் புரிந்து கொள்ளப்படுகிறது. அதே சமயம், முன்னேற்றம் என்பது மேலும் மேலும் தேவைகளை வளர்த்துக் கொண்டு அவற்றை அடைவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நம்பப்படுகிறது. இதனால், மகாராஷ்டிரத்தில் உள்ள சேவாகிராமத்தில் காந்தியின் புகழ்பெற்ற மண் குடிசையைக் காண்பவர்கள், அங்குள்ள சிறு அறைகளில் ஒன்றில் மசாஜ் டேபிள் ஒன்று இருப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறார்கள்- காந்தியின் நேச்சுரோபதி அடிப்படை வாழ்வுமுறையின் ஆதார கூறுகளில் ஒன்று அது. அங்கு ஒரு டெலிஃபோன் பூத்தும் இருக்கிறது. தொலைபேசிகள் அபூர்வ வசதிகளில் ஒன்றாய் இருந்த காலத்தில் நிறுவப்பட்டது அது.

எனினும், இன்று மானுட எதிர்காலத்துக்கு காந்தி முக்கியமானவர் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வுமுறையைக் கொண்டல்ல. "நிலையான வளர்ச்சி" (sustainable development) என்ற பதம் தோன்றுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே சுற்றுச்சூழல் பிரச்சினையை காந்தியால் எப்படி முன்னறிய முடிந்தது என்பதை புரிந்து கொள்வதே அதைக் காட்டிலும் முக்கியம்.

இதற்கு ஒரு முதன்மை காரணம், அவரது கணக்குகள் அடிப்படை கொள்கைகளைக் கொண்டு கணிக்கப்பட்டவை, பொருளாதார தரவாதாதாரங்கள் கூடுதல் பயன் அளிப்பதோடு சரி.  இக்கோளை நவீன தொழிலமைப்பும் நுகர்வுப் போக்கும் வெட்டுக்கிளி கூட்டம் போல் மொட்டையடித்துவிடும் என்று அவரால் சரியாகவே ஊகிக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம், தீர்மானிக்கப்பட்ட இலக்கு அடையப்பட்டால் போதும், அதையடையும் வழிமுறைகளைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை  என்ற அடிப்படையில் நவீன தொழிலமைப்பு பேருருவம் பூண்டு எழுந்து நிற்பதைக் கண்டார்.

உதாரணத்துக்கு, தர்ப்பூசணி கதையை எடுத்துக் கொள்வோம். அந்த கிராமத்தின் குழந்தைகள் விருப்பப்பட்ட எத்தனை தர்ப்பூசணிகள் வேண்டுமானாலும் இலவசமாய் வாங்கித் தின்னலாம் என்ற உள்ளார்ந்த மகிழ்ச்சி "வழிமுறைகள்"என்ற கணக்கில் இருந்தவரை நீடித்த வளம் கொழித்தது. வழிமுறையை மாற்றியபோது அது குறுகிய காலத்தில் பண லாபம் ஈட்டித் தந்தது. ஆனால் முடிவில் தர்ப்பூசணியின் தரத்தையும் கிராமத்தினரின் மகிழ்ச்சியையும் குறைத்து விட்டது.

புத்திசாலித்தனமான கருவிகள், தொழில்நுட்பம், சௌகரியம் ஆகியவற்றுடன் நாகரீகத்தை இணை கொண்டால் நாம் அழிந்து போவோம் என்று காந்தியை வலியுறுத்தச் செய்தது, அவர் வழிமுறைகளுக்கு முதன்மை முக்கியத்துவம் அளித்த காரணத்தால்தான். மாறாய், எது கடமையின் பாதையையோ குறிக்கோள் உள்ள வாழ்க்கையின் பாதையையோ காட்டுகிறதோ, அது மட்டுமே நாகரீகம் என்று கொண்டார் காந்தி. குறிக்கோள் உள்ள வாழ்வில் கவனம் செலுத்துவது காந்திக்கு விலைமதிப்பில்லாத விஷயம். இதையே பல்வகைப்பட்ட இந்து மரபுகளும் புருஷார்த்தம் என்று அழைக்கின்றன. எல்லையற்ற தேவைகளை வளர்த்துக் கொள்வதை "பைத்தியக்கார அவசரம்"என்று அழைத்தார், அதுவே இதன் எதிரிடை.

இந்தப் புரிதலை விரிவாக விவரித்து முன்னேற்றம் வேறு, நாகரீகம் வேறு என்று தெளிவாய்ப் பிரித்துக் காட்டியவர் ரபிந்த்ரநாத் தாகூர்.
 "அக ஆதர்சத்துடன் தொடர்புடையதாய் அல்லாமல், புற வசீகரத்தை நோக்கிய முன்னேற்றம் முடிவற்ற நம் கோரிக்கைகளை நிறைவு செய்ய விழைகிறது. ஆனால் ஓர் ஆதர்சத்தை நாகரீகமாய்க் கொள்ளும்போது அது நம் கடமைகளை நிறைவேற்றும் ஆற்றலையும் களிப்பையும் நமக்கு அளிக்கிறது," 
என்று 1924ஆம் ஆண்டு சீனாவில் ஓர் உரையில் கூறினார் தாகூர்.

கட்டமைப்பை எழுப்பலாம், அல்லது இயற்கையின் பிற சூழமைவுகளுக்கு இணக்கமாக மானுட தேவைகளும் விளங்கும் பொருளாதாரத்தை உருவாக்கலாம். யுஎஸ்ஏவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வி பெற்ற சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஜே.சி. குமரப்பா முழுநேர சத்தியாகிரகியாக மாறியவர். 1940களின் துவக்க ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தபோது அவர் எழுதிய 'An Economy of Permanence'என்ற நூல் பெரும் தாக்கம் கொண்டது.

கூர்ந்து நோக்கும்போது,
"... இயற்கை தன் அங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொள்கிறது, அவை ஒன்றுடனொன்று ஒத்துழைப்பதை உறுதி செய்து கொள்கிறது,"
 என்பதைக் காணலாம் என்று எழுதினார் குமரப்பா,
"ஒவ்வொன்றும் தனக்கென இயங்குகின்றது, அவ்வாறு இயங்கும்போதே பிற அங்கங்கள் தம் பணியை நிறைவு செய்து கொள்ளவும் உதவுகின்றது- இடம் பெயர்பவை நிலைத்து நிற்பனவற்றுக்கும், உணர்வுள்ளவை உணர்வற்றவைக்கும் உதவி செய்கின்றன. இவ்வகையில் இயற்கையனைத்தும் ஒரே பொது இயக்கத்தில் ஒன்றெனக் கூடுகின்றன."

தர்ப்பூசணிகளின் கதை சித்தரிப்பது போல், இயற்கை ஒரு பண்டம் அல்லது தொட்டுவிடக்கூடாத வழிபாட்டுக்குரிய பிரதிமை என்ற இருமைத் தேர்வல்ல நம் முன் நிற்பது.  இறுக்கமான எதிர்காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம், இந்தப் பயணத்தில் பாதை வகுத்துக் கொடுக்க 'காந்தியம்'என்ற கோட்பாடு எதுவும் கிடையாது.

காந்தியின் எண்ணங்களிலும் செயல்களிலும் நம்பிக்கை கொள்ள நமக்கிருப்பது, எது உண்மையில் முக்கியம் என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்ற சில அடிப்படை தரிசனங்கள்தாம். எல்லாவற்றுக்கும் மேல், விலைமதிப்பில்லாத விழுமியங்கள் விஷயத்தில் கவனமாய் இருக்கச் செய்கிறார் அவர். அது போக, இந்த விழுமியங்களை வளர்த்தெடுக்கும் உறுதி நமக்கு உண்டா, அல்லது அலட்சியப்படுத்தி அவற்றை நசிக்கப் போகிறோமா என்ற கேள்வியையும் நாம் எழுப்பிக் கொள்ளச் செய்கிறார் காந்தி.

Image Credit : Amazon

நன்றி: https://www.downtoearth.org.in/blog/lifestyle/gandhi-at-150-a-contemporary-fable-66995

அமெரிக்க குடிமை உரிமைகள் இயக்கத்தில் காந்திய சிந்தனைகளின் தாக்கம்- வினய் லால்

$
0
0


அமெரிக்க குடிமை உரிமைகள் இயக்கத்தின் பொதுமுகமாய் வெகு காலமாகவே மார்டின் லூதர் கிங் ஜூனியர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். நவீன காலத்தில் அவர் காந்தியுடனும் நெல்சன் மண்டேலாவுடனும் இணைத்துப் பேசப்படுகிறார், இவர்கள்  "அகிம்சையின் தீர்க்கதரிசிகள்"என்று சொல்லத்தக்க மூவர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இப்படியொரு வம்சாவளியைச் சொல்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் (ஏஎன்சி) அமைப்பின் ஆயுதப் பிரிவான 'Umkhonto we Sizwe'என்ற அணியை உருவாக்கியவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா காந்தியுடன் இணக்கமும் பிணக்கமும் கூடிய உறவு கொண்டவர், பொதுவாய், அகிம்சை குறித்த கேள்விக்கு முழுக்க முழுக்க இணக்கமான எண்ணம் கொண்டவர் என்று சொல்ல முடியாது.  "வெள்ளையின ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையின்றி ஆப்பிரிக்க மக்கள் வெற்றி பெற ஒரு வாய்ப்பும் இல்லை என்பதை உணர்ந்தோம்,"  என்று ஏஎன்சியின் ஆயுதப் பிரிவு கொள்கை அறிக்கையில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு மண்டேலாவே முதன்மை பொறுப்பு ஏற்கத்தக்கவர். ஆனால் இது குறித்து சொல்லக்கூடிய எதுவும் இனவாத ஆட்சியை வடிவமைத்தவர்கள் மற்றும் தம் மக்களை வதைத்தவர்களுக்கு எதிராய் வஞ்சம் தீர்ப்பதில்லை என்ற மண்டேலாவின் மிக உயர்ந்த உறுதியின் சிறப்பைக் குறைத்துக் கூறுவதில்லை. அது உண்மையாகவே அவரது வாழ்வில் காந்திய கட்டத்தைக் குறிக்கிறது.

அமெரிக்க குடியுரிமைகள் இயக்கத்தை எடுத்துக் கொண்டால், அதன் சித்திரம் வெவ்வேறு காரணங்களால் சிக்கலான தோற்றம் தருகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஐம்பதாண்டு காலமமாக காந்தியை எதிர்கொண்டதன் வால்முனையில்தான் கிங் வருகிறார். அசாதாரண கருப்பர் அறிவுஜீவி டபிள்யூஈபி டு ப்வா (WEB Du Bois) 1920ஆம் ஆண்டு முதன்முதலில் "நீக்ரோ காந்தி"தோன்ற வேண்டும் என்ற அறைகூவல் விடுத்தார். இரு தலைமுறை கறுப்பர் எழுத்தாளர்கள், சமயச் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் மிகத் தீவிரமாக இயங்கிய ஆப்பிரிக்க-அமெரிக்க பத்திரிக்கைகளின் கணிசமான பிரிவினர் இந்த அழைப்பை எதிரொலித்தனர். 'நிற இனங்களின்'போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல 'தி க்ரைசிஸ்'என்ற தன் பத்திரிக்கையின் பக்கங்களை டு ப்வா பயன்படுத்திக் கொண்டார். நாற்பதாண்டுகளுக்கும் மேல் நீண்ட காலகட்டத்தில் காந்தியைப் பற்றி அவர் கிட்டத்தட்ட 20 கட்டுரைகள் எழுதி இனவாதத்துக்கு முடிவு கண்டு, இன்னும் நியாயமான, சமத்துவ உலகை உருவாக்கும் காலனிய எதிர்ப்பு போராட்டத்தின் மாபெரும் நம்பிக்கையாகவும்  முன்னோடி தலைவராகவும் காந்தியை முன்னிறுத்தினார்.

யுனைட்டட் ஸ்டேட்ஸ்சில் காந்திய பெருந்திரள் போராட்டங்கள் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் டு ப்வாவுக்கு இல்லாமலில்லை: உதாரணத்துக்கு, 1943ஆம் ஆண்டு ஹார்லம் ஆசிரமத்தின் ரால்ப் டெம்ப்ளினுடன் அவர் நிகழ்த்திய விவாதத்தைப் பார்க்கலாம். நோன்பிருத்தல், பிரார்த்தனை, தியாகம் ஆகியவை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக "இந்தியர்களின் எலும்போடு எலும்பென வளர்க்கப்பட்டிருக்கிறது,"என்று வாதிட்டார் டு ப்வா, ஆனால் யுஎஸ்சில் உள்ள மக்களில் பெரும் எண்ணிக்கை அரசியல் போராட்டத்துக்காக இவற்றை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் இல்லை என்றார் அவர். எனினும், 1956ஆம் ஆண்டு நிகழ்ந்த மாண்ட்காமரி பஸ் புறக்கணிப்புக்குப் பின் ஓராண்டு சென்றதும் டு ப்வா 'காந்தியும் அமெரிக்க நீக்ரோக்களும்'என்ற தலைப்பில் இன்னும் விரிவான கட்டுரையொன்று எழுதினார். அப்போது, "யுனைட்டட் ஸ்டேட்ஸ்சில் உண்மையான மானுட சமத்துவமும் சகோதரத்துவமும் இன்னொரு காந்தியின் தலைமையில் மட்டுமே உருவாகும்,"என்ற தன் நம்பிக்கையை வலியுறுத்தி கட்டுரையை முடிக்கிறார் அவர்.

காந்தியுடன் உரையாடிய வேறு பல ஆப்பிரிக்க-அமெரிக்கச் சிந்தனைகளையும் அடையாளம் காண முடியும். 1921ஆம் ஆண்டு யுனைட்டேரிய கிறித்தவ அமைப்பு போதகர் ஜான் ஹெய்ன்ஸ் ஹோம்ஸ் என்ற வெள்ளையர், "இன்றைய உலகின் மகத்தான மனிதர் யார்?"என்ற தலைப்பில் நியூ யார்க்கில் உள்ள யுனைட்டேரிய கிறித்தவச் சமூக தேவாலயத்தின் பிரசங்க மேடையில் நின்று உபதேச உரையாற்றினார். அந்த உரை, பிற்காலத்தில் காந்தி "ப்ரௌன் கிறித்து"என்று கருதப்படுவதற்கான தொனி அமைத்துக் கொடுத்தது. அதன்பின் வந்த பெஞ்சமின் மெய்ஸ், ஹவார்ட் தர்மன், மொர்டிகாய் ஜான்சன் போன்ற கருப்பு இறைச் சிந்தனையாளர்கள் இந்த கணிப்பை வழிமொழிந்தார்கள். இரண்டாவதாக, அமெரிக்க தெற்கில் உள்ள தம் மக்களின் நிலை காலனிய ஆட்சியில் உள்ள இந்தியர்களின் நிலைக்கு ஒப்பானது என்ற கூர்மையான அவதானிப்பு கருப்பு சிந்தனையாளர்களிடையே இருந்தது. இந்திய சமூக அமைப்புகளில் உள்ளது போலவே நுட்பமாய் தீங்கிழைக்கும் தன்மை கொண்ட 'சாதி'படிநிலை அடிமையமைப்பின் பின்னும் உள்ளது என்று அவர்கள் கருத்து கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திட்டமிட்டே இந்தியர்களை வீரியமிழக்கச் செய்தனர் என்று காந்தி கண்டித்தது போலவே, அடிமைத்தனம் எவ்வகையில் கறுப்பின மக்களை ஆண்மை இழக்கச் செய்கிறது என்பதை கருப்பு தலைவர்கள் தொடர்ந்து விவரித்தனர். மூன்றாவதாக, வலியவர்களின் அகிம்சைக்கும் எளியவர்களின் அகிம்சைக்கும் இடையில் காந்தி கண்ட வேறுபாடு கருப்பு தலைவர்களை மிகவும் கவர்ந்தது.

உள்ளூர் சூழ்நிலைகள், கருப்பு மக்களின் சரித்திரம், இந்தியர்கள் தம் தேசத்தில் பெரும்பான்மையினராக இருப்பதும் கருப்பர்கள் தம் தேசத்தில் சிறுபான்மையினராய் இருப்பதுமாகிய நிலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் போராட்ட உத்திகள் வடிவமைத்து இந்தச் சிந்தனைகளை மெய்ப்பித்த மேதைமை  'குடிமை உரிமைகள் இயக்கம்'என்று சொல்லப்படுவதன் தலைமைக்கு இருந்தது. காந்தியின் சிந்தனைகள் எப்படி கைக்கொள்ளப்பட்டன என்பதை நினைக்கும்போது மனதில் ஏராளமான பெயர்கள் தோன்றுகின்றன என்றாலும் ஒரு சித்திரத்தை அளிக்கும் நோக்கத்தில் நாம் பாலி மர்ரேவையும் ரெவரண்ட் ஜேம்ஸ் லாசனையும் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இனப்பிரிவினை சட்டங்களை மீறிய குற்றத்துக்காக வர்ஜினியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வெளியே 1940ஆம் ஆண்டு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்ட இரு கருப்பு பெண்மணிகளில் மர்ரே ஒருவர். மர்ரேவே கூறுவதுபோல், அவருக்கு சத்தியாகிரகம் பற்றி "அங்கொன்றும் இங்கொன்றுமாகதான்"தெரிந்திருந்தது, இருந்தாலும், "சத்தியாகிரகம் பற்றி என்ன தெரிந்திருந்ததோ அதை அந்த இடத்திலேயே"அவர்கள் "செயல்படுத்தினார்கள்".

குடிமை உரிமைகள் இயக்கத்தின் உத்திகளை வடிவமைப்பவர்களில் பிரதான ஆளுமைகளில் ஒருவரான லாசன், ஆப்பிரிக்க-அமெரிக்க மெதடிஸ்ட் சர்ச்சைச் சேர்ந்தவர். அரசியல் களத்தில் காந்தியின் சிந்தனைகள் பயன்படுத்தப்பட அவரே காரணம். மெதடிஸ்ட் கிறித்தவ மதப் பிரசாரகராக 1953 முதல் 1956 வரை நாக்பூரில் வாழ்ந்த காலத்தில் அவர் சத்தியாகிரகம் குறித்து ஆழ்ந்து வாசித்து அறிந்து கொண்டார். யுஎஸ் திரும்பியவுடன் கிங்கின் அழைப்பை ஏற்று அவருடன் இணைந்தார். ஜிம் க்ரோ தெற்கில் முதல் அகிம்சை பயிலரங்கத்தை லாசன் டென்னஸ்ஸியில் உள்ள நாஷ்வில்லில் நிறுவினார். நாஷ்வில்லில் உள்ள உணவகங்களில் நிறவேறுபாட்டைக் களைய வேண்டுமென்று முடிவு செய்தார் லாசன். எனவே, அதற்கு ஆயத்தமாக 1958ஆம் ஆண்டு செப்டம்பர மாதம் தன்னைச் சுற்றி மாணவர்களைத் திரட்டினார். அவர்களில் சிலர், ஜான் லூயிஸ், டயேன் நாஷ், ஜேம்ஸ் பெவல்,  பெர்னார்ட் லஃபயெத், மரியோன் பாரி, அனைவரும் பிற்காலத்தின் இந்த இயக்கத்தின் ஒளிமுகங்கள் எனப் பிரகாசித்தவர்கள். அகிம்சை குடிமைச் செயல்பாடு மற்றும் போராட்டம் செய்வதற்கான பயிற்சியை லாசன் இம்மாணவர்களுக்கு ஓராண்டு காலம் அளித்தார்.  அவரது சீடர்களில் மிகவும் கொண்டாடப்படுபவரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜான் லூயிஸ் செல்மா முதல் மாண்ட்கோமரி வரை பாதயாத்திரை செய்த கிங்குடன் பங்கேற்றவர். லாசனின் பயிலரங்கில் என்ன நடந்தது என்பதை அவர் தன் சரிதையில் விவரிக்கிறார்: "அகிம்சை முதல் அகிம்சை வழி ஒத்துழையாமை போராட்டம், செயலூக்கமிக்க சமர்மறுப்பின் அடித்தளமாகிய, 'சத்தியத்தில் உறுதி'என்று பொருள்படும் சத்தியாகிரகம் வரை- காந்தியின் அடிப்படை கொள்கைகளின் ஒவ்வொரு கூறுகள்  பற்றியும் உரையாடினோம், விவாதித்தோம்."

வெள்ளை பெண்மணிகள் உட்பட சாமானிய அமெரிக்கர்கள் இந்த இயக்கத்துக்கு அளித்த பங்களிப்பு அபூர்வமாகவே அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், இக்கதையாடலில் அவர்கள் குரல்களையும் நினைவுகூர வேண்டும். மாண்ட்காமரி பொதுநூலகத் துறையில் நூலகராய் பணியாற்றிய ஜூலியட் ஹாம்ப்டன் மார்கன் அந்நகர பேருந்துகளில் கருப்பு பயணிகள் மிக மோசமாக நடத்தப்பட்டதைக் கண்டார். நகரத்தின் நிறப்பாகுபாட்டு விதிமுறைகளுக்கு எதிரான தன் சீற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் பத்திரிக்கைகளுக்கு தொடர்ந்து கடிதம் எழுதினார். பேருந்தின் பின்னிருக்கைகளில் அமர மறுத்த குற்றத்துக்காக டிசம்பர் 1, 1955 அன்று ரோசா பார்க்ஸ் கைது செய்யப்பட்டு பதினொரு நாட்கள் சென்றபின் 'மாண்ட்காமரி அட்வர்டைசர்'என்ற பத்திரிக்கையில் மார்கனின் கடிதம் பதிப்பிக்கப்பட்டது. அமெரிக்க மக்கள் கிங்கை கவனிக்கச் செய்த பேருந்து புறக்கணிப்பை தண்டி பாதயாத்திரையுடன் ஒப்பிட்டு மார்கன், "மாண்ட்காமரியின் நீக்ரோக்கள் காந்தி அளித்த பாடத்தைக் கற்றுக் கொண்டுவிட்டனர்... எனினும், காந்தியின் இலட்சியத்தைக் காட்டிலும் இவர்களுடைய இலட்சியம் பெரிது- ஏனெனில், காந்தி எதிர்கொள்ளும் காழ்ப்பைக் காட்டிலும் பெரிய காழ்ப்பை இவர்கள் வென்றாக வேண்டும்."

இது மாண்ட்காமரியின் வெண்ணிறத்தவர் பலரிடையே அவருக்கு அவப்பெயர் பெற்றுத் தந்தது.  ஜனவரி 1957ல் 'டஸ்கலூக்கா நியூஸ்'பத்திரிக்கையின் ஆசிரியர் புஃபோர்ட் பூன் மாண்ட்காமரிக்கு வருகை தந்து  கருப்பு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராய் நிலவும் இனவெறியையும் நிகழ்த்தப்படும் வன்முறையையும் கண்டித்து காட்டமான உரையாற்றினார். இதைப் பாராட்டும் வகையில் மார்கன் கடிதம் எழுதினார். "நம் தெற்கத்திய வாழ்வுமுறை மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. நல்லெண்ணம் கொண்ட, அதைவிட முக்கியமாக, அதை வெளிப்படுத்தும் அறத்தீரம் கொண்ட வெள்ளை ஆண்கள் யாரேனும் இந்த மாநிலத்தில் இருப்பார்களா என்றே எனக்கு ஐயம் வரத் துவங்கி விட்டது."அவர் மீது வெறுப்பு உமிழும் கடிதங்களும் தொலைபேசியில் ஆபாச அழைப்புகளும் அவருக்கு வரத் துவங்கின. அவர் வீட்டின் முன் ஒரு சிலுவை கொளுத்தப்பட்டது. ஜூலை 17 அன்று மார்கனின் தாயார் அவரைப் பிணமாய்க் கண்டார். அவரது படுக்கையின் பக்கத்தில் காலியான தூக்க மாத்திரைப் புட்டியும் தற்கொலை குறிப்பும் இருந்தன. "இனி நான் யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக் காரணமாக இருக்கப் போவதில்லை."மார்கனின் வாழ்க்கை  சாதாரண மக்களின் வீரத்தின் சாட்சி. சாமானியர்களின் அசாதாரணத்தன்மை என்று காந்தி கூறியதை அடியொற்றி நாம் அழைக்கக்கூடியதன் கருத்தைக் கவரும் முன்னுதாரணமாக மார்கன் உயர்ந்து நிற்கிறார்.

Image Credit: Burgin Mathews

நன்றி: https://indianexpress.com/article/express-sunday-eye/they-had-a-dream-gandhi-martin-luther-king6034862/

பின்குறிப்பு: ஜூலியட் ஹாம்ப்டன் மார்கன் எதிர்கொண்ட நெருக்கடியின் தீவிரம், அதன் காரணமாய் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கட்டுரையில் விடுபட்ட சில தகவல்கள் விக்கிபீடியா தளத்தில் உள்ளன:
"Soon after the letter was published, Morgan began to receive more hate mail and obscene phone calls. Many of her friends abandoned her and even her own mother lamented at the damage she was supposedly doing to the family name. The public abuse went on for months. During one night in April, a cross was burned in her front yard. Once again, the mayor demanded that the library fire Morgan, but the superintendent and library board remained staunch in their support of Morgan’s right to Freedom of Speech. When funding for the city library was reduced in the amount of Morgan's salary, it became clear that the end of her position was near. Meanwhile, her severe anxiety increased and her health deteriorated significantly. On July 15, her mother called the library to say that Morgan could no longer work and had decided to resign. On the morning of July 17, 1957, Morgan’s mother found her daughter dead; next to her lay an empty bottle of sleeping pills. She had written a suicide letter that said "I am not going to cause any more trouble to anybody."" - விக்கிபீடியா





அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1

$
0
0


காந்தியின் கடைசி காலத்தில் அவரது நண்பரொருவர் காந்தியிடம் அவரது சுயசரிதையை விட்ட இடத்திலிருந்து தொடரச் சொன்னார், "அகிம்சையின் அறிவியல் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை,"எழுதவும் சொன்னார். காந்தியின் மெய்த்தேடலையும் அகிம்சையை அடைவதற்கான சாதனையையும் பற்றிய விவரணைகளைப் பெற விரும்பியிருக்கிறார் நண்பர். இவையிரண்டும் காந்தியை ஆட்டுவித்த இரு முக்கிய சக்திகள் என்பதால் உண்மையையும் அன்பையும் கடைபிடிப்பது குறித்தும் அவையிரண்டு பற்றிய தன் தத்துவப் புரிதலையும் விரிவாக எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர். தன்னைப் பற்றியோ தன் ஆன்ம சாதனை பற்றியோ எழுதத் தயங்கக்கூடியவரல்ல காந்தி. ஏற்கனவே அவர், உள்ளிருப்பவன், அந்தர்யாமி, என்று தான் அழைத்த சக்தியின் உந்துதலால் சத்திய சோதனை என்ற சுயசரிதை எழுதியிருந்தார். 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த உரையாடல் நிகழ்ந்தபோதும்கூட தன் அகத்தைப் பற்றி எழுதக்கூடாது என்று தத்துவார்த்தமாக அவருக்கு எந்த மறுப்புமில்லை. எனினும், எழுத்து வடிவில் கொண்டு வரும் சாத்தியத்தை தெய்வச் சித்தத்துக்கே விட்டு விட்டார்.

"அகிம்சையின் அறிவியல்"பற்றிய ஆய்வுக் கட்டுரை வேண்டும் என்ற கோரிக்கையை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். தன் இயலாமை, அதன் அசாத்தியம், இந்த இரண்டும் அவரது மறுப்புக்கு காரணமாக இருந்தன.

செயலைப் பணிக்களமாய் கொண்ட ஒருவன் என்ற வகையில் அதை எழுதுவது தன் சக்திக்கு உட்பட்டதல்ல என்று வாதிட்டார் காந்தி. "அகிம்சையின் அறிவியல் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதும் சக்தி எனக்கு இல்லை. நான் கல்விப்புலக் கட்டுரைகள் எழுதக் கற்றவனல்ல. செயல்படுவதே என் களம். எனக்குக் கிட்டும் ஒளியில் என் கடமை என்று எதைப் புரிந்து கொள்கிறேனோ, எது என் பாதையில் எனக்கு இடப்படுகிறதோ, அதைச் செய்கிறேன். சேவை மனப்பான்மையே என் செயல்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறது."அகிம்சையை ஓர் அறிவியல் சிந்தனையாய் முறைப்படுத்தக் கூடியவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார் அவர். ஆனால் ஒரு நிபந்தனை, "அப்படிப்பட்ட அணுகுமுறைக்கு அது உடன்பட வேண்டும்."அகிம்சையை அடைய தான் மேற்கொண்ட சாதனையும்கூட, ஆன்மிகம் மற்றும் அரசியல் வெளிகளிலும், தனிப்பட்ட மற்றும் சமூக வெளிகளிலும் தான் மேற்கொண்ட எண்ணற்ற அகிம்சைச் சோதனைகளும்கூட, தனது மரணத்துக்குப் பின்னரே பொருளுள்ள வகையில் விவரிக்கப்பட முடியும் என்றும் வாதிட்டார் அவர், மரணத்துக்கு முன் எழுதப்பட்ட எதுவும் முழுமையற்றதாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. இதை காந்தி முன்கண்டே உரைத்திருக்கிறார். இந்தக் கடிதம் எழுதிய பின்னரே மிக  முக்கியமானதும் மனதை மிகவும் நெகிழச் செய்வதுமான அந்த அகிம்சைச் சோதனையை அவர் மேற்கொண்டார். அதன் முடிவில் அவரது உள்ளத்தில் அகிம்சையின் இயல்பு குறித்தும் அதன் போதாமை குறித்தும் ஆழமான ஐயங்கள் எழக் காண்பார். மக்கள் கூட்டமும் அரசியல் கட்சிகளும் எந்த அளவுக்கு தம்மை அகிம்சைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து 1946ஆம் ஆண்டு முதல் இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பகுதிகளில் வன்முறை பரவும் காலத்தில் அவர் ஆழமாய்ச் சிந்திக்க தலைப்பட்டார். 1946ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கலவரங்கள் சூறையாடிய ஸ்ரீராம்பூர் கிராமத்தை தன் இல்லமாய்க் கொண்டு கிழக்கு வங்காள கிராமங்களில் பாதயாத்திரை துவங்கினார்.

ஆனால் அவர் சுட்டிய அசாத்தியம் இதுவல்ல. சத்தியத்தையும் சத்தியத்தை இறை வடிவிலும் மனிதனால் முழுமையாய் விளங்கிக் கொள்ள முடியாது என்று அவர் நம்பியது போலவே, மனிதர்களால் அகிம்சை குறித்து முழுமையான பார்வை உருவாக்கிக் கொள்ளவும் இயலாது என்று நம்பினார். "ஒருக்கால் சாத்தியம் என்றால், அது என் மரணத்துக்குப் பின்தான் எழுதப்படும். அப்போதும்கூட நான் எச்சரிக்க விரும்புகிறேன்- அது அகிம்சை குறித்து முழுமையான விளக்கம் அளிக்க முடியாது. இறைவனை முழுமையாய் விவரிப்பதில் எந்த மனிதனும் வெற்றி கண்டதில்லை. அகிம்சைக்கும் அது பொருந்தும்."

எப்படி சத்தியத்தை கணப்பொழுது மட்டுமே கண்ணுற வேண்டுமென்று தனக்கு விதிக்கப்பட்டுள்ளதோ, அது போலவே தன்னை அகிம்சையில் ஆழ்த்திக் கொள்ளவும் அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் முயற்சி செய்ய மட்டுமே தனக்கு விதிக்கப்பட்டுள்ளது என்று நம்பினார் காந்தி.

(தொடரும்)

நன்றி : A Small Still Voice, Tridip Suhrud, 27 Sep, 2019, Open Magazine

Image Credit : BBC







அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 2

$
0
0

முந்தைய பதிவு:

அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1



அகிம்சை விழைவு காந்திக்கு ஏன் வாழ்வின் தேவையாக இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியம். இக்கட்டுரையின் துவக்கத்தில் வரும் மேற்கோள் இந்த விழைவின் தன்மையைக் கைப்பற்றுகிறது. வன்முறை நம்மை விட்டு நம்மை விலக்கிக் கொண்டு செல்கிறது: அது நம் மானுடத்தை, நம் வாழ்வின் பணியை, நம் எல்லைகளை மறக்கச் செய்கிறது. இத்தகைய மறதி அகத்தையும் பிறரையும் அழிவுக்குக் கொண்டு செல்லும் என்று எண்ணினார் காந்தி.

சிக்கலான வாதங்கள் மற்றும் பயிற்சிகளைக் கொண்டு காந்தி அகிம்சைக்கும் அகத்துக்கும் உள்ள உறவை- அடையாளம் கண்டு கொள்ளுதலும் சுதந்திரமும்- விரிவாய்ச் சித்தரித்ததை இனி வரும் பகுதி விளக்க முயற்சி செய்கிறது. தன்னைத் தானறிய தொடர்ந்து நிகழும் தேடலையொட்டியே தனி மனித விடுதலையும் கூட்டு விடுதலையும் சாத்தியப்படுகிறது என்று கருதினார் காந்தி. வன்முறையைப் பிரயோகிப்பவர்களுக்கும் அதன் பக்தர்களுக்கும் இத்தகைய தன்னறிவு வசப்படுவதில்லை என்பது காந்தியின் நம்பிக்கை.

வன்முறையை "மூர்க்க பலம்"என்றும் அகிம்சையை "ஆன்ம பலம்"என்றும் விவரித்தார் காந்தி (இவை குஜராத்தி மொழியில் "சரீர பல்"அல்லது "டோப் பல்"என்றும் "ஆத்ம பல்"அல்லது "தயா பல்"என்று குறிப்பிடப்படுகின்றன). இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தூரம், மிருகத்தனத்துக்கும் மனிதத்தன்மைக்கும் இடையே உள்ள தூரம், அகிம்சையால் அடையாளப்படுத்தப்படுகிறது. மூர்க்க பலம் என்ற எண்ணம் வன்முறையை உடலிலும், காயப்படுத்தவும் கொல்லவும் உடல் பயன்படுத்தக்கூடிய கருவிகளிலும், இருத்துகிறது. இது தூய கருவித்தன்மையைக் குறிக்கிறது (pure instrumentalism). மிருகத்தன்மையின் உலகில் வன்முறையை இருத்துவதன் மூலம் மனசாட்சியின்மையை, ஒழுக்கமின்மையை, காந்தி தெளிவாகவே சுட்டுகிறார்.  "வன்முறை மூர்க்கனின் விதியாவது போல் அகிம்சை மானுட விதியாகிறது. மூர்க்கனின் ஆன்மா உறக்கத்தில் இருக்கிறது. உடல் வலிமையே வெல்லும் என்பதைத் தவிர அவனுக்கு வேறு எந்த விதியும் தெரியாது. மனிதனின் சுயமரியாதை தன்னைவிட உயர்ந்த விதிக்கு அவன் அடங்கி நடக்கச் சொல்கிறது- ஆன்மாவின் சக்திக்கு அவனைக் கட்டுப்படச் சொல்கிறது,"என்று எழுதினார் காந்தி.

"ஆன்ம சக்தி"என்ற சொல் மனசாட்சி செயல்படுவதை, நேர்மையின் பாதையை மனிதன் அறிந்து கொள்ளும் திறனை, அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் ஆற்றலை, காட்டுகிறது. 1938ஆம் ஆண்டு காந்தி சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் முன் அவர் ஆற்றிய உரையில், இந்த வேறுபாட்டை மிகக் கூர்மையாக காட்சிப்படுத்தினார்: "உடல் பலம் மூர்க்க சக்தி என்று அழைக்கப்படுகிறது. நாம் அந்த சக்தியுடன் பிறந்திருக்கிறோம்... ஆனால் நம் இதயங்களில் வாழும் இறைவனை நாம் உணர வேண்டும் என்ற காரணத்தால்தான் மனிதர்களாய்ப் பிறந்திருக்கிறோம். இதுதான் நமக்கும் மிருகங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு... மனித வடிவுடன் நாம் மனித சக்தியும் கூடியவர்களாய் இருக்கிறோம்- இந்தச் சக்திதான் அகிம்சையின் பலம். ஆன்ம சக்தியின் ரகசியத்தைக் குறித்த தரிசனம் நமக்கும் கிட்டும். இதில்தான் நம் மானுடம் உள்ளது."

காந்தி இரு கூறுகளைத் தெளிவாகவே விவரிக்கிறார்: ஒன்று, அகிம்சை என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய ஆற்றல்; நம்மால் நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும், வன்செயல் விலக்க முடியும், அகிம்சைதான் நம்மை மானுடராக்குகிறது. இரண்டாவது, மானுடனாயிருப்பது என்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட பணியை நிறைவு செய்வது, அதாவது, இறைவனை உணர்வது- நம் இதயங்களில் சத்திய வடிவில் உறையும் இறைவனை அறிவது. இதுவே காந்தியின் முதன்மைத் தேடல்.

தன் தேடலின் தன்மையை காந்தி அவரது சுயசரிதையில் தெளிவுபடுத்துகிறார். "நான் எதை அடைய விரும்புகிறேன் என்றால்- எந்த விழைவில் நான்  உழைக்கிறேன், எதை அடைய இந்த முப்பது ஆண்டுகளாய் ஏக்கம் கொண்டிருக்கிறேன் என்றால்- அது ஆன்ம தரிசனமே. இறைவனை நான் நேருக்கு நேர் காண வேண்டும், கதி மோட்சம் பெற வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே உயிர் தரித்திருக்கிறேன், இதனை நோக்கியே வாழ்கிறேன், நகர்கிறேன்,"  என்று எழுதினார் அவர்.

காந்தி இறைவனை சத்திய வடிவில், சத்ய நாராயணனாக, வழிபட்டார். இறைவனை முகத்துக்கு முகம் நேரடியாய் கண்டு விட்டதாக அவர் ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை, அப்படியொரு நிலையை அவரால் நினைத்தும்கூட பார்க்க முடியவில்லை: "கடவுளை அறிந்தவன் எக்காலத்தும் பாபத்திலிருந்து விடுபட்டவனாகிறான். அவன் அடைய வேண்டிய அவா ஒன்றில்லை. எண்ணங்களிலும்கூட அவனிடம் குற்றம், குறை, களங்கங்கள், இருக்க முடியாது. அவன் செயலனைத்தும் பூரணமாய் இருக்கும். ஏனெனில், அவன் தானெனச் செய்வதொன்றில்லை, அவனுள்ளிருக்கும் இறைவனே அனைத்தும் செய்கிறான். அவன் கடவுளுடன் இரண்டறக் கலந்து விட்டவன்."

அப்படிப்பட்டவன் நிலை பூரண அக விழிப்புற்ற நிலை, பூரண தன்னறிவு பெற்ற நிலை என்று கருதினார் காந்தி. அது உண்மை வெளிப்படும் தருணம், அகத்தின் திறப்பு அவருக்கு நேரும் தருணம். பூதவுடலில் சிறைப்பட்டிருக்கும் வரை அப்படிப்பட்ட பூரண அறிவு தனக்கு வாய்க்காது என்று நம்பினாலும்கூட அவர் அசாதாரணமாய் ஒன்று சொல்லிக் கொண்டார். "அமைதியான, சன்னக் குரல்,"அல்லது, "அகக்குரல்,"தனக்கு ஒலிப்பதாய் அவர் கூறினார். "கடவுளின் குரல்,""மனசாட்சியின் குரல்,""அகக்குரல்,"அல்லது, "அமைதியான, சன்னக் குரல்"என்று பல்வேறு பதங்களை அவர் பயன்படுத்தினார். அவர் இது போல் பலமுறை கூறியிருக்கிறார். மறுக்க முடியாத அந்தக் குரல் முன் தான் சக்தியற்றவன் என்றும், அந்தக் குரலே தன்னை வழிநடத்துகிறது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் அது பற்றிச் சொல்வதை கூர்ந்து நோக்கும்போது இந்த அகக்குரலின் இயல்பும்,  அந்தக் குரல் அவருக்கு எவ்வளவு தேவைப்பட்டது, அதைக் கேட்கும் திறன் அவருக்கு எவ்வளவு இருந்தது, என்பனவும் வெளிப்படையாகின்றன.

(தொடரும்)

முந்தைய பதிவு:

அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1

நன்றி : A Small Still Voice, Tridip Suhrud, 27 Sep, 2019, Open Magazine
Image Credit :News18.com


அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 3

$
0
0
முந்தைய பதிவுகள்:

அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1

அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 2



இந்த அகக்குரலின் அதிகாரத்தை அகமதாபாத்தில் நிகழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் காந்தி முதல் முறை கைக்கொண்டார். திடீரென்று அவர் தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதை அங்கு அறிவித்தார். அந்த தினம், பிப்ரவரி 15, 1918. அதற்கு முன் இருபத்து இரண்டு நாட்களாக, அகமதாபாத் நெசவாலைத் தொழிலாளர்கள் அவரது தலைமையில்  வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தனர். கோரிக்கைகள் நிறைவேறும்வரை வேலை நிறுத்தத்தைக் கைவிடப் போவதில்லை என்று தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்திருந்தனர். அவர்களுடைய உறுதி குலைவது போல் தெரிந்தது. காந்தி தடுமாறிக் கொண்டிருந்தார், அடுத்து என்ன செய்வது என்பது அவருக்குப் புலப்படவில்லை. அப்போது தனக்கு திடீரென்று தோன்றிய தீர்மானத்தை இப்படி விவரித்தார் அவர்: "ஒரு நாள் காலை  தொழிலாளர் சந்திப்பில் நான் அடுத்து என்ன செய்வது என்பதில் தெளிவு கிடைக்காமல் தடுமாற்றத்தில் இருந்தேன், அப்போது இந்த ஒளி புலப்பட்டது. அழைக்காமல், தானாகவே இந்தச் சொற்கள் என் உதடுகளில் ஒலித்தன: "வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீண்டும் உறுதி பூண்டு, முடிவு கிட்டும்வரை போராட்டத்தைத் தொடர வேண்டும், அல்லது அனைவரும் நெசவாலைகளை விட்டுச் செல்ல வேண்டும். அது வரை நான் எந்த உணவும் தொட மாட்டேன்."

இதற்கு இணையான உவமைகளைக் கொண்டு அகக்குரலை அவர் திரும்பத் திரும்ப விவரிப்பார்: அவரைச் சூழ்ந்த இருள், அவரது தடுமாற்றம், குழப்பம், முன் செல்லும் வழியைத் தேடுவது, ஒளி தோன்றிய தருணம், குரல் அவருடன் பேசிய உணர்வு. காந்தி அகக்குரலின் வழிகாட்டுதலை நாடியது ஆன்மீக வெளியில் மட்டுமல்ல- அது பிறருக்குரைக்க முடியாதது, அவரும் அவரது இறைவனும் மட்டுமே அறிந்தது, அரசியல் வெளியிலும் அவர் அகக்குரலை எதிர்பார்த்தார். அந்த அகக்குரலின் தூண்டுதலால்தான் 1922ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார். உள்ளிருந்து ஒலித்த குரல்தான் புகழ்பெற்ற அவரது தண்டி யாத்திரையைத் தந்தது.

உள்ளிருந்து பேசும் உண்மையின் குரலை அனைவரும் வழித்துணையாய்க் கொள்ள முடியும், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் வேரூன்றியிருந்த காரணத்தால்தான்  காந்தி அறம் மற்றும் ஆன்மீக அடிப்படையில் தன் அரசியல் செயல்பாட்டை அமைத்துக் கொண்டார். இது அவரது அரசியலை ஆழமான ஆன்மீகமாக்கியது.  அகக்குரலில் ஆளுமைப் பிரதேசத்தை அரசியல் உலகுக்கும் விரித்தார் காந்தி. தன்னை தான் அறிய இயலும் என்ற நம்பிக்கையின் ஆதாரத்தில்தான் காந்தி, நாகரீகம் பற்றியும் சுவராஜ்ஜியம் பற்றியும் தன் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார். 1909ஆம் ஆண்டு அவர் தன் முக்கியமான தத்துவ நூலான, 'ஹிந்த் ஸ்வராஜ்'எழுதினார். அதில் அவர் நவீன மேற்கத்திய நாகரீகம் நாகரீகத்தை அழிக்கிறது, அது ஒரு கருமை யுகம், அல்லது சாத்தானிய நாகரீகம் என்று வாதிட்டார். நாகரீகம் என்பதன் நவீன பொருளில் சமயத்துக்கோ ஒழுக்கத்துக்கோ இடமில்லை என்றார் அவர். "நவீன நாகரீகத்தின் கீழ் வாழும் மக்கள் உடல் வளர்ப்பதை உயிர்வாழ்வின் லட்சியமாய்க் கொண்டிருக்க்கின்றனர் என்பதுதான் அதனை உண்மையான சோதனைக்கு உட்படுத்துகிறது,"என்று எழுதினார் காந்தி.

உடல் வளர்ப்பை வாழ்க்கை லட்சியமாய்க் கொண்ட காரணத்தால் நவீன நாகரீகம் நியாய அநியாயத்தை தீர்மானிக்கும் துலாக்கோலை மனிதனுக்கு அப்பால் கொண்டு சென்று விட்டது. சரியான நடத்தை  அல்ல, பொருட்களே மனிதனுக்கு மதிப்பு சேர்க்கும் நிலையை உருவாக்கி விட்டது. இதைச் செய்கையில், தன்னைத் தானறியும் சாத்தியத்தையும் அது போக்கி விட்டது. இதற்கு மாறாய், உண்மையான நாகரீகம், இந்த ஒரு சாத்தியத்தை மட்டுமே தன் ஆணிவேராய்க் கொண்டது. "மனிதனுக்கு அவனது கடமையின் பாதையைக் காட்டும் வாழ்வுமுறைதான் நாகரீகம். கடமை ஆற்றுவது, நெறிகளைக் கடைபிடிப்பது, இந்த் இரண்டும் ஒன்றுதான். நெறிகளைக் கடைபிடிப்பது என்பது நம் மனம் மற்றும் உணர்ச்சிகளை வெற்றி கொள்வது. அதைச் செய்யும்போது, நாம் நம்மையறிகிறோம்,"என்று எழுதினார் காந்தி.

இப்படிப்பட்ட தன்னறிவு ஆன்மீக வாழ்வின் அடிப்படை மட்டுமல்ல, அரசியல் வாழ்வின் அடிப்படையும் ஆகிறது. "நாம் நம்மை ஆளக் கற்கும்போது ஸ்வராஜ்யம் அடைகிறோம்,"என்று ஸ்வராஜ்யத்தை வரையறை செய்தார் அவர். தன்னை ஆள்வது என்பது மனதையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது, நெறிகளைக் கடைபிடிப்பது, சரியான, உண்மையான, பாதையை அறிவது என்று பொருள்படும். இவ்வாறே காந்தி  சத்தியாகிரகத்தை வகுத்துக் கொண்டார், கடைபிடித்தார். இதன் அடிப்படையில்தான் அவர் ஆன்ம சக்தியையும் கைக்கொண்டார். சத்தியாகிரக வழிமுறைகளும் இலட்சியங்களும்  மட்டும் தூய்மையாய் இருந்தால் போதாது, அதைக் கடைபிடிப்பவனும் தூய்மையாய் இருக்க வேண்டும்.

இறுதியில், ஒருவன் தன் மனசாட்சியை ஏற்க வேண்டும், அல்லது தனது அகக்குரலுக்கு செவி சாய்த்து இணங்கும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சத்தியாகிரகம் அமைகிறது.

தான் அகக்குரலைக் கைக்கொள்வதைப் புரிந்து கொள்ள முடியாது, பிறருக்கு தன்னால் விளக்கவும் முடியாது என்பதை காந்தி அறிந்திருந்தார். "என்ன சொன்னாலும், ஒருவன் தன் எண்ணங்கள் எல்லாவற்றையும் பிறருக்குச் சொல்கிறானா, சொல்லத்தான் முடியுமா?"என்று கேட்டார் அவர். அகக்குரலுக்குச் செவி சாய்த்து உண்ணா நோன்பு எடுக்க காந்தி முடிவெடுத்தபோது பலரும் அவரைத் தடுக்க முயற்சி செய்தார்கள். அவர் தனக்கு அகக்குரல் கேட்கிறது என்று சொல்லிக் கொண்டதைச் சந்தேகப்பட்டவர்களும் இருந்தார்கள். அவருக்கு கேட்டது கடவுளின் குரலல்ல, அது ஒரு மனப்பிரமை, காந்தி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார், குறுகிய சிறைச் சுவர்களினிடையே நீண்ட பல ஆண்டுகள் வசித்த காரணத்தால் அவரது கற்பனை மிகவும் சூடேறிவிட்டது என்று வாதம் செய்தார்கள்.

காந்தி உறுதியாக இருந்தார். தன்னைத் தானே மயக்கிக் கொள்கிறார் என்றும் மனப்பிரமை என்றும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்தார். "உலகமே எனக்கு எதிராக ஒருமனதாக தீர்மானித்தாலும் நான் கேட்டது உண்மையில் கடவுளின் குரல்தான் என்ற நம்பிக்கையிலிருந்து என்னை அசைக்க முடியாது,"என்றார் அவர். தான் இவ்வாறு கூறுவது சான்றாதாரங்களுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டது என்றார் அவர். தான் அளிக்கக்கூடிய ஒரே ஆதாரம், கடுமையான சோதனையிலிருந்து தான் உயிருடன் மீண்ட உண்மை மட்டும்தான். இந்தக் கணத்துக்காகவே அவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். சத்திய வடிவில் கடவுளிடம் தான் கொண்ட சரணாகதி இப்போது பூரணமடைந்து விட்டது என்று நினைத்தார். குறைந்தபட்சம், உண்ணா நோன்பு மேற்கொள்ளும் இத்தருணத்தில் தானென்று செய்வது எதுவுமில்லை என்று நம்பினார்.  அவரது செயல்கள் எல்லாம் அகக்குரலால் ஆட்டுவிக்கப்பட்டவை. அது பூரண சரணாகதி தருணம். இப்படிப்பட்ட பூரண அடிபணிதல் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது.

கடிதமொன்றில் அவர் இப்படி எழுதினார்: "ஆம், தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரை இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால், இது கடவுளின் சித்தம் என்பதை நான் தெளிவாய் உணர்ந்தேன். நான் இப்போது செய்வது எதுவும் என் விருப்பத்தால் அல்ல என்பது என் நிலை. கணத்துக்கு கணம் அவனே என்னை வழிநடத்திச் செல்கிறான்."

(தொடரும்)

முந்தைய பதிவுகள்:

அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1

அமைதியான, சன்னக் குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 2

நன்றி : A Small Still Voice, Tridip Suhrud, 27 Sep, 2019, Open Magazine 

Image Credit : Outlook





அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 4

$
0
0
முந்தைய பதிவுகள்:

அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 2
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 3



காந்தி அசாதாரண வகையில் பரிபூரண சரணாகதியை இப்படி ஒப்புக்கொண்டது பலருக்கும் உறுத்தலாக இருந்தது. அவர்களின் அசௌகரிய உணர்வு ஏன் ஏற்பட்டது என்பது தெளிவு. தன் அகக்குரல் ஒலிப்பதாக காந்தி சொல்லிக் கொண்டது தனித்துவம் கொண்டதுமல்ல, யாரும் அடையப் பெறாததுமல்ல. அவர் அப்படிச் சொல்வதன் பொருத்தமும் அசல்த்தன்மையும் ஆன்மீக வெளியில் அங்கீகரிக்கப்பட்டவை. பரிபூரண சரணாகதி தத்துவம் சமய வாழ்வின் லட்சியங்களில் இன்றியமையாதது, அவற்றுக்கு இணக்கமானது. கடவுளை நேருக்கு நேர் கண்டதாய் காந்தி ஒரு போதும் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், ஆன்ம தரிசனம் அடைந்ததாய்ச் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், அகக்குரல் அவருக்கு கடவுளின் வாக்காய் இருந்தது. "அகக்குரல் இறைவனின் வாக்கு,"என்றார் அவர். ஆனால் அவர் தனக்கு வெளியில் இருக்கும் சக்தியிடமிருந்து வந்த குரல் என்று அதை உணரவில்லை. நமக்கு வெளியே உள்ள சக்திக்கும் நமக்கு அப்பாற்பட்ட சக்திக்கும் வேறுபாடு கண்டார் காந்தி. நமக்கு அப்பாற்பட்ட சக்தி நம்முள் இருந்து இயங்குகிறது. அது நம்மை விட உயர்ந்தது, நம் ஆணைக்கும் சித்தத்தின் செயலுக்கும் ஆட்படாதது. இந்தச் சக்தியின் இயல்பை அவர் விளக்கினார். "நமக்கு அப்பால்,"என்று சொல்வது, "நம் அகந்தைக்கு அப்பாற்பட்ட சக்தி,"என்று பொருள்படும். "அகந்தை பூஜ்யமென குறையும்போது,"இந்த அகக்குரலைக் கேட்கும் ஆற்றலை ஒருவன் அடைகிறான்.

அகந்தை பூஜ்யமெனக் குறைய வேண்டுமென்றால் சத்யநாராயணனிடம், உண்மை வடிவில் இறைவனிடம், பரிபூரண சரணாகதி அடைய வேண்டும் என்று காந்தி பொருள் கொண்டார். மனிதச் சித்தத்தை, தனி மனித தன்னதிகாரத்தை ஒடுக்கும்போதுதான் இந்தச் சரணாகதி நிகழும். மனிதன் தன்னதிகாரம் இழக்கும்போது மனசாட்சி உதிக்கிறது. மனசாட்சி பணிவுச் செயல், அது பிடிவாதமல்ல. "பிடிவாதமல்ல மனசாட்சி... கடுமையான கட்டுப்பாட்டில் பழுத்த கனியே மனசாட்சி... நுட்பமாய் இசைவிக்கப்பட்ட இதயமே மனசாட்சியின் வசிப்பிடம்,"என்றார் அவர். மனசாட்சியுள்ள மனிதன் எப்படி நடந்து கொள்வான் என்பதை அவர் அறிந்திருந்தார். "மனசாட்சியுள்ள மனிதன் தன்னை முன்னிறுத்திக் கொள்ள  தயங்குவான், அவன் எப்போதும் பணிவாய் இருப்பான், ஒரு போதும் ஆர்ப்பாட்டமாய் இருக்க மாட்டான், எப்போதும் சமரசம் செய்து கொள்வான், எப்போதும் பிறர் சொல்வதைச் செவிப்பான், தவறுகளை ஒப்புக்கொள்ள எப்போதும் தயாராய் இருப்பான், ஏன், அதைச் செய்யும் ஆவலாதி கொண்டுமிருப்பான்."நுட்பமாய் இசைவிக்கப்பட்ட மென்மையான இதயம் இல்லாதவன் மனசாட்சியின் இயக்கத்துக்கு ஏற்ப ஒலிக்கும் அகக்குரலைச் செவிக்க முடியாது. அல்லது, அதைவிட ஆபத்து, அகந்தையின் குரலைக் கேட்பான். அனைவருக்கும் இது இயற்கையின் பரிசாய் அமைந்து விடுவதில்லை, எல்லாருக்கும் சம அளவில் அளிக்கப்படும் உரிமையாகவும் இருப்பதில்லை. அகந்தையின் குரலில் இருந்து வேறுபடுத்தி அகக்குரலை உணரும் ஆற்றலை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், "அது ராமனின் குரலா ராவணனின் குரலா என்பதை எப்போதும் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது."

பொய்மையின் குரலிலிருந்து வாய்மையின் அழைப்பை வேறுபடுத்தி அறியச் செய்த இந்த முழு விழிப்பு நிலை என்ன? கடவுளுக்கு காத்திருக்கும் தகுதியை ஒருவன் எவ்வாறு அடைகிறான்? இதற்கென ஆயத்தமாவது ஒரு புல்லிதழின் நுனியளவு சிறிய வாளியைக் கொண்டு கடலை வற்றச் செய்யும் முயற்சிக்கு ஒப்பானது என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் அது உயிர் வாழ்வு போன்றே இயல்பாய் இருந்தாக வேண்டும். தன்னையே துப்புரவாகத் துழாவிக் கொள்ள உதவும் ஆன்மீகக் கட்டுப்பாடுகளை அவர் உருவாக்கிக் கொண்டார். தனது ஆன்மீக பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர் ஏகாதச விரதம், அல்லது பதினொறு நியமங்கள், என்ற ஒன்றை வகுத்துக் கொண்டார். ஆசிரமம், அல்லது அவரது சமயத்தைச் சார்ந்தவர்களின் சமூகம், இந்த விரதத்தில் நிலையான நம்பிக்கையும் பிரார்த்தனையில் பங்கேற்பும் கொண்டு பிணைக்கப்பட்டது.

பிரார்த்தனையே காந்தியின் அடிநாதம். பண்டிட் நாராயண் மோரெஷ்வர் காரே பாடிய மத்தியகால பக்திப் பாடல்கள் அவரை நெகிழச் செய்தன. “When I survey the wondrous cross,” என்ற கிறித்தவ கீதத்தை மீராவும் சார்லி ஆண்ட்ரூஸ்சும் பாடியது அவருக்கு ஊண் பாய்ச்சியது போலிருந்தது. “Lead Kindly Light,” என்ற பாடலைப் பாடி இளம் ஆலிவ் டோக் அவர் உடல் நலம் பெற உதவினார். அவர் தினமும் கீதை பாராயணம் செய்தார். பிரார்த்தனைக்கான இந்த தீவிர தேவை என்ன? தான் பண்டிதனல்ல பிரார்த்தனை செய்பவன், என்று அவர் சொல்லிக் கொள்ள செய்தது எது? தனது ஆன்மாவை அசைக்கவில்லை என்றால் ராமாயணத்தை வெறுமே பாராயணம் செய்து பயனில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆன்மாவின் பசிக்கு தெளிவான பதில் தருவதாக பிரார்த்தனை அவருக்கு இருந்தது. அவரது உயிரை இயக்கிய இந்தப் பசி என்ன?

அவரது உணர்ச்சிவசப்பட்ட இறைஞ்சுதல் இறைவனில் தன்னைக் கரைத்துக் கொள்ளத் தவிக்கும் ஆன்மாவின் ஏக்கம். ஆண்டான் அடிமை உறவின்  நிரந்தரமாய் பிணைப்பென ஆண்டவனிடம் அடைக்கலம் புகுதலைக் கண்டார் அவர். ஆண்டவனுடன் இரண்டறக் கலந்துவிட ஏங்கும் உக்கிர தவிப்பின் வெளிப்பாடு பிரார்த்தனை. விழிப்பு நிலை ஆன்ம ஏக்கம், தீர்மானமான தவிப்பு, இதன் உணர்ச்சி வெளிப்பாடு பிரார்த்தனை. வழிகாட்ட வேண்டி அவன் முன் காத்து நிற்கும் செயல் அது. உள்ளிருக்கும் இறையின் துப்புரவான தூய இருப்பை உணர்வதே அவர் வேட்கை. பிரார்த்தனையால் தூய்மையடைந்து  சுத்திகரிக்கப்பட்ட இதயமே இறைவனின் இருப்பால் நிறைவு பெறும். அங்கு, வாழ்வு ஒரே நீண்ட, தொடர்ந்த பிரார்த்தனையாய் இருக்கும், வாழ்தலே ஓர் வழிபாட்டுச் செயலாகும். அனைத்தையும் விலக்கி இறைவனே இறுதி கதி என்று சார்தலே அவரது பிரார்த்தனை.

ஒருவன் இடையறாது இறை தரிசனத்தில் வாழும்போது, அவனோ அவளோ, ஒவ்வொரு எண்ணத்துக்கும் இறைவன் சாட்சியாகவும் ஆட்சியாகவும் இருக்கிறான் என்பதை கருதும்போது, அப்போதுதான் இதயத்தில் ராமன் உறைவதை ஒவ்வொரு கணமும் அவன்  உணர முடியும் என்று அவர் அறிந்திருந்தார். அப்படிப்பட்ட பிரார்த்தனை அநாசக்தி, பற்றற்ற உணர்வில் மட்டும்தான் இறைவனுக்கு அளிக்கப்பட முடியும். மேலும், அவர் அறிய விரும்பிய இறைவன் மெய்ம்மையை வடிவாய்க் கொண்டவன் எனில், புறத்தே இயற்றப்பட்ட பிரார்த்தனை அதன் அடிப்படையில் உள்முக திசை செல்வது.  ஏனெனில், நாம் என்ன பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அது மட்டுமல்ல உண்மை. எது ஒன்றே உள்ளதோ, அதுவே உண்மை. எதைக் கொண்டு எல்லாம் உருப்பெற்றதோ, அதுவே உண்மை. எது சுய ஆற்றலில் தன் இருப்பைக் கொண்டிருக்கிறதோ, அதுவே உண்மை. அதுவொன்றே அழிவற்றது. இந்த உண்மை தன் உள்ளத்தில் ஒளிர வேண்டும் என்பதே காந்தியின் உக்கிர தாபம். அக்குரலை அவர் சேவிக்கச் செய்த சுத்திகரிப்பு, ஆயத்தம், இறைஞ்சுதலே பிரார்த்தனை.

இப்படி கடவுளிடம் காத்திருக்க ஏகாதச விரதம் இடமளித்தது. காத்திருத்தல் என்பது விருப்பு வெறுப்பின்றி, பற்றற்ற உணர்வுடன் ஒருவன் தன் கடமைகளைச் செய்வது. இந்த நிலையை ஸ்திதபிரக்ஞ நிலை என்று விவரிக்கிறது கீதை. எவருடைய சித்தம் நிலைத்து நிற்கிறதோ, அவனே ஸ்திதபிரக்ஞன். ஸ்திதபிரக்ஞ நிலை காந்திக்கு ஒரு தத்துவ லட்சியமாய் மட்டும் இருக்கவில்லை, அந்தரங்க விழைவாகவும் இருந்தது. கீதை இந்நிலையை ஸ்திதபிரக்ஞ நிலை என்று சொல்கிறது: "உள்ளத்தில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும்,"விலக்கி வைத்து எவனொருவன், "ஆத்மனில் மட்டுமே ஆறுதல் அடைகிறானோ,"அவனே ஸ்திதப்ரக்ஞன்.  அவனது, "புலன்கள் அவற்றுக்குரிய பொருட்களிலிருந்து அத்தனை திசைகளிலும் பூட்டபட்டிருக்கின்றன,"என்பதால் அவனது மனம், "துயர்களில் கலங்குவதில்லை, இன்பங்களுக்கு ஏங்குவதில்லை, அவன் உணர்ச்சிகளிலிருந்து, அச்சத்திலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் விடுதலை பெற்றவன்."அவன் ஓரிடத்தும் பந்தப்படுவதில்லை. இப்படிப்பட்ட பிரமசாரி மட்டுமே, "புலனுக்குரிய பொருட்களிடையே இயங்கினாலும் விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபட்ட புலன் ஆத்மனின் கட்டுபாட்டுக்கு அடங்கியிருக்க, "இவ்வுலகில் வாழ முடியும்."

இத்தகைய பற்றின்மை, அல்லது அக-பணிவு இறைவனுக்கு நெருக்கமாய் காந்தி வாழச் செய்தது.  அதனால் அவர் சரணாகதி செய்ய முடிந்தது. "நான் என் சுயவிருப்பத்தில் கட்டுப்பட்டு மிகவும் கடுமையான எஜமானனின் அடிமையாய்  ஐம்பது ஆண்டு காலமாய் வாழ்ந்து வருகிறேன். அவனது குரல் காலம் செல்லச் செல்ல மேலும் உரத்து ஒலிக்கிறது. என்னை மிக மோசமாக இருள் சூழ்ந்த காலத்திலும் ஒருபோதும் அவன் என்னை கைவிட்டதில்லை. அவன் பல முறை என்னிடமிருந்து என்னைக் காத்திருக்கிறான். என் சுதந்திரத்தின் ஒரு சுவடுகூட அவன் விட்டு வைக்கவில்லை. என் சரணாகதி எவ்வளவு பூரணமாக இருந்திருக்கிறதோ, என் ஆனந்தமும் அவ்வளவு நிறைவாக இருந்திருக்கிறது."  இந்தச் சுதந்திரமின்மை, தன்னதிகாரமின்மை, இதுவே அவரது விழைவு. ஏனெனில், இதுவே அவர் இறுதியில் கடவுளை முகத்துக்கு முகம் காணச் செய்யும். தான் இந்த நிலை  எய்தவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். "உயிருடன் இருக்கும் எவரையும் முக்தர் என்று சொல்ல முடியாது,"என்பதால் உடல் தரித்திருக்கும் காலத்தில் ஒருபோதும் அவருக்கு இது அறியக் கிடைக்காமல் போகலாம்.

(தொடரும்)

முந்தைய பதிவு:

முந்தைய பதிவுகள்:

அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 2
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 3

நன்றி : A Small Still Voice, Tridip Suhrud, 27 Sep, 2019, Open Magazine

Image Credit : Quartz https://qz.com/india/966631/for-the-original-gandhi-family-first-was-not-the-motto/




அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 5

$
0
0


முந்தைய பதிவுகள்:

அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 2
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 3
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 4



காந்தியின் சோதனையும் அவரது தேடலும் அளித்த புரிதல் இங்கு நமக்கு உதவுகிறது. அவரது தேடல் தன்னறிவு நோக்கியது, கடவுளை (சத்தியத்தை) முகத்துக்கு முகம் நேரடியாய்க் காணும் மோட்சம் அடைவது. அந்தத் தேடலில் நிறைவடைய அவர் ஆசிரமவாசியாய் வாழ வேண்டும், சத்தியாகிரகியாய் இருக்க வேண்டும், ஸ்வராஜ்ய நாட்டம் கொள்ள வேண்டும்.  இந்திய சுதந்திர போராட்டத்தில் ஸ்வராஜ்யம் ஆழமான உணர்வுகளை எழுப்பிற்று, இன்றும் அதற்கு அரசியல் மற்றும் தத்துவ பொருத்தம் உண்டு. சுயம் என்று பொருள்படும் 'ஸ்வ'மற்றும் 'ஆளுகை'என்று பொருள்படும் 'ராஜ்'என்ற இரு பதங்கள் கொண்டது ஸ்வராஜ்யம் என்ற சொல். ஆக, ஸ்வராஜ்யம் என்றால் தன்னாளுகை. காந்தி இந்தச் சொல்லை இரு வேறு பொருட்களில் பயன்படுத்தினார்: தன்னாட்சி, தன்னை ஆளுகை.

இந்த தேடலில் காந்தி இன்னும் இரு பயிற்சிகளைச் சேர்த்துக் கொண்டார். ஒன்று, உண்ணா நோன்பு, மற்றது பிரமச்சரியம். கற்பு, கலவி தவிர்த்தல் (மணவாழ்விலும்கூட) என்ற இரு குறுகிய அர்த்தங்களில்தான் பிரமச்சரியம் பெரும்பாலும் பேசப்படுகிறது. முதலில் காந்தி இந்த அர்த்தத்தில்தான் துவங்கினார். ஆனால் பின்னர் அதை ஆழமாய்ச் சிந்தித்தார், காம உணர்வற்ற நிலையுடன் போராடினார், அதன்பின் அந்தப் பதத்தின் மூல பொருளை அறிந்து கொண்டார். 'பிரமம்'என்பது சத்தியம், 'சரியை'என்பது நடத்தை. அதன் வேர்ப்போருளில், சத்தியத்தை நோக்கி கொண்டு செல்லும் நடத்தை பிரமச்சரியம். உண்ணா நோன்பு அதன் மூல பொருளில் உடலை வருத்திக் கொள்வது அல்ல. அது உபவாசம் என்று பொருள்படும், கடவுளுடன் நெருங்கி இருத்தல். உபவாசம் என்பது பல்வகைப்பட்ட உண்ணா நோன்புகளைச் சுட்ட பயன்படுகிறது. அதன் வேர்ப்பொருளில், கடவுளுடன் நெருங்கி இருத்தல் உபவாசம். அங்கு, கடவுளுடன் நெருங்கி வாழும் வழிகளில் ஒன்று உண்ணாமை. இந்த அர்த்தத்தில், பிரார்த்தனை இல்லாமல் உண்ணாமை இல்லை, ஆம், உண்ணாமை இன்றி பிரார்த்தனையுமில்லை. அப்படிப்பட்ட உண்ணா நோன்பு ஒரு தவமாகவும் சுய சுத்திகரிப்பாகவும் ஆகிறது.

சுய சுத்திகரிப்பின் உச்ச சாதனை பிரமச்சரியம் கடைபிடித்தல். உண்மையை உணர்வதையும் புலன் இன்பத்தையும் முரண்பாடுகளாய் கண்டார் காந்தி. இந்த நம்பிக்கையிலிருந்து பிரமச்சரியம் மட்டுமல்ல, பிற மூன்று நியமங்களும் வருகின்றன- உணவுக் கட்டுப்பாடு, அபரிகிரகம் அல்லது பொருள் விழையாமை, அஸ்தேயம் அல்லது திருடாமை. உலகில் உள்ள அத்தனை துறவு மரபுகளிலும் பொருள் சேர்க்கக்கூடாது என்ற கொள்கை நிலவுகிறது. அந்த பதத்துக்கு ஆழமான சூழியல் பொருள் அளித்தார் காந்தி. பொருள் விழையாது இருக்கும்போதுதான் இந்த பூமி அனைவரின் தேவைகளுக்கும் உணவளிக்கும். அஸ்தேயம் என்ற பதத்தின் பொருளையும் காந்தி விரிவுபடுத்தினார். ஒருவன் தன் தேவைக்கு அதிகமாக பொருள் வைத்திருப்பது என்பது திருட்டுச் செயலாகும். அதற்கு மேலும் சென்று, உடல் உழைப்பு இல்லாமல் உணவு உட்கொள்பவனும் திருட்டுச் செயல் புரிகிறான் என்றார். இப்படிப்பட்ட உடலுழைப்பு பிறர் சேவையில் அளிக்கப்பட வேண்டும், இதை அவர் தியாக உழைப்பு என்றார்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி வாழ்வது என்று விவிலியத்தில் சொல்லப்படுவதை அவர் இவ்வாறு புரிந்து கொண்டார்.

மகாவிரதம் என்று விவரிக்கப்படும் பிரமச்சரியம் கடுமையான நியமம், அல்லது ஒரு மாபெரும் முயற்சி. தென்னாப்பிரிக்காவில் ஜூலு கலகத்தின்போது ஆம்புலன்ஸ் பிரிவு அமைத்த காலத்தில் இது ஒரு அவசிய நியமம் என்ற எண்ணம் காந்திக்கு வந்தது. பிரமச்சரியம் கடைபிடிக்காமல் சமூக சேவை சாத்தியமில்லை என்று உணர்ந்தார். 1906ஆம் ஆண்டு, முப்பத்து ஏழு வயதில், பிரமச்சரிய விரதம் எடுத்துக் கொண்டார்.

***

அவர் இங்கிலாந்தில் மாணவராய் இருந்தபோதே உணவு மற்றும் உணவுமுறைகளில் சோதனை செய்யத் துவங்கியிருந்தார். அதன்பின் வெகு காலம் சென்ற பின்னரே அவர் பிரமச்சரியத்துக்கும் உணவுக் கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்தார்.

இந்த அவதானிப்புகளும் சுய சுத்திகரிப்புக்கான முயற்சிகளும் நோக்கமற்று நிகழவில்லை. இவை தன்னை ரகசியமாய் சத்தியாகிரகத்துக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தன என்று அவர் பிற்காலத்தில் உணர்ந்தார். உண்மை, அகிம்சை, பிரமச்சரியம், இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற புரிதல்களை பல பத்தாண்டுகால அவதானிப்புகளுக்கும் முயற்சிகளுக்கும் பின்னரே அவர் புரிந்து கொண்டார். உண்மைக்கான தேடலிலும் அகிம்சை பயில்வதிலும் வெற்றி காண சிந்தை, சொல், செயல் இந்த மூன்றிலும் பிரமச்சரியத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் அறிந்தார். உண்மைக்கும் அகிம்சைக்கும் பிரமச்சரியம் தேவை என்று கண்ட காந்தி, சத்தியாகிரகம் மற்றும் சுயராஜ்ஜியப் போராட்டத்திலும் அதை மைய நிலைக்கு கொண்டு வந்தார். 

உண்மையை உணர வேண்டும், அதை வழுவாது கடைபிடிக்க வேண்டும் என்பது சத்தியாகிரகத்தின் கட்டாயம். அது தன்னைத் தியாகம் செய்ய வேண்டுமென்றும், தான் துன்பத்தைச் சகித்துக் கொள்ள வேண்டுமென்றும் கோருகிறது. சுய சுத்திகரிப்பு செய்து கொண்டவன் தூய, அதாவது, அகிம்சை வழிமுறைகள் பயன்படுத்துவதை அவசியமாக்குகிறது. சத்தியாகிரகமும் ஸ்வராஜ்யமும் தன்னறிதலின் செயல்வடிவங்கள். இதைப் புரிந்து கொண்ட காந்தியால் பிரமச்சரியத்தின் பொருளையே விரித்து வளர்க்க முடிந்தது. கற்பு, இல்லறத்திலும் கலவி தவிர்ப்பு என்ற குறுகிய பொருள் கொண்ட, பரவலாக அறிந்து கொள்ளப்பட்ட அர்த்தத்தில் அதை துவக்கத்தில் எடுத்துக் கொண்டார். பின்னர், சிந்தை, சொல், செயல் இந்த மூன்றிலும் இதைக் கடைபிடிக்க வேண்டும் என்று விரித்தெடுத்தார். எனினும், பிரமச்சரியம், அகிம்சை, ஸ்வராஜ்யம் என்ற இவற்றுக்கு இடையே உள்ள பொதுவான ஆழ்ந்த, அடிப்படை உறவை கண்டுகொள்ள முடிந்த பின்னர்தான் அவரால் 'பிரமச்சரியம்'என்ற சொல்லின் வேர்ப்பொருளுக்குச் செல்ல முடிந்தது. பிரமத்தின் தேடலில் மேற்கொள்ளப்பட்ட சரியை, அல்லது நடத்தை, அதன் உண்மையே பிரமச்சரியம். இந்த பொருளில் பிரமச்சரியம் ஒரு புலனை நிராகரிக்கிறது, அல்லது, கட்டுப்படுத்துகிறது என்பதல்ல நிலை- அது அனைத்து புலன்களும் ஒன்றுடனொன்று இணக்கமாய்ச் செயல்படும் வகையில் ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறது. இவ்வகையில் புரிந்து கொள்ளப்பட்டு பயிலப்படும் பிரமச்சரியம் உண்மைக்கும் அறிவுக்கும் அதன்வழி மோட்சத்துக்கும் இட்டுச் செல்லும் நடத்தையின் வழிவகையாகிறது.

"இப்பூதவுடல் தரித்திருக்கும் வரை பூரண சத்தியத்தை நாம் உணர்வது சாத்தியமில்லை,"என்ற உண்மையை காந்தி தீவிரமாகவும் வாதையாகவும் அறிந்திருந்தார். பூரண சத்தியம் அடைய முடியாத லட்சியமென்றால், பூரண பிரமச்சரியமும் அவ்வாறே. காந்தியின் பார்வையில், சத்தியம் அல்லது பிரமச்சரியத்தை அடையும் வழிமுறைகளை செம்மைப்படுத்திக் கொள்வதே நமக்கு விதிக்கப்பட்ட நிலை. அவரது வழிமுறைகள் அகிம்சை அல்லது அன்பைக் கடைபிடிப்பது. நாம் கைக்கொள்ளத்தக்க வழிமுறை என்று அகிம்சை கருதப்பட முடியும் என்பதை அவர் வலியுறுத்தினார். இது அகிம்சையை வேறு வகைப்பட்டதாய்ச் செய்கிறது. காந்திக்கு, அகிம்சை அடைப்படக்கூடியது, எனவே, சத்தியத்தை நாடுபவர்கள் அகிம்சை கடைபிடிப்பது அவசியம்.

அகக்குரலைச் செவிக்கும் ஆற்றலே காந்திக்கு தன் தேடலில் அவர் கடந்து வந்த தூரத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு முறை அகக்குரலை கைக்கொள்ளும்போதும் அவருக்கு அது கடவுளிடம் சரண் புகுவதை உணர்த்துகிறது. தான் அகக்குரலைச் செவிக்க தன் அருகாமை தேவைப்படுகிறது. இந்த அண்மை அகிம்சைப் பயிற்சியைக் கொண்டு அடையப்படக்கூடியது.  இதற்கு மாறாய் வன்முறை, அகத்தேடலில் கடந்து செல்ல வேண்டிய தூரத்தை அதிகரிக்கிறது. இந்தக் காரணத்தால் அகிம்சை நிராகரிக்கப்பட வேண்டும். வன்முறையின் இந்த இயல்பை காந்தி தெளிவாகவே விவரித்தார்: "வன்முறையைச் சாருமளவு அவன் சத்தியத்தை விட்டு விலகிச் செல்கிறான்."இந்த அர்த்தத்தில், அகிம்சை அத்தியாவசியம், காந்தியின் அனைத்தினும் உயர்ந்த கடமை. இது இறை தரிசனத்தைச் சாத்தியமாக்குகிறது. முகத்துக்கு முகம் நேரடியாய் இல்லை எனினும், கடமையின் பாதையை அவருக்கு காட்டி, உள்ளிருந்து பேசும் அமைதியான, சன்னமான குரலாக.

முந்தைய பதிவுகள்:

அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 1
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 2
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 3
அமைதியான, சன்னமான குரல் - த்ரிதிப் சுஹ்ருத் 4


நன்றி : A Small Still Voice, Tridip Suhrud, 27 Sep, 2019, Open Magazine
(an edited excerpt from 'The Power of Nonviolent Resistance: Selected Writings by Gandhi', edited and introduced by Tridip Suhrud | Penguin Classics | 352 pages | Rs 299.)

Image Credit : Architectural Design





யாத்திரீகனின் பயணம்- ஏ. எஸ். சசிகலா

$
0
0


அண்மைக்கால இந்திய வரலாற்றில் மிக அதிகம் பிழையாய்ப் புரிந்து கொள்ளப்பட்டவரும் மிகத் தவறாக பொருள் கொள்ளப்பட்டவரும் காந்தியாகவே இருப்பார். அவர் ஒரே நேரம் புரட்சியாளராகவும் ஆசாரமானவராகவும் இருந்தார். சுதந்திரம் பற்றியும் தியாகம் பற்றியும் விரிவாகச் சிந்தித்தார், எழுதினார். தியாகத்தைக் கொண்டு விடுதலையடைவது பற்றி தெளிவான பார்வை கொண்ட தீர்க்கதரிசி அவர். அதே சமயம், அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தின் ஆற்றலைக் கொண்டு இவ்வுலகையே உலுக்கிய உத்தியை வடிவமைத்தவர். கடந்த சில பத்தாண்டுகளாக, கல்விப்புலத்தில், அதிலும் குறிப்பாய் சூழியல் மற்றும் நிலைத்த வளர்ச்சித் துறைகளில், சூழியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் காந்திய கோட்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி தீவிரமான ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சூழியல் விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்பட்டது. இந்தியாவில், சூழியல் களப்பணி சிப்கோ இயக்கத்தில் துவங்குகிறது. அது காந்திய சார்பு கொண்டது. இந்தச் சார்பு கேரளாவில் அமைதி பள்ளத்தாக்கு போராட்டத்திலும் மத்திய பிரதேசத்தில் நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத்திலும் தொடர்ந்தது.

ஒவ்வொரு இயக்கமும் அதனதன் அரசியல் கோட்பாடுகளிலும் களப்பணியிலும் வேறுபடுகின்றன. காந்திய அகிம்சையையும் சத்தியாகிரகத்தையும் போராட்ட உத்திகளாக எடுத்துக் கொண்டதால் இந்த இயக்கங்கள் அத்தனையையும் ஒன்று சேர்க்கும் சக்திகளாக அவையே விளங்குகின்றன. ராமச்சந்திர குஹா போன்ற சூழியல் வரலாற்றாய்வாளர்கள் இந்தியச் சூழியல் இயக்கங்களில் மூவேறு வகை கோட்பாட்டுப் போக்குகளை அடையாளப்படுத்துகிறார்கள்- காந்திய போராட்டக்காரர்கள், மார்க்ஸிய சூழியலாளர்கள், மாற்று தொழில்நுட்பத்தை முன்னிறுத்துபவர்கள். ஆனால் இவர்கள் எந்த நிலைப்பாட்டின் அல்லது போக்கின் பிரதிநிதிகளாக இருந்தாலும், இந்த இயக்கங்கள் எல்லாமே இயற்கையையும் இயற்கை வளங்களையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற காந்திய அளிப்பை முன்னெடுத்துச் சென்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காந்திய போராட்டங்களின் நேரடி செயல்திட்டத்தில் இல்லை. ஆனால் அவரது சிந்தனைகளில் பெரும்பாலானவை நேரடியாகவே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பொருந்துபவை. பசுமை இயக்கங்களும் சூழியல் இயக்கங்களும் காந்திய தத்துவத்துக்கு தாம் கடன்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றன.

காந்திய சூழியலின் இரண்டாம் கூறு, அவரது நிர்மாண திட்டங்கள். எந்த சமூக போராட்டத்துக்கும் நிர்மாண திட்டமே முதுகெலும்பாய் இருக்கும் என்று கருதினார் காந்தி. மேன்மையடைந்த இந்தியாவை உருவாக அவர் 18 நிர்மாண திட்டங்களை வடிவமைத்தார். மிகவும் கடினமான நிலைகளிலும் இந்த நிர்மாண திட்டங்களை காங்கிரஸ் ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் காந்தி. பொருளாதார சுதந்திரம், சமூக மற்றும் பொருளாதார சமத்துவம், சமூக பாபங்களைக் களைவது, மகளிர் நலம், அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, மேம்பட்ட மருத்துவ உதவி, இவை இந்த நிர்மாண திட்டங்களின் நோக்கங்கள்.

காந்தியின் ஆன்மீக வாரிசான வினோபா பாவே, காந்திய நிர்மாண திட்டங்களில் இன்னும் மூன்று திட்டங்களைச் சேர்த்தார். மிகவும் கொண்டாடப்படும் "பசுப் பாதுகாப்பு,"வினோபா இப்படிச்  சேர்த்த மூன்று அடிப்படை கொள்கைகளில் ஒன்று. ஆனால் தன் எழுத்தில், "பசுவைக் காப்பாற்ற முஸ்லிமைக் கொலை செய்வது சமய நடத்தைக்கு முற்றிலும் எதிரானது,"என்று காந்தி தெளிவாகவே சொல்லியிருக்கிறார். விடுதலைக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் இந்த் நிர்மாண திட்டங்களுக்கு உரிய கவனம் அளித்திருந்தால் தேசத்தின் பொருளாதார, சூழியல் நிலை மிகவும் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கவனம் நிலைத்த வளர்ச்சியில் குவிந்திருக்கிறது. நிலைத்த வளர்ச்சி என்பதை எதிர்கால தலைமுறைகளின் ஆற்றல்களைக் குறுக்காமல் இன்றைய தலைமுறை வளர்ச்சியடைவது என்று வரையறை செய்யலாம். நிலைத்த வளர்ச்சி என்ற சிந்தனையை அறியாதவர் என்றாலும், காந்தியின் நிர்மாண திட்டங்கள் இயற்கையையும் இயற்கைச் சூழலையும் அழிக்காத வளர்ச்சியின் முதல் வெளிப்பாடுகள். நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDGs)) நோக்கமாய்க் கொண்டுள்ளது போலவே காந்தியும் ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும் அநீதியும் இல்லாத ஓருலகைக் காண கனவு கண்டார். காந்தி அதை சர்வோதயச் சமூகம் என்று அழைத்தார். ஏழைகளில் மிக ஏழையாய் இருப்பவர்களும்கூட ஏற்றம் காண உறுதி அளிக்கும் சமத்துவ சமுதாயம் அது.

சர்வோதய சிந்தனையை ஜான் ரஸ்கினிடமிருந்து பெற்றுக் கொண்டார் காந்தி. அதைக் கொண்டு வர்க்கம், சாதி, பாலின வேற்றுமைகளைச் சமூகத்திலிருந்து களைய முயற்சி செய்தார் அவர். இந்த சிந்தனையின் சோதனை முயற்சியாக தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் ஒன்றை அவர் நிறுவினார். இந்த முயற்சியின் தொடர் நடைமுறைச் சோதனைக்கூடங்களாகவே அவரது அத்தனை ஆசிரமங்களும் அமைந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக, தனி மனித சுதந்திரம், தன்னிறைவு, சமூக நல்லிணக்கம், பொருளாதார சமத்துவம், உழைப்புக்கு மரியாதை என்ற சர்வோதய நோக்கங்கள் எல்லாமே நம் மக்களாட்சியில் இன்னும் தொலைதூர கனவாகவே இருக்கின்றன.

பின்நவீனத்துவ சமூகத்தின் கூறுகளில் ஒன்று  மரபார்ந்த சமயங்களின் கட்டமைப்பைக் கலைப்பது. ஆனால், இன்றைய உலகில் சமயக் கலவரங்கள் இல்லாமல் இல்லை. அமெரிக்காவில் உள்ள பியூ ரிசர்ச் சென்டரின் 2017ஆம் ஆண்டு அறிக்கையின்படி சமயச் சகிப்புத்தன்மை மிக மோசமாக உள்ள தேசங்களின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது. அனைத்து சமயங்களின் நல்லியல்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும், எல்லா சமயங்களும் எந்த விஷயங்களில் ஒத்த பார்வை கொண்டிருக்கின்றனவோ, அங்கு ஒன்றுசேர வேண்டும், என்பன இக்காலத்தின் அவசிய தேவைகள். காந்தி ஆசிரம பிரதிக்ஞைகளில் ஒன்று, சர்வதர்ம-சமபாவம், அது எல்லா சமயங்களையும் சமமெனக் கொள்ளும் உணர்வை வளர்க்கிறது.

மதங்களின் சாரம் ஒன்றே என்றார் காந்தி- அவற்றின் இறுதி உண்மை ஒன்றே. அப்படி என்றால் ஏன் இவ்வளவு மதங்கள் என்ற கேள்வி மனதில் எழுகிறது. "ஆன்மா ஒன்றே, ஆனால் அது உயிர்த்திருக்கும் உடல்கள் பல. உடல்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது, என்றாலும் ஆன்மா ஒன்றே என்பதை உணர்கிறோம். ஒரு மரத்திலும்கூட அடிமரம் ஒன்றே என்றாலும் கிளைகளும் இலைகளும் பற்பல இருக்கின்றன. அது போலவே, ஒரே பூரண மதம்தான் உண்டு, ஆனால் மனித ஊடகத்தின் வழி செல்கையில் அது பல்கி விரிகிறது,"என்று இதை விளக்க முயற்சி செய்தார் காந்தி.

நிலைத்த வளர்ச்சியின் முக்கியமான அங்கங்களில் ஒன்று உலக அமைதி. சூழியல் சுகாதாரத்துக்கு அமைதி அவசிய தேவை. இந்த அமைதி, "போரின்மை, நீதி நிலவுதல்"என்று வரையறுக்கப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப்பின், உலகம் முழுதும் மற்றுமொருமுறை அணுகுண்டுகள் வீசப்படும், பேரழிவு நேரும் என்று அஞ்சின. அத்தகைய அழிவு புவியின் முகத்திலிருந்து மானுடத் திரள் மொத்தத்தையும் அழித்திருக்கும். ஆழ் சூழியல் (Deep Ecology) தந்தையான ஆர்னே நெஸ் (Arne Naess) ராணுவ அமைப்புக்கு அவசியமில்லாத பாதுகாப்பைப் பற்றிய கருத்துகள் கொண்டிருந்தார். சர்வதேச கூட்டுறவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

போரும் ராணுவ படையெடுப்புகளும் நிகழ்த்தக்கூடிய பயங்கரங்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தாமல் ராணுவ அமைப்பு இல்லாத பாதுகாப்பு குறித்து நாம் போட்டியும் அநீதியும் நிறைந்த உலகில் பேசுவது சுலபமல்ல என்றார் அவர். ஒத்துழையாமை, வேலை நிறுத்தங்கள், புறக்கணிப்புகள், அரசு அமைப்புகளில் பங்கேற்கவும் அவற்றை இயக்கவும் மறுத்தல் போன்ற அகிம்சை போராட்டங்கள் ராணுவம் சாராது பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ள வெற்றிகரமான உத்திகளாக இருக்க முடியும், என்றார் அவர்.

காந்தியை ஒற்றைப் பதம் கொண்டு வரையறை செய்து விட முடியாது. அவரது எளிய வாழ்க்கைமுறையில் இது துவங்குகிறது. வாழ்நாளெல்லாம் அவர் பின்பற்றிய அடிப்படை கொள்கைகளை தன்னுள்ளடக்கிக் கொள்கிறது. புதிய உலக அமைப்புக்கான அவனது தரிசனம் நிர்மாண திட்டங்கள், சர்வோதய தத்துவம், இராணுவமற்ற, அகிம்சை பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. அதுவே இக்கணத்தின் தேவையும்கூட.

(கட்டுரையாளர் ஏ.எஸ். சசிகலா விசாகப்பட்டினத்தில் உள்ள கீதம் ஸ்கூல் ஆப் காந்தியன் ஸ்டடிஸ்சில் துணை பேராசிரியராய் உள்ளார்.)

நன்றி: Down To Earth,1-15 October, 2019

Image Credit : Humanium.com

காந்தியின் சிந்தனை வளர்ச்சி - எஸ். இர்ஃபான் ஹபீப்

$
0
0


தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே அங்கு வாழும் இந்திய சமூகத்தினரின் நலன்களைக் காக்க அகிம்சை போராட்ட வழிமுறையை காந்தி முழுமையான வடிவுக்குக் கொண்டு வந்து விட்டார் என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. இதையே அவர் பின்னர் 'சத்தியாகிரகம்'என்று அழைத்தார். இக்காலகட்டத்தில் அவர் மீது லியோ டால்ஸ்டாய் மற்றும் ஜான் ரஸ்கினின் எழுத்து மிகப் பெரிய தாக்கம் செலுத்தியிருந்தது. லியோ டால்ஸ்டாயிடம் இருந்து அவர் வன்முறை மற்றும் நுகர்வுக் கலாசாரத்தின் மீது வெறுப்பைப் பெற்றுக் கொண்டார். ஜான் ரஸ்கினிடமிருந்து உழைப்பு மற்றும் ஏழைகள் மீது அக்கறையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அவர்கள் அளித்த விமரிசனத்தை மேற்கத்திய தொழில்மய சமூகத்தின் மீது மட்டுமே பொருத்திப் பார்த்தார். மேற்குலகை வாதித்த தீதுகள் பழமையான இந்தியச் சமூகத்தில் கிடையாது என்று வாதிட்டார் அவர். 1909ஆம் ஆண்டு அவர் எழுதிய 'ஹிந்த் ஸ்வராஜ்'நூலில் இந்த அடிப்படைச் சிந்தனைகளை முன்வைத்தார் காந்தி.

ஸ்வராஜ்யம் பெற்ற இந்தியா தவிர்க்க வேண்டிய மேற்குலகின் தீமைகள், ஹிந்த் ஸ்வராஜில் பட்டியலிடப்பட்ட அளவில், திகைக்க வைக்கின்றன: தேர்தல் வழி மக்களாட்சி அப்படிப்பட்ட ஒரு தீது- ஏனெனில், பாராளுமன்றங்கள் "உண்மையில் அடிமைத்தனத்தின் சின்னங்கள்". பெண்கள் தம் இல்லங்களுக்கு வெளியே பணியாற்றக் கூடாது. அதை அனுமதித்தால் மேற்கில் வாக்குரிமை கேட்டுப் போராடிய பெண் விடுதலை இயக்கங்கள் போன்ற தீதுகள் தோன்றும். எல்லாவற்றுக்கும் மேல், இயந்திர அடிப்படையில் அமைந்த நவீன தொழிலமைப்பு நிராகரிக்கப்பட வேண்டும். குழந்தைத் திருமணம், பெண்கள் பல ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது போன்ற சில குறைகள் இந்திய சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.  ஆனால், ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வது குறித்தோ தீண்டாமை குறித்தோ அதில் எதுவும் பேசப்படுவதில்லை. அவரவருக்கு ஒரு குறிப்பிட்ட வேலை நிர்ணயம் செய்து சந்தைப் போட்டிக்கு தடை செய்தது என்று சாதி அமைப்பு மறைமுகமாய் போற்றப்படுகிறது. பிரிட்டிஷ் கொண்டு வந்த ரயில்வேஸ், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் என்ற மூன்று தீதுகளால் இந்தியா நாசமாகிறது என்று பிரகடனம் செய்கிறார் காந்தி. இந்தியாவில் பருத்தி ஆலைகள் அமைப்பதற்கு பதில் மான்செஸ்டரிலிருந்து தொடர்ந்து இயக்குமதி செய்வதே மேலானது என்றும்கூடச் சொல்கிறார்! கட்டாயக் கல்விக்கு அவசியமில்லை. "முல்லாக்கள், (பார்ஸி) தஸ்தூர்கள், பிராமணர்கள்,"அளிக்கும் சமயக்கல்வியே போதுமானது.

ஏழைகள் குறித்து

ஏழைகள் மீது அத்தனை அக்கறை காட்டினாலும், ஹிந்த் ஸ்வராஜில் ஏழ்மையைப் போக்குவது பற்றி அவர் எதுவும் பரிந்துரைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளிப்படையாய் சொல்லாவிட்டாலும், சொத்துரிமை புனிதமானது என்ற உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். நியாயமான தேவைகளை அடையும் கோரிக்கைகளுக்கான அரசியல்  போராட்டம் என்று பார்த்தால், "அகிம்சை போராட்டம்"மட்டுமே அதற்குரிய கருவியாக இருக்க வேண்டும். ஆனால் அதை மேற்கொள்பவர்கள், "பூரண பிரமச்சரியம் கடைபிடிக்க வேண்டும், வறுமை நிலையைத் தழுவ வேண்டும், வாய்மையைப் பின்பற்ற வேண்டும், அஞ்சாமை வளர்த்துக் கொள்ள வேண்டும்."ஸ்வராஜ்யம் அடைந்த இந்தியா எப்படி நிர்வகிக்கக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்டு எந்த வழிகாட்டுதலும் இல்லை. இதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நவீன சிந்தனை, 'தேசம்'என்பதுதான். அதையும், பிற உலகில் எங்கும் உள்ளது போல், எந்த ஒரு சமயத்துடனும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது, என்கிறார்.

அதற்கு முன், 1915ஆம் ஆண்டு காந்தி இந்தியா வந்து இறங்கியபோது, இவையே அவரது எண்ணங்கள். அவர் குருவாய் வரித்துக் கொண்ட கோபால் கிருஷ்ண கோகலே 1912ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வந்தபோது இந்தக் கருத்துகள் குறித்து காந்தியை கண்டித்திருந்த போதிலும் அவற்றில் மாற்றம் இருக்கவில்லை (கோகலே 1915ஆம் ஆண்டு மறைந்தார்). ஆனால், காலப்போக்கில், கோகலேவைவிட கடுமையான ஆசிரியர் காந்திக்கு கிடைத்தார்- தம் மீட்சிக்கு இந்திய ஏழைகள் கொண்டிருந்த எண்ணங்கள் ஹிந்த் ஸ்வராஜில் காந்தி பரிந்துரைக்கத் தேர்ந்தெடுத்தவற்றுக்கு மிகவும் மாறுபட்டவையாய் அமைந்தன.

இந்தியாவில் அவர் எதிர்கொண்ட முதல் பிரச்சினை தீண்டாமை. அதை அவர் ஹிந்த் ஸ்வராஜில் பேசத் தவறியிருந்தார். 1915ஆம் ஆண்டு அவர் அகமதாபாத்தில் ஆசிரமம் நிறுவியவுடன் அங்கு "தீண்டாதார்"தம்பதியினரைச் சேர்த்துக் கொண்டவுடன் ஒரு பெரிய பிரச்சினை வெடித்தது. ஆனால் அவர் அதை எதிர்த்து நின்றார், தம்பதியர் தொடர்ந்து அங்கு இருந்தனர். அதன்பின் காந்தி இந்த விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுப்பதாயில்லை. இதன் பின்னும் அவர் வர்ணாசிரமத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால், அது கிட்டத்தட்ட மேல் சாதியினரில் பெரும்பாலானவர்களுடன் இணக்கம் பேண வேண்டும் என்பதற்காக மட்டுமே இருந்தது.

இண்டிகோ பயிர் செய்பவர்களுக்கு எதிரான சம்பரன் போராட்டம், 1917ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் பெருந்திரள் இயக்கம் துவங்கியபோது, தம் சொத்துரிமைகள் என்று இண்டிகோ பயிர் செய்தவர்கள் கருதுவதன் மேல் காந்தி எழுப்பிய கோரிக்கைகள் அத்துமீறல் செய்தின. வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த நூற்பாலை ஊழியர்களுக்கு ஆதரவாக 1918ஆம் ஆண்டு காந்தி உண்ணா விரதம் மேற்கொண்டது, நவீன தொழிலமைப்பு மீது காந்தி கொண்டிருந்த நம்பிக்கை வறட்சியுடன் இணக்கம் கொண்டது என்று நிச்சயம் கருத முடியாது.

1920-22 ஆண்டுகளில் ஒத்துழையாமை போராட்டம் நடத்தியபோது இன்னும் அடிப்படையான தளத்தில் காந்திஜியின் சிந்தனைகள் சோதனைக்கு ஆளாயின. துவக்கத்தில் அதன் பிரதான கோரிக்கை, 'கிலாபத்'பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் இருந்தது. கிலாபத் ஆட்டோமான் துருக்கியின் ஆளுகையில் இருந்த, முழுக்க முழுக்க இஸ்லாமிய நிறுவன அமைப்பு. இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளான பிரிட்டனும் பிரான்சும் அதை இப்போது அச்சுறுத்தின. அரசியல் போராட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள மதம் ஒரு நியாயமான ஆதார சக்தி என்ற கருத்து ஹிந்த் ஸ்வராஜின் உள்ளுறையாக இருந்தது என்பது கிலாபத் இயக்கத்துக்கு அவர் அளித்த ஆதரவை நியாயப்படுத்தக்கூடும். ஆனால் பெருவாரி மக்களின் ஆதரவைத் திரட்ட ஸ்வராஜ் அதனுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகளும் அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாமல் போனது. ஆனால் நிலவுடைமையாளர்களுக்கு குத்தகைப் பணம் கொடுக்க மறுத்தால்தான் அவர்களது பங்களிப்பு தாக்கம் கொண்டதாக இருக்கும். அப்போதுதான் விவசாயிகள் குத்தகை கட்ட மறுத்த காரணத்தால் நிலவுடைமையாளர்கள் அரசாங்கத்துக்கு வரி கட்ட முடியாமல் போகும். ஆனால் சொத்துரிமை பாதுகாப்பு குறித்து காந்தி கொண்டிருந்த கருத்துகளுக்கு இத்தகைய போராட்டம் முரணானது. எனவே, உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் இப்படிச் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுச் சொல்லி, 1921ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "அறிவுறுத்தல்கள்"வெளியிட்டு அதைத் தடை செய்தார் காந்தி. என்றாலும் விவசாயிகள், அதிலும் குறிப்பாய் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகள், பல இடங்களில் காந்தியின் தடையை மீறினர்.

கிராமிய பிணைப்பு

ஒத்துழையாமை போராட்ட அனுபவம் காந்தியை 1924ஆம் ஆண்டு 'நிர்மாணத் திட்டம்'வடிவமைக்கச் செய்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், 1924ஆம் ஆண்டு சட்டமன்ற அமைப்புகளில் அனைவருக்குமான விருப்ப வாக்குரிமையை வலியுறுத்தி ஒரு கட்டுரை எழுதி தேர்தல் ஜனநாயகத்துடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு விட்டார்.  அவரது நிர்மாணத் திட்டம் கிராமப்புற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. இயந்திரங்களால் நூற்கப்பட்ட ஆடைகளை நிராகரித்து காதி ஆடைகளுக்கு முன்னுரிமை அளித்தது. இங்கு, இயந்திரங்களைக் கொண்டு செய்யப்பட்ட அந்நிய துணிகளுக்கு, குறிப்பாய் பிரிட்டிஷ் துணிகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததும் ஒரு காரணமாக இருந்தது. இந்தத் திட்டத்தில் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை மேம்படுத்தும் பிரசாரத்துக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் இடமிருந்தது.  இதன்கூடவே காந்தி, சொத்துரிமை கொண்டவர்கள் ஏழைகளின் அறங்காவலர்கள், ஆலை முதலாளிகள் தம் ஊழியர்களை கவனித்துக் கொள்ள வேண்டும், நிலவுடைமையாளர்கள் தம் குத்தகைதாரர்கள் நலம் பேண வேண்டும், என்ற கோட்பாட்டையும் உருவாக்கிக் கொண்டார். இது வர்க்கப் பகைமைகளைக் கடந்து செல்லும் முயற்சி என்பது தெளிவு. ஆனால் இந்த அணுகுமுறை நடைமுறையில் வெகுக் குறைவான மாற்றத்தையே ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது- வெகுச் சில ஜமீன்தார்களே தம் குத்தகைதாரர்கள் மீது பணமழை பொழிந்தார்கள்.

1930ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் இன்னொரு சுழற்சி துவங்கியபோது, 1929-32 ஆண்டுகளின் மாபெரும் பொருளாதாரப் பின்னடைவு விவசாயிகளைக் கடுமையாக பாதித்திருந்தது என்பதால் அது விவசாயப் போராட்டமாக மாறும் போக்கை வெளிபடுத்தியது. இப்போது தொழிற்சாலைகளில் உழைக்கும் வர்க்கமும் வளர்ந்து கொண்டிருந்தது. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஜவஹர்லால் நேருவின் புரட்சிகரமான அணுகுமுறை தனிப்பட்ட ஈர்ப்பு கொண்டதாய் இருந்தது. நேருவே 1917ஆம் ஆண்டின் சோவியத் புரட்சியால் பெரிய அளவில் தாக்கம் கொண்டிருந்தார். மிகப்பெரிய அளவில் பெருந்திரள் மக்களின் ஆதரவு கொண்ட ஆளுமை என்பதை அங்கீகரித்து நேருவுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியிருந்தார் காந்தி. இப்போது நேருவின் அணுகுமுறைக்கு தன் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க அவர் தயாராக இருந்தார் என்பதில் ஐயமில்லை. இதனால்தான் அடிப்படை உரிமைகள் குறித்த நேருவின் தீர்மானத்தின் வரைவு வடிவுக்கு அவர் உடனடியாக ஆதரவளித்தார். 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் கராச்சி மாநாட்டில் காந்தி அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

காந்தி இன்னும் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிராத பல அடிப்படை கொள்கைகளை அந்தத் தீர்மானம் நிறுவியது- வாக்காளர்களாய் மட்டுமல்ல, பொதுப் பணிகளில் நியமனம், வர்த்தகத்தில் பங்கு என்று எங்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை, விவசாயக் குத்தகைக் கூலியை குறைத்தல், நிலவுடைமையாளர்களின் வருவாய் மீது வரி விதித்தல், முக்கியமான துறைகளின் அரசுடைமை அல்லது அரசு நிர்வாகம், இறுதியில், ஏழைகளின் கடன்களைக் குறைப்பது.

தான் விட்டுக் கொடுத்த சில கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள காந்தி பிற்காலத்தில் விரும்பியிருக்கலாம் (இதை, "ஜவஹர்லாலின் ஆதரவைப் பெற கொடுக்கப்பட்ட உயர்ந்த விலை,"என்று சர். தேஜ் பகதூர் சாப்ரூ விவரித்தார்). எனவேதான், நேரு வெளிப்படையாகவே கோபப்படும் வகையில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஜமீன்தார்களிடம், அவர்கள் உரிமைகளை யாராவது மீறினால் அதற்கு எதிராய் ஜமீன்தார்களுக்கு தன் ஆதரவு இருக்கும் என்று உறுதி அளித்தார் காந்தி. 1934ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறைப்படி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும்போது, காங்கிரஸ் கட்சியில் "சோஷியலிஸ்ட் பிரிவு"மேலோங்கி வளர்வதை ஒரு குற்றமாய்ச் சொன்னார் காந்தி. ஆனால், 1937-39 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்திலும் பீகாரிலும் ஆட்சியமைத்த காங்கிரஸ் மாகாண அரசுகள் தம் குத்தகைதாரர்கள் மீது ஜமீன்தார்களுக்கு உள்ள உரிமைகளைக் கட்டுப்படுத்த சட்டமியற்றியபோது காந்தி எவ்வகையிலும் அதை எதிர்த்ததாகச் சான்றுகள் இல்லை.

பூனா உடன்பாடு

உண்மையில் இந்த காலகட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களை மேம்படுத்துவதையே தன் முக்கியச் செயல்பாடாக வைத்திருந்தார். அவர்களை அவர் இப்போது ஹரிஜன்கள் என்று அழைத்தார். 1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் பிரகடனப்படுத்திய கம்யூனல் அவார்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் என்று தனி தொகுதிகள் வழங்கப்பட்டதை எதிர்த்து அவர் உண்ணாமைப்  போராட்டம் மேற்கொண்டார்.  இதைத் தொடர்ந்தே தாழ்த்தப்பட்ட சாதி தலைவர்களுக்கும் சாதி இந்து பிரதிநிதிகளுக்குமிடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இன்று அந்த ஒப்பந்தம் கடுமையாய் விமரிசிக்கப்படுகிறது என்றாலும் அதற்கு மாறாய், தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதி எண்ணிக்கையை இந்த ஒப்பந்தம் உண்மையில் அதிகரித்தது. மாகாண சட்டசபைகளில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்தது, கம்யூனல் அவார்டில் இல்லாத வகையில் மத்திய சட்டசபையில் அவர்களுக்கு 18% ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒவ்வொரு தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டும் முதல் வாக்களித்து அங்கு போட்டியிடத் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையும் இருந்தது.

1932ஆம் ஆண்டு முதல் காந்திஜி தீண்டாமைக்கு எதிராகவும் 'ஹரிஜன'நலனுக்காகவும் தேசமெங்கும் பிரச்சாரம் செய்ய பூனா ஒப்பந்தம் பச்சைக் கொடி காட்டுவதாக அமைந்தது. நாட்பட நாட்பட, சாதி அமைப்புக்கு எவ்விதத்தில் ஆதரவளிப்பதையும் தத்துவ விளக்கம் அளித்து வர்ணாசிராமத்துக்கு  நியாயப்படுத்துவதையும் தவிர்த்தார் காந்தி.

இரண்டாம் உலக யுத்தமும் (1939-45) 1942ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அளித்த அனுபவங்கள் காந்தியின் சமூக பார்வையை எந்த அளவுக்கு மாற்றின என்பதைக் கணிப்பது கடினம். கிராமிய இந்தியா குறித்த சில நாஸ்டால்ஜியா உணர்வுகள் அவருக்கு இருந்திருக்கலாம்- ஹிந்த் ஸ்வராஜில் சித்தரிக்கப்பட்ட வகையில் தன் ஏழ்மையிலும் மனநிறைவு கொண்ட மக்கள், ஏழைகளுக்கு பாதுகாவலர்களாக பணக்காரர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தல். ஆனால், ஒட்டுமொத்தத்தில், சாதியமைப்பின் ஏற்றத்தாழ்வுகளையும்  பெண்களுக்கு எதிரான மனப்பான்மையையும் மேலும் கடுமையாக நிராகரித்தார் காந்தி.

எல்லாவற்றுக்கும் மேல், இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டு தேசத்தை விழுங்கிய மதக் கலவரத்துக்கு எதிராய் அவர் கல்மலையென நின்றபோது காந்தியின் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்த கவலைகள் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்றன. காந்தியின் மகத்தான இறுதிச் செயலாக, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட வேண்டிய 55 கோடி ரூபாயை இந்தியா கொடுக்க வேண்டும் என்றும், தம் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்ட தில்லி வாழ் முஸ்லிம்கள் வீடு திரும்பி வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில், உண்ணா விரதம் மேற்கொண்டார் காந்தி. ஸர்வதேசீய உணர்வும் மானுட நேயமும் இதோ இங்கே நடைமுறையில் வலியுறுத்தப்பட்டது- அதற்காக அவர் ஜனவரி 30, 1948ல் தன் உயிரை விலை கொடுத்தார். ஹிந்த் ஸ்வராஜ் எழுதிய காலத்தில் எந்த அளவு உறுதியாக இருந்தாரோ, அதே அளவு தன் வாழ்வின் கடைசி நாள் வரை காந்தி சமூக நல்லிணக்கத்தில் உறுதியாய் இருந்தார் என்பதை நினைவு கூர்வதே பொருத்தமாய் இருக்கும்.

(இர்ஃபான் ஹபீப் ஒரு வரலாற்றாய்வாளர். அண்மையில், ‘Inquilab: Bhagat Singh on Religion and Revolution’ என்ற நூலை எடிட் செய்திருக்கிறார். )

நன்றி: The Hindu, 1.10.2019

Image Credit : Fine Art America

இன்றைய காந்தியம் - சந்தீப் பானர்ஜி

$
0
0


ஒருவரை அவர் பிறந்து நூற்று ஐம்பதாவது ஆண்டில் மதிப்பிடுவது என்பது அந்த மனிதருக்கு இன்றைய சமூகச் சூழலில் உள்ள பொருத்தத்தை வரையறுப்பதாகும். இதே கோணத்தில்தான் நாமும் காந்தி பிறந்து 150ஆவது ஆண்டில் அவரை எடை போட வேண்டும். அதே சமயம் பொருத்தம் என்று சொல்வது அதனளவிலேயே சுருக்கமான மதிப்பீடாகவும் இருக்கலாம். ஏனெனில், ஒரு மனிதனின் சிந்தனைகள் பின்பற்றப்படாமல் அவனது நினைவு மட்டும் எஞ்சியிருக்க முடியும். ஆனால் காந்தி என்றுமுள்ளவராய்த் தெரிகிறார். நம் பணத்தாள்களில் இருக்கிறார், இத்தேசத்தில் நிகழும் பொருளாதார, அரசியல் கதையாடல்களில் மீண்டும் மீண்டும் அவர் சுட்டப்படுகிறார். அவரது பிறந்த நாளை நாம் அரசு விடுமுறையாய் கொண்டாடுகிறோம். ஆனால், காந்தி பணத்தாள்களிலும் மேடைப் பேச்சுகளிலும் இருந்தால் மட்டும் போதுமா என்பதுதான் கேள்வி. அல்லது, காந்தி எந்த சிந்தனைகளின் விளக்கமாய்த் திகழ்கிறாரோ, அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யப் போகிறோமா?

இந்தியாவின் நடப்பு விவகாரங்களைப் பார்க்கும்போது காந்தியம், அச்சொல்லின் பொருள் எதுவாக இருப்பினும், இந்த நூற்றாண்டில் மறைந்து விட்டது என்று ஊகிக்க இடமிருக்கிறது. ஆனால் காந்திய தத்துவத்தின் அடிப்படை குறிக்கோள்களை விவாதிக்கும்போது, நம்மைப் பீடித்துள்ள அறப் பிரச்சினைக்கு காந்திய கொள்கைகளைக் கொண்டு தீர்வு காண முடியும் என்பதை உணர்கிறோம். எனவே, காந்தி ஒரு சிந்தனையாளராக தனித்துவம் பெற்ற நல்லியல்புகளை நாம்தான் கண்டறிய வேண்டும். அவற்றை இன்றைய காலகட்டத்தில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதையும் மனமூன்றிச் சிந்திக்க வேண்டும்.

மகாத்மா காந்தி பன்மைத்துவம் காக்க விழைந்தார். சிந்தனைகள் ஒன்றெனக் கலப்பதை அவர் முன்னிறுத்திய காரணத்தால் அவரது அரசியலில் குறுகிய மனப்பான்மை வெளிப்பட்டதாய்ச் சொல்ல முடியாது. காந்தியின் எழுச்சியால் இந்திய தேசீய உணர்வு வளர்ச்சி கண்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரே அதிக அளவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் ஆளுமையாய் மாறினார். அது பல்வகைப்பட்ட அரசியல் சித்தாந்தங்களின் காலம். அவற்றில் பல ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. ஆனால் காந்தி ஒருதலைபட்சமான அரசியல் அணுகுமுறையை எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. அரசியலில் அனைவருக்கும் உரிய பங்களிக்க வேண்டும் என்றார் அவர். அதே சமயம், ஒரே மக்களாய்ச் சேர்வதிலும் பரஸ்பரம் நன்மை செய்வதிலும் நம்பிக்கை கொண்டிருந்த இந்திய மரபைப் பேணினார். முஸ்லிம் லீக்குடன் அவர் நிகழ்த்திய விவாதங்களில் தோல்வி, அல்லது ஆர்எஸ்எஸ்சுடன் அவர் கொண்டிருந்த உறவில் இறுக்கம் ஏற்படுவது போன்ற கட்டங்கள் இருக்கின்றன. ஆனால் காந்தி ஒருபோதும் இரு தரப்பு உரையாடல் கொள்கையிலிருந்து வழுவவில்லை. மகாத்மாவின் உத்தி என்று பார்த்தால், காந்தியின் உத்தியில் ஒரு சில பிழைகள் நேர்ந்திருந்தாலும், அவரது அடிப்படை  செயல்திட்டம் தொடர்ந்து வெற்றி கண்டது என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஒரு முறை சொல்லியிருப்பதை நினைவு கூரலாம்.

வரவிருக்கும் தலைமுறைகள் ஏன் மகாத்மா காந்தியை நினைவில் கொள்ள வேண்டுமென்றால், அவர் அகிம்சைத் தத்துவத்தை போராட்ட வழிமுறையாய்க் கொண்டதுதான் காரணம். நீதி, விடுதலை மற்றும் மனித உரிமைகளைக் கோரும் போரில் அகிம்சையையும் அமைதியையும் எப்படி ஒரு வழிமுறையாய் நம்ப முடியும் என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. மேலை உலகம் முழுத் திகைப்பில் ஆழ்ந்தது. உலக யுத்தங்களின் தாக்கத்தில் ஐரோப்பா நொறுங்கிக் கொண்டிருந்த காலத்தில் இந்தப் போராட்ட முறை மேலெழுந்தது. ஹோலோகாஸ்ட்டும் இனவொழிப்பும் அமைதிக்கான ஏக்கத்தைத் தூண்டின. காந்தியும் அவரது தத்துவமும் அந்த அமைதியையே மையமாய்க் கொண்டன.

காந்தியின் ஒத்துழையாமை இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தை விட நீடித்த தாக்கம் கொண்ட மாறுபட்ட ஒரு வகை ஒத்துழையாமையாய் வெளிப்பட்டது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதில் பிரிட்டிஷார் குழப்பமடைந்தனர். ஹொமா ஹோலோன் (Romain Roland), ஃலூயி பிஷர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற மாபெரும் ஆளுமைகள் காந்திய சிந்தனையைத் தழுவியதில் வியப்பில்லை. மானுட நேயம் எனும் பீடத்தின் மீது மகாத்மா காந்தியின் அகிம்சைத் தத்துவம் உயர்ந்து நின்றது. இந்திய தத்துவ மரபின் ஆன்மீகத்தையும் சர்வ வியாபீகத்தையும் வெளிப்படுத்திய மனிதாபிமானி காந்தி. சம்பரனின் இண்டிகோ சாகுபடி செய்தவர்களாகட்டும், அகமதாபாத்தின் நூற்பாலைத் தொழிலாளிகளாகட்டும், ஏன், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டமாகவும் இருக்கட்டும், காந்தியின் இயக்கங்கள் அனைத்தும் நீதியும் சமூக உரிமைகளும் கோரி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள். பிரிவினை நெருப்பில் தேசம் சாம்பலாகிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவின் முன்னணி அரசியல்வாதிகளில் பலரும் தம் அரசியல் தந்திரங்களை செம்மைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், காந்தி வங்காளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள நவகாளி சென்றார். அங்கு அவர் இடையூடு செய்த காரணத்தால்தான் வங்காளத்தில் இனப்படுகொலையை நோக்கமாய்க் கொண்ட கலவரங்கள் அடங்கின. தனது சோஷலிச தத்துவத்தைக் கொண்டு காரல் மார்க்ஸ் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் மீட்சி குறித்து தன் அக்கறையால் குரல் எழுப்பினார் என்றால், காந்தியும் அதையே விழைந்தார், ஒரு வேளை அதைவிட முழுமையான வகையில் அவர் அதை அடைய விரும்பியிருக்கலாம். தீண்டாமைக்கு எதிரான போராட்டம் மேற்கொண்டார். தீண்டத்தகாதார் என்று சொல்லப்பட்டவர்களின் சமூக உரிமைகளைப் பெற்றுத் தர முனைந்தார். மார்டின் லூதர் கிங், தலாய் லாமா, நெல்சன் மண்டேலா, ஆங் சான் சூ கியி போன்ற தலைவர்கள் மீது ஒரு மனிதாபிமானியாய் காந்தியின் தாக்கம் இருந்தது.

பலருக்கும் காந்தியின் கிராம ஸ்வராஜ்யம் ஒரு பொன்னுலக கனவாய்த் தெரிகிறது. ஆனால், புதுமையான, தனித்தன்மை கொண்ட சிந்தனைகள் அனைத்தும் அடிப்படையில் போன்னுலகியல்பு கொண்டவையே என்பதை மறக்கக் கூடாது. நடைமுறைப்படுத்தப்படும் வரை தத்துவவாதிகள் அத்தனை பெரும் பொன்னுலக கனவில் இருக்கிறார்கள் என்றார் தாமஸ் மோர். எனவே, மக்கள் நலம், பொருளாதார சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை அடிப்படையாய்க் கொண்ட சமூக அமைப்பு குறித்து காந்தி கொண்டிருந்த கனவை முறையான, இணக்கமான சமூக அமைப்பின் ஆதர்ச நிலை என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கான விழைவே ஞானியர், தத்துவவாதிகள், லிபரல்கள் ஆகியோரை மனித நேயத்துக்கு எதிரான சக்திகளுக்கு எதிராய் போராடத் தூண்டியிருக்கிறது. இன்று இந்தியர்களில் பெரும்பான்மையினர் கிராமங்களில் வாழ்கின்றனர் என்ற நிலையில் கிராம ஸ்வராஜ்யம் குறித்து காந்தி கொண்டிருந்த கனவை நிராகரிக்க முடியாது. கிராமிய அளவில் பொருளாதார நலன் பெற குடிசைத் தொழில்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. பொருளாதார வளம் இல்லாதவர்கள், சமூக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் நிலையை மேம்படுத்த தனக்கு இருந்த ஆர்வத்தால் காந்தி சுவாமி விவேகானந்தர் மற்றும் ஆடம் ஸ்மித்தின் சிந்தனைகளையே எதிரொலிக்கிறார். அடிப்படை கல்வி குறித்து காந்தி கொண்டிருந்த எண்ணங்கள் இன்றும் உண்மையாய் இருக்கின்றன- அவர் பெருந்திரள் கல்வியை மட்டும் வலியுறுத்தவில்லை, கல்வியைக் கொண்டு நற்குணங்களின் ஆதார பண்புகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றார்.

மகாத்மா காந்தி புனிதரல்ல. அதுவரை இல்லாத எதையும் அவர் செய்து விடவில்லை. "இந்த உலகுக்கு கற்றுத் தர என்னிடம் எதுவுமில்லை. வாய்மையும் அகிம்சையும் மலைகள் போல் புராதானமானவை,"என்று அவர் ஒரு முறை கூறினார். காந்திய கொள்கைகள் இன்றும் இந்தியாவில் இல்லை என்றால், அதற்கு காரணம், நம் குறுகிய ஆசைகளுக்கு அப்பால் சிந்திக்கத் தெரியாத தனிமனிதர்கள் நாம், என்பது தெளிவு. நல அரசு, அல்லது உலகளாவிய அமைதி, சமத்துவ நீதி, என்று எந்தச் சூழலில் பேசினாலும் இந்தியா காந்தியைக் கைவிட முடியாது. பொருளாசையும் நுகர்வுக் கலாசாரமும் மிகுந்த உலகில் நாம் பொருளாதார, சமூக, அற விடுதலை பெற வேண்டும். அதற்கு 'சபர்மதியின் புண்ணியர்,'நமக்கு தேவைப்படுகிறார்.

(சந்தீப் பானர்ஜி கல்கத்தாவில் உள்ள அரியதாஹா ஸ்ரீ வித்யாநிகேதான் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்) 

நன்றி: Millenium Post

Image Credit: Washington Post

காந்தியின் வாழ்க்கை- அனைவருக்கும் ஒரு படிப்பினை - சந்தியா ராவ்.

$
0
0



மாணவர், ஆசிரியர், விடுதலை வீரர், இரட்சகர்... பலருக்கும் பல வகையில் பொருள்படுபவர் மகாத்மா காந்தி. அவர் எந்த பாத்திரம் தரித்தாலும், அதில் ஆழ்ந்து ஒன்றியவர். ஒரு சிலரே நடக்கக்கூடிய பாதையை ஒளிரச் செய்த முன்னோடி.

ஒரு முறை பத்து வயது சிறுமி என்னிடம் கேட்டாள்: "மகாத்மா காந்தியை தேசப்பிதா என்று சொல்கிறார்கள். ஆண்ட்டி, ஒரு மனிதருக்கு எப்படி அத்தனை குழந்தைகள் பிறக்க முடியும்?"மகாத்மா தேசப்பிதாவாய் "இருக்கும்போது", அல்லது, "நடந்து கொள்ளும்போது"கூட அவருக்கே பிறந்த நான்கு மகன்களுடனும் நேரம் செலவழிக்க அவரால் முடியவில்லை என்பது விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. வாழ்வினும் பெரிதாய் பல்லாண்டு காலம் தொடர்ந்து உருவாக்கப்பட்ட அவரது ஆளுமையின் விரிசல்களை மகாத்மா காந்தியின் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால், அதே விரிசல்கள் தன் குறைகள் என்று எவற்றைக் கருதினாரோ அவற்றைக் களையவும், தன் வலிமைகள் என்று எவற்றைக் கருதினாரோ அவற்றை வளர்த்துக் கொள்ளவும், அவர் கடினமாய் உழைத்ததையும் உணர்த்துகின்றன. இந்த விரிசல்கள் அவரது வாழ்க்கை அணுகுமுறை மீது ஒளி பாய்ச்சுகின்றன.

முன்னாபாய் என்னதான் முயற்சி செய்தாலும் அவரால் காந்தியாக முடியாது. ஆனால் இன்றுள்ள பல குழந்தைகள் நினைப்பது போல் ராகுல், ராஜீவ் அல்லது இந்திராவுக்கு உறவினர் அல்ல காந்தி என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆம், அவரது தந்தை ஜவஹர்லாலின் ஆசிரியர் 'இந்துவுக்கு'ஒரு 'குடும்ப உறுப்பினர்'தான், ஆயிரக்கணக்கான பிறருக்கு 'பாபு'தான்.

இதை நினைத்துப் பாருங்கள்- குழந்தைப் பருவத்தில் காந்தி கூச்ச சுபாவம் கொண்டவர், பயப்படுபவர், செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்டவர்,  அம்மாப்பிள்ளை. அவருக்கு இருட்டைப் பார்த்தால் பயம். அவருக்கு பள்ளி செல்ல பிடிக்கவில்லை, மோசமான மதிப்பெண்கள் எடுத்தார். கல்லூரியை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நல்ல வேளையாக, சரியான வழிகாட்டுதலும் உதவி செய்யும் குடும்பத்தினரும் இருந்ததால் அவர் இங்கிலாந்து சென்று சட்டம் படிக்க முடிந்தது. அப்போது, அவர் 19ஆம் வயது பிறந்த நாளை நெருங்கிக் கொண்டிருந்தார். தான் பாசமாக இருந்த அம்மாவைப் பிரிந்து சென்றார், தான் உரிமை பாவித்த மனைவியையும் கைக்குழந்தையையும் பிரிந்து சென்றார். மிக மோசமாக ஆங்கிலம் பேசினார், மரக்கறி உணவே உண்பவர், அவர் கையில் பணம் புரண்டது என்று சொல்ல முடியாது.

ஆனாலும் இந்த இளைஞர் இங்கிலாந்தில் தடுமாறவில்லை.  சிறிது குழப்பத்தில் இருந்தாலும், முட்டாள்தனமான பிழைகள் செய்தாலும், அந்நிய வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொண்டு விட்டார். ஒரு வேளை அவர் இந்திய வாழ்விலிருந்து தப்பிக்க விரும்பியதால் இங்கிலாந்து பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கலாம். அவருக்கு இந்தியாவில் அத்தனை பிணைப்புகள் இருந்தாலும் எதிர்காலம் இருப்பதாய்த் தோன்றவில்லை, எப்படியாவது வெளியே போனால் போதும் என்ற நிலையில் இருந்தார். ஒரு வேளை அதனால் அவர் விடாப்பிடியாய் இங்கிலாந்து வாழ்வைப் பற்றிக் கொண்டிருந்திருக்கலாம்.


வாழ்க்கைக் கல்வி

கல்லூரி படிப்பு படிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அவர் தனக்கு உள்ளேயும் வெளியேயும் நடப்பதைக் கவனிக்கத் துவங்கினார். மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கிறார், எப்படி வாழ்கிறார்கள் என்று கவனித்தார், நிறைய வாசித்தார், தன் மொழித்திறன்களை மேம்படுத்திக் கொண்டார், படிப்பில் கவனம் செலுத்தினார். அவர் கற்றுக் கொள்ளத் துவங்கினார். வாழ்க்கை அவரது மிகச் சிறந்த ஆசிரியரானது.

அதன்பின் தென்னாப்பிரிக்கா, பீட்டர்மாரிட்ஸ்பார்க், கூட்டுறவு வாழ்க்கை, அங்கு வாழும் இந்தியர் உரிமைகளுக்கான போராட்டம் என்று ஒவ்வொன்றாய் வந்தன. அவர் மெல்ல மெல்ல ஒரு அரசியல் ஆளுமையாய் வளர்ந்தார். இந்தியா திருப்பினார், விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். சுதந்திரம் கிடைத்தது. பிரிவினையைத் தன் தனிப்பட்ட தோல்வியாய்ப் பார்த்தார், சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பின் புனிதரானார், காந்தியம் வளர்ந்தது, ஒரு பிரச்சாரமாகப் பெருகியது. அரசியல் சக்திகள் அதைப் பயன்படுத்தி வீணடித்தன. காந்தி வேடம் போட்டு குழந்தைகள் கொண்டாட, அக்டோபர் இரண்டாம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறார். நிஜமான காந்தி இதிலெல்லாம் எங்கேயோ தொலைந்து விட்டார்.

ஆனால், எப்போதும் மேற்கோள் காட்டப்படும், "என் வாழ்வே என் செய்தி,"என்ற ஆப்தவாக்கியம் பொய்யல்ல, தற்பெருமையல்ல. அவரது வாழ்வு பல்வேறு படிப்பினைகள் அளிக்கிறது. தானே தன் துணிகளைத் துவைத்துக் கொள்ளத் துவங்குமுன், அவர் துவைப்பதற்கு எது சிறந்த வழி என்று அறிந்து கொண்டார் என்பது ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. அதைப் பற்றி எத்தனை படிக்க முடியுமோ அத்தனையும் படித்தார். அதே போல் தான் நேச்சுரோபதி வாழ்வு முறைக்கு மாறி பிறருக்கும் அதைப் பரிந்துரைக்கும் முன், நேச்சுரோபதி பற்றி எத்தனை படிக்க முடியுமோ,அத்தனை படித்தார், என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அதையெல்லாம் கற்றுக் கொண்டார். தன் பரிசோதனைகளைப் பற்றியும் அனுபவங்களைப் பற்றியும் எழுதினார். எதையும் மறைக்கவில்லை. பிறர் அவருடன் உரையாடினார்கள், நீண்ட கடித பரிமாற்றங்கள் நடந்தன. இத்தனைக்கும் இடையில் அவர் பிரிட்டிஷ் அரசை வெளியேற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார், அரசியல் தலைவர்களையும் சாதாரண பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டிருந்தார், பயணம் செய்தார், சிறை சென்றார், ஆசிரமம் நடத்தினார், வாசித்தார், நடைப்பயணம் செய்தார்...

மனிதநேய வேர்ப்பிடிப்பு

தன் அனுபவம் குறித்து சிந்தித்தறிந்து காந்தி நடைமுறை திறன்களை எப்படி வளர்த்துக் கொண்டார் என்பதை 'தி லிவிங் காந்தி: லெசன்ஸ் பார் அவ்ர் டைம்ஸ்'என்ற நூலில் ஜேம்ஸ் ஓ'டூல் எழுதுகிறார்: "இதைச் செய்யும்போது காந்தி கற்றுக் கொண்ட ஆற்றல், 'பிறர் நலம்'நாடுவதற்கான விழைவே". இதுவே 'மனித நேயம்'என்று சொல்லத்தக்க தத்துவத்தின் அடிப்படையாய் ஆனது. உண்மை உரைத்தல், சுகாதாரம், மாறுவதற்கான விழைவு, இவை இந்த தத்துவத்தின் உள்ளார்ந்த இயல்புகள். டி.ஜி. டெண்டுல்கர் தன் மாபெரும் 'மகாத்மா'என்ற நூலில் ஓரிடத்தில், ஒரு விஷயத்தைப் பற்றி முன் சொன்னதற்கு மாறாக இப்போது சொல்கிறார் என்று நேரு காந்தியைக் கோபமாய் கடிந்து கொண்டதைச் சொல்கிறார். "ஆமாம்,"என்று பதிலளித்தார் காந்தி, "என் மனம் மாறிவிட்டது."

மொழிகளின் ஆற்றலை அறிந்திருந்தார் காந்தி. தாய்மொழி உட்பட பன்மொழிக் கல்வியை ஊக்குவித்தார் அவர். இந்த முயற்சியில் அவர் ஒரு கடற்பயணத்தின்போது உருது மொழி கற்றுக் கொண்டார். வலது கரம் களைத்துப் போனபோது இடது கரத்தால் எழுதக் கற்றுக் கொண்டார். செய்வகை கற்றலின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள். அவரும் அப்படிதான்- கற்றால் மட்டும் போதாது, நற்குணங்களையும் பிறரைச் சாராதிருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.

தன் கல்வித் தத்துவத்தை அவர் 'நயீ தலீம்'என்று அழைத்தார். "தக்ளியைப் பாருங்கள்... இந்தத் தக்ளியின் பாடமே நம் மாணவர்களின் முதல் பாடமாக இருக்கும். இதைக் கொண்டு அவர்கள் பருத்தி, லங்கஷயர், பிரிட்டிஷ்  பேரரசு பற்றி மிக முக்கியமான அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்... தக்ளியில் உள்ள பருத்தித் திரிகளின் எண்ணிக்கையை எண்ணச் சொல்லும்போதும், எத்தனை நூற்கப்பட்ட்து என்ற கணக்கு கேட்கும்போதும், படிப்படியாக கணித அறிவை ஒரு மாணவன் வளர்த்துக் கொள்ள முடியும்,"என்று காந்தி கூறியதாக மேற்கோள் காட்டுகிறார் அனில் சடகோபால். குழந்தைகள் எழுதக் கற்பதற்கு முன் ஓவியம் வரையக் கற்க வேண்டும் என்று நினைத்தார் அவர். அப்போதுதான் கையெழுத்து அழகாக இருக்கும்.

இன்று மனப்பாடக் கல்வி நம்மை ஒரு தோற்றுநோய்க் கிருமி எனப் பீடித்திருக்கிறது. காந்தியின் முழுமையான, தன்னைத் தான் சார்ந்து நிற்கும் கல்வி அணுகுமுறை மொத்தமாக ஏமாற்றுவதற்கும் வேலையின்மைக்கும் தடுப்பு மருந்தாய் இருக்க முடியும். மீண்டும் சடகோபாலை மேற்கோள் காட்டுவதென்றால், "... காந்திய கல்விமுறையின் மைய கொள்கை கூட்டுறவிலும் கூட்டு வாழ்விலும், ஏற்றத்தாழ்வையும் ஏழ்மையையும் போக்குவதிலும், இயற்கையோடு நிலைத்த வளர்ச்சி கொண்ட உறவு பேணுவதிலும் மனித நலனை வளர்க்கிறது."

காந்தியும் இளம் இந்தியாவும்

குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்? காந்தி அவர்களுக்கு என்ன சொல்கிறார்? மிரட்டுபவர்களை எதிர்த்து நில், உன் எண்ணத்தை வெளிப்படுத்து, தேடிக் கற்றுக் கொள். எல்லாவற்றுக்கும் மேல், எண்ணங்கள் உலகை மாற்ற வல்லன என்பதை வாழ்ந்து காட்டினார். அவரே சொன்னது போல், சமய நூல்கள் எல்லாம் உணர்த்துவது போல், "மன்னித்தல் வலியோரின் பண்பு."

சில பிரச்சினைகள் கடந்த காலத்துக்கு உரியவை, அவை பிறந்தது அங்கே, அவை இருக்க வேண்டிய இடமும் அதுவே- நம் குழந்தைகள் அமைதி நிலவும் எதிர்காலத்தை நோக்கி முன்னேற இது உதவட்டும்.

நன்றி: The Hindu Businessline

Image Credit: The Economic Times 

(சந்தியா ராவ் தூளிகா புக்ஸ்சில் சீனியர் எடிட்டராக இருக்கிறார். இந்தியாவில் சிறார் இலக்கியம் படைக்கும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அவர்.)

காந்திஜி எப்படி தேசப்பிதாவாகிறார்? - நசிகேத தேசாய்

$
0
0


மகாத்மா காந்தியை தேசப்பிதா என்று அழைத்த முதல் நபர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றம் அதிகாரபூர்வமாக காந்திஜியை தேசப்பிதா என்று பின்னர் அங்கீகரித்தது.

ஒரு சுதந்திர தேசத்தின் முதல் ஜனாதிபதிக்கே அந்த அடைமொழி அளிக்கப்படுவது பொது வழக்கம்.

மகாத்மா காந்தி அந்தப் பதவி வகிக்கவில்லை. அவர் அதற்காக ஏங்கவும் இல்லை. இந்தியாவை ஒரு சுதந்திர தேசமாக வளர்த்தெடுப்பதில் காந்திஜியின் பங்களிப்பைக் கண்ட சுபாஷ் சந்திர போஸ் அந்த அடைமொழியைத் தேர்ந்தெடுத்தார். ஒரு தேசம் அதன் பூகோள, அரசியல் எல்லைகளின் மீது உருவாகிறது. அதன் வரலாற்றால் அல்ல, அதன் ஒற்றுமையுணர்வால் அது உருவாகிறது. சில தேசங்கள் பொது மொழி காரணமாய் ஒற்றுமையுணர்வு பெறுகின்றன. வேறு சில தேசங்கள் பொதுச் சமயத்தால் ஒற்றுமையுணர்வு பெறுகின்றன. பொது மொழியால் ஒற்றுமையுணர்வு பெற்ற தேசங்களுக்கு வங்க தேசம் ஒரு உதாரணம், பாகிஸ்தான் பொதுச் சமய அடிப்படையில் உருவானது.

ஒற்றுமையுணர்வால் தேசீய உணர்வை இந்தியர்கள் வளர்த்துக் கொண்டனர். பிரிட்டிஷாருக்கு அடிமையாய் இருக்கும் நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற பொது ஏக்கம் இந்த ஒற்றுமையுணர்வுக்கு காரணமானது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்த முதல் தலைவர் மகாத்மா காந்தி என்று சொல்ல முடியாது. அவருக்கு முன் பலர் விடுதலை பெற அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். அப்படியானால் சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றம் ஏன் காந்திஜியை மட்டுமே தேசப்பிதா என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது?

இந்தியா போன்ற அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் வாழும் பல்வகைப்பட்ட மனிதர்களுக்கும் தேசீய உணர்வூட்டி அவர்களிடையே ஒற்றுமையுணர்வை உருவாக்கிய பெருமை மகாத்மா காந்தியையே சாரும். சாதாரண பாமர மக்களிடையே வலுவான உணர்வுப் பற்றை உருவாக்கி அவர் தேசீய உணர்வை வளர்த்தார். அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் காந்தியின் பெயர், முகவரி மற்றும் தொழில் என்னவென்று கேட்டபோது, காந்திஜி மிக எளிமையாக, தான் ஒரு விவசாயி, நெசவாளி என்று மட்டுமே சொன்னார். அவர் இப்படிச் சொன்னபோது அது நம் தேசத்தில் உழைக்கும் பல கோடி விவசாயிகள் மற்றும் நெசவாளிகள் இதயத்தில் அக்கணமே ஒரு எதிரொலி எழுப்பியது.

பெருந்திறல் மக்களுடன் அவர் இப்படிப்பட்ட ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்ள முடிந்தது என்றால் அதற்கு காரணம், ஆடம்பரம், படாடோபம் எதுவும் இல்லாத அவரது எளிய வாழ்வுமுறை. பணக்கார குடும்பங்களில் பிறந்து வளர்ந்து நகர்ப்புற வாழ்வு வாழ்ந்த பிற அரசியல் தலைவர்கள் போல் இல்லாமல், காந்தி காதி கோவணம் உடுத்தார், சர்க்கா சுற்றினார், வயல்களில் உழைத்து தன் கரங்களில் சேறு பூசிக் கொண்டார், சபர்மதியிலும் சேவாகிராமிலும் உள்ள ஆசிரம கழிப்பிடங்களைச் சுத்தம் செய்தார்.

பொதுமக்களுக்கு காந்திஜியிடம் பிணைப்பு ஏற்படுத்திய மற்றொரு விஷயம் அவர் எந்த மொழியில் உரையாடினார் என்பது. ஆங்கிலம் அல்லது சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி அல்லது மிகவும் மேட்டிமையான வகையில் பிராந்திய மொழி பேசுவதை விரும்பும் பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமல் காந்திஜி எளிய ஹிந்தி அல்லது குஜராத்தி மொழியில் பேசினார். அதே போல், பொதுக்கூட்டத்தில் தன்னுடன் மேடையில் இருக்கும் பிற அரசியல் தலைவர்களும் தங்கள் உரையை அவர்களுடைய தாய் மொழியில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் முகமது அலி ஜின்னாவை குஜராத்தி மொழியில் பேசச் செய்தார் காந்திஜி. இத்தனைக்கும், ஜின்னா ஆங்கில மொழியில் மட்டுமே உரையாற்றியவர். அதே போல், வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுரேந்திர நாத் பானர்ஜியை வங்க மொழியில் பேசச் செய்தார். காந்திஜி மேடைப் பேச்சால் மக்களை கரகோஷிக்கச் செய்பவர் அல்ல. அவர் பிரமாதமான பேச்சாளருமல்ல. அவர் தன் கருத்துகள் மக்களைச் சென்றடையும் வகையில் பேசுபவர், புரிந்து கொள்ள எளிதான மொழியில் பேசுபவர்.

மக்களிடையே காந்திஜியால் தேசீய உணர்வை வளர்க்க முடிந்தது என்றால் அதற்கு மற்றொரு காரணம் சத்தியாகிரக இயக்கத்தில் பெண்களையும் பங்கேற்கச் செய்வதில் அவர் கவனம் செலுத்தினார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உப்பு சத்தியாகிரகத்தில், அந்நிய ஆடைகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தில், தனிநபர் ஒத்துழையாமை இயக்கத்தில், என்று பல போராட்டங்களிலும் பல பத்து லட்சம் பெண்கள் தேசமெங்கும் பங்கேற்றனர்.

அகிம்சை போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சிறை செல்ல முன்வந்தனர். ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் அவர் அயராது பாடுபட்டார். இந்த நோக்கத்துக்காக போராடிய அவர் ஜனவரி 30, 1948 அன்று ஒரு இந்து மதவெறியரால் கொலை செய்யப்பட்டார். இந்துக்களிடையே நிலவிய தீண்டாமையாகிய தீமையை நீக்குவது அவரது லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. இதற்காக அவர் ஹரிஜன் சேவக் சங்கம் அமைத்தார். பொதுவாக உயர்சாதி இந்துக்கள் தோல் வேலை செய்வதைத் தவிர்க்கும் நிலையில் தன் உயர்சாதி இந்து சகாக்கள் தோல் பொருட்கள் செய்ய வேண்டும் என்று ஊக்குவித்தார். அவரது செயல்கள் எல்லாமே சமயம், சாதி, மொழி, பாலினம் என்று பல்வகைப்பட்ட மக்களை தேசீய ஒருமைப்பாட்டுக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் ஒன்று திரட்டுவதை நோக்கமாய்க் கொண்டிருந்தன. அவை எல்லாமே காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்து 1915ஆம் ஆண்டு இந்தியா திரும்பியபின் கவனமாய்ச் சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியவை.

தேசீய விடுதலை போராட்டத்தில் பங்கேற்கும்முன், காந்திஜி ஓராண்டு முழுதும் இந்தியா எங்கும் பயணித்தார். பொதுமக்களையும் தலைவர்களையும் சந்தித்து உரையாடி பிரச்சினைகளைப் புரிந்து கொண்டார். அதன் பின் அவர் தன் சத்திய சோதனைகளை நிகழ்த்த அகமதாபாத் அருகில் சபர்மதி ஆசிரமம் துவக்கினார். பிரமச்சரியம் உட்பட பதினொரு பிரதிக்ஞைகள் கொண்ட கடுமையான நியமத்தை ஆசிரமவாசிகள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காந்திஜி தான் கூறிய அனைத்தையும் தன் வாழ்விலும் கடைபிடித்தார். பிற அரசியல் தலைவர்களிடமிருந்து இதுவொன்றே அவரை வேறுபடுத்துகிறது. இதுவே அவரை மகாத்மாவாக்கி, அவருக்கு தேசப்பிதா என்ற அடைமொழியையும் பெற்றுத் தருகிறது.

நன்றி : The Leaflet

Image Credit : The Guardian

(காந்தியின் அந்தரங்க காரியதரிசி மகாதேவ் தேசாயின் மகன் நசிகேத தேசாய் ஒரு பத்திரிகையாளர். )

உள்ளும் புறமும், அந்தரங்கமும் அரசியலும், பிணங்கும் பயணம்- ஸ்வர்ணா ராஜகோபாலன்

$
0
0

கார்களின் பின்னுள்ள ஸ்டிக்கர்கள், போஸ்டர்கள், டி-ஷர்ட்கள். எல்லாம் எங்கெங்கும் நம்மிடம், "நீ காண விரும்பும் மாற்றம் நீயாக வேண்டும்,"என்று அறிவுறுத்துகின்றன. என்ன இருந்தாலும் இதைச் சொன்னவர் காந்திஜி. பள்ளிப் பருவத்தில் பார்த்திருந்தால் நான் இதை நம்பியிருக்க மாட்டேன். அரசு பிரசாரத்தின் உணர்விழக்கச் செய்யும் சக்தியுடன் கருப்பு வெள்ளையில் காந்திக்கு புகழாரங்கள் சூட்டப்பட்டன. அந்த காந்தி அலுப்பூட்டும் புனிதர்.

என் குடும்பத்தில் பேசப்பட்ட காந்தி அதைவிட நிஜமானவர். என் அம்மாவும் அவரது சகோதரிகளும் காந்தி சென்னை வந்தபோது இளம் சேவா தள சேவகர்களாய் பணிவிடை செய்திருந்தார்கள். ஒவ்வொரு நாள் மதியமும் ஆயிரக்கணக்கானவர்கள் அவரது பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருவார்கள், அந்தக் கூட்டம் அந்நாளைய சென்னையின் வர்த்தக நகர் நெடுக  திரண்டிருந்தது என்று அறிந்து கொண்டோம். அவர்களால் எதைப் பார்க்க முடிந்தது, என்ன கேட்க முடிந்தது என்பதெல்லாம் விஷயமே அல்ல. அவரது காந்த ஒளி காற்றுவெளியை நிறைத்தது. காந்தி அன்புடன் பேசினார். பருவ வயது பெண்கள் அந்தக் கூட்டத்தில் எந்த அச்சமுமில்லாமல், யாருடைய தொந்தரவும் இல்லாமல் உண்டியல்கள் ஏந்தி நடந்து செல்ல முடிந்தது. அவர் ஒரு கையெழுத்துக்கு ஐந்தணா வாங்கினார். வேகமாக நடக்கும், அன்பு மிகுந்த, சிரித்துக் கொண்டிருக்கும், ஆனால் கறாரான காந்தி, மனிதராய்த் தெரிந்தார். ஆனால் அவர் அப்போதும் என் ஆதர்ச ஆளுமை என்று சொல்ல முடியாது.

அமைதி ஊழியராய் இருந்த என் மாமா ஒருவர் தான் காந்தியின் எழுத்தை அறிய வந்ததைச் சொன்னபோது நான் அவரை ஏளனம் செய்தேன். அவர் அதற்கு என்ன செய்தார் என்பதை இப்போது நான் காந்திய தன்னடக்கம் என்று குரிப்பிட்டுச் சொல்வேன். ஏனென்றால், நேர்மையும் எளிமையும் நம் பொது வாழ்வின் பிற ஒவ்வொரு இடத்திலும் மறைந்து விட்டது. "அவர் சொல்வதில் என்ன தவறு என்பதைப் புரிந்து  கொள்ளுமளவு எனக்கு விஷயம் தெரியாது,"என்றார் அவர். எனக்கும் தெரியாது, ஆனால் அந்த இளம் வயதில் அறியாமை ஒரு தடையல்ல.

காந்தியின் கருத்துகளில் ஒன்று என்னைக் கவர்ந்தது. நான் வளர்ந்த பின்னும் அதைப் பின்பற்றினேன். சத்தியாகிரகி முதலில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கருத்து. கல்லூரியில் பொலிடிகல் சயன்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது இந்த விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். அது என்னோடு எப்போதும் இருக்கிறது. உலகைத் திருத்தும் தகுதி  அடையும் முன் நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற லட்சியம் என்னை விட்டு அகல மறுக்கிறது. புலன்களை வெல்லவும் சினத்தை ஆற்றவும் அகந்தையை அழிக்கவும் தவம் செய்தது பற்றிய புராண கதைகளை எனக்கு இது நினைவூட்டுகிறது. என் இதயத்தில் ஏதோ ஒன்றை நோக்கி இது அழைப்பு விடுக்கிறது. வேறொருவர் மீது என் மதிப்பீடுகளைத் திணிக்கவும் என் வழிதான் சரியான வழி என்று சொல்லவும் நான் யார்?

காந்திஜி தன் குறைகளையும் தோல்விகளையும் ஒப்புக் கொண்டார் என்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. அவற்றை அவர் தன்னால் முடிந்த அளவு நேர்மையாகப் பார்த்தார். தன் அக மற்றும் புறப் பயணங்களில் வெளிப்படையாய் இருந்தார். பொருத்தமாக இருக்கிறது என்று தான் நினைத்த அளவில் நடந்து கொண்டார், அதையும் பொதுவில் நாலு பேர் அறியச் செய்தார். ஆனால்அவருடைய குறைகளும் லட்சியமும் அவரால் என்ன செய்ய முடிந்ததோ அதைச் செய்ய அவருக்கு தடையாய் இருக்கவில்லை. இரு பயணங்களும் ஒரே நேரத்தில் நடந்தன, சில சமயம் ஒன்றுக்கொன்று உரையாடிக் கொண்டன. குற்றமற்றது நன்மைக்கு பகையாய் இருக்க வேண்டாம்,"என்று நாம் இப்போது சொல்கிறோம். ஒரு ச்த்தியாகிரகியாய் நான் குறைபட்டவளாய் இருக்கலாம். ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைத் தடுப்பதாக இருக்க வேண்டியதில்லை. அவர் ஏராளமாய் எழுதியதில் ஒரு சிறு பகுதி மட்டுமே வாசித்திருக்கிறேன். என்றாலும், நான் காந்தியின் வாழ்க்கை பற்றி படித்தவரை ஒன்று கற்றுக் கொண்டிருக்கறேன்- அவர், 'என் வாழ்வே என் செய்தி,'என்று சொன்னார்.

எத்தனை எழுதியிருக்கிறார்! அதற்காக, நான் மிகவும் பொறாமைப்படுகிறேன். என் வாழ்க்கை அவரளவு பரபரப்பானது அல்ல. அத்தனை நவீன கருவிகளும் என்னிடம் இருக்கின்றன. ஆனால்கூட, சிந்திக்கவும் எழுதவும் எனக்கு நேரமில்லை என்று குறைபட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்வது, பிரார்த்தனை, உடற்பயிற்சி, சரக்கா சுற்றுதல், மற்றவர்களை குணப்படுத்துதல், அரசியல் உரையாடல்கள், அந்தரங்க அறிவுரைகள், கடிதம் எழுதுதல், செய்தித்தாள்கள் பதிப்பித்தல் என்று அன்றாட அலுவல்கள் இருந்ததை காந்தியின் சரிதைகள் விவரிக்கின்றன. அவர் அவ்வளவு செய்தார் என்பதுகூட எனக்கு அதிசயமாக இல்லை. அவற்றில் வெளிப்படும் நேர்மை, சிந்தனை, அஞ்சாமை போன்ற இயல்புகளே அதிசயிக்க வைக்கின்றன. நாம் அவரது ஐயங்களை, அந்தரங்க ரகசியங்களை, முரண்களை, மாறுபட்ட செயல்களை அறிகிறோம் என்பது தன்னை ஒரு வணிகப் பொருளாய் வளர்த்துக் கொள்ளும் புனைவுகளின் காலத்தில் நமக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும்.

அமைதி மற்றும் பாலின சமத்துவம் குறித்து மனமாற்றம் ஏற்படுத்தும் துறையில் நான் ஒரு தன்னார்வலர் அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு இடம் கிடைப்பதும் கூட்டம் சேர்ப்பதும் கடினமாக இருக்கின்றன, நிதி உதவி பெறுவது ஒரு போராட்டமாக இருக்கிறது. காந்திஜி என்ன செய்வார்? அறிந்து கொள்ள விரும்புகிறேன். அவரைக் கேட்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

'Mohandas: A True Story of a Man, His People and an Empire,'என்ற நூலில் சுதந்திரத்துக்கு முன் காந்திஜி தன் வாழ்வில் தனிமையாய் உணர்ந்த கணத்தை ராஜ்மோகன் காந்தி உயிரோட்டத்துடன் சித்தரிக்கிறார். நீங்கள் பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு துணைக்கண்டத்தின் தலைவராய் இருக்கிறீர்களா அல்லது அல்லது ஒரு சிறிய தன்னார்வல அமைப்பு நடத்துகிறீர்களா என்பது விஷயமில்லை, நீங்கள் தனியாய்த்தான் பயணித்தாக வேண்டும்,, சில சமயம் தனிமையை உணர்வீர்கள். உங்கள் மோசமான கணங்களையும் தடுமாற்றங்களையும் தோல்வி உணர்வையும் பகிர்ந்து கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள். காந்திக்கு பிடித்தமான தாகூர் பாடலில் சொல்வது போல், நீங்கள் தனியாய் நடந்தாக வேண்டும். காந்திஜியின் வாழ்க்கை காட்டுவது போல், எப்படியானாலும் நீங்கள்தான் நடந்தாக வேண்டும்.

என் வாழ்வின் பெரும்பகுதி காந்தி குறித்து, அவரது அரசியல் குறித்து, அவரது சிந்தனை குறித்து, அவநம்பிக்கையுடன் இருந்திருக்கிறேன். ஆனால் அவரது வாழ்க்கைக் கதை, மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது, எப்படி வாழ்வது என்பதை எனக்கு உணர்த்துகிறது. என் பயணத்தின் மதிப்பை எனக்கு கற்பிக்கிறது. என் முயற்சிகளுக்கு மதிப்புண்டு என்று உணர்த்துகிறது. அந்த முயற்சியின் தரம் உயர்ந்ததாய் இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தச் சொல்கிறது. என் செயலின் விளைவுகள் மேன்மையாய் இருக்க வேண்டியது முக்கியம்: அது நியாயமாக இருக்க வேண்டும், அது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும், அது நிலைத்த நலம் நல்குவதாய் இருக்க வேண்டும். என் பயணத்தில் எப்படி அகமும் புறமும், அந்தரங்கமும் அரசியலும் பிணைந்தவை, ஒன்றுக்கொன்று வலுவூட்டுபவை என்பதை காந்தியின் வாழ்க்கை எனக்குக் காட்டுகிறது.

நன்றி : Livemint

(ஸ்வர்ணா ராஜகோபாலன் அமெரிக்காவில் பொலிடிகல் சயன்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.வேறு பல பங்களிப்புகள் போக, சென்னையில் அவர் சைதன்யா, பிரக்ஞ்யா என்ற இரு தன்னார்வல அமைப்புகள் நடத்தி வருகிறார். )

Image Credit : The Indian Express

Viewing all 219 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>