"என் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் பன்னிரெண்டு மணி நேர ஷிப்ட்கள் வேலை செய்வது என்னை உறுத்துகிறது. அவர்கள் பணி நேரத்தை எட்டு மணி நேரமாய்க் குறைத்து ஊதியத்தைக் குறைக்காவிட்டால், என் பங்கீட்டாளர்கள் என் மீது கோபப்படுவார்கள். வேலை நேரத்தையும் ஊதியத்தையும் குறைத்தால் அவர்கள் இன்னொரு வேலையில் சேர்ந்து பதினாறு மணி நேரம் உழைக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது?" - இந்திய பெருநிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் தனி உரையாடலில் சொன்னது.
சுயதொழில் செய்பவர் ஒருவர் பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட தன் மனசாட்சியின் குரலை வெளிப்படுத்துவது போல் இது இருக்கலாம். முதலியத்தின் பல்வேறு வகைமைகள் ஆக்ரோஷமாய் இயங்கினாலும் புறக்கணிக்க முடியாத பெருவாரி மக்களின் உணர்வை இது சுட்டுகிறது. இதனால்தான் எம்.கே. காந்தி எதிர்காலத்தின் போக்கு அறங்காவலர் முறையை நோக்கி இருக்கும் என்றநம்பிக்கை கொண்டிருந்தாரா?
அறங்காவலர் முறை தனிமனித மனசாட்சியை மட்டும் நோக்கி உரையாடுவதா, அல்லது சுரண்டலுக்கு முடிவு காணும் நடைமுறைச் சட்டகமாய் இருக்குமா? அதைவிட முக்கியமாக, புவியெங்கும் பாதிப்பை உருவாக்கும் சூழியல் பிரச்சினைக்கு அறங்காவலர் முறை விடை கொண்டுள்ளதா, அதற்குரிய வேகத்துடனும் அளவுடனும் அதை எதிர்கொள்ள உதவுமா?
தனி மனித மனசாட்சிக்கும் கூட்டுச் செயல்பாட்டுக்கும் இடையுள்ள உறவாடல் இந்தக் கேள்வியின் மையத்தில் உள்ளது.
கம்யூனிசமும் முதலியமும் தோல்வியடைவது தவிர்க்க முடியாதது என்ற முன்னோக்கு அடிப்படையில் காந்தி அறங்காவலர் முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார். இரண்டுமே வழிமுறைகளை விட இறுதி முடிவுக்கே கூடுதல் முக்கியத்துவம் அளித்தன. 18ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பிய கலாசாரம் அரசியல் பொருளாதாரத்திலிருந்து அறச் சிந்தனையைத் துண்டிக்க தலைப்பட்டதன் விளைவாகவே இந்த இரு அமைப்புகளும் உருவாகின.
இந்தப் புதிரை துல்லியமாய் விவரித்தவர் காந்தியல்ல, ஜான் மெய்னார்ட் கெய்ன்ஸ். 1930ஆம் ஆண்டு அவர் ஒரு கட்டுரையில் எழுதிய இந்த வாக்கியங்கள் புகழ்பெற்றவை: "இன்னுமொரு நூறாண்டுக்காவது நாம் நம்முள்ளும் பிறரிடமும் அழகை அவலம் என்றும் அவலத்தை அழகென்றும் நம்புவதுபோல் நடிக்க வேண்டும். ஏனென்னில், அவலம் பயனுள்ளது, அழகு அப்படியில்லை. இன்னும் சிறிது காலத்துக்காவது பேராசையும் அநியாய வட்டியும் எச்சரிக்கையுணர்வும் நம் தெய்வங்களாக இருக்க வேண்டும்."
இதை எதிர்த்தே காந்தி கலகம் செய்தார். உற்பத்தி முறைகள் யாருக்குச் சொந்தம் என்பதிலும் செல்வம் எப்படி பகிரப்பட வேண்டும் என்பதிலும் சோஷலிஷ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் முழுக்கவனம் செலுத்தி வந்த நேரத்தில் காந்தி அனைவருக்கும் சம நீதி வழங்கி தனி மனிதன் செழிக்கவும் சமூகத்தில் படைப்பூக்கம் வளரவும் வழி காணப்பட வேண்டும் என்பதே சிந்தையாக இருந்தார். இந்த தர்க்கத்தின் அடிப்படையில்தான் அவர் அறங்காவலர் முறையை வலியுறுத்தினார்:
ஒன்று, வணிகம் மனித நாகரீகத்தின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத அங்கம்.
இரண்டு, சுயதொழில் திறனும் துணிச்சலாய் முடிவெக்கும் மனப்பான்மையும் அபூர்வமான, முக்கியமான திறமைகள்.
மூன்று, முக்கியமான திறமை அமைந்திருப்பதால், சுயதொழில் முனைவர்கள் கூடுதல் சமூக பொறுப்பு உள்ளவர்கள். சுயதொழில் முனைப்பின் சக்தி, அதனால் உருவாகும் செல்வம், இவற்றை நம்பிக்கை அடிப்படையில் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்- அவை அனைவரின் மேன்மை, சர்வோதயத்துக்கானவை.
இவையனைத்தும் எப்போது சாத்தியம்? அடிப்படையில் அறச் சார்பு கொண்டவர்களாகவும், உயர்ந்த பிரக்ஞைத் தளத்தை நோக்கி உயரும் தாகத்தால் உந்தப்பட்டவர்களாகவும் காந்தியைப் போல் நாமும் மனிதர்களைக் காண வேண்டும். நவீன மனதை ஆட்டிப்படைக்கும் ஹாப்ஸிய பார்வைக்கு எதிராய் காந்தி கலகம் செய்தார்- மானுடத்தின் இயல்பு நிலை, 'மோசமானது, மூர்க்கமானது, குறுகியது', என்பதை காந்தி ஏற்கவில்லை.
வரலாறு நெடுக சுரண்டலும் மானுட துயரும் நிறைந்திருப்பதை காந்தி முழுமையாகவே அறிந்திருந்தார். ஆனால் மானுட அனுபவத்தின் மொத்த கூட்டுத்தொகை இதுவல்ல. மனசாட்சியின் உந்துதலில் தம்மைத் தாமே திருத்திக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வரலாறு உண்டு. இந்த ஆற்றலும், இதன் சாத்தியமும் மானுடத்தின் எதிர்காலம், என்றார் காந்தி- எனவே அறங்காவலர் முறை முதலியத்துக்கும் கம்யூனிசத்துக்கும் அப்பால் நீடிக்கும்.
கம்யூனிசத்தின் வீழ்ச்சி இன்று ஒரு நிதர்சன உண்மை, ஆனால் நிதியமைப்புகளின் சீர்குலைவுக்கும் அப்பால், மோசமான பொருளாதார ஏற்றத் தாழ்ச்சிகளுக்கும் அப்பால், சூழியல் பிரச்சினைக்கு சந்தேகத்துக்கிடமின்றி குற்றவாளி என்றான பின்னும், முதலியத்தின் பிடி இறுக்கமாய்த்தான் இருக்கிறது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி 'லாபம்'என்பதை இன்னும் பல பரிமாணங்கள் கொண்ட வகையில் மதிப்பிட்டும் பொருளின் பெறுமதியை மறுவரையறை செய்தும் முதலியத்திடமிருந்து வணிகத்தை காப்பாற்ற முயற்சிகள் தொடர்கின்றன.
ஆமி டோமினி 1970களில் பங்குத்தரகராய் இருந்தவர். அவர் வாங்கி விற்ற பங்குகளுக்கு உரிய நிறுவனங்கள் இழைத்த அநீதிகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே அவர் தன் தொழிலை மாற்றிக் கொண்டார். சுற்றுச் சூழலிலும் சமூகத்திலும் நிறுவனங்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் செயல்படும் முதல் சில அமைப்புகளை அவர் உருவாக்கினார். அமெரிக்காவில் சமூக பொறுப்புள்ள முதலீடு (Socially Responsible Investing (SRI)) கொள்கையின் அன்னை என்று அவர் இன்று அழைக்கப்படுகிறார். 1980களில் இந்த எஸ்ஆர்ஐ இயக்கம் தென்னாப்பிரிக்க நிறுவனங்களைப் புறக்கணிக்கச் சொல்லி அமெரிக்க நிறுவனங்கள் மீது அழுத்தம் அளித்தன. நிறவெறி ஆட்சி முடிவுக்கு வர இவர்கள் அளித்த நிர்ப்பந்தம் ஒரு முக்கிய காரணம்.
ஜான் எல்கிங்டன் முதலில் பிசினஸ் கன்சல்டன்ட்டாக இருந்து பின்னர் சூழியலாளர் ஆனவர். 1999ஆம் ஆண்டு வர்த்தக வெற்றியை மதிப்பிட சக்திவாய்ந்த ஒரு முறைமையை இந்த அமைப்புக்கு அளித்தார். வெற்றி தோல்வி மூன்று அடிப்படைகளில் மதிப்பிடப்பட வேண்டும்- மக்கள், கோள், லாபம்.
ஐக்கிய நாடுகளின் உலகளாவிய கூட்டமைப்பு 2004ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில், "அக்கறை கொண்டவர்களுக்கே வெற்றி,"என்று பிரகடனம் செய்தது. உலகளாவிய முன்னணி நிதிய அமைப்புகள் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்தன. 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொறுப்புள்ள முதலீட்டுக் கொள்கை (United Nations’ Principles of Responsible Investing (UNPRI)) இந்தப் போக்குக்கு வலு சேர்த்தது. மேற்கூறிய மூவகை மதிப்பீட்டு அடிப்படையில் நிறுவனங்கள் தம் செயல்பாட்டை வரையறுத்துக் கொள்ள உதவும் சட்டகம் ஒன்று அளிக்கப்பட்டது. சமூக மற்றும் சூழியல் பொறுப்புகளுக்கு சட்ட அந்தஸ்து அளிக்கும் வகையில் நிதிய பொறுப்புகளுக்கு உறுதியளிக்க யூஎன்பிஆர்ஐ ஒரு வழிமுறையை உருவாக்கியுள்ளது.
2018ஆவது ஆண்டில், அமெரிக்காவில் தொழில்முறையில் நிர்வகிக்கப்படும் சொத்துகள் கிட்டத்தட்ட 11.6 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அளவில் எஸ்ஆர்ஐ அடிப்படையில் முதலீடு செய்யப்படுகின்றன. ஆக, அமெரிக்காவில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு நான்கு டாலர்களுக்கும் ஒரு டாலர் எஸ்ஆர்ஐ அடிப்படையில் செய்யப்படுகிறது.
அதே ஆண்டில், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூ ஜீலாந்து, கனடா மற்றும் ஜப்பானில் எஸ்ஆர்ஐ முதலீடுகளின் மொத்த எண்ணிக்கை 30.7 ட்ரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் 34 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. தொழிலின் தொழில் தொழில் செய்வதுதான்- மற்ற விஷயங்களை சமூகமும் அரசும் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மில்டன் ஃபிரீட்மான் சொன்னது மிகப்
2014ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சிஈஓ டிம் குக், அவரது நிறுவனம் பசுமை ஆற்றலில் முதலீடு செய்யப் போகிறது என்று ஆண்டு பொதுக் கூடுகையில் சொன்னபோது பங்கீட்டாளர்கள் சிலர் அவரை எதிர்த்தார்கள். குறுகிய கால லாபம் குறையும். டிம் குக் அபூர்வமாகவே தன் கோபத்தை வெளிப்படுத்துபவர். அவர் பங்கீட்டாளரிடம் சொன்னார்: "போட்ட முதலுக்கு லாபம் என்றுதான் நான் வேலை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் பங்கை விற்றுவிடலாம்."
தலைவர்கள் தனி நபர்களாய் கடுமையான முடிவு எடுக்கும்போது நிதானமான, ஆனால் நிலையான தாக்கம் ஏற்படுகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் வெற்றிகரமான லாபியிங் க்ரூப் ஒன்றான பிசினஸ் ரவுண்ட்டேபிள், நிறுவனங்களின் நோக்கத்தை மறுவரையறை செய்தது. ஒரு நிறுவனம் அதன் பங்கீட்டாளர்களுக்கு எந்த அளவு கடன்பட்டிருக்கிறதோ, அதே அளவு, நுகர்வோர், ஊழியர்கள், விநியோககர்கள், மற்றும் சூழியல் ஆகியவற்றின் நலனையும் பாதுகாக்கும் கடப்பாடு கொண்டது என்று புதிய வரையறை கூறுகிறது. பங்கீட்டாளர்களின் முதலுரிமையை கேள்வி கேட்பது புதிய விஷயமல்ல. அறங்காவலர் அமைப்பை நோக்கி நகரும் விதமாக அமெரிக்காவின் முக்கிய தொழில்துறை அமைப்பு ஒன்று முடிவெடுப்பது இதுவே முதல் முறையாய் இருக்கலாம்.
இந்தியாவில் நிலைமை இதைவிடச் சிக்கலானது. ஒரு சில டெக் நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கூடுதல் சம்பளம் ஆகிய திசையில் முன்னேறுகின்றன என்பதற்கு அபாரமான உதாரணங்கள் உண்டு. ஆனால் முதலில் வளர்ச்சி அதன் பின்னரே சமூக, மற்றும் சூழியல் நீதி என்ற எண்ணம் இன்னும் இந்தியாவில் மேலோங்கியிருக்கிறது. இதனால்தான் சுரங்க நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களும் தம் நிலம் மீது உரிமை கொண்ட மலைவாசி மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் உடன்படுகின்றன. சட்டத்துக்கு மாறாய் உள்ளூர் மக்கள் அகற்றப்படுவதை அனுமதிக்க மறுத்த நியாயமான இந்திய நிறுவனங்களும் உண்டு. ஆனால் அவை மிகச் சில, பெரிய அளவில் அந்த முயற்சிகள் பின்பற்றப்படவில்லை.
தொழிலாளர் நிலை என்று பார்த்தால் நிலைமை அதேயளவு மோசமாக இருக்கிறது - நிலையான வேலையில் இருப்பவர்களில் 57 சதவிகிதத்தினர் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறுகின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் மாதம் பதினெட்டாயிரம் ரூபாய். தற்காலிக ஊழியர்கள் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் பெறுவதாக அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 'உழைக்கும் இந்தியாவின் நிலை'அறிக்கை சொல்கிறது. இனி எந்த நம்பிக்கையில் முன்னேறுவது?
மிகவும் வேறுபட்ட இருவரின் பார்வையில் இந்தக் கேள்வியைப் பார்க்கலாம்- கிரெட்டா தூன்பர்க், மேதா பட்கர்.
தூன்பர்க் 16 வயது பள்ளி மாணவி, ஸ்வீடனைச் சேர்ந்தவர். பருவநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்த உலகெங்கும் நிகழ்ந்து வரும் போராட்டத்தின் அடையாள உருவாய் திகழ்கிறார். பருவ நிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தத் தவறிய உலக தலைவர்களுக்கு எதிராய் செப்டம்பர் மாதம் அவர் முழங்கியது உலகெங்கும் தலைப்புச் செய்தியானது. "எக்ஸ்டின்க்சன் ரிபல்லியன்" என்ற மாபெரும் போராட்டத்தின் ஒரு முகம் அவர். ரிபல்லியன் இயக்கம் அரசுகளும் தொழில் நிறுவனங்களும் இக்கோளின் 'பயனாளிகளாய்'இருப்பதை தவிர்த்து அறங்காவலராய் இருக்க வேண்டும் என்று வலியுருத்துகிறது.
பட்கர் 64 வயதானவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத்தை தலைமை தாங்கி மிகப்பெரிய அணைகள் கட்டுவதை எதிர்த்து வருகிறார். அரசியல் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அவர் முன்னேற்றத்துக்கு எதிரானவர் என்று அவதூறு செய்திருக்கிறார்கள். ஒரு ஆற்றினை அழிக்காமல் அதன் நன்மைகளைப் பெற முடியாத வர்த்தக அமைப்பும் அதன் தொழில்நுட்பமும் வீழ்வது உறுதி. பெரிய அணைகள் இருந்தாலும் தண்ணீர் பிரச்னை அதிகரிப்பதைக் காண்கையில், இந்த முன்னறிவிப்பு அச்சுறுத்தும் மெய்ம்மை கொண்டிருப்பதை உணர்கிறோம்.
வரையறை செய்ய முடியாத, மையமற்ற உலகளாவிய இயக்கத்தில் துன்பர்க்கும் பட்கரும் இணைகிறார்கள். தொழில்துறை முறைமைகளைச் சரி செய்யும் காலம் கடந்து விட்டது. மூவகை மதிப்பீட்டு தொழில்முறையும் குறைந்த அளவில், தாமதமாகவே பயன் தருகிறது.
கட்டுரையின் மேற்கோளில் உள்ள நிறுவன அமைப்பு தலைவரின் அற ஆற்றல் துன்பர்க் மற்றும் பட்கரின் கலக படைப்பூக்கத்துடன் ஒன்றுபடுமா? அறங்காவலர் அமைப்பை நடைமுறைப்படுத்தும் ஆர்வம் உள்ளவர்களும்கூட அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்- ஏனெனில், பெருநிறுவன நிர்வாகக் குழுவில் அது போன்ற அடிப்படை கேள்விகளைக் கேட்பவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், அல்லது, ஏளனப்படுத்தப்படுகிறார்கள்.
இது போலவே, தனி மனிதர்கள், தனியார் நிறுவனங்கள், அல்லது தன்னார்வல அமைப்புகள் அறங்காவலர் அமைப்பை முன்னிருத்துவது போல் இருந்தால், அவை விதிவிலக்குகள் என்று அலட்சியப்படுத்தப்படுகின்றன. பணமே வெல்லும். இதற்கு ஆதாரமாய் ஏராளமான சான்றுகள் இருந்தாலும் இது தோல்வியை உறுதி செய்யும் நம்பிக்கையின்மை.
இப்படிப்பட்ட தோல்வி மனப்பான்மையை எதிர்க்க விரும்புபவர்கள் காந்தியைப் பின்பற்ற வேண்டியதில்லை, உறுதியான கோட்பாடு போல் அறங்காவலர் அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. காந்தி சோதனைகள் வெளிப்படுத்திய உண்மைகளின் ஆற்றலைப் பற்றி சிறிது சிந்தித்தால் போதும். அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கூட்டணிகளை தனிநபர் மனசாட்சியைக் கொண்டு அமைக்க முடியும். பணக்கார வியாபாரி முதல் அன்றாட கூலித் தொழிலாளி வரை அனைவருக்கும் இடமிருந்தால் மட்டுமே சமூகத்தில் சரித்திர மாற்றத்தை நிகழ்த்த முடியும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிகழ்த்தப்படும் உலகளாவிய போராட்டத்தில் இதில் சிலவற்றைக் காண்கிறோம்.
எளிய தீர்வுகள் இல்லாததைக் கண்டு திகைப்பவர்களுக்கு காந்தியின் பதில் இது: "பூரண அறங்காவலர் அமைப்பு என்பது புள்ளி குறித்து யூக்ளிட் செய்த வரையறை போன்ற அருவத்தன்மை கொண்டது, அதைப் போலவே அடைய முடியாதது. ஆனால் அதற்காக நாம் பாடுபட்டால், வேறு எந்த வழிமுறையாலும் அடைய முடியாத சமத்துவ நிலையை நோக்கி நம்மால் முன்னேறி வெற்றி காண இயலும். "
(காந்தி குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் ரஜினி பக்ஷி மும்பையைச் சேர்ந்தவர்; காந்தி ஸ்ம்ரிதி, தர்ஷன் ஸ்மிரிதி ஆகிய அமைப்புகளின் அங்கத்தினர்.)
நன்றி: Livemint
Image Credit : Channel 4