நண்பர் கண்ணன் தண்டபாணியின் நிலைதகவல் வழியாக பிரியத்துற்குரிய மூத்த காந்தியவாதி நாராயண் தேசாய் அவர்களின் மரண செய்தியை அறிந்துகொண்டேன். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவரை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த காந்தி கதா சொற்பொழிவு நிகழ்வில் சந்தித்து உரையாடியது மறக்கவியலா அனுபவம். காந்தியுடன் இளமை காலத்தை கழிக்க நேர்ந்து நம் காலம் வரை வாழ்ந்த வெகு சிலரில் அவரும் ஒருவர். காந்தியின் காரியதரிசியாக அவருடைய மிக நெருங்கிய நண்பராக இருந்த மகாதேவ் தேசாயின் புதல்வர் நாராயண் தேசாய். அவரை சந்திக்க சென்றபோது 108 இடங்களில் காந்தி கதா நிகழ்வை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு 88 வயது. சில மாதங்களாகவே உடல் நிலை பாதிக்கபட்டிருந்தார் என நண்பர் கண்ணன் கூறியிருந்தார். காந்திய யுகத்தின் பாலமாக, சாட்சியாக விளங்கிய, நிறை வாழ்வு வாழ்ந்த ஒரு மகத்தான மனிதரை இழந்துவிட்டிருக்கிறோம். சாந்தி சேனை பற்றி அவருடன் பேசி ஆவணபடுத்த வேண்டும் என விரும்பினேன். அவருடைய கனவுகள் என்றென்றைக்கும் உயிர்த்திருந்து தனக்கான விசைகளை கண்டுகொள்ளட்டும்.
↧