தென்னகம் வந்து வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்ககளும் சரி, நாம் வட மாநிலங்கள் செல்லும்போது அங்கிருப்பவர்களும் சரி, நமக்கு ஹிந்தி தெரியவில்லை என்றால் எரிச்சலுடனும் ஏளனத்துடனும் அதை அவர்கள் எதிர்கொள்வதைப் பற்றிய அனுபவங்கள் நம்மில் பலருக்கு உண்டு. சமூக வலைதளங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் குறித்த ஆதங்கத்துடன் பரவலாக அனுபவங்கள் பகிரப்படுகின்றன. எந்த தேசியக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் சரி, அது ஹிந்தி குறித்த சில உத்தரவுகளை பிறப்பிப்பதும், வடக்கு தவிர்த்த பிற மாநிலங்கள் எதிர்ப்பதும், அதை வட மாநிலத்தவர் தேசத்துரோகச் செயலாகப் பார்ப்பதும் அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான்.
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியா, இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று உள்ளதா அல்லது பல அலுவல் சார்ந்த (official) மொழிகளில் ஹிந்தியும் ஒன்றா என்பது குறித்த குழப்பம் ஹிந்தி கற்காமல் இருப்பதைப் பற்றி இத்தகைய பல பிழைபுரிதல்களை உருவாக்குகிறது.
நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பிலிருந்தேஇந்தியாவிற்கான தேசிய மொழி குறித்த விவாதங்கள்/ உரையாடல்கள் தேச நிர்மாணம் செய்த மூத்தோரிடையே (founding fathers) ஆரம்பித்து விட்டன என்ற நிலையில், இது குறித்து காந்தி என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்று பார்க்கலாம்.
1917ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய உரையொன்றில் பாம்பே சேட் ஒருவரிடம் காவலாளியாக வேலை பார்க்கும் வடமாநிலத்தவர் ஒருவர் குஜராத்தி பேசுவதில்லை என்றும், அவரது முதலாளிதான் அவருடன் உடைந்த ஹிந்தியில் உரையாட வேண்டி இருக்கிறது என்றும் குறிப்பிடும் காந்தி, ஹிந்தியை தேசிய மொழியாக முன்வைக்கிறார். காந்தி ஹிந்தியை திணிக்கிறார் என்று உடனே குற்றம் சுமத்துவதற்கு முன் அவர் தாய்மொழி 'குஜராத்தி'என்பதையும் அந்த உரையிலேயே ".. There is little virtue, for instance in a Gujarathi clinging to the Gujarathi script.." என்று அவர் சொல்வதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தன் வாழ்நாள் முழுதும் எழுதிக் குவித்த, உண்மையைத் தேடும் தன் பயணத்தில், தன் கருத்துக்களில் சீரற்ற தன்மை (inconsistency) இருந்தால் அது பற்றி கவலைப்படவில்லை என்றும், ஒரே விஷயத்தைப் பற்றி அத்தகைய முரணான இரு கருத்துக்கள் இருப்பின், இரண்டில் பிந்தைய கருத்தை வாசகன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய காந்தியின் (29-4-33 தேதியிட்ட 'ஹரிஜன்'இதழ்) எழுத்துக்களில் சிலவற்றை மட்டுமே படித்து வாசகன் ஒரு முடிவுக்கு வர முடியாது. (காந்தி பிடிவாதம் மிகுந்த வறட்டுச் சிந்தனாவாதி என்ற பொது பிம்பத்தை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டவர்களுக்கு தன் கருத்துக்கள் மாறுவது குறித்து அவர் இப்படி கூறியுள்ளது வியப்பளிக்கக் கூடும். ஆனால் அது உண்மை என்பதை அவர் எழுத்து /வாழ்க்கையை பின்தொடரும்போது தெரியவருகிறது. அதே நேரம், இதையே 'காந்தி நிலையற்ற தன்மையுடையவர்'என்ற எதிர்மறை விமரிசனத்திற்கும் உபயோகிக்க வாய்ப்புள்ளது, அதை காந்தியே அளித்துள்ளதில், எந்த விமரிசனத்திற்கும் தன்னை திறந்து வைத்துள்ளதில் அவர் ஆளுமைஉள்ளது).
இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்படும் காந்தியின் கருத்துக்கள் அடங்கிய உரைகள்/ கடிதங்கள் 1917 முதல் 1947 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை எனும் நிலையில் இவற்றில் தேசிய மொழி குறித்த அவரின் ஒட்டுமொத்த பார்வையை நாம் தேடிக் கண்டடையலாம்.
ஹிந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க முடியும் என்ற கருத்தில் அவர் இறுதி வரை உறுதியாக இருந்தார் என்று தெரிகிறது.
ஹிந்தி என்றதுமே திராவிடர்களுக்கு மட்டுமே எதிரான ஒன்று என்று எண்ணத் தேவையில்லை. குஜராத்திகள், பெங்காலிகள் போன்ற ஒப்பீட்டளவில் அதிகமாக பேசப்படும் மொழிகள் மட்டுமின்றி மைதிலி, கொங்கணி போன்ற மொழிகளும் சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஹிந்தி கற்றல் குறித்த எழுத்துக்களில் பெங்காலியர்களைச் சற்று கடுமையாக சாடுகிறார் காந்தி. (...Bengal, because of its prejudice against learning any other language of India and Madras, because of the difficulty of the Dravidians about picking up Hindustani).
ஹிந்தியைதான் தேர்வு செய்ததற்கான காரணங்களையும் காந்தி குறிப்பிடுகிறார். தேசிய மொழி என்பதற்கான தேவைகள்/இயல்புகள் என
- அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கற்றுக்கொள்ள எளிதான ஒன்றாக இருப்பது
- நாட்டின் பெரும்பாலோரின் மொழியாக இருப்பது
- மத/ பொருளியல்/ அரசியல் உரையாடல்களுக்கான ஊடகமாக (medium) இருக்கக் கூடியது
என்று வரையறுப்பவர், அத்தகைய மொழியினை தேர்வு செய்யும்போது தற்காலிக தேவைகளை கணக்கில் கொள்ளக் கூடாது என்றும் சொல்பவர் (1917ல் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து), ஹிந்தி மட்டுமே இவ்வனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது என்கிறார்.
ஆனால் அதை அவர் திணிப்பாக, மற்ற பிராந்திய மொழிகளுக்கான மாற்றாக முன்வைக்கவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்வது என்ற 'தியாகத்தை' தேசிய நலனுக்காக அனைவரும் செய்ய வேண்டும்என்றே கூறுகிறார்- 'கடமை'/'தேவை'என்று குறிப்பிடாமல் 'தியாகம்'என்று அவர் சுட்டுவதை கவனிக்க வேண்டும்.
"All undeveloped and unwritten dialects should, in my humble opinion, be sacrificed and merged in the greater Hindustani stream. It would be a sacrifice only to be nobler, not a suicide. If we are to have a common language for cultured India, we must arrest the growth of disintegration or multiplication of languages and scripts,"(27-8-25)என்பதில் உள்ள தியாகம் நியாயமானதா என்ற கேள்வி எழலாம். பிராந்திய மொழிகள் பற்றி அளிக்கும் கருத்துக்கள் இதில் தெளிவற்றதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் தோன்றினால், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதும்போது,
"There must for all India a common language of inter-provincial contact in addition to, not in the place of, the provincial language or languages. It can be Hind-Hindustani".என்று 18-6-31 தேதியிட்ட 'யங் இந்தியா' (Young India) பத்திரிக்கையில் காந்தி எழுதியுள்ளது அவர் கருத்து துல்லியமாகவும் மக்கள் மனநிலைக்கு இணக்கமானதாகவும் வளர்ந்திருப்பதை உணர்த்துகிறது. இந்தியாவின் செழுமையான பிராந்திய மொழிகளை புதிப்பிப்பது இன்றைய மிக முக்கியத் தேவை என 21-9-47 தேதியிட்ட 'ஹரிஜன்'பத்திரிக்கையில் அவர் குறிப்பிடும்போது, 1920களில் அவர் கருத்து என்னவாக இருந்திருந்தாலும்,காலத்தின் போக்கில் பிராந்திய மொழிகளின் அத்தியாவசியத்தை அவர் உணர்த்து அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறார் என்பது விளங்குகிறது.
சமஸ்க்ருதம் மதம் சார்ந்த விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் காந்தி குறிப்பிடுகிறார். அம்மொழியின் மந்திரங்களை மொழிபெயர்ப்பு செய்வது மூலத்தின் தாக்கத்தை அளிக்காது என்கிறார் அவர். ஒரு ஹிந்துவின் கல்வி, சமஸ்க்ருதத்தின் அடிப்படைகளையேனும் தெரிந்து கொள்ளாமல் முழுமை அடையாது என்பவர், அதை மற்ற மதத்தவரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். தங்கள் விருப்பத்தின் பொருட்டு அவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதே காந்தியின் நிலைப்பாடாக இருந்துள்ளது. சமஸ்க்ருதத்தை கற்றுக்கொள்வதில் உள்ள கடினத்தை பற்றி பேசும்போது
"... even if it is difficult, practice of religion is still more so. He, therefore, who would practice religion must regard as comparatively easy all the steps to it, however difficult they may appear to be." (யங் இந்தியா - 13-5-26)என்று குறிப்பிடுவதில் உள்ள தர்க்கமும், அதில் மறைந்திருக்கும் நகைச்சுவையும் வாசகனை வசீகரமானவை. மதம் சார்ந்த மொழியாகவே சமஸ்க்ருதத்தை பார்ப்பவர், அதன் கலை/ இலக்கியச் செல்வங்களை கவனத்தில் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது (வேறு கடிதங்களில்/ உரைகளில் அவர் இதை பற்றி குறிப்பிட்டிருக்கக்கூடும்).
தொலைதூர தென்மாநில பிராந்தியங்களில் ஹிந்தி பேசப்படுவதையும், வட மாநிலத்திற்கு வரும் மதராஸி பயணிகள் ஓரளவுக்கு ஹிந்தி பேசுவதையும் தான் கண்டுள்ளதை வைத்து தேசம் முழுதும் ஹிந்தியின் பரவல் உள்ளதாக அவர் கூறுவது ஒரு மிகைப்படுத்தல் என்று தோன்றுகிறது. மேலும் ஒப்பீட்டளவில் ஆங்கிலத்தை விட ஹிந்தி மொழி கற்றுக்கொள்ள எளிய மொழி என்று அவர் சொல்லும்போது -ஆங்கிலம்/ ஹிந்தி என்றில்லாமல், வெவ்வேறு இரு மொழிகளைக் கற்பதில் உள்ள வேறுபாடு குறித்து -, ஆய்வு முடிவுகள் ஏதேனும் அவர் அறிந்திருந்தாரா என்றும் சந்தேகம் எழுகிறது. அதே போல், 'cultural usurper'என அவர் ஆங்கிலத்தை குறிப்பிடும்போது, ஹிந்தியின் தனிக் குண மேன்மையை விட ஆங்கிலத்திற்கான எதிர்ப்பாகவே அதை முன்வைக்கிறாரோ என சந்தேகமும் -சர்வதேச மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை கற்பது தவிர்க்க முடியாது என்று அவர் சொன்னாலும் -, எழுகிறது.
"Though I consider these Southern languages to be daughters of Sanskrit they are different from Hindi, Oriya, Bengali.... Their grammar is totally different from Hindi. In describing them as the daughters of Sanskrit, I only mean that they have a large number of Sanskrit words in their vocabulary and when they are in difficulty they go to Sanskrit as to a mother- they seek their help and receive from her in the form of new words their requisite nourishment. They might have been independent in the olden days, but now they are enriching themselves with words taken from Sanskrit..."
என்று காந்தி குறிப்பிடுவது மொழிப் பற்றாளர்களுக்கு உவப்பாக இருக்காது. மொழியியல் குறித்து காந்தி எந்தளவுக்கு அறிந்திருந்தார், அவரது இக்கருத்துக்கள் குறித்து மொழியியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்தபின்தான் காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும்.
தேசிய மொழி குறித்த காந்தியின் கருத்துக்களை ஏற்றும்/ மறுத்தும் அவற்றுடன் நாம் விவாதிக்க முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியை தேசத்தின் மீது அவர் திணிக்க முயன்றார் என்று சொல்வதற்கான முகாந்திரம் எந்நிலையிலும் இல்லை. காந்தி தேசிய ஒருமைப்பாட்டை முதன்மையாக கருதினார், ஆனால் அது பலவந்தமாக உருவாக்கப்படக்கூடிய ஒன்று என்று கருதவில்லை. அனைவரும் தான் சொல்வதின் நியாயத்தை உணர்ந்து ஏற்க வேண்டும் என்றே எண்ணியதால்தான் 30 ஆண்டு காலமாக ஹிந்தி ஏன் நம் தேசிய மொழி என்று அவர் உரையாடிக்கொண்டிருந்தார், மக்களைத் தன் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தார்.
தான் கண்ட/ உணர்ந்த நடைமுறை யதார்த்தத்தின் விளைவாக அவர் ஹிந்தியை முன்வைத்தார் அவ்வளவே. அதில் எந்த சதித்திட்டமும் இருக்கவில்லை.
"Provincial patriotism is good where it feeds the larger stream of all-Indian patriotism, as the later is good to the extent that it serves the still larger end of the universe"என்று அவர் சொல்வதன் இரண்டாவது பகுதியை படிப்பவர், ஹிந்தியை விட சிறந்த தேர்வு அவருக்கு கிடைத்திருந்தால் அவர் அதையே (ஆங்கிலமாகவே இருந்தாலும்) முன்வைத்திருப்பார் என்றும் நம்பலாம்.