"துரதிருஷ்டவசமாக, மானுட நேயம் மானுடமற்ற ஒரு காலத்தின் அடையாளமாகி விட்டது. மானுடமற்றது என்று நான் சொல்வது குரூரத்தை மட்டுமல்ல: குரூரமும் மானுடமாய் இல்லாத ஒரு நிலையைச் சொல்கிறேன். ஒரு பணக்காரன், தான் வெறுக்கும் காரணத்தால் தன் எதிரிகளில் ஆறேழு பேரை தூக்கிலிடுவதற்கு மாறாய், தன் உலகுக்கு மறுபுறம் வாழ்வதால், தான் வெறுக்காத, தான் பார்த்தே இருக்காத ஆறு அல்லது ஏழாயிரம் மக்களை பிச்சை எடுக்கவும் பட்டினி கிடந்து சாகவும் விதிக்கும் நிலையைச் சொல்கிறேன். பணக்காரனின் சபையில் இருப்பவன், அவனைப் புகழ்ந்து வாழ்பவன், பரபரப்பாய் ஓர் அபூர்வ, புதிய விஷத்தை போர்ஜியாக்களுக்கு கலப்பதற்கு மாறாய், மெடிசிக்கலின் அரசியல் நோக்கங்களுக்கான அழகிய, அலங்காரம் மிகுந்த ஒரு குறுவாளைத் தீட்டுவதற்கு மாறாய், அலுப்பு மிகுந்த ஒரு வேலையாய்த் தொழிற்சாலை ஒன்றில் இக்கால மனிதன் ஒரு சிறிய திருகாணி வகையை உற்பத்தி செய்கிறான்- அது அவன் காண்பதற்கில்லாத ஒரு தகட்டில் பொருந்தப் போகிறது; அந்தத் தகடு அவன் காண்பதற்கில்லாத ஒரு துப்பாக்கியில் சேரப் போகிறது; அந்தத் துப்பாக்கி அவன் காண்பதற்கில்லாத ஒரு போரில் பயன்படப்போகிறது- தன் விஷமும் குறுவாளும் எதற்குப் பயன்படுத்தப்படப் போகின்றன என்பதை புத்தொளிக்கால கபடன் ஒருவன் எந்த அளவுக்கு அறிந்திருப்பானோ அதைவிடக் குறைவாகவே இவன் தான் கருவியாய் இயங்கப்போகும் போரின் நியாயங்களைப் பற்றியும் அறிவான்.
"சுருக்கமாய்ச் சொன்னால், இயந்திரமயமாக்கலின் தீவினை அது திசையற்றது என்பதுதான்; உண்மையில், எதுவுமே நேரடியான விளைவுகளை அளிப்பதில்லை; அதன் வழிகள் எல்லாம், நேர்ப்பாதையை நோக்கமாய்க் கொண்டபோதும், நேர்மையற்றவை. அமைப்புகளிலேயே மிக மறைமுகமான இந்த அமைப்பில் நாம் சிந்தனைகளில் மிக நேரடியானச் சிந்தனையைப் பொறுத்த முயன்றோம். மக்களாட்சி, மிகையளவு எளிய ஒரு இலட்சியம், பித்தென்று சொல்லக்கூடிய அளவு சிக்கலான ஒரு சமூகத்தில் வீணாய்க் கையாளப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அப்படிப்பட்ட ஒரு தரிசனம் மறைகிறது என்பதில் மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட வகையில், நான் இந்த தரிசனத்தை விரும்புகிறேன்; ஆனால் இந்த உலகம் அத்தனை பேருக்கும் உரியது, இவ்வுலகில் நிஜ மனிதர்கள் பட்டப்பகலின் வெளிச்சத்தில் அமைதியாய் உலவுகிறார்கள். இவர்கள் இச்சூழலை விரும்புவது போலும் இருக்கிறது."
(16.7.1932 அன்று எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி)
நன்றி : Berfrois - http://www.berfrois.com/2016/11/tenable-democratic-ideal-idealist-succeed/
↧
ஜி. கே. செஸ்டர்டன், மக்களாட்சியும் இயந்திரமயமாக்கலும்
↧