கிராமிய பொருளியல், அதன் சிக்கல்களை பற்றி பார்த்தோம். லட்சிய கிராமம் எத்தகையதாக இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுவது இயல்பானதே. காந்தி, பாபா ஆம்தே, அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் வரை பலரும் இதற்கான வரைவு திட்டங்களை அளித்துள்ளார்கள். வெறும் வரைவுடன் நின்று விடாமல் களத்தில் நிகழ்த்தியும் காட்டியுள்ளார்கள்.
1. சாலை வசதியும், பொதுப் போக்குவரத்து வசதியும் இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை அநேகமாக அனைத்து கிராமங்களும் சாலையால் இணைக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கிராம சடக்யோஜன திட்டத்தில் சென்ற மன்மோகன் அரசு மிகத்தரமான சாலைகளை போட்டுள்ளதை நான் கண்டிருக்கிறேன். இந்த தரத்திலான சாலையும் குறைந்தது நன்கு முறை ஊருக்கு வருவதற்கும் ஊரிலிருந்து செல்வதற்கும் ஏதுவான பொது போக்குவரத்து இருக்க வேண்டும். இவ்வகையில் மினி பஸ்கள் நமக்கு மிகுந்த பயனளிப்பவை.
2. கூரை வீடுகள் அற்ற கிராமம். குறைந்த பட்சம் ஒட்டு மேற்கூரை கொண்ட கான்கிரீட் வீடுகள் கிராமத்தில் அனைவருக்கும் சாத்தியமாக வேண்டும். திட்ட அளவில் மத்திய மாநில அரசுகள் இலவசமாகவும், மானியத்துடனும் இல்லங்களை எழுப்ப உதவுகின்றன. சரியான பயனாளிகளை அவை போய் சேர்கின்றனவா? போன்ற நிர்வாக கேள்விகள் வேறு விதமாக எதிர்கொள்ளப்பட வேண்டும்.
3. கழிவு மேலாண்மை - நகரங்களில் சரிவர செய்ய முடியாததை கிராமங்களில் எளிதாக செய்ய முடியும். அண்ணா ஹசாரேயின் ராலேகான் சித்தியில் ஊருக்கு பொதுவான கழிப்பிடங்கள் உள்ளன. அவை நன்கு பராமரிக்கப்படுகின்றன. திட கழிவு மேலாண்மை திட்டமிட்டு செய்தால் அதிலிருந்து கிராமத்திற்கு தேவையான சமையல் எரிவாயுவை எடுக்க முடியும், பயிர்களுக்கு இயற்கை உரங்கள் தயாரிக்க முடியும். கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் முறை பின்பற்றும் போது அந்நீரை வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும். தமிழக கிராமங்களில் இந்த வகை முயற்சிகளில் போதிய முன்மாதிரி இல்லை. செலவற்ற வகையில் இதை சாதித்துவிட வழிமுறைகள் உண்டு.
4. மருத்துவ வசதி - ஆரம்ப சுகாதார நிலையங்கள் பரவலாக தமிழகத்தில் நல்லமுறையில் செயல்படுகின்றன. தாய் செய் நலத்திலும் முன்மாதிரியாக செயல்படுகின்றன. போலியோ தடுப்பூசி கிராமங்கள் வரை ஊடுருவி வெற்றிகரமாக தங்கள் பணியை ஆற்றுகின்றன. வீட்டு பிரசவம் என்பது வெகுவாக அருகி விட்டது. 108 ஆம்புலன்ஸ் வழியாக அவசர சிகிச்சைக்கு நகரங்களுக்கு கொண்டு சென்று விட முடியும். மருத்துவ உட்கட்டமைப்பு போதிய அளவு நிறைவாகவே உள்ளது. சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன, மேலும் மேம்படுத்த வேண்டிய அலகுகள் உள்ளன. இந்திய மருத்துவ முறைகளுக்கு கூடுதல் கவனம் அளிக்கலாம்.
5. மிக முக்கியமான சிக்கல் என்பது நீர் மேலாண்மை. மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகளை தூர் வாரி நீர் வரத்து பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வளத்தை காத்தல். ஆழ் துளை கிணறுகளின் ஆபத்துக்களை நாம் இன்னும் சரிவர உணரவில்லை. நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய பகுதி என்று இதையே சொல்வேன். தடையற்ற தூய்மையான குடிநீர் மற்றும் புழங்குநீர் கிடைக்கக் வேண்டும். மணல் வரைமுறையற்று அள்ளப்படுதல் ஒரு மிக முக்கியமான சிக்கல்.
6. கல்வி - கல்விக்கான கட்டமைப்பும் ஓரளவு தமிழகத்தில் நிறைவாகவே உள்ளது. தொடக்கப்பள்ளி, பால்வாடி போன்றவை கிராம அளவிலும், நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகள் சற்றே பெரிய கிராமங்களிலும் உள்ளன. அரசு உதவி பெரும் பள்ளிகளும் தமிழகத்தில் வலுவான தரப்பாக உள்ளன.
7. தொழில் - வேளாண்மை மையமாக கொண்ட கிராமங்களில் வேளாண்மையை தொடர்வதில் உள்ள முக்கியமான சிக்கல் என்பது ஆட்கள் பற்றாக்குறை என்பதே. அண்ண ஹசாரே மாதிரி கிராமத்தில் இந்த சிக்கலை கூட்டு உழைப்பு வழியாக எதிர்கொள்கிறார்கள். நிலமற்றவர்களுக்கு நிலத்தை வழங்குதல் தான் மிக முக்கியமான தீர்வு என்றாலும், நடைமுறை சாத்தியமற்ற சூழலில் இந்த முறையை பின்பற்றலாம். ஒரு கிராமமே தங்கள் மொத்த நிலங்களிலும் தமது பிறர் என பாகுபாடின்றி உழைப்பது. வருகின்ற விளைச்சலில் வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பங்கு பிரித்து கொள்வது. நிலமற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். உபரியை சந்தைப்படுத்த வேண்டும். அதன் வழி கிடைக்கும் லாபத்தை ஊர் பொது பணமாக கட்டமைப்பை வலுபடுத்த பயன்படுத்த வேண்டும். அல்லது விளை நிலத்திற்கு ஏற்ப லாபத்தை பங்கிட்டு கொள்ளலாம். அல்லது அனைவரும் சரிசமமாகவும் பிரித்து கொள்ளலாம். ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப இதை திட்டமிட்டு கொள்ளலாம். வேளாண்மை சாரத பிற தொழில்களும் கிராமங்களில் உள்ளன. உள்ளூர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றையும் முன்னெடுக்க வேண்டும். வணிகத்தை பேண வேண்டும்.
8. நவீன கிராமம் என்பது நகர்புறத்து 'டவுன்ஷிப்'போல. சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு இடமில்லை. சாதி ஒழிப்பு அதன் இறுதி இலக்கு என்றாலும், குறைந்த பட்சம் சாதி மத பாகுபாடின்மை அதன் முதல் படிநிலை. ஊர் திருவிழாக்கள் இயற்கையுடன் இயைந்தவை. அதில் எல்லோரும் பங்கு பெற வேண்டும். தொன்மையான திருவிழாக்களில் சாதி சிக்கல் உள்ளன என்றால் நாம் எல்லோரும் பங்கு பெரும் புதிய வகையான திருவிழாக்களை உருவாக்கலாம். தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்த வேண்டும். தடையற்ற மின்சாரம், தடையற்ற இணைய தொடர்பு அதற்கு தேவை. மின்சாரத்தில் கிராம அளவில் தன்னிறைவு அடைவது ஒன்றும் கடினம் அல்ல. தமிழக தட்பவேப்பத்திற்கு சூரிய ஒளி மின்சாரம் மிகவும் உகந்ததாக இருக்கும். அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை வருங்கால தொழில்நுட்பம் களையும் என எதிர்பார்க்கிறேன். காற்றாலை பயன்படுத்த முடிகின்ற இடங்களில் அதை பயன்படுத்தலாம். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்பவர்களோ, அல்லது பங்கு சந்தை விற்பன்னர்களோ அவர்களுடைய கிராம வீட்டில் அமர்ந்தபடியே தங்கள் பணிகளை செய்யும் அளவிற்கு போதுமான இணைய வசதி ஏற்படும் போது நகரங்களின் நெருக்கடி வெகுவாக குறையும். படித்த பணியில் உள்ள திறன் வாய்ந்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே இருக்கும் போது, அவர்களுக்கு உகந்த சந்தையும் உள்ளூரில் உருவாகும். கலாமின் P.U.R.A திட்டம் இந்தவகையில் திறன் வாய்ந்த மனித வளம் கிராமத்தை விட்டு இடம்பெயராமல் இருக்க என்ன வழிவகை எனும் சிந்தனையின் விளைவில் உருவானதே.
9. மதுவிலக்கு- கிராமத்தை சீரழிக்கும் மிக முக்கியமான சிக்கல் இதுவே. நடைமுறை சிக்கல்கள் , கள்ளச்சாராய பயம் போன்றவை புரியாமல் இல்லை. ஆனால் இந்த திசையில் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இவை எனக்கு தோன்றியவை. மேலும் பல தளங்களில் பங்களிப்புகள் தேவைகள் அவசியமாய் இருக்கலாம். நண்பர்கள் விடுபடல்களை எழுதலாம். கனவு தான், சாத்தியமற்ற கனவு ஏதுமில்லை.