"போர் மறுப்பு குறித்த நைபரின் விமரிசனத்தை வாசித்தேன். ஒரு காலத்தில் நைபரும்கூட போர் மறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர்தான். முப்பதுகளின் துவக்க ஆண்டுகளில் அவர் போர் மறுப்பு இயக்கத்தை விட்டு விலகினார். "அற மனிதனும் அறமற்ற சமூகமும்"என்ற நூலில் அவர் போர் மறுப்பு குறித்து முதல் முறையாக முழுமையாக தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அகிம்சை போராட்டத்துக்கும் வன்முறை போராட்டத்துக்கும் அடிப்படையில் எந்த அற வேறுபாடும் இல்லை என்று அதில் அவர் வாதிட்டார். இவ்விரு முறைகளின் சமூக விளைவுகளும் வெவ்வேறானவை என்ற வாதத்தை அவர் முன்வைத்தார்-ஆனால் எப்படிப்பட்டது என்பதில் அல்ல, எவ்வளவு என்பதில்தான் நாம் அவை சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களில் வேறுபாடு காண இயலும் என்றார்.
யதேச்சாதிகார கொடுங்கோன்மை வெற்றி பெறுவதைத் தடுக்க முடியும் என்று நம்ப இடமில்லாத நிலையிலும் அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருப்பது பொறுப்பின்மை என்பதை நைபர் பின்னர் வலியுறுத்த துவங்கினார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி போராடுவது போல், எந்தக் குழுவை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறதோ, அது ஓரளவாவது அற மனசாட்சி கொண்டிருந்தால் மட்டும்தான் அகிம்சை போராட்டம் வெற்றி பெற முடியும் என்று வாதிட்டார் அவர்.
இறுதியில் மானுடக் கோட்பாடு அடிப்படையில்தான் நைபர் அகிம்சை போராட்டத்தை நிராகரித்தார். இறை நம்பிக்கையால் மட்டுமே மீட்சி என்ற கிறித்தவ சீர்திருத்தக் கோட்பாட்டுக்கு அகிம்சை போராட்டம் நியாயம் செய்யவில்லை என்றார் அவர். "வரலாற்றின் பாபகரமான முரண்பாடுகளிலிருந்து மனிதனை உண்மையாகவே உயர்த்தி உலகின் பாபங்களுக்கு அப்பால் அவனை இறையருள் நிறுவும்,"என்று ஒரு வகை குறுங்குழு பூரணத்துவத்தை இறை நம்பிக்கையின் இடத்தில் அகிம்சை போராட்டம் வைப்பதாக கருதினார் நைபர்.
ஆனால் தொடர்ந்து படிக்கும்போது அவரது நிலைப்பாட்டின் குறைகள் மேலும் மேலும் புலப்பட்டன... அன்பின் ஆற்றல் மீது கொண்ட வெகுளித்தனமான நம்பிக்கையின் வெளிப்பாடாக அவர் அகிம்சை போராட்டத்தைக் கருதினார். அவரைப் பொறுத்தவரை அது தீதின் முன் எதிர்ப்பற்ற ஒரு வகை ஒடுக்கம். ஆனால் இது மிகப்பெரிய பிழைபுரிதல்... உண்மையான அமைதிப் போராட்டம் என்பது தீமையை எதிர்க்க மறுப்பது அல்ல, தீதுக்கு எதிராய் அமைதியான முறையில் போராடுவது.. ஒரு வன்முறை போராளி எந்த அளவு உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் தீதுக்கு எதிராய் போர் தொடுப்பானோ, அதே அளவு காந்தியும் போராடினார், ஆனால் அவர் வெறுப்புக்கு பதில் அன்பைக் கொண்டு போராடினார். உண்மையான அகிம்சை போராட்டம் என்பது யதார்த்தத்தைப புரிந்து கொள்ளாமல் தீதுக்கு அடிபணிவது அல்ல... (மாறாய்) அது, வன்முறையைப் பிரயோகிப்பதைவிட வன்முறைக்கு ஆளாவது மேன்மையானது என்ற நம்பிக்கையுடன் அன்பின் ஆற்றலைக் கொண்டு தீமையை துணிச்சலுடன் எதிர்கொள்கிறது. வன்முறைக்கு எதிரான வன்முறை உலகில் அதன் இருப்பையும் கசப்பையும் பன்மடங்கு பெருக்குகிறது. அகிம்சை, எதிராளியை உள்ளத்தில் வெட்கச் செய்யலாம், அதனைக் கொண்டு ஒரு மனமாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலாம்...
சமகால இறையியலுக்கு நைபர் அளித்த பங்களிப்பு என்பது பிராடஸ்டன்ட் லிபரலிசத்தின் கணிசமான பிரிவினரிடையே நிலவிய பொய்யான நன்னம்பிக்கையை அவர் நிராகரித்தார் என்பதுதான்... மானுட இயல்பு குறித்த அசாதாரண தரிசனம் நைபருக்கு இருந்தது, அதிலும் குறிப்பாய் தேசங்களும் சமூக குழுக்களும் நடந்து கொள்வது குறித்து. மானுட உள்நோக்கங்கள் சிக்கலானவை என்பதையும் ஒழுக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் உள்ள உறவையும் அவர் கூர்மையாய் உணர்ந்திருந்தார். மானுட இருப்பின் ஒவ்வொரு தளத்திலும் பாபம் நிலவுவதன் நிதர்சன உண்மையை அவரது இறையியல் தொடர்ந்து நினைவுறுத்துகிறது. மனிதன் நல்லது செய்வதற்கான சாத்தியத்தில் நான் நம்பிக்கை இழக்கவில்லை என்றாலும், அவன் பாபம் செய்யக்கூடிய சாத்தியத்தை நான் உணர நைபர் காரணமாக இருந்தார். மனிதனின் சமூக உறவாடலை நான் புரிந்து கொள்ள அவர் உதவினார், சமூக கூட்டமைப்பில் நிலவும் தீது அப்பட்டமான உண்மை என்பதை நான் ஏற்றுக் கொள்ள நைபர் உதவினார்.
அகிம்சாவாதிகள் பலரும் இதைக் காணத் தவறினர் என்று நினைத்தேன். அவர்களில் பலரும் மனிதனின் இயல்பில் அர்த்தமற்ற நம்பிக்கை கொண்டிருந்தனர், தார்மீக நியாயம் தமக்குரியது என்று தம்மை அறியாமல் நம்பத் தலைப்பட்டனர்.
நைபரின் தாக்கத்தில் இது போன்ற பார்வைகளுக்கு எதிராய் நான் திரும்பியதன் காரணமாகவே போர் மறுப்பில் எனக்கு தீவிரமான பற்றுதல் இருந்தாலும்கூட ஒருபோதும் நான் எந்த ஒரு போர் மறுப்பு இயக்கத்திலும் இணையவில்லை. நைபரை வாசித்தபின் யதார்த்த போர்மறுப்பை கண்டறிய முயற்சி செய்தேன். வேறு வார்த்தைகளில் சொன்னால், போர் மறுப்பு பாபமற்றது என்றல்ல, நிலவும் சூழலில் அதன் தீமைகள் குறைவானவை என்பதைப் புரிந்து கொண்டேன்.
அப்போதும் சரி, இப்போதும் சரி, போர் மறுப்பில் நம்பிக்கை இல்லாத ஒரு கிருத்தவன் எதிர்கொள்ளும் அறச் சிக்கல்களிலிருந்து தான் விடுபட்டுவிட்டதாய்ச் சொல்லிக் கொள்வதை தவிர்த்தால் போர் மறுப்பாளர்களின் சிந்தனைகளுக்கு இன்னும் விரிவான வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்...
மார்டின் லூதர் கிங்கின் முழுக்கட்டுரை - Martin Luther King, My Pilgrimage to Nonviolence